தமிழ்த் தாத்தா (31- 35)

-கி.வா.ஜகந்நாதன்

31.  பாரதியார் பாடல்

1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத் தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு:

1. செம்பரிதி ஒளிபெற்றான்; பைந்நறவு
        சுவை பெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
        எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
        தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
        பேருவகை படைக்கின் றீரே?

2. அன்னியர்கள் தமிழ்ச் செவ்வி அறியாதார்
        இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
        யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிநா
        தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்
        இவன் பெருமை மொழிய லாமோ?

3. நிதியறியோம், இவ்வுலகத் தொரு கோடி
        இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க;
        குடந்தை நகர்க் கலைஞர் கோவே,
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
        காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
        இறப்பின்றித் துலங்கு வாயே.

$$$

32. வீட்டை விலைக்கு வாங்கியது

ஆசிரியருடன் கல்லூரியில் பழகி வந்த பேராசிரியர் ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். தாம் தமிழில் மாணவர்களுக்காக ஒரு புத்தகம் எழுதி இருப்பதாகவும் அதைப் பார்த்து ஆசிரியப் பெருமான் திருத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். தமக்கு நேரம் இல்லாமையினால் தம் குமாரரைப் பார்த்துத் திருத்திக் கொடுக்கும்படியாகச் சொன்னார் ஆசிரியர். அது சம்பந்தமாக ஆசிரியர் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்தார். ஒரு முறை ஆசிரியப் பெருமானிடம் அந்த வீட்டிற்கு வாடகை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் அந்த வீட்டின் சொந்தக்காரரைப் போய்ப் பார்த்து, அந்த வீட்டை ஏன் அவ்வளவு குறைந்த வாடகைக்கு விட்டிருக்கிறீர்கள்? வேறு யாருக்காவது மாற்றிவிட்டால் அதிக வாடகை கிடைக்குமே!” என்று சொல்லியிருக்கிறார்.

அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு ஆசிரியரிடம் மிகவும் மதிப்பு உண்டு. இதைக் கேட்டவுடன் அவருக்குக் கோபம் வந்து விட்டது.  “ஐயா, நான் அவரிடம் 20 ரூபாய் வாங்குவதே தவறு. என் கையிலிருந்து மாதம் 20 ரூபாய் கொடுத்து அவரை அந்த வீட்டில் குடியிருக்கச் சொல்ல வேண்டும். அவர் அவ்வளவு பெரியவர். அவர் குடியிருப்பதனால் தான் இன்றைக்கு என் வீடு ஒரு கோவில் மாதிரி இருக்கிறது. எத்தனையோ பெரியவர்கள் அவரைப் பார்ப்பதற்காக அந்த வீட்டிற்கு வருகிறார்கள். அவரே இடம் போதவில்லை என்று வேறு வீடு பார்த்துக் கொண்டு போனாலன்றி, நான் அவரை என் வீட்டிலிருத்து போகச் சொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.

அந்தப் பேராசிரியர் இன்னும் சில நாள் கழித்து அந்த வீட்டின் சொந்தக்காரரிடம் சென்று, “ஐயா, அந்த வீட்டிற்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வீடு சிறியதாக இருப்பதால் அதை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, நீங்கள் வேறு ஓர் இடத்தில் பெரிய வீடாகக் கட்டலாமே” என்று சொன்னார். நான் அந்த வீட்டை விற்பது பற்றி இதுவரை யோசித்தது இல்லை. விற்கிற எண்ணம் வருகிறபோது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீங்கள் போய் வாருங்கள்’ என்று அதன் சொந்தக்காரர் சொல்லிவிட்டார்.

எனினும் அந்தப் பேராசிரியர் சொன்னது அவரது மனத்தை உறுத்த ஆரம்பித்தது. ‘அந்த வீடு நமக்குச் சொந்தம் என்பதனால் தானே, இப்படிப் பலரும் பல விதமான எண்ணங்களை நம்மிடம் வந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஆசிரியருக்கே அந்த வீட்டை உரியதாக்கிவிட்டால் என்ன?’ என்று நினைக்கலானார்.

ஒரு நாள் ஆசிரியரிடமே வந்து, ‘ஐயா, உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் உண்டா? அப்படி இருந்தால் நான் இந்த வீட்டை உங்களுக்கே மூவாயிரம் ரூபாய்க்குத் தருகிறேன்” என்று சொன்னார்.

அப்போது ஆசிரியருக்குக் கும்பகோணத்தில் ஒரு வீடு சொந்தமாக இருந்தது. சென்னையில் வீடு வாங்குவதைப்பற்றி இவர் நினைக்கவில்லை. எனவே வீட்டுக்காரர் கேட்டவுடன் தமக்கு வீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் .

அடுத்த ஆண்டு அந்தப் பேராசிரியர் வேறு ஒருவர் மூலமாக அந்த வீட்டிற்கு 4,500 ரூபாய் விலை பேசி முன்பணம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்தச் செய்தியை ஆசிரியர் அறிந்தவுடன் மிக்க கவலை அடைந்தார். அந்த வீட்டில் இவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளையும், புத்தகங்களையும் வேறு இடத்திற்குக் கொண்டு போக வேண்டுமே, புதிய இடம் அதற்கு வசதியாக அமையுமோ, அமையாதோ என்கிற குழப்பம் ஏற்பட்டது. ஒரு நாள் ஆசிரியர் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்த கணக்கப் பிள்ளை அத்தெரு வழியே போனார். ஆசிரியர் அவரை அழைத்து. “உங்கள் நண்பர் இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முன்பணம் வாங்கிவிட்டாராமே; என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கிக் கொள்ளமாட்டேனா?” என்று கேட்டார்.

