-மகாத்மா காந்தி

மூன்றாம் பாகம்
11. சுகாதார சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும்
சமூகத்தைச் சேர்ந்த எந்த ஓர் உறுப்பினரும், அந்தச் சமூகத்திற்குப் பயன்படாதவராக இருப்பதைச் சகித்துக் கொண்டிருக்க என்னால் எப்பொழுதுமே முடிவதில்லை. சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதையோ, அக்குறைகளுக்கு உடந்தையாக இருப்பதையோ நான் எப்பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். சமூகத்தின் குற்றங் குறைகளைப் போக்கிக்கொள்ளாமல் அதன் உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும் எனக்குப் பிடிக்காது. இந்திய சமூகத்தின் ஒரு குறையைக் குறித்து அதன்மீது குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. அக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை. ஆகையால் நான் நேட்டாலில் குடியேறியது முதல் அக்குற்றச்சாட்டிலிருந்து நம் சமூகத்தை விடுவிக்க முயன்று வந்தேன். ‘இந்தியர் சுத்தத்தைக் குறித்து கவலைப்படாதவர்கள்; தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் அவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில்லை’ என்று இந்தியர் மீது குறை கூறப்பட்டது. சமூகத்தில் முக்கியமானவர்களான இந்தியர்கள், தங்கள் வீடு வாசல்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முன்னமேயே ஆரம்பித்து விட்டனர். ஆனால், டர்பனில் பிளேக் ஏற்படக் கூடும் என்று அறிவிக்கப்பட்ட போதுதான் வீடுதோறும் சென்று பார்க்க ஆரம்பித்தோம். ‘இதில் எங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்’ என்று நகரசபை உறுப்பினர்கள் விரும்பினர். ஆகவே, அவர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் அங்கீகாரமும் கிடைத்த பின்னரே இந்த வேலையில் இறங்கினோம். எங்கள் ஒத்துழைப்பு, அவர்களுடைய வேலையை எளிதாக்கியதோடு, எங்களுடைய சிரமங்களையும் குறைத்தது. ஏனெனில், தொத்துநோய்கள் பரவும்போதெல்லாம் நிர்வாக அதிகாரிகள் வெகு சீக்கிரத்தில் பொறுமையை இழந்துவிடுகிறார்கள்; கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுகின்றனர். தங்களுக்குப் பிடிக்காதவர்களிடம் அவர்கள் அதிகக் கடுமையாக நடந்து கொள்ளுவதும் பொதுவான வழக்கம். இந்திய சமூகம், தானே வலியச் சுகாதார முறைகளை அனுசரிக்க முற்பட்டதால் இப்படிப்பட்ட கொடுமையில் சிக்காமல் மீண்டது.
ஆனால், எனக்கு வருந்தத்தக்க அனுபவங்கள் சில ஏற்படாது போகவில்லை. உரிமையைக் கோருவதில் சமூகத்தின் உதவியைப் பெறுவது எளிது. ஆனால், சமூகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதில் அதே சமூகத்தின் உதவியை நான் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது என்பதைக் கண்டேன். சில இடங்களில் அவமதிக்கப்பட்டேன். மற்ற இடங்களிலோ, என்னிடம் மரியாதை காட்டினார்கள். ஆனால், நான் கூறிய யோசனைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தங்களைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் முயற்சி எடுத்துக்கொள்ளுவது, மக்களுக்கு அதிகக் கஷ்டமாகவே இருந்தது. இந்த வேலைக்கு அவர்கள் பணம் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கே இல்லை. அளவற்ற பொறுமையினாலன்றி இந்த மக்கள் எந்த வேலையும் செய்யும்படியாகச் செய்வது முடியாத காரியம் என்பதை, மற்றெல்லாவற்றையும்விட இந்த அனுபவங்கள், எனக்கு நன்றாகப் போதித்தன. சீர்திருத்த வேண்டும் என்ற கவலை, சீர்திருத்தக்காரருக்குத்தான் உண்டு. சமூகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், அவர் சமூகத்தினிடமிருந்து எதிர்ப்பையும், வெறுப்பையும், உயிருக்கே அபாயமான கொடுமைகளையும் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. சீர்திருத்தக்காரர், தம் உயிரினும் முக்கியமானது என்று கருதும் ஒரு சீர்திருத்தத்தை மிகவும் பிற்போக்கானது என்று கூடச் சமூகம் கருதிவிடலாம் அல்லவா?
என்றாலும், இந்தக் கிளர்ச்சியின் பயனாக இந்திய சமூகத்தினர், தங்கள் வீடு வாசல்களையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை ஒருவாறு கற்றுக் கொண்டார்கள். அதிகாரிகளின் நன்மதிப்பும் எனக்கு ஏற்பட்டது. இருக்கும் குறைகளை எடுத்துக் கூறி உரிமைகளை வற்புறுத்துவதே என் வேலையாக இருந்தாலும், சுயத் தூய்மையை சமூகம் அடைய வேண்டும் என்பதிலும் நான் சிரத்தையுடன் விடாப்பிடியாகவும் இருந்ததை அவர்கள் கண்டார்கள்.
