சாந்திக்கு மார்க்கம் – 2

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

2. இரண்டு தலைவர் – யானும் கடவுளும்

மனித ஆன்மாவின் அமர்க்களத்தில் அகத்தின் ஆள்கைக்காகவும், அரசுக்காகவும், ஆதிபத்திய கிரீடத்திற்காகவும் இரண்டு தலைவர் அமர் புரிகின்றனர். அவரில் ஒருவன் ‘யான்’ என்னும் தலைவன்; ‘இவ்வுலக அரசன்’ என்றும் சொல்லப்படுபவன்; மற்றொருவன் மெய்ப்பொருள் என்னும் தலைவன்; தந்தையாகிய கடவுள் என்றும் சொல்லப்படுவான். ‘யான்’ என்னும் தலைவன்; காமம், கர்வம், பேராசை, வீண் பெருமை, பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக்கொண்டு கலகம் விளைப்பவன். மெய்ப்பொருள் என்னும் தலைவன் இனிமை, பொறுமை, தியாகம், பணிவு, அன்பு என்னும் ஒளிக்கருவிகளைக் கொண்டு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்.

“ஒவ்வோர் ஆன்மாவிலும் அமர் செய்யப்படுகின்றது. ஒரு வீரன் ஒரு சமயத்தில் எதிரெதிரான இரண்டு படைகளில் நின்று சண்டை செய்ய முடியாததுபோல, ஒவ்வோர் அகமும் ஒருசமயத்தில் ‘யான்’ என்னும் தலைவனுடைய படையிலாவது, மெய்ப்பொருள் என்னும் தலைவனுடைய படையிலாவது சேர்ந்திருக்கின்றது. அவனுக்குப் பாதி, இவனுக்குப் பாதி என்பது கிடையாது. ‘யான்’ என்னும் தலைவனும் இருக்கிறான்; மெய்ப்பொருள் என்னும் தலைவனும் இருக்கிறான்; ‘யான்’ இருக்கிற இடத்தில் மெய்ப்பொருள் இல்லை, மெய்ப்பொருள் இருக்கிற இடத்தில் ‘யான்’ இல்லை. இவ்வாறு மெய்ப்பொருளாசிரியராகிய புத்தர் கூறியிருக்கின்றனர். கிறிஸ்துவின் அவதாரமாகத் தோன்றிய ஏசுநாதர், ”எந்த மனிதனும் இரண்டு தலைவரிடம் வேலை பார்க்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவனை வெறுப்பான்: மற்றொருவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொள்வான்; மற்றொருவனை விட்டுவிடுவான். நீ கடவுளுக்கும் பிசாசுக்கும் ஊழியம் செய்ய முடியாது” என்று கூறியிருக்கின்றனர்.

மெய்ப்பொருள் என்பது, சிக்கல், மாறுதல், குறைதல் இவற்றிற்கு இடம்கொடாத எளிமையும், நேர்மையும் கண்டிப்பும் வாய்ந்தது; ‘யான்’ என்பவன் சாதுரியமும், கோணலும், தந்திரமும், வஞ்சகம் பொருந்திய அவாக்களும் உடையவன்; முடிவற்ற மாறுதல்களுக்கும் குறைதல்களுக்கும் இடம் கொடுக்கிறவன். ‘யான்’ என்பவனை மதிமயங்கி வணங்குகிறவர்கள் ஒரே சமயத்தில் ஒவ்வோர் உலக அவாவையும் திருப்தி செய்து கொள்ளலாம் என்றும், மெய்ப்பொருளை அடையலாம் என்றும் வீணாக நினைக்கின்றனர். ஆனால், மெய்ப்பொருளை நேசிக்கின்றவர்கள் ‘யான்’ என்பதை விடுத்து மெய்ப்பொருளை வணங்குகிறார்கள்; அவர்கள் உலக விஷயங்களினின்றும், உலக இன்பங்களினின்றும், தங்களைக் காத்துக்கொள்ளுகிறார்கள். நீங்கள் மெய்ப்பொருளை அறிதற்கும் அடைதற்கும் விரும்புகின்றீர்களா? அப்படியானால் நீங்கள் தியாகம் செய்வதற்கும், முற்றத் துறந்ததற்கும் தயாராய் இருத்தல் வேண்டும். ஏனெனில் ‘யான்’ என்பதன் கடைசி அடையாளமும் காணமற் போன பொழுது, மெய்ப்பொருளை அதனுடைய எல்லா மகிமையோடும் காணலாம்.

