-எஸ்.குருமூர்த்தி

“அன்பார்ந்த அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே” என்ற, இந்து சமய இளந்துறவியான சுவாமி விவேகானந்தரின் துவக்க வரிகள் செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் நடந்த உலக மதங்களின் முதல் மாநாட்டில், கற்றோர், சிந்தனையாளர்கள், ஆன்மீகவாதிகள் எனப் பலரும் கூடியிருந்த சுமார் 6,000 பேர் நடுவில் வெண்கலக் குரல் போல் ஒலித்து, அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.
‘அதைக் கேட்ட மாத்திரத்தில் உற்சாகமடைந்த கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பல நிமிடங்கள் நீடித்தன’ என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறார், மாநாட்டின் தலைமை அமைப்பாளரும், முதல் பிரஸ்பிடேரியன் சர்ச் போதகருமான ஜான் ஹென்றி பர்ரோஸ். அந்தக் கரவொலி அடங்கி அமைதி திரும்பியதும், 471 சொற்களே கொண்ட தனது சரித்திர மகத்துவம் வாய்ந்த உரையை அவர் இரண்டே நிமிடங்களில் நிகழ்த்தி முடித்தார்.
பாரத தேசத்திற்கு வெளியே உருவான மதங்கள் எதுவும் அறியாததும், இந்து மதத்திற்கே உரித்தானதுமான ‘அனைத்து இறை நம்பிக்கைகளுக்கும் பொதுவான அடிப்படை’ எனும் தத்துவத்தை அவர் தனது உரையில் வெளிக்கொண்டு வந்தார். ‘கிறிஸ்துவ மத உணர்வே சாலச் சிறந்தது, அதுவே அனைத்துலக மக்களின் பொது உணர்வு’ என்று மாநாடு வழிமொழிய வேண்டும் என்ற அந்த மாநாடு அமைப்பாளர்களின் மறைமுகமான நோக்கத்தை, அன்று தனது உரையால் அவர் தவிடுபொடியாக்கினார்.
அமைப்பாளர் பர்ரோஸ், ‘கிறிஸ்துவமே அனைத்துலக மக்களின் மிகச் சிறந்த மதம். அவர்களின் பைபிளே அனைவருக்குமான வேதாகம நூல். இயேசு கிறிஸ்துவே அனைவரையும் காக்கும் கடவுள்’ என்பதில் வெளிப்படையாகவே உறுதியாக இருந்தார். “பல கிறித்துவ மற்றும் யூனிடரி பிரிவுகளும் சேர்ந்து கூட்டிய அந்த மாநாட்டில் ‘பிராடஸ்டண்ட் கிறிஸ்துவ வழியே மற்றெல்லாவற்றிலும் சிறந்தது’ எனக் காட்டவேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. ஆனால் அப்படிக் காட்டமுடியாத அளவுக்கு கல்கத்தாவிலிருந்து வந்திருந்த சுவாமி செய்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்து போயிற்று” என்று 2009-ல் ஒப்புக் கொண்டார் முதல் யுனிடேரியன் சர்ச்சின் ஜேம்ஸ் இஸ்மாயில் போர்ட்.
“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும்செய்கிறோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்”
– என்று அற்புதமான விவரங்களை அடுக்கடுக்காகத் தந்து அந்த மாநாட்டில் இந்த இந்து இளந்துறவி நா நயத்துடனும், சொல் வளத்துடனும் மிகவும் பெருமையாக இந்தியாவின் புராதன மதத்தின் அருமையை அந்த மாநாட்டில் நிறுவினார்.
இப்படியெல்லாம் சொல்லிவிட்டு அவர், “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன….
அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்” என்று தனது சிற்றுரையை முடித்தார்.
அப்படி அங்கு அவர் பேசியபோது அவருக்கு முப்பது வயது தான் ஆகியிருந்தது. அப்போது அவர் கையில் குறிப்புகளை எழுதி வைத்திருக்கவும் கூட இல்லை அவர் தன் உள்ளத்தில் இருந்ததைப் பேசினார். அப்படிப் பேசி அவர் அங்கிருப்போரை மெய்மறந்து போகச் செய்தார்.
இதனை பர்ரோஸ், ”சுவாமி விவேகானந்தாவின் மூன்று பேச்சுக்கள் சந்தேகமில்லாமல் அமெரிக்கப் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டன” என்று எழுதுகிறார்.
“அந்தச் சமய மாநாட்டில் விவேகானந்தரின் உரை ஆகாயம் போல பரந்து விரிந்து, அனைத்து மதங்களின் தூய சித்தாந்தங்களையும் உள்ளடக்கி, அதுவே அனைத்துலக மதக் கருத்து போல இருந்தது” என்று அன்றைய அமெரிக்க பத்திரிகை செய்தி குறிப்பிட்டது.
