-வ.உ.சிதம்பரம் பிள்ளை

11. வளரும் இன்பத்தின் மர்மம்
இன்பத்திற்குத் தாகம் அதிகம்; அவ்வளவு இன்பமின்மையும் அதிகம். செல்வம் ஸ்திரமான பேரின்பத்தைக் கொண்டு வருமென்று நம்பித் தரித்திரங்களிற் பெரும்பாலோர் செல்வத்தை அவாவுகின்றனர். ஒவ்வோர் அவாவையும் இச்சையையும் நிறைவேற்றிச் செல்வந்தரிற் பெரும்பாலோர் சரீர மெலிவாலும் சரீர வீக்கத்தாலும் வருந்துகின்றனர். ஆனால், இன்பத்திற்குத் தரித்திரரினும் அவர் தூரத்திலிருக்கின்றனர். காரியங்களின் இந்நிலைமையை நாம் ஆலோசித்துப் பார்த்தால், இன்பம் புறவுடைமைகளால் மாத்திரம் உண்டாவதில்லை என்ற சிறந்த உண்மையும், துன்பம் புறவுடைமைகள் இன்மையால் மாத்திரம் உண்டாவதில்லையென்ற சிறந்த உண்மையும் நமக்கு விளங்கும். ஏனெனில், இன்பம் புறவுடைமையினின்றும், துன்பம் புறவுடைமையினின்றும் உண்டாகுமாயின், தரித்திரர் எப்பொழுதும் துன்பத்தை அநுபவித்தலையும், செல்வந்தர் எப்பொழுதும் இன்பத்தை அநுபவித்தலையும் நாம் காண வேண்டும்; ஆனால் உண்மை இதற்கு மாறியிருக்கின்றது. மிக மிகக் கொடிய துன்பத்தை அநுபவிப்பவர்களிற் சிலர் செல்வங்களும் போகப்பொருள்களும் சூழ்ந்திருக்கப் பெற்றிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மிகமிக இனிய இன்பத்தை அநுபவிப்பவர்களிற் சிலர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை மாத்திரம் கொண்டிருப்பதை நான் அறிவேன். செல்வங்களைச் சம்பாதித்துள்ள அநேக மனிதர் தாம் செல்வத்தைச் சம்பாதித்ததனால் உண்டாய சுயநல போகங்கள் தமது வாழ்க்கையின் இன்பத்தைக் கவர்ந்து கொண்டனவென்றும், தான் தரித்திரராயிருந்த காலத்தில் அடைந்த இன்பத்தைத் தாம் செல்வந்தரான காலத்தில் ஒருபோதும் அடைந்ததில்லையென்றும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
அப்படியானால், இன்பமாவது யாது? அதனை அடைவது எவ்வாறு? அஃது ஒரு கற்பனையா அல்லது ஒரு மாயமா? துன்பந்தானா நித்தியமாயுள்ளது? என்னும் வினாக்கள் உண்டாகின்றன. நாம் சிரத்தையோடு கவனித்து ஆலோசிப்போமானால், ஞான மார்க்கத்தில் பிரவேசித்துள்ளவர்கள் தவிர மற்றவர்களெல்லாம் அவாவை நிறைவேற்றுவதனால் மாத்திரம் இன்பத்தை அடையலாமென்று நம்பியிருக்கிறார்களென்பது நமக்குத் தெரியும். அஞ்ஞானமாகிய நிலத்தில் வேரூன்றியிருப்பதும் சுயநல அவாக்களாகிய நீரால் இடைவிடாது பாய்ச்சப்படுவதுமான இந்த நம்பிக்கைதான் உலகத்திலுள்ள சகல துன்பங்களுக்கும் காரணம். நான் அவா என்னும் சொல்லை ஸ்தூலமான மிருக போகங்களை மாத்திரம் குறிக்கும் பொருளில் உபயோகிக்கவில்லை; இன்ப சொரூபமாக வெளிப்படுகின்ற ஆன்மாவினது அழகையும், சாந்தியையும், தூய்மையையும் இழக்கும்படி செய்து, புத்திசாலிகளையும் ஒழுக்கமுள்ளவர்களையும் பந்தப்படுத்துகிற, மிகுந்த வலிமையும் வஞ்சமும் நுட்பமும் பொருந்திய அவாக்களைக் கொண்ட மனோவுலகத்தையும் குறிக்குமாறு உபயோகிக்கின்றேன்.