நித்திய கிறிஸ்து நாதர், தம்முடைய சீடன் ஆவதற்கு விரும்புகிறவன், “ஒவ்வொரு நாளும் ‘யான்’ என்பதை மறுக்க வேண்டும்” என்று சொன்னார். நீங்கள் ‘யான்’ என்பதை மறுப்பதற்கும், உங்களுடைய காமங்களையும்  குரோதங்களையும், உங்களுடைய அபிப்பிராயங்களையும் விட்டுவிடுவதற்கும் விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளின் சுருங்கிய வழியில் பிரவேசித்து, உலகத்தார் அடையாத சாந்தியை அடையலாம், ‘யான்’ என்பதை முற்றும் மறுத்தலும், முற்றும் அழித்தலும், மெய்ப்பொருளின் பூரண நிலை; சகல மதங்களும் சகல தத்துவ சாஸ்திரங்களும் இந்த மேலான நிலையை அடைவதற்குரிய பல துணைகள்.

‘யான்’ என்றல் மெய்ப்பொருள் இல்லை யென்றல். மெய்ப்பொருள் என்றல் ‘யான் இல்லை என்றல். நீங்கள் ‘யான்’ என்பது இறக்கும்படி விடுங்காலையில் நீங்கள் மறுபடியும் மெய்ப்பொருளாக அவதரிக்கின்றீர்கள். நீங்கள் ‘யான்’ என்பதைப் பற்றிக் கொண்டிருக்கும் காலையில், உங்களின்று மெய்ப்பொருள் மறக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் ‘யான்’ என்பதைப் பற்றிக் கொண்டிருக்கும் காலையில், உங்கள் மார்க்கத்தில் ஓயாத கஷ்டங்கள் சேர்ந்து கொண்டிருக்கும். துன்பங்களும், துக்கங்களும், ஆசாபாசங்களும் நீங்கள் அடையும் பலன்களாயிருக்கும். மெய்ப்பொருளிடத்துக் கஷ்டங்கள் இல்லை; நீங்கள் மெய்ப்பொருளைச் சேர்ந்தால், நீங்கள் சகல துக்கத்தினின்றும் ஆசாபங்கத்தினின்றும் விடுபடுவீர்கள்.

மெய்ப்பொருள் தன் இயற்கையில் மறைபட்டிருப்பதன்று; இருளன்று. அஃது எப்பொழுதும் விளங்கிக் கொண்டும், பூரணமாக ஒளிர்ந்துகொண்டும் இருக்கிறது. ஆனால், வழிதப்பிய குருட்டு ‘யான்’ அதனைக் காண முடியாது பகலில் ஒளி, குருடர் தவிர மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டிருப்பதில்லை; மெய்ப்பொருளின் ஒளி ‘யான்’ என்னும் அகங்காரத்தால் குருடராய் இருக்கிறவர் தவிர, மற்றவர்களுக்கு மறைக்கப் பட்டிருக்கவில்லை.

மெய்ப்பொருள் பிரபஞ்சத்தில் ஓர் உண்மைப்பொருள். உள்ளூர்ந்த சமாதானம், பூரண நிதி, நித்திய அன்பு, எதனையும் அதனோடு சேர்க்க முடியாது; அதிலிருந்து எடுக்க முடியாது. அஃது எந்த மனிதனையும் சார்ந்திருக்கவில்லை; ஆனால், அதனை எல்லா மனிதரும் சார்ந்திருக்கின்றனர்.

நீங்கள் ‘யான்’ என்னும் கண்கள் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில், நீங்கள் மெய்ப்பொருளின் அழகைக் காண முடியாது. நீங்கள் வீண் பெருமைக்காரர்களாயிருப்பின், நீங்கள் ஒவ்வொன்றையும் உங்களுடைய சொந்த வீண்பெருமையாகி வர்ணத்தைப் பூசிக் காண்பீர்கள்; நீங்கள் காமிகளாயிருந்தால், உங்களுடைய அகமும் மனமும் காமப்புகையாலும் சுடர்களாலும் மூடப்பட்டிருக்கும்; அவற்றின் மூலமாக ஒவ்வொன்றும் விகாரப்பட்டுத் தோன்றும்; நீங்கள் கர்வம் உள்ளவர்களாகவும், உங்கள் அபிப்பிராயமே சரி என்று கொள்கிறவர்களாகவும் இருந்தால், உங்கள் அபிப்பிராயங்களின் பெருமையையும் சிறப்பையும் தவிர, வேறு ஒன்றையும் பிரபஞ்சம் முழுவதிலும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.

‘யான்’ என்னும் மனிதனிலிருந்து மெய்ப்பொருளின் மனிதனை வேறு பிரித்துக் காட்டுகிற குணம் ஒன்று உண்டு; அது பணிவு, வீண் பெருமையிலிருந்தும், பிடிவாதத்திலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுபட்டிருத்தல் மாத்திரமில்லாமல், தம்முடைய அபிப்பிராயங்களை விலையற்றனவாகக் கருதலுமே உண்மையான பணிவு.

