-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
44. அரிமாவும் அரனும் (சிலேடை)
.
கரலக்னம்ருக: கரீந்த்ர பங்கோ
கனசா’ர்தூல விகண்டனோsஸ்த ஜந்து:/
கிரிசோ’ விச’தாக்ருதிச்’ய சேத: குஹரே
பஞ்சமுகோஸ்தி மே குதோ பீ://
.
கரத்தினிலே மானேந்தி கரிமாவின் உயிர்நீக்கி
கொடும்புலியை துண்டாக்கி பிறவுயிரின் முடிவாக்கி
மலைதங்கி வெண்ணுடலி அஞ்சுமுகம் எந்தனது
மனக்குகையில் வீற்றிருக்க வருவதேன் அச்சமே?
.
சிங்கத்துக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாக இந்த ஸ்லோகத்தை உரைத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். வேட்டையாடிப் பிடிக்கப்பட்ட மானைத் தனது கரத்திலே கொண்டுள்ளது சிங்கம். கரி மா (கருப்பு மிருகம்) ஆகிய யானையின் உயிரை நீக்கும் வல்லமை கொண்டது. கொடிய புலியைக் கூட ஒரே அடியில் துண்டாக்கும் வல்லமை கொண்டது. இதேபோல வேறு பல உயிரினங்களின் உயிரையும் போக்குகின்ற இயல்பு உடையது, மலையிலே தங்கியிருக்கக்கூடிய மிருகமான சிங்கம். அதன் உடல் ஒருவித வெண்மை நிறத்துடன் இருக்கிறது. உடலைவிட முகம் பிடரியோடு அகன்று பெரிதாக இருப்பதால் சிங்கத்துக்கு பஞ்சமுகம் என்று பெயர். இப்படிப்பட்ட ஒரு சிங்கம் எனது மனக்குகையில் வீற்றிருக்க, எனக்கு எங்கிருந்து வரும் அச்சம்?
இப்போது, சிவபெருமானுக்கு இந்தச் செய்யுள் பொருந்துவதைக் காண்போம்:
.சிவபெருமான் ஒரு கரத்தினிலே மானை ஆயுதமாக ஏந்தியுள்ளார். யானைத் தலை கொண்ட கஜாசுரனைக் கொன்றவர் சிவபெருமான். புலி வடிவிலே வந்த வியாக்கிராசுரனைத் துண்டாக்கி, அவனது தோலைப் போர்த்தியிருக்கிறார் . பிற எல்லா உயிர்களும் முடிவில் லயமடைகின்ற இடமாக சிவபெருமான் விளங்குகிறார். அவர், மலையில் வசிப்பவர். வெண்மை நிறம் படைத்தவர் (ஸ்வேத மூர்த்தி). அவருக்கு ஐந்துமுகங்கள் உள்ளன. இப்படிப்பட்ட இறைச் சிங்கம் எனது மனக்குகையிலே வீற்றிருக்க, எனக்கு எவ்விதத்தில் அச்சம் வரும்? என்று கேட்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
(குறிப்பு: பஞ்ச என்பதற்கு அகண்ட, அகலமான என்ற பொருள் உண்டு. வீட்டிலே பயன்படுத்தப்படும் பஞ்ச பாத்திரத்தைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அடிப்பாகத்தைவிட மேல்பாகம் மிகவும் அகலமாக இருப்பதால் அதற்கு பஞ்சபாத்திரம் என்று பெயர். அதேபோல சிங்கத்துக்கு உடலின் பின்பகுதியைவிட முன்பகுதி அகலமாக இருக்கும். ஆகையால் அதற்கு பஞ்சமிருகம் என்று பெயர்.)
$$$