ஆயினும், செய்து தீரவேண்டிய ஒரு வேலை இன்னும் பாக்கியாகவே இருந்தது. நாடு கடந்து வந்திருக்கும் இந்தியர்கள், தாய்நாட்டுக்குத் தாங்கள் செய்தாக வேண்டிய கடமையை உணரும்படி செய்வதே அந்த வேலை. இந்தியா ஏழை நாடு. செல்வத்தைத் தேடுவதற்காக இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு வந்தார்கள். தாய்நாட்டு மக்களுக்குக் கஷ்டம் ஏற்படும் சமயத்தில், இந்த இந்தியர் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை அளித்துத் தாய்நாட்டுக்கு உதவ வேண்டியது அவர்களுடைய கடமையாகும். 1897, 1899 -ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டபோது, தென்னாப்பிரிக்க இந்தியர்கள், இந்த உதவியைச் செய்தனர். பஞ்ச நிவாரண வேலைகளுக்குத் தாராளமாகப் பண உதவி செய்தார்கள். 1897-ஆம் ஆண்டில் செய்ததைவிட 1899-ஆம் ஆண்டில் அதிக உதவி செய்தனர். இதற்கு ஆங்கிலேயரும் பண உதவி செய்ய வேண்டும் என்று கோரினோம். அவர்களும் தாராளமாக உதவ முன்வந்தனர். இந்திய ஒப்பந்தத் தொழிலாளரும், தங்கள் பங்கைக் கொடுத்து உதவினர். இந்தப் பஞ்சங்கள் தோன்றிய சமயத்தில் ஏற்பட்ட இந்த உதவி முறை, அப்பொழுதிலிருந்து தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்தியாவில் பெரிய துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் பெருந்தொகையை இந்தியாவுக்கு அனுப்பி உதவுவதற்குத் தென்னாப்பிரிக்க இந்தியர் தவறுவதே இல்லை.
இவ்விதம், தென்னாப்பிரிக்க இந்தியரிடையே நான் செய்து வந்த சேவை, ஒவ்வொரு கட்டத்திலும், சத்தியத்தின் புதிய தன்மைகளை எப்பொழுதும் எனக்குக் காட்டி வந்தது. சத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சத்தியத்தின் சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய், நாம் தேடத் தேட அதில் பொதிந்து கிடக்கும், மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள ரத்தினங்களைக் காண்கிறோம். பல வகைகளிலும் சேவை செய்வதற்கு ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.
$$$
12. இந்தியாவுக்குத் திரும்ப முடிவு
யுத்த சேவையிலிருந்து நான் விடுவிக்கப்பட்டதும், ‘இனி நான் செய்ய வேண்டிய வேலை, இந்தியாவில்தானே அன்றி தென்னாப்பிரிக்காவில் அல்ல’ என்பதை உணர்ந்தேன். இப்படி நான் எண்ணியதற்குக் காரணம், தென் ஆப்பிரிக்காவில் இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது அல்ல. ஆனால், அங்கே என் முக்கியமான வேலை, பணம் சம்பாதிப்பதாகவே ஆகிவிடும் என்று அஞ்சினேன்.
தாய்நாட்டில் இருந்த நண்பர்களும், திரும்பி வந்துவிடுமாறு என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் நான் அதிகமாகச் சேவை செய்ய முடியும் என்றும் எண்ணினேன். தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வேலைகளுக்கோ, ஸ்ரீ கானும், ஸ்ரீ மன்சுக்லால் நாஸரும் இருக்கிறார்கள். ஆகையால், என்னை விடுவிக்குமாறு எனது சக ஊழியர்களைக் கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கை அதிகச் சிரமத்தின் பேரிலும், ஒரு நிபந்தனையின் பேரிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஓர் ஆண்டிற்குள் தென்னாப்பிரிக்க இந்தியர் சமூகம் என்னை விரும்பினால், தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிவிட நான் தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இது கஷ்டமான நிபந்தனை என்று கருதினேன். ஆயினும், சமூகத்தினுடன் என்னைப் பிணைத்திருந்த அன்பின் காரணமாக அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டேன். ‘அன்பெனும் நூலிழையினால் கண்ணன் என்னைக் கட்டிவிட்டான். நானும் அவனுக்கு முழு அடிமையாகிவிட்டேன்’ என்று மீராபாய் பாடினாள். சமூகத்துடன் என்னைப் பிணைத்திருந்த அன்பெனும் நூல் இழை, என்னைப் பொறுத்த வரையிலும் கூட, அறுந்துவிட முடியாததாகப் பலம் உள்ளதாகத்தான் இருந்தது. பொதுஜன வாக்கே கடவுள் வாக்கு. இங்கே நண்பர்களின் வாக்கு, மனப்பூர்வமான உண்மைவாக்காக இருந்ததால், அதைத் தட்டிவிடவும் முடியவில்லை. நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு, புறப்படுவதற்கு அவர்களுடைய அனுமதியைப் பெற்றேன்.
அச் சமயம் எனக்கு நேட்டாலுடன் மாத்திரமே நெருங்கிய தொடர்பு இருந்தது. நேட்டால் இந்தியர் அன்பு என்ற அமிர்தத்தை என்மீது பொழிந்துவிட்டார்கள். ஒவ்வோர் இடத்திலும் பிரவுபசாரக் கூட்டம் நடத்தினார்கள். விலையுயர்ந்த வெகுமதிகளையும் எனக்கு அளித்தார்கள்.