எவன் ‘யான்’ என்னும் அகங்காரத்தில் அமிழ்ந்திருக்கிறானோ, அவன் தனது சொந்த அபிப்பிராயங்களை மெயப்பொருள் என்றும், பிறரது அபிப்பிராயங்களை பொய்ப் பொருள் என்றும் மதிக்கிறான். ஆனால், மெய்ப்பொருளுக்கும் தனது சொந்த அபிப்பிராயத்துக்கும் உள்ள வேற்றுமையைக் காணுதற்குக் கற்றுக் கொண்டு மெய்ப்பொருளின் அன்பன், எல்லா மனிதர்களையும் தயாளம் என்னும் கண்ணால் பார்க்கிறான்; பிறருடைய அபிப்பிராயங்களுக்கு விரோதமாகத் தன்னுடைய அபிப்பிராயங்களை நிலைநாட்ட முயல மாட்டான்; தான் அதிகமாக நேசிக்கிற தன் அபிப்பிராயங்களை விட்டுக்கொடுத்து, மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவிப்பான், ஏனென்றால், மெய்ப்பொருள் இயற்கையில் இன்ன தன்மையதென்று சொல்ல முடியாததாகவும், அனுபவித்து மாத்திரம் உணரத்தக்கதாகவும் இருக்கிறது. எவன் அதிகமாகத் தயாளத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அதிகமாக மெய்ப்பொருளைக் கொண்டிருக்கிறான்.

மனிதர் சூடான தர்க்கங்களைச் செய்துகொண்டு தாம் மெய்ப்பொருளை ஸ்தாபிக்கிறது போல மூடத்தனமாக நினைக்கின்றனர்; அப்பொழுது உண்மையில் அவர் தம்முடைய சொந்த அற்ப விருப்பங்களையும், அழிந்து போகும் அபிப்பிராயங்களையும் ஸ்தாபிக்கின்றனர். ‘யான்’ என்பதைப் பின்பற்றுகிறவன் மற்றவர்களோடு சண்டை செய்வதற்காக ஆயுதங்களை எடுக்கிறான். மெய்ப்பொருளைப் பின்பற்றுகிறவன் தன்னோடு சண்டை செய்வதற்காக ஆயுதங்களை எடுக்கிறான். மெய்ப்பொருள் மாறுதல் இல்லாததாயும், அழிவு இல்லாததாயும் இருக்கிறபடியால், அஃது உங்கள் அபிப்பிராயத்துக்கும் என் அபிப்பிராயத்திற்கும் வேறாக இருக்கிறது. நாம் அதனுள் பிரவேசிக்கலாம்; அல்லது நாம் அதற்கு வெளியே இருக்கலாம்; ஆனால், நம்முடைய காப்பும் மிகை, அவை நம்மீது திருப்பி எறியப்படுகின்றன.

மாந்தர் ‘யான்’ என்பதால் அடிமைப்படுத்தப்பட்டு, கோபம், வீண் பெருமை, பிறர்மீது குற்றங்சாட்டல் முதலிய துர்க்குணங்களுடையவர்களாய், தம்முடைய சொந்த மதம் மாத்திரம் உண்மை மதம் என்றும், மற்றவர்களுடைய மதங்கள் பொய் மதங்கள் என்றும் நம்புகின்றனர். அவர் மிக ஆத்திரத்தோடு ஜனங்களைத் தமது மதத்தில் சேர்க்கின்றனர். மெய்ப்பொருள் மதமாகிய ஒரே ஒரு மதம்தான் உண்டு. ‘யான்’ என்னும் பிராந்தியாகிய ஒரே ஒரு பிராந்திதான் உண்டு. மெய்ப்பொருள் ஒரு வெறும் நம்பிக்கை அன்று; அது சுயநலமற்ற, தூய்மையான, ஆசிப்புள்ள ஓர் அகம். எவன் மெய்ப்பொருளைப் பற்றி நிற்கின்றானோ அவன் எல்லாரோடும் சமாதானமாய் வாழ்கிறான்; எல்லோரையும் அன்பு நினைப்புகளால் போஷிக்கிறான்.