உலகத்திலுள்ள துன்பங்களுக்கெல்லாம் சுயநலமே காரணமென்பதை அநேகர் ஒப்புக்கொள்வார். ஆனால், அச்சுயநலம் தம்முடையதென்றும் வேறொருவருடையதென்றும் அவர் கூறி ஆன்மாவைக் கெடுக்கும் மயக்கத்துள் வீழ்கின்றனர். உங்கள் துன்பமெல்லாம் உங்கள் சொந்த சுயநலத்தின் பலன்களென்று நீங்கள் ஒப்புக்கொள்ள விருப்பமுடையவர்களாயிருக்கும்பொழுது நீங்கள் சுவர்க்கத்தின் வாயில்களுக்குச் சமீபத்திலிருப்பீர்கள்; ஆனால், உங்கள் சந்தோஷத்தைக் கவர்வது மற்றவர்களுடைய சுயநலமென்று எவ்வளவு காலம் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வளவு காலமும் நீங்கள் உங்களால் ஆக்கப்பட்ட நரகத்துள் கைதிகளாயிருப்பீர்கள்.
இன்பமானது பூரண திருப்தியாகிய அகத்தின் நிலைமை; அது சகல அவாக்களும் நீங்கிய சந்தோஷமும் சாந்தியுமின்றி வேறன்று. அவாவை நிறைவேற்றுவதனால் உண்டாகும் திருப்தி நிலையற்றதாகவும் தோற்றம் மாத்திரையாகவும் உள்ளது; அத்திருப்தியால் அவா மேலும் மேலும் அதிகப்படுகின்றது. அவா சமுத்திரத்தைப்போல அடங்காதது; அதனை நிறைவேற்ற நிறைவேற்ற, அது மிகமிகச் சத்தமிட்டுக் கூக்குரலிடுகின்றது. அவாவைப் பற்றியவர் சரீர நோவையாவது மன நோவையாவது அடைந்து அகத்தைச் சுத்தப்படுத்தும் துன்பமாகிய நெருப்பில் மூழ்கும் வரையில் அவரிடம் அது மேன்மேலும் வேலை வாங்குகின்றது. அவா நரகத்தின் அடிவாரம்; சகல துன்பங்களும் அங்கு நிறைந்திருக்கின்றன. அவாவை விடுதல் சுவர்க்கத்தை அடைதலாம். சகல இன்பங்களும் அவ்விடத்தில் காத்துக் கொண்டிருக்கின்றன.
என்னான்மா வைப்பொறிகட் கெட்டாத மெய்ப்பொருள்பால்
பொன்னாடு பெற்றுவரப் போக்கினேன்- என்னான்மா
நானே சுவர்க்கம் நரகம் எனச் செவி யுள்
மானே! மொழிந்ததுடன் வந்து.
சுவர்க்கமும் நரகமும் அகத்தின் நிலைமைகள். ‘யான்’ என்பதனுள்ளும், அதன் சகல போகங்களுள்ளும் ஆழுங்கள்; நீங்கள் நகரத்துள் ஆழ்கின்றீர்கள். ‘யான்’ என்பதின்றும் நீங்கி, ‘யான்’ என்பதை முற்றிலும் துறந்தும் மறந்தும் இருக்கிற அறிவின் ஸ்தானத்திற்கு உயருங்கள்; நீங்கள் சுவர்க்கத்துள் பிரவேசிக்கின்றீர்கள். ‘யான்’ என்பது கண்ணில்லாதது; பகுத்தறிவில்லாதது; உண்மையான ஞானமில்லாதது; எப்பொழுதும் துன்பத்திற்கே செலுத்துவது. சரியான காட்சியும், பட்சபாதமற்ற அறிவும், உண்மையான ஞானமும் கடவுளுக்குரியவை. இக்கடவுள் ஞானத்தை அடைவதால் மாத்திரம் இன்பம் இன்னதென்று தெரிய முடியும்; நீங்கள் சுயநலத்தோடு உங்கள் சரீர சுகத்தை நாடிக்கொண்டிருக்குங் காலமெல்லாம் இன்பம் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்; நீங்கள் துன்ப வித்துக்களை விதைத்துக்கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் ‘யான்’ என்பதை எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் இழக்கின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு இன்பம் உங்களிடம் வந்து சேரும். நீங்கள் இன்பப் பலனை அறுப்பீர்கள்.