1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத்தடவையிலோ, பிரிவுபசாரம் அளவு கடந்ததாக இருந்தது. வெள்ளி, தங்கச் சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலையுயர்ந்த வைரச் சாமான்களும் இருந்தன.
இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளை யெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு, ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான் எண்ணிக்கொள்ளுவது எப்படி? என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக்காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை.
கிடைத்த வெகுமதிகளில் ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறுமானம் உள்ளது. என் மனைவிக்கு என்று அதை அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய பொதுசேவைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.
ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை. என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன். ஆனால், ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக் கொள்ளுவதோ இன்னும் அதிகக் கஷ்டமாக இருந்தது. அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும் என் குழந்தைகளின் சங்கதி என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன்.
வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும் இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்? தங்கச் சங்கிலிகளையும் வைர மோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு அணிந்து கொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?
இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம் சமூகத்திற்கே சொந்தமானதாக்கி, இதற்குச் சில தரும கர்த்தாக்களை நியமித்து, ஒரு கடிதம் எழுதினேன். பார்ஸி ருஸ்தம்ஜியையும் மற்றும் சிலரையும் தருமகர்த்தாக்களாக நியமித்தேன். காலையில் என் மனைவியுடனும் குழந்தைகளோடும் ஆலோசனையை நடத்தி இப் பெரும் பாரத்தை நிவர்த்தி செய்து கொண்டேன்.
இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதை அறிவேன். குழந்தைகளைப் பொறுத்த வரையில் எந்தவிதமான கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக்கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர். “இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவையில்லை. ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதே. அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.
நான் ஆனந்தம் அடைந்தேன். “அப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்புவார். ‘எங்களுக்கு அவை தேவையில்லை’ என்று நாங்கள் கூறும்போது, அவைகளைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்?” என்றும் கூறினார்கள்.
பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால், காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது: “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப்படாமல் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள். நகைகளை நான் போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், என் மருமகப் பெண்கள் வரும்போது அவர்கள் விஷயம் என்ன? நிச்சயம் அவர்களுக்கு நகைகள் வேண்டியிருக்கும். நாளைக்கு நம் நிலைமை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட நான் ஒருபோதும் சம்மதிக்கவே மாட்டேன்.”
இவ்வாறு அவள், வாதங்களைச் சண்டமாருதமாகப் பொழிந்தாள். முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால், குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான் சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன்: “குழந்தைகளுக்கு இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக்கொள்ளுவார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம் செய்துவைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”
அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா? இவ்வளவு நாள் பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமக்கள்மார்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப் போகிறீர்களாக்கும்! முடியாது. நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும், என்னுடைய கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.
“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவோ, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.
“உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச் செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி.
இச் சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத் திருப்பிக் கொடுத்து விடுவது என்று நான் உறுதி கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில் எப்படியோ வெற்றிபெற்றேன். 1896, 1901-ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளை யெல்லாம் ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ, தருமகர்த்தாக்களின் விருப்பப்படியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.
பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு, ‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’ என்று நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக அந் நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது.
இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச் செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களைப் பாதுகாத்தது.
பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய திடமான அபிப்பிராயம்.
$$$
13. திரும்பவும் இந்தியாவில்
ஆகவே, நான் தாய்நாட்டிற்குப் பயணமானேன். மத்தியில் கப்பல் நின்ற துறைமுகங்களில் மொரீஷியஸ் (மோரிஸ்) தீவும் ஒன்று. அங்கே கப்பல் கொஞ்சம் அதிகமாகத் தாமதித்ததால் நான் கரையில் இறங்கி, இத்தீவிலிருந்த நிலைமையை ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் இரவு, அந்தக் காலனியின் கவர்னர் ஸர் சார்லஸ் புரூஸின் விருந்தினனாக இருந்தேன்.
இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் நாட்டைச் சுற்றிப் பார்ப்பதில் கொஞ்ச காலத்தைக் கழித்தேன். அது 1901-ஆம் ஆண்டு. அப்போது கல்கத்தாவில் ஸ்ரீ (பிறகு ஸர்) தின்ஷா வாச்சாவின் தலைமையில் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. நானும் மகாநாட்டிற்குப் போயிருந்தேன். காங்கிரஸைப் பற்றிய என் முதல் அனுபவம் அதுதான்.
