-கி.வா.ஜகந்நாதன்

56. சதாபிஷேகம்
ஆசிரியப் பெருமானின் எண்பதாவது ஆண்டு நிறைவு நெருங்கிக் கொண்டிருந்தது. சஷ்டியப்த பூர்த்தியைச் சரியாக நடத்தவில்லை, இந்த விழாவையாவது சிறப்பாக நடத்த வேண்டுமென்று அட்வகேட்டாக இருந்த கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் எண்ணினார். அதற்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டார். இந்த விழா மிகச் சிறப்பாகப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஸர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியப் பெருமானின் திருவுருவப் படம் ஒன்றை பல்கலைக்கழக மண்டபத்தில் திறந்து வைத்தார்கள். தலைநகரில் மட்டுமன்றித் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும், பர்மா, இலங்கை ஆகிய இடங்களிலும்கூட ஆசிரியப் பெருமானுடைய சதாபிஷேக விழா நடைபெற்றது.
1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரண்டாவது பாகம் வெளியாயிற்று. இந்தப் பாகம் பிள்ளையவர்களிடம் ஆசிரியர் பாடம் கேட்கத் தொடங்கியது முதல் புலவர் பெருமானின் இறுதிக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை விளக்குகின்றது.
$$$
57. ராஜாஜியின் பாராட்டு
கலைமகளில் ஒரு சமயம் ‘பிச்சைப் பாட்டு’ என்ற தலைப்பில் ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீ ராஜாஜி அவர்கள் அப்போது மாம்பலத்தில் இருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் 22-5-37 அன்று ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
‘நமஸ்காரம். கலைமகளின் சில இதழ்கள் நான் பார்க்காமலே தவறிவிடுவது உண்டு. என் தொல்லைகளின் மத்தியில் சில இதழ்களை அதிருஷ்டவசத்தால் பார்த்துப் படிக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு தங்கள் பிச்சைப் பாட்டுக் கட்டுரையைப் படித்து ஆனந்தம் தாங்காமல் இதை எழுதுகிறேன். அதற்குத் தலைப்பு ‘ஊரைச் சுடுமோ’ என்று வைத்திருக்கலாம். இத்தகைய ஓர் இரத்தினத்தை நான் எழுதியிருந்தால் அவ்வாறுதான் பெயர் வைத்திருப்பேன். என்ன அழகான கதை! என்ன ரஸம் !
– இராஜகோபாலாச்சாரி
$$$
58. காந்தியடிகளைக் கண்டது
1937-ஆம் ஆண்டு சென்னையில் பாரதீய சாகித்ய பரிஷத்தின் மகாநாடு நடந்தது. அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுவின் தலைவராக யாரை நியமிப்பது என்கிற கவலை அந்த மகாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டாயிற்று. பிறகு ஆசிரியப் பெருமானையே அழைத்து வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து வரவேற்புரை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆசிரியர் அதற்கு இசைந்தார்.
மகாசபை கூடியது. தமிழின் பெருமையும், தமிழர்களின் பெருமையும் ஆசிரியர் சங்க நூல்களில் எவ்வாறு வருணிக்கப் பெற்றுள்ளன என்பதைத் தம் வரவேற்புரையில் எடுத்துக்காட்டி, மகாத்மா காந்தியை வரவேற்பதில் தாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பதையும் எடுத்துச் சொல்லிச் சபையில் உள்ளவர்களையும், காந்தியையும் மகிழ்வித்தார்.
அந்த வரவேற்பைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், “தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ?” என்று சொன்னார்.
$$$
59. குறுந்தொகைப் பதிப்பு
ஆசிரியப் பெருமான் குறுந்தொகையை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார். முன்பு ஒருவர் அதைப் பதிப்பித்திருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாத காரணத்தினால் பல பிழைகள் அப்பதிப்பில் இருந்தன. அது வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. புத்தகம் கிடைக்காமல் இருந்தது. எனவே குறுந்தொகையை விரிவான முறையில் அச்சிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதற்கு வேண்டிய ஆராய்ச்சிகளும் குறிப்பு எழுதும் வேலையும் நடந்து கொண்டிருந்தன.
குறுந்தொகைக்கு மிக விரிவான முறையில் உரையை எழுதினார். இவர் பதிப்பித்த நூல்களில் இதுவே மிக விரிவாக அமைந்தது. நூலாராய்ச்சி என்ற பகுதியை நூறு பக்கங்களில் எழுதியிருக்கிறார். பதவுரை, பொழிப்புரை, விசேட உரை. மேற் கோளாட்சி, ஒப்புமைப் பகுதி, பாடபேதங்கள் என்பனவும், விரிவான அகராதியும் இணைந்த பயனுள்ள பதிப்பு இது. இதை வெளியிட்டதில் இவர் ஒருவகை மனநிறைவு பெற்றார். இது 1937-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியாயிற்று.
$$$
60. குமரகுருபரர் பிரபந்தங்கள்
திருப்பனந்தாளில் காசிமடத்தின் தலைவராக இருந்த சாமிநாதத் தம்பிரான் ஆசிரியரிடம் பெரும் மதிப்பு உடையவர். காசிமடத்தின் முதல்வராகிய குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களை ஆசிரியர் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தது. தம் விருப்பத்தை ஒரு முறை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
அதுமுதல் ஆசிரியர் அப் பிரபந்தத்திற்குரிய குறிப்புகளை எழுதலானார். விரிவான முறையில் முகவுரை, அடிக் குறிப்போடு அதனை அச்சிடத் தொடங்கினார். 1939-ஆம் ஆண்டு குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள் வெளிவந்தன.
அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு ஆசிரியர் ஒருமுறை திருப்பனந்தாள் சென்றிருந்தார். சாமிநாதத் தம்பிரான் ஆசிரியருக்காகத் தனி இருக்கை ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர் வந்திருப்பது தெரிந்து பல புலவர்கள் வந்து இவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படி நாள் போவதே தெரியாமல் பொழுது போய்க்கொண்டிருந்தது.
$$$