மாநாட்டு மேடையிலிருந்து அவர் வெளியே வரும்போது, “இவரா ஒன்றும் அறியாதவர்? அவருடைய நாட்டிற்கா நாம் மத போதகர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்? உண்மையில் அவர்களல்லவா நம் நாட்டிற்கு (அமெரிக்கா) போதகர்களை அனுப்ப வேண்டும்?” என்று ஒரு அமெரிக்கர் அனைவர் காதுபடவும் சொன்னார். இப்படியாக சுவாமி விவேகானந்தரின் அந்த சரித்திர மகத்துவம் வாய்ந்த சிற்றுரை அனைத்துலக மத விவாதங்களின் போக்கையை மாற்றி அமைத்துவிட்டது.
அமெரிக்கா சென்று வந்த பின் அவர் இந்த உலகில் வாழ்ந்திருந்தது எட்டு வருடங்களும் சில மாதங்களுமே. அதிலும் அவர் பாதி நாட்கள் இந்தியாவிலும், மீதி நாட்கள் வெளிநாட்டிலுமாக இருந்தார். அந்தக் குறுகிய காலத்திலேயே அவர் இந்தியாவுக்கு, குறிப்பாக இந்தியர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், இந்திய விடுதலை உணர்வுக்கும் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. தேசிய உணர்வுக்கு அவர் விடுத்த அறைகூவல்கள் இந்த தேசத்தையே கடவுளாகத் தொழும் அளவுக்கு எடுத்துக்கொண்டு சென்றன; விடுதலைப் போராட்ட முயற்சிகளுக்கு வித்திட்டு, நாட்டின் பல தலைவர்களை ஊக்குவித்தன.
தான் விவேகானந்தரின் நூல்களைப் படித்ததால் முன்னெப்போதையும் விட இந்தியாவை ‘நூறு மடங்கு’ அதிகம் நேசித்ததாக மகாத்மா காந்தி சொல்வார். நாடு தழுவிய போராட்டத்திற்கு வித்திட்டு அதைத் தொடங்கி வைத்த ஒரு மகத்தான தலைவராகவும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும், தான் சுவாமி விவேகானந்தரைப் பார்ப்பதாக ஜவஹர்லால் நேரு கூறுவார்.
விவேகானந்தரை ‘இந்தியாவின் நவீன தேசிய இயக்கத்தின் சிற்பியாக’ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்த்தார். “விவேகானந்தர் இருந்திருக்காவிட்டால் நாம் நமது இந்து மதத்தையே இழந்திருப்போம், விடுதலை கூட அடைந்திருக்க மாட்டோம்; நம்மிடம் இப்போது இருப்பது எல்லாமே அவரால்தான்” என்றும் ராஜாஜி கூறுவார்.
“இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், விவேகானந்தரின் எழுத்துக்களைப் படி” என்று ரவீந்திரநாத் தாகூர் சொல்வார். ஆன்மீகமும், தேசியமும் கலந்த கலவைகளான அரவிந்தரும், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரும் கூட, சுவாமி விவேகானந்தரின் எண்ணங்களால் கவரப்பட்டனர்.
விடுதலைப் போராட்ட வீரர்களின் கைகளில் விவேகானந்தரின் நூல்களை அடிக்கடிப் பார்த்த ஆங்கிலேய காவல்துறை, ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ண மடத்தின் மேலேயே நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசித்தது. இப்படியாக விவேகானந்தர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு உந்துசக்தியாக விளங்கினார்.
இவ்வாறாக, இந்தியாவின் எழுச்சி துளிர்விட்டு எழுவதற்கு நூறு ஆண்டுகள் முன்னரே, ஒரு ரிஷியைப் போல பின்பு நடக்கப் போவதை முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அவர் அறிவித்தார்.
‘இந்து மதம் ஓர் உதவாக்கரை மதம், இந்தியக் கலாச்சாரம் அழிந்து போயிற்று, மற்றும் இந்தியர்கள் என்றும் அடிமைகள் தான்’ என்றெல்லாம் உலகம் நம்மை உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தபோது, நம் இளம் துறவியோ “நான் எதிர்காலத்துக்குள் நுழைந்து பார்க்க விரும்பவில்லை. அதில் எனக்கு அக்கறையும் இல்லை. ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள். தனது அரியணையில் அமர்ந்திருக்கிறாள். மீண்டும் இளமை எழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்துகொண்டிருக்கிறாள். சாந்தியும் அருளும் கலந்த மொழியால் அவளை உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்”என்று சொன்னார்.