தென்னாப்பிரிக்க நிலையைக் குறித்து, ஸர் பிரோஸ் ஷா மேத்தாவுடன் நான் பேசவேண்டியிருந்ததால், பம்பாயிலிருந்து அவர் பிரயாணம் செய்த அதே ரெயிலில் நானும் பிரயாணம் செய்தேன். அவர் எவ்விதமான ராஜபோக வாழ்க்கையை நடத்தி வந்தார் என்பதை நான் அறிவேன். தமக்கு என்று அவர், எல்லா வசதிகளும் உள்ள தனிப்பெட்டி ஒன்றை ரெயிலில் அமர்த்திக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட இரு ஸ்டேஷன்களுக்கு இடையில் அவருடைய தனிப்பெட்டியில் நான் பிராயணம் செய்து, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொள்ளலாம் என்பது எனக்கு இடப்பட்டிருந்த கட்டளை. ஆகவே, குறிப்பிட்ட ஸ்டேஷனில் அவருடைய தனிப்பெட்டிக்குப் போய், நான் வந்திருப்பதை அவருக்குத் தெரிவித்துக் கொண்டேன். அவருடன் ஸ்ரீ வச்சாவும் ஸ்ரீ (இப்பொழுது ஸர்) சிமன்லால் சேதல்வாடும் இருந்தனர். ராஜீய விஷயங்களைக் குறித்து, அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஸர் பிரோஸ் ஷா என்னைப் பார்த்ததும் பின்வருமாறு கூறினார்: “காந்தி, உமக்கு எதுவும் என்னால் செய்ய முடியாது போல் தோன்றுகிறது. ஆனால், நீர் விரும்பும் தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். நம் சொந்த நாட்டிலேயே நமக்கு என்ன உரிமை இருக்கிறது? நம் நாட்டில் நமக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லாதிருக்கும் வரையில், காலனிகளில் நீங்கள் சுகமடைய முடியாது என்றே நான் நம்புகிறேன்.”
இதைக் கேட்டு நான் திடுக்கிட்டுப் போனேன். அக் கருத்தை ஸ்ரீ சேதல்வாடும் அங்கீகரிப்பதாகத் தோன்றியது. ஸ்ரீ வாச்சா, என்னைப் பரிதாப நோக்குடன் பார்த்தார். பிரோஸ் ஷாவிடம் என்னுடைய கட்சியை எடுத்துக் கூற முயன்றேன். ஆனால், பம்பாயின் முடிசூடா மன்னரான அவரை, என்னைப் போன்ற ஒருவன், தனது கட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து விடுவதென்பதற்கு இடமே இல்லை. என்னுடைய தீர்மானத்தைக் கொண்டுவர அனுமதிக்கப்படுவேன் என்பதைக் கொண்டு திருப்தியடைந்தேன்.
“தீர்மானத்தை முன்னதாகவே காட்டுவீர்கள் அல்லவா?” என்று என்னை உற்சாகப் படுத்துவதற்காக ஸ்ரீ வாச்சா கேட்டார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். ரெயில் அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் அந்தப் பெட்டியிலிருந்து இறங்கி, என் பெட்டிக்குப் போய்விட்டேன்.
கல்கத்தா போய்ச் சேர்ந்தோம். வரவேற்புக் கழகத்தினர் அக்கிராசனரை மிகுந்த சிறப்புடன், அவருடைய முகாமுக்கு அழைத்துச் சொன்றனர். நான் எங்கே போக வேண்டும் அன்று ஒரு தொண்டரைக் கேட்டேன். என்னை ரிப்பன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பல பிரதிநிதிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிர்ஷ்டம் எனக்கு உதவியது. நான் இருந்த பகுதியிலேயே லோகமான்யரின் ஜாகையும் இருந்தது. அவர் ஒரு நாள் பிந்தி வந்தார் என்று எனக்கு ஞாபகம்.
லோகமான்யர் இருக்குமிடத்தில் வழக்கம்போல் அவருடைய தர்பார் நடக்காமல் இருக்காது. படுக்கையில் அவர் உட்கார்ந்திருந்த சமயத்தில், நான் அவரைப் பார்த்தேன். அந்தக் காட்சி முழுவதும் இன்றும் என் நினைவில் அப்படியே இருந்து வருகிறது. நான் ஓவியக்காரனாக இருந்தால், அக் காட்சியை அப்படியே சித்திரமாகத் தீட்டிவிடுவேன். அவரைப் பார்த்துப் பேசக் கணக்கற்றவர்கள் வந்தனர். அவர்களில் ஒருவரை மாத்திரமே இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறது. ‘அமிர்த பஜார்’ பத்திரிகையின் ஆசிரியரான காலஞ்சென்ற பாபு மோதிலால் கோஷே அவர். அவர்களுடைய பலத்த சிரிப்பும், ஆளும் இனத்தினரின் தவறான செய்கைகளைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்ததும் என்றுமே மறந்துவிடக் கூடியன அல்ல.
இந்த முகாமின் நிலைமையைக் குறித்துக் கொஞ்சம் விவரமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். தொண்டர்கள் ஒருவரோடொருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் ஏதாவது செய்யுமாறு நீங்கள் கூறினால், அதை அவர் இன்னொருவரிடம் சொல்லுவார். அப்படிச் சொல்லப்பட்டவர், மூன்றாமவரிடம் கூறுவார். இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். பிரதிநிதிகளைப் பொறுத்த வரையில், அவர்கள் திக்குத் திசை தெரியாமல் தவித்தனர்.