நீங்கள் உங்களுடைய மனத்தையும், அகத்தையும், நடத்தையையும் மௌனமாக ஆராய்வீர்களாயின், நீங்கள் மெய்ப்பொருளின் மக்களா, அல்லது ‘யான்’ என்பவனை வணங்குகிறவர்களா என்பதை நீங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்; நீங்கள் ஐயம், பகைமை, பொறாமை, காமம், வீண்பெருமை முதலியவற்றின் நினைப்புக்களை ஒளித்து வைத்திருக்கின்றீர்களா? அல்லது நீங்கள் இத்தீய நினைப்புக்களுக்கு விரோதமாக ஊக்கத்தோடு போராடுகின்றீர்களா? நீங்கள் முதன் சொல்லியவர்களாயின், நீங்கள் நீச மதத்தை அநுசரிப்பவர்களாயிருப்பினும், நீங்கள் ‘யான்’ என்பதோடு கட்டப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் வெளிப்படையாக ஒரு மதத்தையும் அநுசரியாதவர்களாயிருப்பினும், நீங்கள் மெய்பொருளைக் கோருகிற மாணாக்கர்கள், நீங்கள் காமக்குரோதமுள்ளவர்களா, மனம் போன போக்கில் போகிறவர்களா, சுய காரியங்களையே எப்பொழுதும் நாடிக் கொண்டிருக்கிறவர்களா, பொறியின்பங்களை நுகர்கிறவர்களா, ‘யான்’ என்று அகங்கரிக்கின்றவர்களா? அல்லது நீங்கள் சாந்தமுள்ளவர்களா, அமரிக்கையுள்ளவர்களா, பரநயமுள்ளவர்களா, ஒவ்வொருவகைப் பொறியின்பத்தையும் நீத்தவர்களா, உங்களுக்குச் சொந்தமானதை விட்டுவிடச் சித்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் முந்தியவர்களாயின் உங்களுக்கு எஜமான் ‘யான்’; நீங்கள் பிந்தியவர்களாயின் நீங்கள் நேசிக்கும் பொருள் மெய்ப்பொருள். நீங்கள் ஐஸ்வரியங்களை அடைய முயல்கின்றீர்களா? நீங்கள் உங்கள் கட்சிக்காரர்களுக்காக ஆத்திரத்துடன் சண்டைபோடுகின்றீர்களா? நீங்கள் செல்வாக்கும் தலைமைக்கும் அவாவுகின்றீர்களா? நீங்கள் டம்பத்திற்கு தற்புகழ்ச்சிக்கும் இடம் கொடுத்திருக்கின்றீர்களா? நீங்கள் ஐஸ்வர்யங்களின் ஆசையைத் துறந்துவிட்டீர்களா? நீங்கள் எல்லாச் சண்டைகளையும் விட்டுவிட்டீர்களா? நீங்கள் மிக மிகத் தாழ்ந்த இடத்தில் இருத்தலிலும், பிறரால் புறக்கணிக்கப்படுதலிலும் திருப்தியடைகின்றீர்களா? நீங்கள் உங்களைப் பற்றிப் பேசுதலையும் உங்களைப் பெருமை உடையவர்களாக மதித்தலையும் நிறுத்தி விட்டீர்களா? நீங்கள் முந்தியவர்களாயின், நீங்கள் கடவுளை வணங்குகிறதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் அகத்தின் கடவுள் ‘யான்’ தான். நீங்கள் பிந்தியவர்களாயின், நீங்கள் கடவுளைத் துதியாதவர்களாயிருப்பினும், நீங்கள் மிக மிக மேலான பொருளைடய ‘கடவுளுடன்’ வசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

மெய்ப்பொருளின் அன்பனைத் தெரிந்துகொள்ளுதற்குரிய அடையாளங்கள் தெளிவானவை. அவற்றை ஸ்ரீ கிருஷ்ணபகவான்  ‘பகவத் கீதை’யில் பின்வருமாறு கூறுகிறார்.

''அறிவினை அடைதற் கநுதினம் முயறல்,
ஒருவினை குறிக்கோள், உயிர்க்கூறு செயாமை,
அடங்கிய பசிகள், அஞ்சாமை, ஈகை,
அடக்கம், கடவுள்பால் அன்புநன் னேர்மை,
மெய்ம்மை கூறுதல், வெகுளிகொள் ளாமை,
பொறுமை, தூய்மை, உறுதி யுடைமை,
மற்றையோர் பெரிதா மதிப்பவர்க் களித்தல்,
இன்பம் துன்பம் இரண்டிலும் சமநிலை,
பிறர்குறை காணாப் பெருமை, இரக்கம்,
ஆசை களினால் அசைக்கப் படாமை,
மெல்லிய தன்மை, மேம்பா டுடைமை,
தீங்செய் தார்க்கெதிர்த் தீங்குசெய் யாமை,
இவைஅறி குறிகள் எம்இள அரசே!
மெய்ப்பொருள் வழியில் மேவிநிற் போர்க்கே"

