காளி மீதான பாடல்கள் – 2

-மகாகவி பாரதி

35. ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட – வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் – களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! 1

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் – பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக – அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் – தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! 2

பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே
ஊழாம் பேய்தான் ’ஓஹோஹோ’ வென் றலைய – வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! 3

சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி – அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் – தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! 4

காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் – அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் – சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் – கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! 5

$$$

36. காளிக்குச் சமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;
வந்தனம், அடி பேரருள் அன்னாய்,
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!

சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்;
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!

$$$

37. ஹே காளீ!

(காளி தருவாள்)

எண்ணி லாத பொருட்குவை தானும்,
      ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
      வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்,
      தருவள் இன்றென தன்னை யென் காளீ;
மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,
      வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன். 1

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
      தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்;
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
      மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
      வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்;
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்;
      நான்வி ரும்பிய காளி தருவாள். 2

$$$

38. மஹா காளியின் புகழ்

காவடிச் சிந்துராகம் – ஆனந்த பைரவி; தாளம் – ஆதி

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு – ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு – தழல்
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு – மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் – இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் – பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் – ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம். 1

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பவள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை – இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை – அவள்
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை – அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
இஃதெலா மவள்புரியும் மாயை – அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை – எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை – எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் – பேயை. 2

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் – ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் – அவை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் – இந்த
அறிவு தான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர் தரைமீது – எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது – அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது – என்று
நேர்மைவேதம் சொல்லும் வழியிது.

$$$

39. வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
      எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
      வேண்டி னேனுக் கருளினன் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
      சாரு மானுட வாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
      பாரில் வெற்றி எனக்குறு மாறே. 1

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
      எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
      காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
      வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
      வெல்க காளி பதங்களென் பார்க்கே? 2

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s