தொண்டர்கள் சிலருடன் சிநேகம் செய்துகொண்டேன். தென்னாப்பிரிக்காவைப் பற்றி அவர்களிடம் சில விஷயங்களைக் கூறினேன். அவர்கள் கொஞ்சம் வெட்கம் அடைந்தனர். சேவையின் ரகசியத்தை அவர்கள் அறியும்படி செய்ய முயன்றேன். அவர்கள் உணர்ந்ததாகவே தோன்றியது. ஆனால், தொண்டு என்பது கண்டபடியெல்லாம் உடனே முளைத்துவிடக் கூடியதன்று. இதற்கு, முதலில் மனத்தில் விருப்பம் வேண்டும். பிறகு அனுபவமும் தேவை. நல்லவர்களான, கள்ளங் கபடமற்ற அந்த இளைஞர்களைப் பொறுத்த வரையில் விருப்பத்திற்குக் குறைவில்லை. ஆனால், அனுபவந்தான் அவர்களுக்கு இல்லை. காங்கிரஸ், ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் கூடிவிட்டுப் பிறகு தூங்கிவிடும். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மூன்று நாள் திருவிழாவில் ஒருவருக்கு என்ன அனுபவம் ஏற்பட முடியும்? தொண்டர்களைப் போன்றே பிரதிநிதிகளும் இருந்தார்கள். இவர்களைவிட அவர்களுக்கு மேலான நீண்ட பயிற்சி எதுவும் இல்லை. அவர்கள் தாங்களாக எதுவுமே செய்ய மாட்டார்கள். அதனால், “தொண்டரே! இதைச் செய்யும்”, “தொண்டரே! அதைச் செய்யும்” என்று அவர்கள் இடைவிடாமல் கட்டளையிட்டுக் கொண்டிருப்பார்கள்.
இங்கும் கூட ஓரளவுக்கு நான் தீண்டாமையை நேருக்கு நேராகக் கண்டேன். தமிழர்களின் சமையல்கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்திற்கு தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்துவிட்டால் கூடத் தோஷம் என்று, தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். எனவே, அவர்களுக்கு என்று தனியான சமையல் கூடத்தை கல்லூரி மைதானத்தில் அமைத்திருந்தார்கள். நாற்புறமும் தட்டி வைத்து, இந்தக் கூடம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரே புகை; யாரையும் மூச்சுத் திணறச் செய்துவிடும். சமைப்பது, சாப்பிடுவது, கையலம்புவது எல்லாம் அதற்குள்ளேதான். திறப்பே இல்லாத இரும்புப் பெட்டிபோல இருந்தது, அந்த இடம். இது வருண தருமத்தின் சீர்கேடாகவே எனக்குத் தோன்றிற்று. காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குள்ளே இத்தகைய தீண்டாமை இருந்து வருகிறதென்றால், இவர்கள் யாருக்குப் பிரதிநிதிகள் என்று வந்திருக்கிறார்களோ அந்த மக்களிடம் தீண்டாமை இன்னும் எவ்வளவு மோசமாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை எண்ணியதும் பெருமூச்சு விட்டேன்.
அங்கே இருந்த சுகாதாரக் கேட்டிற்கோ எல்லையே இல்லை. எங்கும் தண்ணீர், குட்டை குட்டையாகத் தேங்கிக் கிடந்தது. சில கக்கூசுகளே இருந்தன. அங்கிருந்த நாற்றத்தை இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இதைப்பற்றித் தொண்டர்களிடம் சொன்னேன். “அது எங்கள் வேலை அல்ல, தோட்டிகளின் வேலை” என்று அவர்கள் திட்டவட்டமாகப் பதில் சொல்லிவிட்டார்கள். விளக்குமாறு ஒன்று வேண்டும் என்று கேட்டேன். உடனே, அந்த மனிதர் ஆச்சரியத்தோடு என்னை விழித்துப் பார்த்தார். ஒரு விளக்குமாற்றைத் தேடிப் பிடித்துக் கக்கூசைச் சுத்தம் செய்தேன். ஆனால், எனக்காகவே நான் சுத்தம் செய்து கொண்டேன். கூட்டமோ மிகவும் அதிகம்; கக்கூசுகளோ மிகக் கொஞ்சம். ஆகையால், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. ஆனால், அந்த வேலை நான் ஒருவனாகச் செய்துவிடக் கூடியது அல்ல. ஆகவே, என் காரியத்தை நான் பார்த்துக் கொள்ளுவதோடு திருப்தியடைய வேண்டியவனானேன். மற்றவர்கள், துர்நாற்றத்தைக் குறித்தோ, அசுத்தத்தைப் பற்றியோ கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
அதோடு போகவில்லை. சில பிரதிநிதிகள், தாங்கள் இருந்த அறைகளுக்கு வெளிப்புறமிருந்த தாழ்வாரத்தில் இரவு நேரத்தில் கொஞ்சமும் கவலைப்படாமல் மலஜலம் கழித்து வந்தார்கள். காலையில் இந்த இடங்களைத் தொண்டர்களுக்குக் காண்பித்தேன். சுத்தம் செய்யும் வேலையை மேற்கொள்ள யாரும் தயாராக இல்லை. அதைச் செய்யும் கௌரவத்தில் என்னுடன் பங்குகொள்ள யாரும் கிடைக்கவில்லை. நிலைமை இப்பொழுது அதிக அபிவிருத்தி அடைந்திருக்கிறது. ஆனால், தங்கள் இஷ்டப்படியெல்லாம் கண்ட கண்ட இடங்களில் மலஜலம் கழித்து ஆபாசப்படுத்தி விடும் யோசனையற்ற பிரதிநிதிகள் இன்றும் கூட இல்லாது போகவில்லை. அவர்கள் அவ்விதம் செய்துவிட்ட இடங்களை உடனே சுத்தம் செய்துவிட எல்லாத் தொண்டர்களும் தயாராக முன்வந்து விடுவதுமில்லை.