மாந்தர் பொய்ப்பொருளாகிய ‘யான்’ என்பதன் தப்புவழியில் சென்று, தமது தெய்வப்பிறப்பையும், பக்தித் தன்மையையும், மெய்ப்பொருளையும் மறந்தபொழுது, ஒருவரை ஒருவர் மதிப்பதற்குக் கற்பனையான வகுப்புக்களை ஏற்படுத்தி, மெய்ப்பொருளை உணர்த்துவதற்குத் தமது சொந்த மதத்தை அங்கீகரித்துப் பற்றிக் கொள்ளுகின்றனர். அதனால் மாந்தர் ஒருவருக்கொருவர் விரோதமாகப் பிரிக்கப்பட்டு, இடைவிடாத பகைமையும் சண்டையும், முடிவில்லாத துன்பமும் துக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

வாசகர்களே! நீங்கள் மெய்ப்பொருளை அடைவதற்கு நாடுகின்றீர்களா? அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ‘யான்’ என்பது இறக்கட்டும்; நீங்கள் இதுவரையில் விடாமல் பற்றிக்கொண்டிருந்த அவைகளும், பசிகளும், விருப்பங்களும், அபிப்பிராயங்களும், சுருங்கிய எண்ணங்களும், துவேஷங்களும், உங்களிடத்திலிருந்து நீங்கட்டும்; அவை இனிமேல் ஒருபொழுதும் உங்களை அடிமைப்படுத்தாமல் இருக்கட்டும்; அப்பொழுது மெய்ப்பொருள் உங்களுடையதாயிருக்கும். உங்களுடைய மதம் மற்றைய எல்லா மதங்களிலும் மேலானதென்று கருதுவதை நிறுத்தி, தயாளமாகிய மேலான பாடத்தைப் படிப்பதற்குப் பணிவோடு முயலுங்கள். சண்டையும், துக்கத்தையும் உண்டு பண்ணுவதாகிய, நீங்கள் வணங்குகிற இரக்ஷகரே உண்மையான இரக்ஷகர்; உங்களுடைய சகோதரர்கள் உங்களைப் போலவே உண்மையோடும் ஊக்கத்தோடும் வணங்குகிற இரக்ஷகர் பொய்யான இரக்ஷகர் என்னும் கொள்கையை உடனே விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் பக்தி நெறியை ஊக்கத்தோடு நாடுங்கள்; பின்னர், ஒவ்வொரு பக்தனும் மனித சமூகத்தின் இரக்ஷகன் என்று காண்பீர்கள்.

‘யான்’ என்பதை விடுதல் புறப்பொருள்களைத் துறத்தல் மாத்திரம் அன்று, அஃது அகப்பாவத்தையும், அகப் பொய்யையும் துறத்தலுமாம். வீணான உடைகளை விடுதலால், செல்வங்களைத் துறத்தலால், சில உணவுகளை மறுத்தலால், பொதுவான வார்த்தைகளைப் பேசுதலால், இத்தகைய காரியங்களைச் செய்தலால் மெய்ப்பொருளைக் காண முடியாது. ஆனால், வீண் பெருமையை விடுதலால், செல்வங்களின் அவாவைத் துறத்தலால், பொறியின்பங்களின் ஆசையை அடக்குதலால், சகல வெறுப்புக்களையும், சண்டைகளையும், குற்றம் காண்டலையும், சுயநயத்தையும் விடுதலால், அகத்தில் சாந்தத்தையும், தூய்மையையும் கொள்வதால், இத்தகைய காரியங்களைச் செய்தலால் மெய்ப்பொருள் காணப்படுகிறது. பிந்திச் சொன்னவற்றைச் செய்யாது முந்திச் சொன்னவற்றைச் செய்தல் கள்ளத்தனமும், வெளி வேஷமுமாகும். ஏனெனில், பிந்திச் சொன்னவற்றில் முந்திச் சொல்லியவை அடங்கியிருக்கின்றன. நீங்கள் வெளி உலகத்தைத் துறந்து, ஒரு காட்டின் மத்தியில் அல்லது ஒரு குகையின் உள்ளே தனித்திருக்கலாம்; ஆனால், உங்கள் சுயநலத்தை உங்களுடன் வைத்துக்கொண்டே இருப்பீர்கள்; அதனை நீங்கள் துறந்தால் ஒழிய, உங்களுடைய துர்ப்பாக்கியம் பெரிதாகவும் உங்களுடைய பிரமை ஆழ்ந்ததாகவும் இருக்கும். நீங்கள் இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே இருந்து உங்கள் கடமைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கலாம்; அப்படியிருந்தும், உங்கள் அகப்பகையாகி உலகப்பற்றை நீங்கள் துறக்கலாம், உலகத்தில் இருந்து கொண்டே உலகப்பற்றில்லாதிருத்தல், மிக மிக உயர்ந்த பூரணத்வம்; மிக மிக இன்பகரமான சாந்தி; மிக மிக உயர்ந்த வெற்றியை அடைவதற்கு வழி. ‘யான்’ என்பதைத் துறத்தல் மெய்ப்பொருளுக்கு வழி. ஆதலால்,

