-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
82. சங்கரநாராயணர்
.
பாணத்வம் வ்ருஷபத்வ- மர்த்தவபுஷா பார்யாத்வ- மார்யாபதே
கோணித்வம் ஸகிதா ம்ருதங்கவஹதா சேத்யாதிரூபம் ததௌ/
த்வத்பாதே நயனார்ப்பணம் ச க்ருதவான் த்வத்தேஹபாகோ ஹரி:
பூஜ்யாத் பூஜ்யதரஸ்ஸ ஏவ ஹி ந சேத் கோ வா ததன்யோsதிக://
.
ஆயுதமாய் ஊர்தியுமாய் அரையுடலால் மனைவியுமாய்
வராகமாய் தோழியுமாய் வாத்தியத்தான் வடிவமுமாய்
நின்பாதம் விழிகிடத்தி நின்பாகமும் அரியானார்
அஃதன்றோ உயர்ந்திட்டார் அவரன்றேல் வேறாரே?
.
அரி (ஹரி) எங்கும் வியாபித்திருப்பதால், அவர் விஷ்ணு என்று போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அரி, அனைத்தின் தோற்றுவாயும், அனைத்தின் அந்தமாயும் இருக்கின்ற அரனுக்குள் ஒடுங்கியிருக்கிறார். சிவனுக்கு ஸ்தாணு என்று ஒரு திருநாமம் உண்டு. ஸ்தாணு என்றால் நிலையானது என்று பொருள். விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்திருப்பது, பரவியிருப்பது என்று பொருள். நிலையானது என்றால் எந்த சஞ்சலமும், சலனமும் அற்றது என்பது உட்பொருள். அதேபோல், பரவியிருப்பது என்றால் அது இயக்கமுடையது, சலனமுடையது என்பதும் உட்பொருள். அந்தவகையில், உலகின் இயக்கமாக இருப்பது அரி என்றால், அதற்கு ஆதாரமான நிலைக்களன்தான் அரன் (ஹரன்).
அதாவது ஒரே ஆற்றல்தான் நிலைசக்தியாகவும், இயங்குசக்தியாகவும் திகழ்கிறது. (ஆயினும் நிலைசக்திதான் இயங்குசக்திக்கு ஆதாரம்.) இதுதான் ஹரிஹர தத்துவம். இதனையே சிவசக்தி என்று இணைத்துக் கூறுவார்கள். சக்தியைப் பெண்பாலாகக் கூறுவதற்குப் பதில், ஆண்பாலாகவே சுட்டும்போது அந்த சக்தி, ஹரி என்று கூறப்படுகிறது. இதனால்தான் சக்தியின் சகோதரராக விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.
சிவபெருமானை வணங்கும்போது அவரோடு இணைந்திருக்கின்ற விஷ்ணுவையும் நாம் வணங்குகின்றோம். இதனை உணர்த்தத்தான், சங்கரன்கோவில் திருத்தலத்தில் சங்கரநாராயணராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இருப்பினும் மனிதர்களாலும், தேவர்களாலும் மிகவும் விரும்பப்படுகின்ற மகாவிஷ்ணு, மகாதேவரின் மிகச் சிறந்த பக்தராக விளங்குகிறார். ராமாவதாரத்தில் ஸ்ரீராமர், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் ராமேஸ்வரம் என்ற திருத்தலம் உருவானதை ராமாயண இதிகாசம் கூறுகிறது. சம்புவின் அருளால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு, சாம்பன் என்ற மகன் பிறந்ததை மகாபாரத இதிகாசம் கூறுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, மகாவிஷ்ணுவின் பூரண அவதாரமாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு மகரிஷியிடம் சிவதீட்சை பெற்று பாசுபத விரதமிருந்து உமாமகேசுவரை தரிசனம் செய்ததாகவும், விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் மேல்கொண்ட தமது பக்தியினால்தான் தமக்கு மேலான புகழும் நன்மைகளும் கிடைத்திருப்பதாக ஸ்ரீ கிருஷ்ணரே கூறியிருப்பதையும் மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் எடுத்துரைக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத்கீதை சிவாத்வைத ஞானத்தின் சாரம் என்பது பெரியோர் கருத்து. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான், காஷ்மீரத்தைச் சேர்ந்த சைவர்கள் (சிவாத்வயவாதிகள், கேவலாத்வைத சைவர்கள்) ஸ்ரீ கிருஷ்ணரை, சிவபெருமானின் அம்சமாகவும், அவர் போதித்த ஸ்ரீமத் பகவத் கீதையை சிவாத்வைத பொக்கிஷமாகவும் மதிக்கின்றனர்.
