சிவசக்தி பாடல்கள்

-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்

11. சிவசக்தி

இயற்கை யென்றுரைப்பார் – சிலர்
      இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,
செயற்கையின் சக்தியென்பார் – உயிர்த்
      தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்;
வியப்புறு தாய்நினக்கே – இங்கு
      வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்
நயப்படு மதுவுண்டே? – சிவ
      நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.

அன்புறு சோதியென்பார் – சிலர்
      ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்;
இன்பமென் றுரைத்திடுவார் – சிலர்
      எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம் – அருள்
      பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி – எங்கள்
      வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.

உண்மையில் அமுதாவாய் – புண்கள்
      ஒழித்திடு வாய்களி உதவிடுவாய்;
வண்மைகொள் உயிர்ச்சுடராய் – இங்கு
      வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான் – என்றும்
      ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
அண்மையில் என்றும் நின்றே – எம்மை
      ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.

தெளிவுறும் அறிவினை நாம் – கொண்டு
      சேர்த்தனம், நினக்கது சோமரசம்
ஒளியுறும் உயிர்ச்செடியில் – இதை
      ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய் – நின்றன்
      களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே – சுரர்
      குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.

அச்சமும் துயரும் என்றே – இரண்டு
      அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்;
துச்சமிங் கிவர்படைகள் – பல
      தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
      இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் – ஒரு
      பெருநகர் உடலெனும் பெயரினதாம்.

கோடிமண் டபந்திகழும் – திறற்
      கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்
நாடிநின் றிடர்புரிவார் – உயிர்
      நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்;
சாடுபல் குண்டுகளால் – ஒளி
      சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம் – எங்கள்
      பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.

நின்னருள் வேண்டுகின்றோம் – எங்கள்
      நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே;
பொன்னவிர் கோயில்களும் – எங்கள்
      பொற்புடை மாதரும் மதலையரும்,
அன்னநல் லணிவயல்கள் – எங்கள்
      ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே – அன்னை
      இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.

எம்முயி ராசைகளும் – எங்கள்
      இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற் றிடஅருள்வாய் – நின்றன்
      சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும் – திரு
      முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்;
அம்மைநற் சிவசக்தி – எமை
      அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.

$$$

12. காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
      காணி நிலம் வேண்டும்; – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
      துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
      கட்டித் தரவேண்டும்; – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
      கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
      பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
      முன்பு வரவேணும்; அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
      காதிற் படவேணும்; – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
      தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
      பத்தினிப் பெண்வேணும்; – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
      கொண்டுதர வேணும்; – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
      காவலுற வேணும்; – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
      பாலித்திட வேணும்.

$$$

13 நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை செய்தே – அதை
      நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
      சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, இந்த
      மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! நிலச்
      சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
      வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
      நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் – சிவ
      சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை
      அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

$$$

14. மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு – அல்லா லென்றன்
      மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லா லதில்
      சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு – அல்லா லென்றன்
      ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம் – இங்குள்ள
      யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு – அல்லா லுயிர்ப்
      பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு – அல்லா லிதைச்
      செத்த உடலாக்கு.
இந்தப் பதர்களையே – நெல்லா மென
      எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே – உள்ளே நின்று
      இயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
      ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? – அம்மா! பக்திக்
      கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே – இந்நாய் சிறு
      வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே – அனைத்திலும்
      மேவி யிருப்பவளே!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s