காங்கிரஸ் மகாநாடு மேலும் சில நாட்கள் நீடித்து நடக்க வேண்டி வந்தால், அங்கே தொத்து நோய் உண்டாவதற்குரிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதையும் கண்டேன்.
$$$
14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும்
காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. கொஞ்சம் அனுபவம் பெறுவதற்காகக் காங்கிரஸ் காரியாலயத்திற்கு என் சேவையை அளிப்பது என்று முடிவு செய்து கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்து, அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டதும், நேரே காங்கிரஸ் காரியாலயத்திற்குச் சென்றேன்.
பாபு பூபேந்திரநாதவசுவும், ஸ்ரீ கோஷாலும் காரியதரிசிகள். பூபேன் பாபுவிடம் சென்று, நான் தொண்டு செய்ய விரும்புவதாகச் சொன்னேன். அவர் என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “உமக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேலை இல்லை. கோஷால் பாபுவிடம் ஏதாவது வேலை இருக்கக் கூடும். தயவு செய்து அவரைப் போய்ப் பாரும்” என்றார்.
ஆகவே, அவரிடம் போனேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உமக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுக்க முடியும். அதை நீர் செய்வீரா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
“நிச்சயம் செய்கிறேன். என் சக்திக்கு உட்பட்ட எந்தப் பணியையும் இங்கே செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றேன்.
“இளைஞரே, அதுதான் சரியான மனப்பான்மை” என்றார். தம்மைச் சுற்றிலும் இருந்த தொண்டர்களை விளித்து, “இந்த இளைஞர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குக் கேட்டதா?” என்றார்.
பிறகு என்னைப் பார்த்து அவர் கூறியதாவது: “அப்படியானால் சரி, இங்கே கடிதங்கள் பெருங்குவியலாகக் கிடக்கின்றன. அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, அவற்றைக் கவனியுங்கள். நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள் என்பதை நீங்களும் கவனிக்கிறீர்கள். நான் என்ன செய்வது? அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா? இந்த வேலையை ஒப்படைப்பதற்கு என்னிடம் குமாஸ்தாக்கள் இல்லை. இக் கடிதங்களில் பலவற்றில் ஒன்றுமே இருக்காது என்றாலும், அவற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். அவசியம் என்று தோன்றும் கடிதங்களுக்கு அவை கிடைத்ததாகப் பதில் எழுதுங்கள். கவனித்துப் பதில் எழுத வேண்டியவை என்று தோன்றும் கடிதங்களை என்னிடம் காட்டுங்கள்.”
அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையைக் குறித்து மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீ கோஷால், இவ் வேலையை என்னிடம் கொடுத்த போது என்னை அவருக்குத் தெரியாது. பிறகே என்னைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார்.
அக்கடிதக் குவியலைப் பைசல் செய்யும் வேலை மிக எளிதானது என்பதைக் கண்டேன். சீக்கிரத்திலேயே அவ் வேலையை முடித்துவிட்டேன். ஸ்ரீ கோஷால் அதிகச் சந்தோஷம் அடைந்தார். அவர் ஓயாது பேசும் சுபாவமுள்ளவர். மணிக்கணக்கில் பேசித் தீர்த்து விடுவார். என்னுடைய வரலாற்றைக் குறித்து என்னைக் கேட்டுக் கொஞ்சம் தெரிந்து கொண்டதும், எனக்குக் குமாஸ்தா வேலை கொடுத்ததற்காக வருத்தப்பட்டார். அதற்கு நான், “இதைப் பற்றித் தயவு செய்து நீங்கள் கவலைப்படவேண்டாம். தங்களுக்கு முன்பு நான் எம்மாத்திரம்? காங்கிரஸ் தொண்டிலேயே வயது முதிர்ந்து நரைத்துப்போனவர்கள் நீங்கள். ஆனால், நானோ, அனுபவமில்லாத இளைஞன். இந்த வேலையை நீங்கள் என்னிடம் கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி செலுத்த நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் காங்கிரஸ் வேலை செய்ய விரும்புகிறேன். நீங்களோ, விவரங்களை அறிந்து கொள்ளுவதற்கான அரிய வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறீர்கள்” என்று அவருக்குக் கூறினேன்.
“உண்மையைச் சொல்லுவதென்றால், ஒருவருக்கு இருக்க வேண்டிய சரியான மனோபாவம் இதுதான். ஆனால், இக்கால இளைஞர்கள் இதை உணருவதில்லை. காங்கிரஸ் பிறந்ததில் இருந்தே நான் அதை அறிவேன். உண்மையில், காங்கிரஸைத் தோற்றுவித்ததில் ஸ்ரீ ஹியூமுடன் எனக்கும் சிறிதளவு பங்கு உண்டு” என்றார், ஸ்ரீ கோஷால்.
இவ்வாறு நாங்கள் சிறந்த நண்பர்களானோம். மத்தியானத்தில் தம்முடன் சாப்பிடுமாறு அவர் என்னை வற்புறுத்தி வந்தார்.
