-கி.வா.ஜகந்நாதன்

41. தாகூர் தரிசனம்
1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் டி.எஸ்.இராமசாமி ஐயருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க ஆசிரியர் அங்கே சென்றிருந்தார். ஆசிரியரைப் பற்றித் தாகூருக்கு எடுத்துக் கூறினார்கள்.
ஆசிரியர் பதிப்பித்த நூல்களை எல்லாம் பார்த்து வியந்து “இவற்றை எல்லாம் நீங்கள் எப்படிப் பதிப்பித்தீர்கள்?” என்று தாகூர் கேட்டார். “தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தேடி ஓலைச் சுவடிகளை எடுத்து வந்து, அவற்றை ஆராய்ந்து செப்பம் செய்து கடிதப் பிரதி எடுத்துப் பதிப்பித்து வருகிறேன்” என்று இவர் தெரிவித்தார். ஆசிரியர் சொல்வதை எல்லாம் கேட்டு மிகவும் வியப்படைந்த மகாகவி, “நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். அவ்வாறு அன்று மாலையே தியாகராஜ விலாசத்திற்கு வந்து, அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளையும், கடிதப் பிரதிகளையும் பார்த்து வியந்தார். ஏட்டுச் சுவடியில் எப்படி எழுதுவது என்பதையும் ஆசிரியர் அவருக்கு எழுதிக் காட்டினார். ரவீந்திரர் ஆசிரியப் பெருமான் வீட்டிற்கு வந்ததைப் பார்த்துப் பலரும் வியந்தார்கள், ஆசிரியப் பெருமானைத் தெரியாதவர் கூட இவர் மிகவும் பெரியவர் என்று தெரிந்து வணங்கினார்கள்.
$$$
42. திருவாவடுதுறை வாசம்
15-4-1920 அன்று திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பரிபூரணம் அடைந்தார். காறுபாறாக இருந்த வைத்தியநாதத் தம்பிரான், சுப்பிரமணிய தேசிகர் என்ற திருநாமத்துடன் ஆதீனத் தலைவர் ஆனார். அவருக்கு எதிராகச் சிலபேர் வழக்குகள் தொடுத்தார்கள். அப்போது ஆசிரியப் பெருமான் தம்முடன் இருக்க வேண்டுமென்று ஆதீனத் தலைவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே 1920-ஆம் ஆண்டு முதல் ஆசிரியப் பெருமான் திருவாவடு துறை சென்று சில காலம் தங்கினார். அப்போது மடத்திலிருந்த சுவடிகளையும், அச்சிட்ட புத்தகங்களையும் ஒழுங்குபடுத்தி அடுக்கி வைக்கச் செய்தார். அங்கே ஒரு பாடசாலையைத் தொடங்கிப் பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். மடத்திற்கு வருகிறவர்கள் எல்லாம் அந்தப் பாடசாலைக்கும் வந்து ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
1922-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது தமிழிலும், வடமொழியிலும் சிறந்து விளங்கும் புலவர்களைக் கௌரவிக்க வேண்டுமென்று அரசினர் நினைத்தார்கள். ஆசிரியப் பெருமானுக்கும் ஒரு கிலத் கிடைத்தது. அந்தக் கிலத்தை வாங்கிக் கொள்வதற்காகச் சென்னைக்கு வந்த ஆசிரியப் பெருமான் இங்கே சில நாட்கள் தங்கி, பின்பு மீண்டும் திருவாவடுதுறை அடைந்தார். அங்கே ஆதீனத் தலைவராக இருந்த சுப்பிரமணிய தேசிகருக்கு உடல்நிலை மிக்க கவலைக்கிடமாயிற்று. 1922-ஆம் ஆண்டில் பரிபூரணம் அடைந்தார். அதன் பிறகு வைத்தியலிங்க தேசிகர் ஆதீனத் தலைவராக அமர்ந்தார். திருவாவடுதுறையில் தம் ஆராய்ச்சி வேலை வேகமாக நடைபெறாததை அறிந்து, ஆசிரியர் ஆதீனத் தலைவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிச் சென்னைக்கே வந்து சேர்ந்தார்.