இளந் துறவியின் தொலைநோக்குப் பார்வை அந்தக் காலத்தில் மனநிலை பிறழ்ந்தவரின் பிதற்றலாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ, நாடு தழுவிய அளவில் அவரது 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல சிந்தனையாளர்களும் வரப்போவதைக் கணித்துச் சொல்லத் துவங்கி இருக்கின்றனர்; அமெரிக்க தேசிய அறிவு ஆய்வுக் குழு, ‘வரப்போகும் 2030-களில், இந்தியா சீனாவையும் விட முன்னேறி, உலக அரங்கிலேயே முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா, சீனாவுடன் முதன்மை வகிக்கும்’ என்று சென்ற மாதம் சொன்னபோது, அவரது தொலைநோக்குச் சிந்தனையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
அமெரிக்கர்களிடம் போக வாழ்வுமுறை பெருகிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைத் தடுப்பதற்கு அவர்கள் இந்தியாவிலிருந்து ஆன்மீக அடிப்படையிலான வாழ்வுமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, அன்றே பொருளாதாரத்தில் வெகுவேகமாக வளர்ந்து வந்துகொண்டிருந்த அமெரிக்காவைப் பற்றி, அவர்களிடம் தொலைநோக்குடன் சொன்னார். ஆனால் செல்வம் கொழித்திருந்த அமெரிக்கா அந்த ஊர் சுற்றும் துறவியின் கணிப்பைப் பொருட்படுத்தவில்லை.
அதன் விளைவுகளாக, அங்கு இன்று சரிபாதி குடும்பங்கள் பொருளாதாரத்தில் நொடித்துப் போயிருக்கின்றன; அங்குள்ள 41 விழுக்காடு குழந்தைகள் மணமாகாத கன்னிப்பெண்களுக்குப் பிறந்திருக்கின்றன; முதல் திருமணம் செய்துகொண்டவர்களில் 55 விழுக்காடும், இரண்டாம் மணம் புரிந்தவர்களில் 67 விழுக்காடும், மூன்றாம் மணம் செய்தவர்களில் 74 விழுக்காடும் என்ற விகிதத்தில் திருமணம் முறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவை அங்கு நிலவும் சமூக நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
‘The Gift Unopened’ என்ற தனது நூலில் விவேகானந்தரைப் பற்றி ‘அவர் மனித குலத்திற்கே வந்த மாபெரும் பரிசு; அது இன்னும் திறந்து பார்க்கப்படாது இருக்கிறது’ என்றும் எலீனார் ஸ்டார்க் எழுதும்போது, அவர் அமெரிக்காவைப் பற்றிச் சொல்வது போலத் தான் இருக்கிறது.
இந்தியாவின் உயிர்நாடி மதமும், ஆன்மீகம்தான் என்று பலமுறை விவேகானந்தர் அறிவுறுத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பலம் பெற்று வரும் இந்தியா ஆன்மீகத்தின் பக்கமும் தனது கவனத்தை கூடுதலாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்.
”சர்வ தர்ம சமபாவணை எனப்படும் மதச்சார்பற்ற தன்மையே இந்து மதத்தின் ஆதாரக் கருவாகும்” என்று ஜாகீர் ஹுசேன் நினைவுச் சொற்பொழிவில் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா சொல்லியிருந்ததை அயோத்தி வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்ததது. ஆனாலும் மக்களின் வாக்கு வங்கிகளை மட்டுமே கணக்கில் கொண்டு, தன்விருப்பப்படி மதச்சார்பின்மையைத் திரித்துச் செயலாற்றும் அரசியல்வாதிகள் தான் இந்து மதத்தின் ஆன்மீக வேரை உணராது இருக்கின்றனர். அத்தகைய போக்கு இந்தியாவின் ஆணிவேரான இந்து மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மக்களின் சேவையில் ஈடுபட வேண்டிய அரசில் அங்கம் வகிப்போரின் தணியாத செல்வ மோகமும், அதனால் புற்றுநோய் போல் படர்ந்திருக்கும் ஊழல்களும், சுவாமி விவேகானந்தர் தனது மூச்சாக சுவாசித்த, மற்றும் உயிராக நேசித்த தேசத்தின் தர்ம சிந்தனைக்கே சோதனையாக மாறி இருக்கின்றன. இதனால் இன்றைய இளைஞர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு எந்தத் திசையில் போவது என்று தெரியவில்லை. இவ்வாறு திகைத்து நிற்கும் தேசம், தான் மேற்கொண்டு செல்லவேண்டிய நல்வழிக்குத் தன்னைத் திருத்திக்கொள்ள விவேகானந்தரின் எண்ணங்களை அசைபோட்டுஅவற்றை மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறது.
இப்போது சுவாமி விவேகானந்தர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகின்றன. அவரது வழியில் இளைஞர்களுக்குத் திசைகாட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு. பல்லாண்டுகள் கடந்த பின்னரும், தற்கால இளைஞர்கள் மனதில் இன்றும் வாழும் அவர், இளைஞர்களின் சிறந்த வழிகாட்டி. இந்தியாவின் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக என்றும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தனது 39 வயதிலேயே உயிர் துறந்து, இன்றும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ?
குறிப்பு: 2012இல் வெளியான கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது. திரு. எஸ்.குருமூர்த்தி, கணக்குத் தணிக்கையாளர்; தேசிய சிந்தனையாளர்; ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர்.