-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
11. பக்தி இருந்தால் நிலைமை பொருட்டல்ல
.
வடுர்வா கேஹீ வா யதிரபி ஜடி வா ததிதரோ
நரோ வா ய: கச்’சித்பவது பவ கிம் தேன பவதி/
யதீயம் ஹ்ருத்பத்மம் யதி பவததீனம் பசு’பதே
ததீயஸ்த்வம் ச’ம்போபவஸி பவபாரம் ச வஹஸி//
.
தனியனோ இல்லானோ துறவியோ வனத்தானோ
வேறெந்த மனிதனோ எவராக இருந்திடினும்
அவர்மனம் நின்வசம் என்றாகின் பசுபதியே
அவர்வசம் நீயாவாய் பிறவிச்சுமை தாங்கிடவே.
.
கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறுவதற்காக தாய்- தந்தை, உற்றாரை விட்டுத் தனியே வாழ்கின்ற பிரம்மசாரியாகவோ, மனைவி- மக்களோடு வாழ்கின்ற இல்லறத்தானாகவோ, இல்லறத்தில் நாட்டமின்றி அதனைத் துறந்த துறவியாகவோ, இல்லையேல் வாழ்வாங்கு வாழ்ந்த பின் அமைதியைத் தேடி வனத்தில் வசிக்கின்ற வானப்பிரஸ்தனாகவோ, அல்லது இவற்றில் எந்த நிலையிலும் கருத முடியாத வேறு எந்த வகை மனிதனாகவோ ஒருவன் இருக்கட்டும். உயிர்களின் தலைவனாகியே பசுபதியே, அந்த மனிதனின் இதயத் தாமரை உன் மீதான பக்தி வசப்பட்டிருப்பின், அவனது வசம் நீ ஆகிவிடுவாயே? பிறகு, அவனது பிறவிச் சுமையையும் நீயே அல்லவா தாங்கிப் பிடித்திடுவாய்!
என்ன அற்புதமான வரிகள்! ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், சிவன் மீதான பக்தி ஒன்று போதும், பிறவிச் சுமையில் இருந்து எளிதில் விடுபடுவான். பிறவித் தளையில் இருந்து விடுபட இந்த ஆசிரமம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை. உண்மையான பக்தி ஒன்று போதும். முந்தைய செய்யுளில் பக்தி இருந்தால் பிறவி ஒரு பொருட்டல்ல என்று எடுத்துரைத்த ஆதிசங்கரர், இந்தச் செய்யுளில் மனிதப் பிறவியிலும்கூட எந்தத் தகுதிநிலை (ஆசிரமம்) என்பதும் முக்கியமல்ல என்பதை விளக்கியுள்ளார். “காவித்துணி வேண்டா கற்றைச்சடை வேண்டா பாவித்தாற் போதும் பரமநிலை எய்துதற்கே” என மகாகவி பாரதியார் பாடியுள்ளதை இங்கே ஒப்புநோக்கத் தகும்.
$$$