-திருநின்றவூர் ரவிகுமார்

நாசாவிலிருந்து… வியாசா வரை
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை கிண்டல் செய்து வெளிவந்த வீடியோக்களில் அவர் மப்ளர் சுற்றிக்கொண்டு இருமும் காட்சிகளைக் காட்டுவார்கள். அவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்தது. முதல் முறை அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது பிரதமர் தனக்கு பல ஆண்டுகள் பழக்கம் உள்ள ஒரு யோகா குருவைப் பற்றி கேஜ்ரிவாலிடம் எடுத்துக் கூறி அவரை ஒருமுறை நேரில் சந்தித்து வரும்படி ஆலோசனை கூறினார். இப்போதெல்லாம் இருமும் கேலிச்சித்திரம் இல்லாமல் போனது. அந்த யோகா நிபுணர் டாக்டர் ஹொங்கசந்திர ராமாராவ் நாகேந்திரா.
டாக்டர் ஹெச்.ஆர்.நாகேந்திரா, 1943 ஜனவரி 1இல் பிறந்தார். 1968இல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸில் இயந்திரப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அதே இடத்தில் அதே துறையில் ஆசிரியரானார். அங்கிருந்து கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், அதே பொறியியல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். 1970இல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் சேர்ந்தார். 1972 அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அதேவேளையில் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் சிறப்பு வருகைப் பேராசிரியர் ஆனார்.

1975இல் டாக்டர் நாகேந்திரா அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் சேர்ந்தார். கேந்திராவின் யோகா தெரபி மற்றும் ஆராய்ச்சி கமிட்டியின் செயலாளராக 1979 முதல் 1986 வரையிலும் பிறகு 2002 – 2013 வரை அதன் துணைத் தலைவராகவும் இருந்தார். விவேகானந்தா யோகா அனுசந்தானா சமஸ்தான் (Vivekananda Yoga Anusandhana Samsthana – VYASA) என்ற யோகக் கலைக்கான கல்லூரியின் தலைவர் ஆனார். அக்கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமான போது அதன் துணைவேந்தராக 2002- 2013 வரையிலும், அதன் பின்பு 2013 இல் இருந்து அதன் வேந்தராகவும் சேவை புரிந்து வருகிறார்.
பொறியியல் துறையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சமர்ப்பித்துள்ள அவர் சொல்கிறார்: “நவீன அறிவியல் இயற்பியல் உடலைப் புரிந்துகொள்ள பெருமளவில் உதவியுள்ளது. நாம் அதில் ஏறத்தாழ நிறைவை எட்டி விட்டோம் என்றே சொல்லலாம். ஆனால் இயற்பியல் உலகிற்கு அப்பாற்பட்ட பிராணன், மனம், அறிவு, விழிப்புணர்வு போன்றவற்றைப் பற்றி கண்டறிந்து சொல்ல நவீன அறிவியலால் முடியவில்லை.”
“இது பற்றிப் பேசும் உபநிஷத ரகசியங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். யோகப் பயிற்சிகளின் மூலமாக சிறிதளவு தெரிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மக்கள் அனைவருக்கும் இது தெரிய வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை.”
டாக்டர் நாகேந்திரா யோகா பற்றி 135 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். யோகா பற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இத்துறையில் 35க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். “ஆனாலும் பதஞ்சலி முனிவர் கூறும் விபூதி பாதம், கைவல்ய பாதம் பற்றி இன்னமும் புரியவில்லை” என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார்.
பிரதமர் மோடியின் முயற்சியால் ஐ.நா.சபையின் மூலம் 2015இல் இருந்து ஜூன் 21ஆம் தேதி ‘உலக யோகா தினம்’ உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. அதற்கான 30 நிமிட யோகாசனப் பயிற்சி வீடியோவை இந்திய அரசு தயாரித்து வெளியிட்டது. அந்த வீடியோ உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்படுகிறது. அதைத் தயாரிப்பதில் டாக்டர் நாகேந்திராவும் அவரது வியாசா பல்கலைக்கழகமும் முக்கிய பங்காற்றினர்.
சுமார் 35 முஸ்லிம் நாடுகள் கூட அதை ஏற்று தங்கள் நாடுகளில் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நம் நாட்டில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் யோகாவை ஏற்க மறுப்பதுடன் அதை சாத்தானின் செயல் என்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் நாகேந்திரா, “அறியாமையில் இருப்பவர்கள் தான் அப்படிச் சொல்வார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் முட்டாள்கள் அல்ல. நாம் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்” என்கிறார்.