அன்புசெய்த லால் உள்ளம் ஆனந்தம் எய்துமல்லாமல்,
அன்பு செய்யப்படாமல் அஃதெய்யா- தின்புயர்கட்
கீதலினால் உண்டல்லால் ஈயப்படுதலினால்
மாதே! இலையணுவும் மற்று.
எஃதனை நீவேண்டினையோ, எஃதுநிற்கு வேண்டுவதோ
அஃதனையே நீயீவாய் ஆருயிர்கட்- கஃதுநின
தான்மாஉணும் உணவாம்; அஃதால்மெய் வாழ்வடைவாய்
தேன்மா மொழியாய்! தெரி.
‘யான்’ என்பதைப் பற்றுங்கால், நீங்கள் துன்பத்தைப் பற்றுகின்றீர்கள்; ‘யான்’ என்பதை விடுங்கால், நீங்கள் இன்பத்தை அடைகின்றீர்கள். சுயநலமாட்டம் இன்பத்தை இழக்கும்படி செய்யும். அவ்வளவேயன்றி, இன்பத்திற்கு மூலமென்று நாம் நம்புகிற பொருள்களையும் இழக்கும்படி செய்யும். பெருந்தீனிக்காரன் தனது ஒழிந்துபோன பசியை எழுப்புவதற்காக எவ்வாறு புதிய புதிய உணவுகளை ஓயாமல் தேடிக் கொண்டிருக்கிறானென்பதையும், கடைசியில் அவன் வயிறு வீங்கிக் கனத்து வியாதியுற்று யாதொரு உணவும் உட்கொள்ள முடியாமல் எவ்வாறு வருந்துகிறானென்பதையும் பாருங்கள். இதற்கு மாறாக எவன் தனது பசியை ஆளுகின்றானோ அவன் உணவைத் தேடுவதுமில்லை; ஊணின்பத்தை ஒருபோதும் நினைப்பதுமில்லை. அவன் மிக மிக எளிய உணவு கிடைப்பினும் சந்தோஷம் அடைகின்றான். ‘யான்’ என்னும் கண்ணின் மூலமாகப் பார்க்கும் மனிதர் தமது அவாக்களைப் பூர்த்தி செய்வதனால் உண்டாகுமென்று நினைக்கும் இன்பத்தை அவர் அடைந்தபொழுது அது துன்பத்தின் என்புக்கூடாகக் காணப்படுகிறது. உண்மையில், எவன் தனது உயிரின் மீது அதிக அபிமானம் கொண்டிருக்கிறானோ அவனே அதனை விரைவில் இழப்பான்; எவன் தனது உயிரின் மீது கொண்டுள்ள அபிமானத்தை விடுகிறானோ, அவனே அதனை இழவாதிருப்பான்.
‘யான்’ என்னும் பற்றை விடுவதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ, அப்பொழுது மேன்மேல் வளரும் இன்பம் உங்கள்பால் வந்து சேரும். உங்களுக்கு மிக அருமையானதும், நீங்கள் பற்றினாலும் பற்றாவிட்டாலும் உங்களிடத்திலிருந்து ஒருநாள் கவரப்படுவதும், நிலையில்லாததுமான ‘யான்’ என்னும் பொருளை இழப்பதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ, அப்பொழுது அதுவரையில் உங்களுக்குத் துன்பமான நஷ்டம் போலத் தோன்றிக் கொண்டிருந்த அவ்விழப்பு இன்பமான இலாபமாகக் காணப்படும். ஆனால், இலாபத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு ஒன்றை விடுவதைப் பார்க்கினும் பெரிய மயக்கமாவது, துன்பத்தைத் தரும் மூலமாவது வேறில்லை; வேண்டியவற்றை விட்டு விடுவதற்கும் நஷ்டத்தை அநுபவிப்பதற்கும் பிரியங்கொள்ளலே உண்மையான வாழ்விற்கு மார்க்கம்.
