-கி.வா.ஜகந்நாதன்

61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு
ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும். ஆசிரியப் பெருமான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நானும் வேறு சில மாணவர்களும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். கொல்லைப்புறக் கதவின் தாழ்ப்பாள் ஓசைப்பட்டது. யார் உள்ளே வருகிறார்கள் என்பது முதலில் தெரியவில்லை. திருப்பனந்தாள் மடத்தின் தலைவர் மெள்ள உள்ளே நுழைந்து வந்தார்.
“யார் வருகிறார்கள்?” என்று ஆசிரியப் பெருமான் கேட்டார். “சுவாமிகள் வருகிறார்கள்” என்று சொன்னோம். அப்படியா!” என்று இவர் எழுந்தார். சுவாமிகளிடம், “சொல்லி அனுப்பியிருந்தால் நானே தங்களிடம் வந்திருப்பேனே. எதற்காகத் தாங்கள் இப்படிப் பின்வழியாக வர வேண்டும்?” என்று கேட்டார்.
“தாங்கள் செய்திருக்கும் உபகாரத்திற்கு இது ஒரு பொருட்டா? தாங்கள் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்களையும், குமரகுருபரர் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்ததன் மூலம் நான் பிறந்த குலத்தையும் உயர்த்திவிட்டீர்கள். நான் புகுந்த மடாலயத்தின் சிறப்பையும் உயர்த்திவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது” என்று சொல்லி ஆயிரம் ரூபாயை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து வழங்கினார். ஆசிரியப் பெருமானுக்கு அளவிறந்த வியப்பு உண்டாயிற்று. உள்ளத்தை நெகிழச் செய்த இந்த நிகழ்ச்சியை இவர் பலரிடம் அடிக்கடி சொல்லி உருகியது உண்டு.
$$$
62. என் சரித்திரம்
ஆசிரியப் பெருமானின் சதாபிஷேகம் நடந்தபோது அவர் தம் வரலாற்றை எழுத வேண்டுமென்று பலரும் வற்புறுத்தினார்கள். அப்போது ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த கல்கி, ஆனந்த விகடனில் வாரந்தோறும் எழுத வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்போது எழுத முடியவில்லை. திரும்பவும் 1940-ஆம் ஆண்டு முதல் எழுத வேண்டும் என்று வந்து கேட்டுக்கொண்டார். அதன்படி 1940-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆனந்த விகடனில் ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் தம் வரலாற்றை இவர் எழுதத் தொடங்கினார். அதற்காகப் பல பல இடங்களுக்கு எழுதி, அங்கங்கே உள்ள கட்டிடங்களையும், கோவில்களையும் படம் எடுத்து அனுப்பச் சொல்லிப் பெற்று வெளியிட்டார். ‘என் சரித்திரம்’ வெளியாகத் தொடங்கியவுடன் நாட்டில் ஒரு தனி எழுச்சி உண்டாயிற்று. ஆனால் 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியப் பெருமான் காலமானதால் அந்த வரலாறு முற்றுப் பெறவில்லை.
$$$
63. எலும்பு முறிவு
1942 ஜனவரி 12-ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல ஆசிரியர் மேல் மாடியில் ஒரு பெஞ்சியில் படுத்திருந்தார். விடியற்காலம் நான்கு மணி இருக்கும். எழுந்து கீழே வரும்போது தவறி விழுந்துவிட்டார். முழங்காலில் அடிபட்டு இரத்தம் ஒழுகிற்று. மயக்கமடைந்துவிட்டார். இவரைத் தூக்கி வந்து ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். பின்புதான் நினைவு வந்தது. காலில் வலி அதிகமாக இருந்தது. சில மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். எக்ஸ்ரே எடுக்கப்பெற்றது. அதில் எலும்பு முறிவு இருப்பது தெரிந்தது.
நோயினால் படுத்த படுக்கையில் இருந்த நிலையிலும் ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதை விடவில்லை. எந்த வகையான இளைப்பு இருந்தாலும் பாடம் சொல்லும்போது அந்த இளைப்பு இவருக்கு மறந்துபோகும்.
அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. சென்னையில் உள்ளவர்கள் எல்லாம் குடும்பத்தைக் கலைத்துக்கொண்டு வெளியூர்களுக்குப் போனார்கள். அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டில் ஆசிரியப் பெருமான் போய்த் தங்கி இருக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். அவ்வாறே ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஆசிரியர் காரில் ஏறிப் புறப்பட்டார். புறப்பட்டபோது அவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை .
‘கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்ற திருவாசகத்தைச் சொல்லிப் புறப்பட்டார். திரும்பவும் நான் இந்த வீட்டுக்கு வருவேனா? ‘ என்று கேட்டுக் கொண்டே புறப்பட்டார். மாலை நான்கு மணிக்கு கார் திருக்கழுக்குன்றம் போய்ச் சேர்ந்தது. தம்முடைய புத்தகங்களையும், ஏட்டுச் சுவடிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டதை ஆசிரியப் பெருமான் விரும்பவில்லை. குழந்தையைப் பிரிந்த தாய்போல வருந்தினார். அந்த வேதனையை உணர்ந்த இவருடைய புதல்வர் அவற்றையெல்லாம் திருக்கழுக்குன்றத்திற்கே கொண்டுபோய்ச் சேர்த்தார். பத்து மாட்டு வண்டிகளில் அந்தப் புத்தகங்கள் எல்லாம் வந்து சேர்ந்தன.