ஸ்ரீ கோஷாலின் சட்டைக்கு அவருடைய வேலைக்காரன் தான் பித்தான் போட்டு விடுவது வழக்கம். அப் பணியாளின் வேலையை நான் செய்ய முன்வந்தேன். பெரியவர்களிடம் எப்பொழுதுமே எனக்கு அதிக மரியாதை உண்டு. ஆகையால் இப்பணியை செய்ய நான் விரும்பினேன். இதை ஸ்ரீ கோஷால் அறிய நேர்ந்தபோது, அவருக்குத் தொண்டாக இதுபோன்ற சிறு காரியங்களை நான் செய்வதை அவர் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் இதற்காக அவர் மகிழ்ச்சியே அடைந்தார். தம் சட்டைக்குப் பித்தான் போடச் சொல்லி அவர் என்னிடம், “பாருங்கள், காங்கிரஸ் காரியதரிசிக்குத் தமது சட்டைக்குப் பித்தான் போட்டுக்கொள்ளக் கூட நேரம் இல்லை. அவருக்கு எப்பொழுதும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கிறது” என்பார். அவருடைய கபடமில்லாத பேச்சு எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்ததேயன்றி, அப்படிப்பட்ட சேவைகளில் எனக்கு வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை. இத்தகைய சேவையினால் நான் அடைந்த நன்மை அளவிட முடியாதது.
சில தினங்களுக்குள், காங்கிரஸின் நடைமுறையைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு விட்டேன். தலைவர்களில் பெரும்பாலோரைச் சந்தித்தேன். கோகலே, சுரேந்திரநாத் போன்ற பெருந்தலைவர்களை அருகில் இருந்தும் பார்த்தேன். நேரம், அநியாயமாக வீணாக்கப்படுவதையும் கவனித்தேன். நமது காரியங்களில் ஆங்கில மொழி வகித்துவரும் பிரதான ஸ்தானத்தை அன்று கூட வருத்தத்துடன் கவனித்தேன். சக்தியை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்று யாருமே கவலைப்படவில்லை. ஒருவர் செய்யக்கூடிய வேலையைப் பலர் செய்தனர். முக்கியமான பல வேலைகளைக் குறித்து யாருமே சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.
இவ்வாறு என் மனம் குறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. என்றாலும் பிறர் கஷ்டங்களை உணரும் சுபாவமும் எனக்கு உண்டு. ஆகவே, இருந்த நிலைமையில் இதற்கு மேல் நன்றாகச் செய்திருக்க முடியாது என்று எப்பொழுதும் நான் எண்ணிக் கொள்வேன். எந்த வேலையையும் குறைவாக மதிப்பிட்டுவிடும் துர்க்குணத்திலிருந்து இந்த இயல்பே என்னைக் காத்தது.
$$$
15. காங்கிரஸில்
கடைசியாகக் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. பிரம்மாண்டமான பந்தலும், தொண்டர்கள் கம்பீரமாக அணிவகுத்து நின்றதும், மேடைமீது தலைவர் வீற்றிருந்ததும் என்னைப் பிரமிக்கச் செய்தன. இந்தப் பிரம்மாண்டமான மகாசபையின் முன்பு நான் எம்மாத்திரம் என்று எண்ணி வியப்புற்றேன்.
தலைவரின் பிரசங்கம் ஒரு தனிப் புத்தகமாகவே இருந்தது. அதை ஆரம்பம் முதல் கடைசி வரையில் படிப்பது என்பது முடியாத காரியம். ஆகையால், அதிலிருந்து சில பகுதிகள் மாத்திரமே படிக்கப்பட்டன. அதன் பிறகு விஷயாலோசனைக் கமிட்டித் தேர்தல். கமிட்டிக் கூட்டங்களுக்குக் கோகலே என்னை அழைத்துப் போனார்.
என் தீர்மானத்தை அனுமதிப்பதாக ஸர் பிரோஸ் ஷா ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் விஷயாலோசனைக் கமிட்டி முன்பு அதை யார், எப்பொழுது கொண்டு வருவார்கள் என்று திகைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், ஒவ்வொரு தீர்மானத்தின் பேரிலும் நீண்ட சொற்பொழிவுகள் நடந்தன. எல்லாம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தான். ஒவ்வொரு தீர்மானத்தையும் யாராவது ஒரு பிரபலமான தலைவர் ஆதரித்து வந்தார். முக்கியஸ்தர்களின் பேரிகை முழக்கத்தின் நடுவே என் குரல் ஈனக்குரலாக இருந்தது. இரவும் நெருங்கவே என் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. கடைசியாக ஆலோசனைக்கு வந்த தீர்மானங்களை, மின்னல் வேகத்தில் முடிவு செய்துகொண்டு போனார்கள் என்றே எனக்கு ஞாபகம். வெளியே போவதற்கு ஒவ்வொருவரும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி. எழுந்து பேச எனக்குத் துணிவு இல்லை. முன்னாலேயே கோகலேயைப் பார்த்தேன். என் தீர்மானத்தை அவர் பார்த்தும் இருக்கிறார். அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகே போய், “தயவு செய்து எனக்கு ஏதாவது செய்யுங்கள்” என்று குசுகுசுவென்று சொன்னேன். “உங்கள் தீர்மானத்தை நான் மறந்துவிடவில்லை. தீர்மானங்களை எவ்வளவு வேகத்தில் அடித்துக்கொண்டு போகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஆனால், அவர்கள் உங்கள் தீர்மானத்தை விட்டுவிட்டு, அப்பால் போய்விடாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார், கோகலே.