இயற்கையில் அழிந்துபோகும் பொருள்களை நமக்கு ஆதாரமாகக் கொண்டிருக்குங்காலையில், நாம் எப்படி உண்மையான இன்பத்தைக் காண முடியும்? என்றென்றும் நிலை நிற்கும் பொருளை நமக்கு ஆதாரமாகக் கொண்டால் மாத்திரமே, நாம் உண்மையான இன்பத்தைக் காண முடியும். ஆதலால், நிலையில்லாத பொருள்களைப் பற்றிக் கொண்டிருத்தலையும் அவாவிக் கொண்டிருத்தலையும் நீங்கள் விடுங்கள்; உடனே நித்தியப் பொருளின் அறிவை நீங்கள் அடைவீர்கள். ‘யான்’ என்பதை ஒழித்துத் தூய்மையும் சுயநலத் துறத்தலும் அகண்ட அன்புமாகிய குணங்கள் உங்களிடம் மேலும் மேலும் வளருங்காலையில் அந்நித்தியப் பொருளின் அறிவை உங்களுக்கு ஆதாரமாக நீங்கள் கொள்வீர்கள். அப்பொழுது ஒருபோதும் மாறாததும் ஒருபோதும் உங்களிடத்திலிருந்து கவரப்படாததுமான இன்பத்தை நீங்கள் அடைவீர்கள்.
பிறர்மீது கொண்டுள்ள அன்பினால் தன்னை முற்றிலும் மறந்துவிட்ட அகமானது, மிக மிக உயர்ந்த இன்பத்தை அடைந்த அளவேயன்றி, அழியாத தன்மையையும் அடைந்துவிட்டது. அது தெய்வத்தன்மையை எய்திவிட்டமையால், கடந்துபோன உங்கள் வாழ்க்கையை நோக்குங்கள்; நீங்கள் இரக்கத்தோடாவது சுயநலமற்ற அன்போடாவது ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லவோ ஒரு செய்கையைச் செய்யவோ நேர்ந்த நிமிஷங்களோ, உங்களுக்கு மிகமிக மேலான இன்பத்தைக் கொடுத்தவைகளென்று காண்பீர்கள். பரமார்த்தத்தில் நேர்மையும், இன்பமும் ஒரு பொருளைக் குறிக்குஞ் சொற்கள். நேர்மையானது அன்பு சொரூபமாக விளங்குகிற பெரிய சட்டத்தின் ஒரு தோற்றம்; பலவித சுயநலங்களும் நேர்மைக்கு மாறானவை, சுயநலம் பாராட்டுதல் தெய்வக் கட்டளைகளுக்கு மாறாக நடக்கும்படி செய்யும். கருவியாகின்றன. ‘யான்’ என்பதை விடுத்து, எல்லா உயிர்கள் மீதும் நாம் அன்பு பாராட்டுங்காலையில், இன்பமாகிய தெய்வ சங்கல்பத்திற்கும் பிரபஞ்ச இயற்கைக்கும் நாம் ஒற்றுமையாக நடக்கிறோம். உண்மையான இன்பமாகிய அவ்வாசம கோசர சங்கல்பம் நமது சொந்த உடைமையாகின்றது. புருஷர்களும் ஸ்திரீகளும் இன்பத்தைத் தேடிக்கொண்டு குருட்டுத்தனமாக இங்கும் அங்கும் ஓடுகின்றார்கள்; இன்பமானது முன்னரே தமது அகத்துள்ளும் தம்மைச் சுற்றியும், பிரபஞ்ச முழுவதும் உள்ளதென்றும், தமது சுயநல நாட்டத்தால் அதனைத் தாம் காணவில்லையென்றும் அறிகிற வரையில் அவர்கள் இன்பத்தைக் காண முடியாது.