"அவ்வழி செல்லுக; அவாப்போல் துன்பிலை;
வெறுப்பின் துயரிலை; பொறிபோல் கரவிலை,
அவ்வழி செல்லுக; அருமிகை யொன்றை
விடுத்தோன் நடந்தான் வெகுதூரம் தானே."

‘யான்’ என்பதை நீங்கள் வெல்லும் காலையில், பல பொருள்களையும், அவற்றில் ஒன்றிற்கொன்றுள்ள சம்பந்தங்களையும் நீங்கள் காணத் தொடங்குவீர்கள். எவன் காமத்தால் அல்லது குரோதத்தால், விருப்பு அல்லது வெறுப்பால் ஆளப்படுகிறானோ, அவன் ஒவ்வொன்றையும் தனது அத்தன்மையோடு பொருத்திக் கொண்டு தனது சொந்தப் பிராந்திகளைப் பார்க்கிறான்; எவன் சகல காமத்தினின்றும், குரோதத்தினின்றும், பக்ஷத்தினின்றும் பூரணமாக விடுபட்டிருக்கிறானோ, அவன் தன்னைத்தான் இருக்கிறபடியே பார்க்கிறான். மற்றவர்களையும், அவர்கள் இருக்கிறபடியே பார்க்கிறான். எல்லாப் பொருள்களையும், அவற்றின் சரியான அளவுகளையும், சரியான சம்பந்தா சம்பந்தங்களையும் பார்க்கிறான். தான் தாக்குவதற்கு எதுவும், காப்பதற்கு எதுவும், பேணுவதற்குரிய உரிமை எதுவும் இல்லாதபடியால், அவன் சாந்தியாய் இருக்கிறான். அவன் மெய்ப்பொருளின் பூரண சாமானியத் தன்மையை அடைந்து விட்டான்; ஏனெனில், மனத்தினுடையவும் அகத்தினுடையவும் பக்ஷபாதமற்ற அமைதியான இன்பகரமான நிலைமையே மெய்ப்பொருளின் நிலைமை. எவன் அந்த நிலைமையை அடைகிறானோ, அவன் தேவதூதர்களோடு வசிக்கிறான்; பரம்பொருளின் பாதபீடத்தில் இருக்கிறான். பெரிய சட்டத்தைத் தெரிந்து கொண்ட பின்னர், துக்கத்தின் மூலத்தைத் தெரிந்துகொண்ட பின்னர், துன்பத்தின் மர்மத்தைத் தெரிந்துகொண்ட பின்னர், மெய்ப்பொருள் வீட்டின் வழியைத் தெரிந்துகொண்ட பின்னர், ஒருவன் எவ்வாறு சண்டையில் அல்லது குற்றங்காண்டலில் ஈடுபடுவான்? குருட்டுத் தனமாகச் சுயநலமே நாடும் உலகமானது, தன்னுடைய சொந்தப் பிராந்திகளின் மேகங்களால் சூழப்பட்டு, பொய்யினுடையவும் ‘யான்’ என்பது இறந்த அல்லது இறந்துகொண்டிருக்கிற, அகத்தின் பூரண சாமானியத் தன்மையை ஒரு சிறிதும் உணர முடியாதென்பதையும் அவன் அறிவான். அப்படியிருந்தாலும், துன்பத்தைக் கொடுக்கிற காலமானது துக்க மலைகளை ஒன்றன் மீதொன்றாக அடுக்கியபொழுது, அம் மலைகளால் நசுக்கி அமிழ்த்தப்பட்ட உலக உயிரானது, அதனுடைய முடிவான அடைக்கல இடத்திற்கு ஓடும் என்பதையும், அக்காலம் முடிந்தபின் ஒவ்வோர் உயிரும் மெய்ப்பொருள்பால் வந்து சேரும் என்பதையும் அவன் அறிவான். ஆதலால், அவன் எல்லாரிடத்திலும் நல்விருப்பங்கொண்டு, நெறி தப்பிய மக்களிடத்து தந்தை காட்டும் உருக்கமான இரக்கத்தோடு எல்லாரையும் பார்க்கிறான்.