திருக்கழுக்குன்றம் வந்த பிறகு உடல்நலத்தில் கொஞ்சம் முன்னேற்றம் உண்டாயிற்று. எழுந்து உட்காரத் தொடங்கினார்.
என்னுடைய குடும்பம் அப்போது மோசூரில் இருந்தது. என் தந்தையாருக்கு உடம்பு சரியில்லை என்று கடிதம் வந்ததால் நான் மோசூருக்குப் போவதற்கு முன் திருக்கழுக்குன்றம் சென்றேன். ஆசிரியருடன் நெடுநேரம் இருந்தேன். தமிழ் நூல்களைப்பற்றி இவர் பேசிக்கொண்டிருந்தார். கம்ப ராமாயணம், தேவாரம் ஆகியவற்றை நல்ல முறையில் அச்சிட வேண்டுமென்ற ஆசை இவருக்கு இருந்தது. “அந்த இரண்டையும் நல்ல முறையில் அச்சிட உடன் இருந்து உதவி செய்வாயா? கையைக் கொடு” என்றார். அந்தத் திருக்கரத்தை ஏந்தும்போது அதுதான் கடைசியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இவருடைய கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். பின்னர் இவரிடம் விடைபெற்றுக்கொண்டு என் தந்தையாரைக் காண மோசூர் சென்றேன். அங்கே என் தந்தையார் காலமானார். அதனால் நான் குடும்பத்தினருடன் எங்கள் ஊராகிய மோகனூர் போனேன்.
$$$
64. வாழ்க்கை நிறைவு
திருக்கழுக்குன்றத்தில் அப்போது ஆசிரியருக்கு ஜுரம் உண்டாயிருந்தது. இவருடைய குமாரர் அருகில் இல்லை. சென்னைக்குச் சென்றிருந்தார். அவருக்குத் தந்தி அடித்தார்கள். ஆனால் அவர் வருவதற்குள் ஆசிரியப் பெருமான் இறைவன் திருவடியை அடைந்து விட்டார். இவரது இறுதிக் காலத்தில் அவருடன் நாம் இருக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கும் இவருடைய குமாரருக்கும் இருந்தது. தமிழ் தமிழ் என்பதே மூச்சாக வாழ்ந்த ஆசிரியப் பெருமான் தம் கடைசிக் காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் தம் வாழ்வின் நிறைவை எய்தினார்.
தமிழ்நாடு முழுவதும் இவர் பிரிவுக்கு இரங்கியது. என்னைப் பெற்ற தந்தையையும், அறிவு ஊட்டி வளர்த்த தந்தையையும் ஒரு சேர இழந்த எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
என்னுடைய ஆசிரியப் பெருமானின் உழைப்பெல்லாம் தமிழ் வளர்ச்சிக்கு எத்தனை பயன்பட்டுள்ளது என்பதைத் தமிழ் உலகம் இன்று நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. இவர் பெயரால் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் அமைக்கப்பெற்ற நூல் நிலையம் ஒன்று இன்று திருவான்மியூரில் இருக்கிறது. ஆசிரியப் பெருமான் சேகரித்த சுவடிகளும், புத்தகங்களும் அங்கே காப்பாற்றப்பெற்று வருகின்றன.
தமிழ்நாடு பாக்கியம் செய்தமையால் ஆசிரியப் பெருமான் திரு அவதாரம் செய்தார். இறைவன் இவருக்கு 87 ஆண்டு நீண்ட ஆயுளைக் கொடுத்தான். இவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தமிழுக்காகவே பாடுபட்டார். தமிழ் அன்னையை மீண்டும் பழைய நிலையில் இருக்கச் செய்தார். பழைய அணிகளைச் செப்பம் செய்து அணிந்ததோடு புதிய உரைநடையினாலும் அவளை எழில் கொழிக்கச் செய்தார். தமிழ் உலகம் தம் ஆசிரியரை நன்கு அறிந்து கொள்ளும்படி அவரது வரலாற்றை வெளியிட்டார். பல புலவர் பெருமக்களின் வரலாற்றை வெளியிட்டார். பழைய சங்க இலக்கியங்கள் எல்லாம் இன்றைக்கு மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன என்றால், இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தத் தமிழ்ப் பெருமகனார் செய்த தொண்டுதான். இன்று உலகம் முழுவதும் தமிழ்மொழியைப் பற்றிப் பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன என்றால், அதற்கு முக்கியமான காரணம் இந்தப் பெருமகனார் செய்துள்ள தமிழ்ப் பணியே என்பதை யாரும் மறக்கமாட்டார்கள். பாரதியார்,
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே!
என்று பாடியபடி தமிழர்களின் நெஞ்சில் என்றைக்கும் இந்தப் பெருமகனார் வாழ்வார் என்பது திண்ணம்!
(தொடர்கிறது)
$$$