“ஆகவே, எல்லாவற்றையும் முடித்து விட்டோமல்லவா?” என்றார், ஸர் பிரோஸ் ஷா மேத்தா.
“இல்லை, இல்லை, தென்னாப்பிரிக்கா பற்றிய தீர்மானம் பாக்கியாக இருக்கிறது. ஸ்ரீ காந்தி நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று உரக்கக் கூறினார், கோகலே.
“நீங்கள் தீர்மானத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார் ஸர் பிரோஸ் ஷா.
“பார்த்தேன்.”
“அது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”
“மிக நன்றாகவே இருக்கிறது.”
“அப்படியானால், அதை எடுத்துக்கொள்ளுவோம். காந்தி, அதைப் படியும்.”
நான் நடுங்கிக்கொண்டே அதைப் படித்தேன். கோகலே அதை ஆமோதித்தார். “ஏகமனதாக நிறைவேறியது” என்று எல்லோரும் கூவினார்கள்.
“காந்தி, இத் தீர்மானத்தின்மீது நீர் ஐந்து நிமிட நேரம் பேசலாம்” என்றார், ஸ்ரீ வாச்சா.
இந்த நடைமுறை எனக்குக் கொஞ்சம் திருப்தியளிக்கவே இல்லை. தீர்மானத்தைப் புரிந்துகொள்ள யாருமே கவலைப்படவில்லை. ஒவ்வொருவரும் போவதற்கு அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இத் தீர்மானத்தை கோகலே பார்த்து விட்டார் என்பதனால் மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டியதோ, புரிந்துகொள்ள வேண்டியதோ அவசியம் என்று எண்ணவில்லை!
காங்கிரஸில் நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தைப் பற்றியே காலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்களில் நான் எதைச் சொல்லுவது? ஓரளவுக்கு நன்றாகவே நான் தயார் செய்துகொண்டிருந்தேன். ஆனால், சமயத்தில் சொற்கள் தான் எனக்கு வருவதில்லை. என் பிரசங்கத்தை எழுதிப் படிப்பதில்லை; நினைவிலிருந்தே பேசுவது என்று முடிவு செய்து கொண்டிருந்தேன். பேசுவதற்குத் தென்னாப்பிரிக்காவில் நான் பெற்றிருந்த ஆற்றல் அச்சமயம் என்னைவிட்டுப் போய்விட்டதென்றே தோன்றியது.
என் தீர்மானம் வந்ததும் ஸ்ரீ வாச்சா, என் பெயரைச் சொல்லி அழைத்தார். நான் எழுந்து நின்றேன். எனக்கு தலை சுற்றியது. எப்படியோ தீர்மானத்தைப் படித்துவிட்டேன். வெளிநாடுகளுக்குப் போய்க் குடியேறுவதைப் புகழ்ந்து ஒருவர் கவி பாடி, அதை அச்சிட்டுப் பிரதிநிதிகளுக்கு விநியோகம் செய்திருந்தார். அப்பாட்டை வாசித்துவிட்டுத் தென்னாப்பிரிக்காவில் குடியேறி இருப்பவர்களின் குறைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அந்தச் சமயத்தில் ஸ்ரீ வாச்சா மணியை அடித்தார். நான் ஐந்து நிமிட நேரம் பேசிவிடவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். இன்னும் இரண்டு நிமிடங்களே பாக்கி இருக்கின்றன. அதற்குள் நான் பேச்சை முடித்துவிட வேண்டும் என்று என்னை எச்சரிக்கை செய்வதற்காகவே மணி அடிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் அரை மணி, முக்கால் மணி நேரம் பேசியும் மணியடிக்கப்பட்டதில்லை என்பதையும் அறிவேன்.
ஆகவே, நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். மணியடித்ததுமே உட்கார்ந்து விட்டேன். ஆனால், ஸர் பிரோஸ் ஷாவுக்குச் சரியான பதில் அப்பாடலில் அடங்கியிருக்கிறது என்று குழந்தை போன்ற என் புத்தி எண்ணியது. தீர்மானம் நிறைவேறிவிட்டது என்பதைக் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. அந்த நாட்களில் காங்கிரஸ் மகாநாட்டிற்கு வேடிக்கை பார்க்க வருவோருக்கும் பிரதிநிதிகளுக்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் கையைத் தூக்குவார்கள், எல்லாத் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேறும். என் தீர்மான விஷயத்திலும் இதே தான் நடந்ததாகையால் அதன் முக்கியத்துவம் போய்விட்டதாகவே நான் கருதினேன். என்றாலும், காங்கிரஸில் அது நிறைவேறியது என்பது மாத்திரமே என் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கப் போதுமானதாக இருந்தது. காங்கிரஸ், முத்திரை வைத்துவிட்ட தென்றால், அதை நாடு முழுவதும் அங்கீகரித்து விட்டது என்று ஆகுமாகையால் எவருக்கும் மகிழ்ச்சியளிக்க அதுவே போதும்.
$$$