-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
10. பக்தி இருந்தால் பிறவிக்குப் பயமில்லை
.
நரத்வம் தேவத்வம் நகவனம்ருகத்வம் மச’கதா
பசு’த்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம்/
ஸதா த்வத்பாதாப்ஜஸ்மரண பரமானந்த லஹரீ
விஹாராஸக்தஞ் சேத்த்ருதய-மிஹ கிம் தேன வபுஷா//
.
மனிதரோ தேவரோ மலைவிலங்கோ கொசுதானோ
பசுவோ புழுவோ பறவையாய் பிறந்திடினும்
எப்போதும் நின்பதம் நினைந்துருக வல்லேனேல்
எப்பிறவி எடுத்தாலும் எனக்கென்ன குறையே?
.
மனிதப் பிறவியோ, அதனைவிட மேலான தேவப் பிறவியோ, அல்லது மலை மற்றும் காடுகளில் உழல்கின்ற மிருகப் பிறவியோ, மிகச் சிறிய கொசு வடிவோ, வீட்டு விலங்கோ, புழுவோ, பறவை முதலிய பிறவியோ எந்தப் பிறவி வேண்டுமானாலும் கிடைக்கட்டும். சிவனே, எப்போதும் உமது திருவடித் தாமரைகளை நினைத்து நினைத்து பக்தியால் உருக வல்லமை படைத்தவனாக நான் இருந்துவிட்டால் போதுமே! எந்தப் பிறவி எடுத்தாலும் எனக்கு ஒரு குறைவும் இல்லையே, சிவபெருமானே? என்கிறார் ஆதிசங்கரர்.
எப்படிப்பட்ட பிறவி எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, எந்தப் பிறவியானாலும் எந்தை சிவபெருமானை மறவாத மதி வேண்டும் என்பதே முக்கியம்.
$$$