யோகாவை அவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் வேத / ஹிந்துமதத் தொடர்பு இருப்பதுதான். எனவே மதச்சார்பற்ற யோகாவை சொல்லிக் கொடுக்கலாமே என்கின்றனர் சிலர். அதற்கு “வேர்களை வெட்டி விட்டு மரத்தை வளர்க்க முடியாது” என்று சுருக்கமாகப் பதிலளிக்கிறார் டாக்டர் நாகேந்திரா.
மேலை நாடுகளில் கிறிஸ்துவ யோகா, பீர் யோகா, சிரிப்பு யோகா என்றெல்லாம் உருவாகி வருவதைப் பற்றிக் கேட்டபோது அவர், “யோகா எந்தெந்த இடத்தில் என்னென்ன வகையில் பயன்படுத்தப்படுகிறது, தவறாகப் அணுகப்படுகிறது என்பதையெல்லாம் பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது” என்று பதில் அளித்துள்ளார்.
தொழில் புரட்சியைப் போல யோகா ஒரு உலகப் புரட்சியை உருவாக்கி வருகிறது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், இரண்டின் ஒருங்கிணைப்பு, அமைதி போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இயற்பியல் உலகு என்பது மாறி உணர்வை (Conscious) அடிப்படையாகக் கொண்ட பார்வை வளர்ந்து வருகிறது. இதற்கு டாக்டர் நாகேந்திராவின் பங்களிப்பு முக்கியமானது.
யோகாவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமை இந்தியாவிலும் உள்ளது. இதற்கு காரணம் நம்முடைய கல்விமுறை. இது பற்றி பேசும்போது அவர் “நவீனக் கல்வி நம்மைச் சீரழித்துள்ளது. இந்நிலை மாற யோகா கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். நவீனக் கல்வி உங்களை புத்திக்கூர்மை உள்ளவராக, அறிவுள்ளவராக, படைப்பாற்றல் உள்ளவராக ஆக்கியுள்ளது. அதேவேளையில் மனதை அமைதியில் ஆழத்த, சாந்தப்படுத்த சொல்லிக் கொடுக்கவில்லை. இதனால் வாழ்க்கை மன அழுத்தம் கொண்டதாக, போதைப் பழக்கத்திற்கு ஆட்படுத்துவதாக, விரக்தி உள்ளதாக, துயரம் கொண்டதாக உள்ளது. இது ஒரு இறக்கையுடன் பறக்க முயலும் பறவை போல முடியாத காரியமாக உள்ளது. யோகாவை நீங்கள் சில நாட்கள் கற்றாலே மாற்றம் ஏற்படுவதைத் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் சமுதாயம் முழுவதும் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அதை கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று உறுதிபடக் கூறுகிறார்.
இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் யோகாவைச் சேர்த்துள்ளது. அதற்கு சில மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஹுஸ்டனில் உள்ள டெக்சாஸ் எஜுகேஷன் போர்டு, டாக்டர் நாகேந்திராவின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி தங்கள் பள்ளிகளில் யோகாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் இன்னும் பல மேலை நாடுகளிலும் உள்ள அரசுகள் டாக்டர் நாகேந்திராவின் ஆலோசனைகளைப் பெற்று ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றன; அதற்காக அவரை கௌரவித்து உள்ளன.
இந்திய அரசு 1997இல் இவருக்கு பதஞ்சலி விருது அளித்து கௌரவித்துள்ளது. 2010இல் கர்நாடக மாநில அரசு ராஜ்யோத்சேவா விருதளித்துள்ளது. 2013இல் யோகா கிராண்ட்மாஸ்டர் விருதைப் பெற்றார். 2015இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பாரத் கௌரவ்’ விருது பெற்றார். 2016இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவை தவிர இவர் ஏராளமான பாராட்டுக்களையும் விருதுகளையும் பட்டங்களையும் சர்வதேச அளவில் பெற்றுள்ளார்.
புற உலகை ஆராயும் ‘நாசா’வில் தொடங்கி அக வாழ்வை மாற்றி அமைக்கும் ‘வியாசா’ வரை அர்ப்பணமயமாக உள்ளது இந்த பிரம்மச்சாரியின் வாழ்க்கை. உலக யோகா புரட்சிக்கு வித்திட்ட முன்னணி யோகா குருவாக இவர் அறியப்படுகிறார்.
$$$