மாந்தர் மெய்ப்பொருளை உணர முடியாது; ஏனெனில், அவர் ‘யான்’ என்பதைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர்; ஏனெனில், அவர் ‘யான்’ என்பதை உண்மை என்று நம்பி நேசிக்கின்றனர்; ஏனெனில், அவர் வெறும் பிராந்தியாகிய ‘யான்’ என்பதே உண்மையான பொருளென்று நம்புகின்றனர்.

‘யான்’ என்பதை நீங்கள் நம்புதலையும் நேசித்தலையும் நிறுத்தியபொழுது, நீங்கள் அதனைவிட்டு மெய்ப்பொருள்பால் ஓடுவீர்கள்; நித்தியமான உண்மையைக் காண்பீர்கள்.

மனிதர்கள் போகம், இன்பம், வீண் பெருமை என்னும் மதுக்களால் வெறி கொண்டிருக்கும்பொழுது, தாம் நெடுநாள் உயிர் வாழ வேண்டுமென்ற தாகம், அவர்களுக்குள் ஆழ்ந்து வளர்ந்து, தாம் ஸ்தூல சரீரங்களோடு நித்தியமாக வாழலாமென்ற கனவுகளால் தாமே தம்மை ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் விதைத்த வினைகளின் விளைவுகளை அறுக்கத் தொடங்கும்போது, துன்பமும்  துக்கமும் வந்து சேருகின்றன; அப்போது, அவர்கள் அவற்றால் நசுக்குண்டும் தாழ்த்தப்பட்டும், ‘யான்’ என்பதையும், ‘யான்’ என்பதன் வெறிகள் எல்லாவற்றையும் துறந்து, அவர்கள் நோகிற ஆகங்களோடு என்றும் அழியாததாகவும் இருக்கிற நித்தியமான மெய்ப்பொருள்பால் வந்து சேர்கிறார்கள்.

மாந்தர் தீமையிலிருந்து நன்மைக்கும், ‘யான்’ என்பதிலிருந்து மெய்ப்பொருளுக்கும், துக்கமாகிய இருட்டு வாயில் வழியாகச் செல்கின்றனர்; ஏனெனில், துக்கமும், ‘யான்’ என்பதும் ஒன்றில் நின்று ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. மெய்ப்பொருளின் அமைதியிலும் ஆனந்தத்திலும் மாத்திரம் எல்லாத் துக்கங்களும் நீங்குகின்றன. நீங்கள் நெடுங்காலமாக வளர்த்துவந்த விருப்பங்கள் நிறைவேறாமல் போன காரணத்தால், அல்லது நீங்கள் எதிர்பார்த்தபடி ஒருவர் நடந்துகொள்ளாத காரணத்தால், நீங்கள் ஆசாபங்கம் அடைவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் ‘யான்’ என்பதைப் பற்றிக்கொண்டிருத்தலே. நீங்கள் உங்கள் நடத்தைக்காக இரங்குவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் ‘யான்’ என்பதற்கு இடம் கொடுத்திருப்பதே. ஒருவன் உங்கள்பால் நடந்துகொள்ளும் தன்மையிலிருந்து நீங்கள் மனஸ்தாபமும் மனவருத்தமும் அடைவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் ‘யான்’ என்பதை வளர்த்துக்கொண்டு வருவதே. பிறன் ஒருவன் உங்களுக்குச் செய்த செயலால், அல்லது உங்களைப் பற்றிச் சொல்லிய சொல்லால் நீங்கள் துன்புறுவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் ‘யான்’ என்பதன் துன்பகரமான வழியில் நடந்து கொண்டிருத்தலே. எல்லாத் துன்பங்களும் ‘யான்’ என்பதற்குச் சொந்தமானவை. எல்லாத் துன்பங்களும் மெய்ப்பொருளில் முடிவு அடைகின்றன. நீங்கள் மெய்ப்பொருளில் பிரவேசித்து, மெய்ப்பொருளை அடைந்த பொழுது, ஆசாபங்கமும், அவமானமும், மன வருத்தமும் அடைய மாட்டீர்கள்; துக்கம் உங்களிடத்திலிருந்து பறந்து போய்விடும்.

'யான்' ஆன்மாவை அடைக்கும் சிறையே;
கதவைத் திறக்கும் காவலன் கடவுளே;
அவன் அழைக் கும்போழ் தவன்பின் செல்லுக;
அவன்நெறி இருளிற் செலினுமொளி சேர்க்குமே.

உலகத்தின் துக்கமானது அது தன்னாலேயே விளைவித்துக் கொள்ளப்பட்டது. துக்கம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி ஆழப்படுத்துகின்றது; துக்கத்தின் ஈறு மெய்ப்பொருளின் முதல்.

