-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
84. புத்திக் கன்யாதானம்
.
சி’வ தவ பரிசர்யா ஸன்னிதானாய கௌர்யா
பவ மம குணதுர்யாம் புத்திகன்யாம் ப்ரதாஸ்யே/
ஸகல புவன பந்தோ ஸச்சிதானந்த ஸிந்தோ
ஸதய ஹ்ருதய ஸர்வதா ஸம்வஸ த்வம்//
.
சிவனேநின் பணிவிடை செய்திருக்க கௌரியுடன்
பவனேயென் புத்தியெனும் குணமகளும் ஈந்திடுவேன்
அனைத்துலகின் உறவேமெய் யறிவானந் தக்கடலே
அன்புருவே யென்னுளத்தே எப்போதும் வசிப்பீரே!
.
எல்லாம் வல்ல சிவபிரானே அனைத்து ஜீவன்களுக்கும் பதியாய், பசுபதி நாதராய் வீற்றிருக்கிறார். பசுக்களாகிய நாம் அனைவரும் அவரையை சார்ந்திருக்கிறோம். இறைவனே நாயகன். நாம் எல்லோரும் அவனது நாயகியே. இந்த நாயக – நாயகி உருவகத்திலான பக்தியை இந்த ஸ்லோகத்தில் தெளிவாகப் படம்பிடிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
சர்வலோக நாயகனான சர்வேஸ்வரனுக்கு கௌரி என்ற பார்வதியன்னை ஏற்கெனவே பத்தினியாக இருக்கிறார். அந்த சிவபெருமானுக்கு தனது புத்தி என்ற மணப்பெண்ணையும் பக்தன் காணிக்கையாக, கன்யாதானமாக வழங்குகிறானாம். திருமணத்திலே தமது குலமகளாம் கன்னிகையை, அவளது தகப்பனார், பொருத்தமுள்ள ஆடவனுக்கு, கைத்தலம் பற்றச் செய்து, தானமாக வழங்குகிறார். அதைப்போல பக்தன் தனது குணமகளாகிய புத்தியை, அனைத்திற்கும் தோற்றுவாயான (பவன்) நாயகன் சிவபெருமானுக்குத் தானமாக நல்குகிறான். அவ்வாறு புத்தியாம் குலமகளை பரம்பொருளுக்கு அளித்த பக்தன், மாப்பிள்ளைக்குச் சீர் வரிசையாக தனது உள்ளமாகிய வீட்டையும் வழங்குகின்றான்.
. அனைத்து உலகிற்கும் உறவானவரே, உண்மையான அறிவானந்தக் கடலாகிய சச்சிதானந்தமே, அன்பே உருவானவரே, எனது புத்தியென்னும் மணப்பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு, எனது உள்ளத்திலேயே எப்போதும் வசியுங்கள் என்று அந்த பக்தனுக்காக சிவபெருமானிடம் வேண்டுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
$$$