-மகாகவி பாரதி
முன்னுரை:
மகாகவி பாரதியின் சுயசரிதை பிரிவில் ‘பாரதி-அறுபத்தாறு’ கவிதை இடம்பெற்றிருப்பது இதிலுள்ள சுய விளக்கங்கள் காரணமாகவே. மரணத்தை வெல்லும் வழியில் “பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!” என்று முழங்குகிறார் பாரதி (பாடல்- 6). முன்னதாக, சோக அடவியில் புகவொட்டாமல் துய்ய செழுந்தேன் போல கவிதை எழுதும் அறிவை தனக்கு பராசக்தி தந்ததாக்க் (பாடல்- 3) கூறுவார் பாரதி. எனவேதான் இக்கவிதைகள் தன்வரலாற்றுப் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.
மானுடரை அழிக்கும் அசுரர்கள், பொறுமையின் பெருமை, ”எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்” என்று மந்திர முழக்கமிடும் ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்ற பகுதி, குருக்கள் துதி (குள்ளச்சாமி புகழ்), குரு தரிசனம், உபதேசம், கோவிந்த சுவாமி புகழ், யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ், குவளைக் கண்ணன் புகழ், பெண் விடுதலை, தாய் மாண்பு, காதலின் புகழ், விடுதலைக் காதல், சர்வ மத சமரசம் (கோவிந்த சுவாமியுடன் உரையாடல்) என்ற துணைத் தலைப்புகளில் 66 பாடல்கள் இத்தலைப்பில் உள்ளன.
பாரதியுடன் தொடர்புடைய குள்ளச்சாமி, கோவிந்த சுவாமி, யாழ்ப்பாணத்து சுவாமி, குவளைக் கண்ணன் ஆகியோரது சித்திரங்களும், அவர்களுடன் பாரதி உரையாடியதும் பாடல்களில் வருகின்றன.
காதலின் புகழ் என்ற கவிதையில் “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, அதுவன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்!” என்று பாடும் (பாடல்- 49) மகாகவி பாரதி, விடுதலைக் காதல் என்ற அடுத்த கவிதையில் காதல் என்ற பெயரில் பொய்மைக்காதல் கொண்டு ஆண்மக்கள் சோரரைப் போல பெண்மைநலம் உண்ணுகின்றார் என்று கடிந்துரைக்கிறார். அதில் கற்புநிலை என்ற கருத்தை விமர்சிக்கும் வகையில், “ஆனெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பழிதிடாதோ?” என்று (பாடல்- 56) வினவுகிறார். உண்மையான ஆண் – பெண் சமத்துவம் சார்ந்த பார்வை இது.
“சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே; தத்வம்ஸி, தத்வமஸி; நீயே அஃதாம்” என்று முத்தாய்ப்பாக (பாடல்- 66) என்று முடிக்கிறார். மகாகவி பாரதியின் சிந்தனை வீச்சுக்கு இக்கவிதை பிரதானமான சான்று.

2. பாரதி – அறுபத்தாறு (1-6)
கடவுள் வாழ்த்து – பராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி;
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். 1
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்; நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்; புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள். 2
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி.
பாகார்ந்த தேமொழியாள், படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள், பரம சக்தி
ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை.
சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். 3
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார். 4
பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றே யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை, பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர், கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை…. 6
(தொடர்கிறது)
$$$
One thought on “பாரதி – அறுபத்தாறு (1-6)”