“போன வருஷந்தான் உங்களிடம் சொன்னாராம். நீங்கள் வேண்டாம் என்றதால் வேறு இடத்தில் மனை வாங்கிப் பெரிய வீடாகக் கட்டிக்கொள்ள நினைக்கிறார் போலும் என்று எண்ணியதாகச் சொன்னார்” என்றார் கணக்கப்பிள்ளை.

“அப்போது நான் அதைப்பற்றி நினைக்கவில்லை. இப்போது இதையே வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவர் பேசியுள்ள தொகைக்கு மேல் நூறு ரூபாய் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது உதவி செய்கிறேன். எப்படியாவது இந்த வீட்டை எனக்கு வாங்கித் தாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார் ஆசிரியர்.

அன்று மாலையே கணக்கப்பிள்ளை வந்தார். “உங்களுக்கு நல்ல சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டுக்காரர் தாம் வாங்கிய முன்பணத்தை அவரிடமே கொடுத்து விட்டார். இந்த வீட்டை உங்களுக்கே சாசனம் செய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார்” என்றார்.

ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. காரியம் இவ்வளவு எளிதில் முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கணக்கப் பிள்ளை சொன்னார்: “முதலிலிருந்தே வீட்டுக்காரருக்கு இந்த வீட்டை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். நீங்கள் வேண்டாம் என்றவுடன் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டது. திரும்ப நீங்கள் வாங்கிக்கொள்ள விரும்புவதாகச் சொன்னவுடன் அவர்கள் விக்கிரய பத்திரத்தில் போட்ட சில நிபந்தனைகளைச் சாக்காக வைத்து, அவற்றுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று, வாங்கிய முன்பணத்தைக் கொடுத்துவிட்டார்” என்றார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு உரிய விலை கொடுத்து ஆசிரியர் தாம் குடியிருந்த அந்த வீட்டையே வாங்கினார். கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்து வந்த வேலையைத் தமக்குப் பண்ணி வைத்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்ற பெயரைச் சூட்டினார். அது இன்றைக்கும் சிறப்பாக விளங்குகிறது.

$$$

33. பழைய திருவிளையாடல்

1906-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் என்கிற நூலை அரும்பத உரையோடும், வேறு பல ஆராய்ச்சிக் குறிப்புகளோடும் ஆசிரியர் வெளியிட்டார். அதற்கு பாண்டித்துரைத் தேவர் ஓரளவு பொருளுதவி செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளிவந்து கொண்டிருந்த  ‘செந்தமிழ்’ பத்திரிகையில் ஆசிரியர் தொடர்ந்து கட்டுரை எழுதிவர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வதற்கே நேரம் போதுமான தாக இல்லாமல் இருந்ததனால் வேறு பணி எதையும் தம்மால் செய்ய முடியாமல் இருப்பதாக ஆசிரியர் தெரிவித்தார்.  “தங்கள் கட்டுரை இருந்தால் தான் பத்திரிகைக்கே மதிப்பு உண்டாகும். தங்கள் விருப்பம் எப்படியோ அந்த வகையில் செய்யுங்கள்” என்று பாண்டித்துரைத் தேவர் மீண்டும் வற்புறுத்தினார்.

$$$

34. பிற நூல்களின் வெளியீடு


அதனால் தாம் ஆராய்ந்து கொண்டிருந்த பண்டைத் தமிழ் நூல் எதையேனும்  ‘செந்தமிழ்’ பத்திரிகையில் தொடர்ந்து பதிப்பித்து வரலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதன்படி, திருவாரூர் உலா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியாகச் செந்தமிழில் வெளிவரச் செய்தார். 1905-ஆம் ஆண்டு அந்த நூல் நிறைவேறியது.

பிள்ளையவர்கள் பாடியிருந்த தனியூர்ப் புராணத்தை வெளியிட்டார். பின்னர் மண்ணிப்படிக்கரைப் புராணம் வெளியாயிற்று. அதுவும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றியதுதான். சீவக சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பு 1907-ஆம் வருடம் நடைபெற்று வந்தது. முதல் பதிப்பைவிடப் பல புதிய செய்திகளை அதில் சேர்த்தார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அது நிறைவேறியது.

$$$

35. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கடிதம்

1908-ஆம் ஆண்டு ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தின் மேலே சிறை அதிகாரிகள் தணிக்கை செய்திருந்த குறிப்பு இருந்தது. சிறையிலிருந்து யார் எழுதியிருப்பார்கள் என்று எண்ணி ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார்.

கப்பலோட்டிய தமிழராகிய வ.உ.சிதம்பரம் பிள்ளை கோயம்புத்தூர்ச் சிறையில் அப்போது இருந்தார். அவரே அந்தக் கடிதத்தை 14-9-1908-ஆம் தேதி எழுதியிருந்தார். அவர் திருக்குறளைச் சிறையில் ஆராய்ச்சி செய்துவந்தார். தாம் திருக்குறள் ஆராய்ச்சி செய்து வருவது பற்றியும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவது பற்றியும் குறித்திருந்தார். அதில் தமக்கு ஏற் பட்டுள்ள ஐயங்கள் சிலவற்றை எழுதி அவற்றை விளக்க வேண்டுமென்று கேட்டிருந்தார். ஆசிரியப் பெருமானும் தக்க விடைகளை எழுதி அனுப்பினார்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s