-கி.வா.ஜகந்நாதன்

51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும்
‘தமிழ்விடு தூது’ என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது.
‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்’
என்ற கண்ணிதான் அது.
திருத்தணிகைப் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றை இயற்றிய கச்சியப்ப முனிவர் மிகப் பெரும் புலவர். சிவஞான முனிவருடைய மாணாக்கர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அந்த முனிவரிடம் மிகவும் பக்தி. ‘இறைவன் என் முன்னால் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டால், கச்சியப்ப முனிவரை ஒரே ஒருமுறை தரிசனம் பண்ண வேண்டுமென்று கேட்பேன்’ என்று அந்தப் புலவர் பெருமான் சொல்வாராம். அந்த முனிவர் இயற்றிய ‘கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது’ என்னும் நூலை விரிவான வகையில் வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் ஆராய்ச்சி செய்து வந்தார்.
$$$
52. தக்கயாகப் பரணி
1930-ஆம் ஆண்டு தக்கயாகப் பரணி அச்சிட்டு வெளிவந்தது. அதில் பலவகையான ஆராய்ச்சிகளை அமைத்திருந்தார். ஒரு சிறிய நூலுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா என்று பலரும் வியந்தார்கள்.
$$$
53. பிள்ளையவர்கள் சரித்திரம்
1930-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் மாடியில் படுத்திருந்த ஆசிரியர் எழுந்திருந்து கீழே இறங்கி வந்தார். வரும்போது கீழே இருந்த கதவு தடுக்கி விழுந்துவிட்டார். காலில் நன்றாக அடிப்பட்டு வீங்கிவிட்டது. அவரது வீட்டிற்கு அருகில் இருந்த டாக்டர் வந்து பார்த்தார். குணமாகவில்லை. பிறகு மிகச் சிறந்த டாக்டராகிய ரங்காசாரியாரை அழைத்து வந்தார்கள். அவர் ஆசிரியருக்கு வீட்டிலேயே ரண சிகிச்சை செய்தார். ஆசிரியர் சில நாட்கள் படுக்கையில் இருக்கும்படியாக நேர்ந்தது. அப்போது அவர் எதையும் படிக்கக் கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் ஆசிரியப் பெருமானுக்கு தமிழ்ப் பாட்டுக் காதில் விழாவிட்டால் மூச்சே நின்றுவிடும். நான் அவர் அருகிலேயே அப்போது இருந்து வந்தேன். ஆசிரியப் பெருமானுடைய புத்திரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலையாக இருந்தார். அவர் ஹைகோர்ட்டிற்குப் போன பிறகு ஏதாவது புத்தகத்தை எடுத்து என்னைப் படிக்கச் சொல்வார் ஆசிரியர். இவருடைய சிந்தனை பிள்ளையவர்களுடைய வரலாற்றை முடித்துவிட வேண்டும் என்பதில் இருந்தது. பல விதமான குறிப்புகளைப் பல காலமாகச் சேர்த்திருந்தார். முன் பகுதிகளை எழுதிவிட்டார். கடைசிப் பகுதி எஞ்சியிருந்தது. படுத்த படுக்கையாய் இருந்த போது இவருக்குப் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிப்பதற்குள் தம் வாழ்க்கை முடிந்து விடுமோ என்கிற அச்சம் இருந்தது.
ஒருநாள், “அந்தக் கட்டை எடுத்துக்கொண்டு வா” என்று என்னிடம் சொன்னார். “டாக்டர் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே” என்றேன் நான். “டாக்டருக்கு என்ன தெரியும்? என் கடமையை நான் செய்தால் ஆண்டவன் என்னைக் காப்பாற்றுவான்” என்றார். அந்தக் கட்டை எடுத்து வந்தேன். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இறுதிக் காலத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டார். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியை இவர் சொல்லச் சொல்ல நானும் கண்ணீர்விட்டுக் கொண்டே அந்தப் பகுதியை எழுதி வந்தேன். பிள்ளையின் வரலாறு ஒருவாறு பூர்த்தியாயிற்று. பிறகு அது இரண்டு பாகங்களாக வெளிவந்தது.
