-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
78. புதுமணப்பெண் போன்ற புத்தி
.
ஸதுபசார விதிஸ்வனுபோதிதாம்
ஸவினயாம் ஸுஹ்ருதம் ஸதுபாச்’ரிதாம்/
மம ஸமுத்தர புத்திமிமாம் ப்ரபோ
வரகுணேன நவோட வதூமிவ//
.
பெரியோரைப் போற்றுதல் போதிக்கப் பட்டதாய்
வரித்ததோர் தூயவுள்ளம் வணக்கத்தொடு நன்னாட்டம்
உரித்ததாம் என்புத்தி உற்றிடுமுன் நற்குணத்தால்
தரிப்பீரே மணப்பெண்ணாய் தயைகாட்டி தேற்றுவீரே!
.
பக்தியினால் பக்தனின் மனது அல்லாடுவதை முந்தைய ஸ்லோகத்தில் விவரித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், புதிதாகத் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணைப் போல பக்தனின் புத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
.நல்ல பக்தனின் மனத்தைப் போலவே, அவனது எண்ணங்களாகிய புத்தியும் மேம்பாடுடையதாகவே இருக்கும். வீட்டிற்கு விளக்கேற்றிவைக்க வரும் மருமகள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடப்பவளாய், தூய உள்ளம் கொண்டவளாய், வணக்கம் உடையவளாய் இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டு, அதன்படியே நடந்துகொள்பவளாக இருப்பாள். அதனைப்போல, பக்தனாகிய எனது புத்தியும், சிவனடியார்கள், ஆன்மீக அருளாளர்கள், மூத்தவர்கள் உள்ளிட்ட பெரியோரைப் போற்ற வேண்டும் என்று போதிக்கப்பட்டதாய் இருக்கிறது.
.இவ்வாறு பழக்கி, பழக்கி வரித்துக்கொண்ட பரிசுத்தமான உள்ளம் படைத்ததாயும், பணிவும் நல்லவற்றிலே நாட்டம் கொண்டதாயும் என் புத்தி உள்ளது. ஆகையால் இப்படிப்பட்ட சிறப்புகளையுடைய என் புத்தி, புகுந்த வீட்டிலே என்ன நடக்குமோ, எனக்கு நற்பெயர் கிடைக்குமோ என்றெல்லாம் எண்ணி கவலைப்படும் புதுமணப் பெண்ணைப் போல கவலைப்பட்டுக் கிடக்கிறது. அதனை நற்குணங்களின் உறைவிடமாகிய சிவபெருமானே, குணவானான மணமகன், எவ்வாறு மணமகளை அணைத்துத் தேற்றி அன்போடு அவளது கவலையைப் போக்குவானோ அதுபோல எனது புத்தியில் ஏற்பட்டுள்ள கவலைகளையும், விசாரங்களையும் அகற்றி அருள் புரியுங்கள்.
$$$