நீங்கள் அதிகமாகத் துன்பப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் வாழ்க்கையின் பிரச்னைகளைப்பற்றி ஆத்திரத்தோடு சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் ‘யான்’ என்பதனோடு அமர் செய்வதற்கும் மெய்பொருளின் மாணாக்கன் ஆவதற்கும் தகுதி உடையவர்கள்.

‘யான் என்பதனை விடுவதற்குரிய அவசியத்தைக் காணாத அறிவிலி, பிரபஞ்சத்தைப் பற்றி முடிவில்லாத கோட்பாடுகளை உண்டாக்கி, அவற்றை மெய்ப்பொருள் என்று சொல்லுகிறான். ஆனால் நல்லொழுக்கத்தைக் கொண்டு அவ்வொழுக்க நெறியில் நேரே ஒழுகுங்கள். ஒரு நாளும் மாறாததும், கோட்பாட்டில் அடங்காததுமான மெய்ப்பொருளை நீங்கள் காண்பீர்கள். உங்கள் அகத்தில் மெய்யாகிய பயிரைச் செய்யுங்கள்; அதற்குச் சுயநயமற்ற அன்பும் ஆழ்ந்துணர்ந்த இரக்கமுமாகிய நீரை இடைவிடாது பாய்ச்சுங்கள்; அதில் அன்போடு பொருந்தாத நினைப்புகளும் உணர்ச்சிகளுமாகிய பறவைகள் விழாதபடி காத்து வாருங்கள்: உங்களுக்குத் தீமை செய்தார்க்கு நன்மை செய்யுங்கள்; உங்களை வெறுத்தார்பால் அன்பு பாராட்டுங்கள்; உங்களைக் கடினமாக நடத்துகிறவர்களை இதமாக நடத்துங்கள்; உங்களைத் தாக்கியபொழுது மௌமாக இருங்கள்; அவ்வாறே உங்கள் சுயநய விருப்பங்களை யெல்லாம் அன்பாகிய சுத்தத் தங்கமாக மாற்றுங்கள்; ‘யான்’ என்பது மெய்ப்பொருளில் மறைந்துபோம். பின்னர், நீங்கள் அடக்கமாகிய தெய்வ உடையால் உடுத்தப்பெற்று, பணிவாகிய ஏரில் பூட்டப்பெற்று, குற்றமற்றவர்களாய் மனிதர்களுள் நடப்பீர்கள்.

மெலிந்தசோ தரனே! மெய்ப்பொரு ளிறைபால்
முயற்சியும் சண்டையும் முடிவடைந் திடுங்காண்;
மெய்ப்பொரு ளுடைய மென்புனல் விரும்பி
'யான்' எனும் பாலையில் ஏன்செல் கின்றாய்?
மறம்புரிந் தலையுநின் வழியுள துயிரின்
இன்பநீ ரோடையோ டன்பார் பசுநிலம்;
வந்திளைப் பாறு; கண்டிடு தலைகடை;
தேடுவான் படுவோன்; காண்போன் படுவோன்.
(படுவோன்-தேடப்படுவோன்; காண்போன்-காணப்படுவோன்.)
நின்னுடை இறைவன் சொல்லொணா மலையலன்:
காற்றில் பறக்கும் கானலில் வாழ்கிலன்;
தளர்வினை யளிக்கும் மணலார் வழிகளில்
அவன் திரவுற் றறிந்திடாய் நீயே.
நின்னுடைய அரசன் பொன்னடிச் சுவட்டினை
'யான்' எனும் பாலையில் தேடுதல் விடுவாய்.
அவன்சொலின் இனிமையை அவாவுறின் கேட்க;
பிறரது வெற்றுரை செவிகொளாய் நீயே.

அழியிடம் விடுவாய்; அனைத்தும் துறப்பாய்;
விரும்பிய வெல்லாம் விட்டொன்றிலாய்,
உள்ளுள கோவிலுள் பொள்ளெனச் சென்றிடு;
தூயன், பரமன், மாறிலான் அங்குளன்.

மௌன அகத்துள் வாழ்கிறான் அவன்தான்;
மறமும், துக்கமும், வருந்தி அலைதலும்
நீத்(து) அவன் ஆனந்த நீரில் மூழ்குவாய்;
உன்னுயிர் வேண்டுவ உரைப்பான் அவனே.

மெலிந்தசோ தரனே! விடுஅமர் முயற்சி;
காண்பாய் சாந்தியைக் கடவுளின் அகத்தே
'யான்' எனும் பாலையில் அலைதலை நிறுத்தி
வந்துடன் மெய்ப்பொருள் வண்புனல் பருகுவாய்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s