(இதே கருத்தை முன்னிறுத்திதான் கண்ணன் என் சேவகன் என்ற கண்ணன் பாட்டிலே, மகாகவி பாரதியார்,
“கண்ணன் என்னகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்
செல்வம் இனமாண்பு சீர்சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!”
என்று பாடியுள்ளார். கண்ணனை ஆராதிப்பதன் மூலம் பக்தனுக்கு சிவயோகமும், சிவஞானமும் கைகூடுகின்றது என்பது மகாகவியின் தீர்மானமான வாக்கு.)
மேலும் பல புராணங்களிலும் மகாவிஷ்ணுவால் மிகவும் போற்றப்படும் இறைவடிவமாக சிவப் பரம்பொருள் இருப்பது விளக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தொகுத்துச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த ஸ்லோகத்தை ஸ்ரீ ஆதிசங்கரர் வடித்திருக்கிறார்.
அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் திரிபுரதகனம் செய்தபோது, விஷ்ணுவே அவரது கரங்களில் பாணமாக வீற்றிருந்தார். ஆகையினால், சிவனுக்கு விஷ்ணு ஆயுதமானார். ஒரு சமயம், சிவனைச் சுமந்து செல்லும் வாகனமாகவும் விஷ்ணு இருந்திருக்கிறார். அதனால் சிவனுக்கு அவர் வாகனமாயும் உள்ளார். சில சிவாலயங்களில் நந்தியெம்பெருமான், விஷ்ணுநந்தி எனக் கூறப்படுவது, இந்தக் காரணத்தினால்தான். சிவனுடைய உடலிலே பாதியை (சங்கரநாராயண ரூபம்) பெற்றிருப்பதால், அரனுக்கு மனைவியாகவும் அரி திகழ்கிறார். ஏனெனில், எந்த இடபாகத்தை சக்திக்கு சிவபெருமான் கொடுத்தாரோ, அதே இடபாகத்தில்தான் நாராயணரும் இருக்கிறார்.
ஜோதிஸ்தம்பமாய் சிவப் பரம்பொருள் நின்றபோது அவரது திருவடிகளைத் தேடும்பொருட்டு, பூமியைக் குடைந்து செல்வதற்காக வராக உருவத்தை விஷ்ணு எடுத்திருக்கிறார். பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது, மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு, சிவனுக்குத் தோழியாகவும் ஆகியிருக்கிறார். சிவபெருமான் பிரதோஷ காலத்தில் நடனமாடும்போது, அவருக்கு மிருதங்கம் வாசிப்பவராக விஷ்ணு இருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக, ஒருமுறை சிவபெருமானுக்கு ஆயிரம் பூக்களைக்கொண்டு அர்ச்சித்தபோது, ஒரு பூ குறைகையில், தமது தாமரை மலர் போன்ற கண் ஒன்றையே சிவபெருமானின் பாதங்களில் அர்ப்பித்தார் நாராயணர்.
ஹரிஹர (சங்கரநாராயண) வடிவத்தால், சிவபெருமானின் உடலில் ஒரு பாகமாகவே விஷ்ணு திகழ்கிறார். இத்தனைப் பெருமைகளால்தான், தேவர்களாலும், மனிதர்களாலும் மிகவும் பூஜிக்கப்படுகின்ற உயர்ந்த நிலையை விஷ்ணு அடைந்திருக்கிறார். அவ்வாறான உயர்ந்த பதவியைப் பெற்றவர், விஷ்ணு இல்லையேல், வேறு யார்? என்று வினவுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
$$$