$$$
54. டாக்டர் பட்டம்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சில பெருமக்களுக்கு டி.லிட். பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இன்னார் இன்னாருக்குப் பட்டம் அளிக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். ஆசிரியருக்கும் டி.லிட். பட்டம் வழங்கத் தீர்மானித்தார்கள். 1932-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் அந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அந்தப் பட்டத்தைப் பெறும்போது அதற்கென்று அமைந்த ஒருவகை உடையை அணிந்துகொள்ள வேண்டும். அந்தப் பட்டத்தை அப்போது ஆசிரியருடன் பெற இருந்த சிவசாமி ஐயர், ஆசிரியர் அவர்களுக்கும் வேண்டிய உடைகளைத் தைக்க ஏற்பாடு செய்தார். அந்த விழாவில் ஆசிரியர் மிகவும் சுருக்கமாகத்தான் பேசினார். அவர் பேசியதாவது:
‘மகா மேன்மை தங்கிய சென்னைச் சர்வகலாசாலை அத்தியக்ஷரவர்கள் சமூகத்திற்கு விஞ்ஞாபனம். சகல கலைகளுக்கும் இருப்பிடமாகிய இந்த இடத்தில் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்கும் மகாமேதாவிகள் முன்னிலையில் இந்தக் கௌரவப் பட்டத்துக்குரிய சன்னத்தைத் தங்களுடைய திருக்கரத்திலிருந்து பெற்றதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பாராட்டிப் பேசிய தங்களுக்கும், இதற்குக் காரணமாயிருந்த கனவான்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். இந்தப் பட்டத்தைப் பெறுவதற்குரிய தகுதி என்னிடமில்லாவிட்டாலும் இதுவரையில் ஏற்படாத இந்தக் கௌரவம் தமிழ்ப் பாஷைக்கே கிடைத்திருக்கிறது என்பது என்னுடைய அந்தரங்கமான அபிப்பிராயம்’ என்று பேசினார்.
‘செந்தமிழ்’ பத்திரிகையில் பலவகையான சிறிய பிரபந்தங்களை ஆசிரியர் வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, ‘சிவநேசன்’ பத்திரிகையாசிரியர் தம் பத்திரிகையிலும் ஆசிரியரைக் கொண்டு சில பிரபந்தங்களை வெளியிடச் செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆசிரியரிடம் அவர் தம் கருத்தைத் தெரிவித்தபோது ஆசிரியரும் அதற்கு இணங்கினார். பழமலைக் கோவை, திருமயிலை யமகவந்தாதி ஆகிய நூல்கள் அந்தப் பத்திரிகையில் வெளியாயின.
$$$
55. கலைமகளை அணி செய்தல்
சென்னை மயிலாப்பூரிலுள்ள ‘லா ஜர்னல்’ அதிபர் நாராயண சுவாமி ஐயர் ‘கலைமகள்’ என்ற தமிழ் மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியப் பெருமானிடம் வந்து முதல் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்படியே ஆசிரியரும் ஒரு கட்டுரை எழுதித்தந்தார். அதோடு என்னையும் அந்தப் பத்திரிகையில் பணியாற்ற அனுப்பி வைத்தார். அதுமுதல் கலைமகளின் தொடர்பு எனக்கு இருந்து வருகிறது. ஆசிரியர் சில நூல்களைக் கலைமகளில் அனுபந்தமாக வெளியிட்டார்கள். தம்முடைய அனுபவங்களையும், புலவர்களின் வரலாறுகளையும் கலைமகளில் கட்டுரையாக எழுதத் தொடங்கினார். அதனால் கலைமகளின் பெருமை உயர்ந்தது. ஆசிரியப் பெருமான் உரைநடையில் பல நூல்களை எழுதக் கலைமகள் இவருக்கு ஒருவகையில் தூண்டுகோலாக இருந்தது என்றும் சொல்லலாம்.
1933-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகம் வெளியாயிற்று.
(தொடர்கிறது)
$$$