-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
37. வேதக்கடல் கடைவோம்
.
ஆம்னாயாம்புதி மாதரேண சுமனஸ்-ஸங்காஸ்-ஸமுத்யன்மனோ
மந்தானம் த்ருடபக்தி ரஜ்ஜு ஸஹிதம் க்ருத்வா மதித்வா தத:/
ஸோமம் கல்பதரும் ஸுபர்வ-ஸுரபிம் சிந்தாமணிம் தீமதாம்
நித்யானந்த ஸுதாம் நிரந்தரரமா ஸௌபாக்ய-மாதன்வதே//
.
நன்மனம் கொண்ட கூட்டம் திடபக்திக் கயிறுகட்டி
நன்முயற்சி மனமத்தால் நம்பிவேதக் கடல்கடைய
சோமனாய் சொர்க்கமரமாய் வான்பசுவாய் வளர்மணியாய்
நிலையமுதாய் நின்றிடு நிதிக்கோனை அடைந்திடுமே.
.
பாற்கடலை அமிர்தத்திற்காக, மந்தரமலை எனப்படும் மேருமலையை மத்தாகவும், பாம்புகளின் அரசனாகிய வாசுகியைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தபோது முதலில் விஷம் தோன்றியது. அதனை உலக நன்மைக்காக சிவபெருமான் விழுங்கிவிட்டார். அதன்பின்னர் பாற்கடலில் இருந்து குளிர்ச்சி பொருந்திய சந்திரன் (சோமன்), சொர்க்க மரமாகிய கற்பகத் தரு, விண்ணுலகப் பசுவாகிய காமதேனு, எப்போதும் வளர்ச்சி தருகின்ற ரத்தினமாகிய சிந்தாமணி, நிலையான வாழ்வைத் தரக்கூடிய அமுதம் ஆகியவை தோன்றின. செல்வத்தை அருள்கின்ற திருமகளும் தோன்றினாள்.
அதேபோல, அறிவுக்கடலாகிய வேதத்தை, நல்ல மனது கொண்ட பக்தர் குழுவினர், திடமான பக்தி என்ற கயிற்றால் கட்டப்பட்ட, நல்ல விதங்களிலே முயற்சி மேற்கொள்ளும் மனமாகிய மத்தினால் கடைகிறார்கள். அப்போது சந்திரன், கற்பகதரு, காமதேனு, சிந்தாமணி, அமிர்தம், திருமகள் ஆகிய அனைத்துமே ஓர் உருவாய் நம் சிவபெருமான் தோன்றுகிறார். பாற்கடலைக் கடந்தால் பல்வேறு பயன்களுக்காக பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. ஆனால், பக்தர்கள் வேதக்கடலைக் கடையும்போது இந்த அனைத்துப் பொருட்களின் பலன்களையும் உள்ளடக்கிய சிவபெருமானே காட்சி தந்து நம்மை ஆட்கொள்கிறார். அவரே, அனைத்து ஐஸ்வர்யங்களையும் (செல்வங்களையும்) நல்குபவர் ஆதலால் ஈஸ்வரனாக விளங்குகிறார்.
$$$