$$$
43. பெருங்கதைப் பதிப்பு
ஆசிரியப் பெருமான் தேடித் தொகுத்திருந்த சுவடிகளில் ‘பெருங்கதை’ என்ற ஒன்று இருந்தது. கொங்குவேள் மாக்கதை என்றும் அது வழங்கும். அது முதலும் முடிவும் இல்லாமல் இருந்தது. பல இடங்களுக்குச் சென்று தேடியும் முழு நூலும் கிடைக்கவில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அதைப் பதிப்பிக்க ஆசிரியர் எண்ணியிருப்பதை அறிந்து பலர் அதைப் பற்றி விசாரித்தார்கள். ஒருவர் பெருங்கதை முழுவதும் தம்மிடம் இருப்பதாகச் சொல்லி, அதை அனுப்பிவைப்பதாகப் பணம் வாங்கிப் போனார். பல நாட்கள் சென்றன. அவர் அனுப்பவில்லை. வடமொழியில் ‘பிரகத்சம்கிதா’ என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைத் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலை அச்சுக்குக் கொடுத்தார். அந்தப் பெருங்கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செலவழித்தது இல்லை.
$$$
44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல்
1924-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலை செட்டியார் ஒரு தமிழ்க் கல்லூரியையும், ஒரு வடமொழிக் கல்லூரியையும் தொடங்க எண்ணினார். தமிழ்க் கல்லூரிக்குத் தக்க ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று எண்ணியபோது ஆசிரியப் பெருமான் நினைவு வந்தது. சில பேரை ஆசிரியப் பெருமானிடம் அனுப்பி எப்படியாவது இந்தப் பதவியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். ராஜா அண்ணாமலை செட்டியாரே நேரில் வந்தும் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். சிதம்பரம் சென்றால் நாள்தோறும் நடராஜப் பெருமானைத் தரிசிக்கலாம் என்று நினைந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆசிரியர் இசைந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் எல்லோரும் ஆசிரியப் பெருமான் அங்கு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் சிதம்பரம் சென்றார். இவர் அங்கே தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தனர். முதலில் இவர் தங்கியிருந்த இல்லத்திலேயே மீனாட்சி தமிழ்க் கல்லூரி ஆரம்பமாகியது. அப்போது மீனாட்சி கலைக் கல்லூரி முதல்வராக நீலகண்ட சாஸ்திரியார் இருந்தார். அவரும் ஆசிரியப் பெருமானுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24-வது ஆண்டு விழா 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி நடந்தது. அவ்விழாவுக்கு சி.பி.இராமசாமி ஐயர் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கத்தின் அழைப்புக்கிணங்க முன்கூட்டியே ஆசிரியப் பெருமான் மதுரை அடைந்தார்.
$$$
45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்
இவர் செய்து வரும் தமிழ்த் தொண்டுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று மதுரையில் வக்கீலாக இருந்த டி.ஸி.சீனிவாசையங்கார் நினைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அவர் அப்போது இருந்தார். அந்த விழாவில் ஆசிரியருக்கு ஒரு பொற்கிழி வழங்கினார்கள். அதே சமயத்தில் காஞ்சி காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிக் கௌரவித்தார்கள்; ‘தாக்ஷிணாத்ய கலாநிதி’ என்னும் பட்டத்தையும் அளிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆசிரியர் தாம் பதிப்பித்த ‘தன்னூல் – சங்கர நமச்சிவாயர் உரை’ நூலின் முகவுரையில் பொற்கிழி அளிக்க உதவிய அத்தனை பேர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரத்தில் தமிழ்க் கல்லூரி முதல்வராக ஆசிரியர் இருந்த காலத்தில், கல்லூரியில் பாடம் சொன்ன நேரம் போக மற்ற நேரங்களில் நூலாராய்ச்சியிலேயே ஈடுபட்டார். தக்கயாகப் பரணியைப் பதிப்பிக்க வேண்டுமென்பது இவர் எண்ணம். நூலை விட அதன் உரையின் மதிப்பு அதிகமாக இருந்தது. அந்த உரையின் பதிப்பு வெளிவருவது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று ஆசிரியர் அதனை ஆராய்ந்து வந்தார்.
(தொடர்கிறது)
$$$