ஆசிரியப்பா
இன்பெனும் மங்கையை என்பொரு ளாக்கத்
தேக்கு திராட்சை பாக்கு வனம்கடந்
தேகினேன்; ஓடினள், வேகமா ஓடினேன்,
பொள்ளெனக் குன்றிலும் பள்ளத் தாக்கினும்
நண்ணிய வயலிலும் தண்ணிய நிலத்தினும்;
நீரினோட் டங்களை வீரமொடு கடந்து
கழுகல றும்மலை தழுவிமேல் ஏறினேன்,
ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு கடலையும்
விரைந்தே கடந்தேன்; விரைந்தவள்
தந்திர மாக முந்திஓ டினளே.
யான்மிகக் களைத்துக் கான்மிகத் தளர்ந்து
பாழ்ங்கரை யொன்றில் வீழ்ந்தயர்ந் திருக்க;
ஒருவனுண வென்றான், ஒருவனிதி யென்றான்;
என்புதெரி கரங்களில் அன்புடன் அளித்தேன்?
ஒருவனது தாபமும் ஒருவனுறையிடமும்
அளித்தருள் என்றனர்; களித்துடன் அளித்தேன்;
இல்லார்க் கியன்றன எல்லாம் ஈந்தேன்.
இனியநல் லின்பம் கனியுமெய் யுருவோடு
வந்துநின் றுனக்குச் சொந்த
மாதா னேனெனக் காதிலோ தினளே.
பர்லி என்னும் ஆங்கிலக் கவியின் இவ்வழகிய பாக்கள் வளரும் இன்பத்தின் மர்மத்தை விளக்குகின்றன. நீங்கள் சரீரப் பற்றையும் மற்றைய நிலையில்லாத பொருள்களின் பற்றுக்களையும் விடுங்கள்; நீங்கள் உடனே சரீரமில்லாததும் நிலையுள்ளதுமான பொருளாவீர்கள். தனது அற்ப நலன்களுக்காகச் சகல பொருள்களையும் கீழ்படுத்துவதற்கு நாடுகின்ற குறுகிய தன்மையுள்ள ‘யான்’ என்பதை விடுங்கள்; நீங்கள் தேவகணங்களின் சகவாசத்தையும், பேரருளாக விளங்காநின்ற கடவுட்டன்மையையும், கடவுளகத்தையும் அடைவீர்கள். நீங்கள் ‘யான்’ என்பதை மறந்து மற்றவர்களுடைய துக்கங்களை உங்கள் துக்கங்களாகக் கருதி மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள்; தெய்வ இன்பம் உங்களைச் சகல துன்பங்களினின்றும் துக்கங்களினின்றும் வெளியேற்றிவிடும். “ஒரு நல்ல நினைப்போடு முதல்படி ஏறி, ஒரு நல்ல சொல்லோடு இரண்டாம் படி ஏறி, ஒரு நல்ல செயலோடு மூன்றாம்படி ஏறி நான் சுவர்க்கத்தை அடைந்தேன்” என்றனர் ஒரு பெரியவர். நீங்களும் அவ்வாறு சுவர்க்கத்தை அடையலாம். சுவர்க்கம் தூரத்திலில்லை; இங்கே இருக்கின்றது. தூய அகத்தைக் கொண்டிருக்கிறவர் மாத்திரம் அதனைக் காண்கின்றனர்; சுயநலமற்றவர் மாத்திரம் அதனை அடைகின்றனர்.
நீங்கள் இவ்வகண்ட இன்பத்தை இதுவரையில் அடையவில்லையானால், நீங்கள் அதனை அடைய வேண்டுமென்று எப்போதும் கோரியும், சுயநலமற்ற அன்பாகிய உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தும் அதனை அடையத் தொடங்குங்கள். கோரிக்கையென்றாலும், பிரார்த்தனையென்றாலும் மேல்நோக்கிய அவாவாகும். அஃதாவது நிலையான திருப்தியைத் தரத்தக்கவராய் எல்லாவற்றிற்கும் மூலமாயிருக்கிற கடவுளை நோக்கி ஆன்மா நிற்றலாம். கோரிக்கையால் அல்லது பிரார்த்தனையால், அவாவினது அழிக்கும் சக்திகள் தெய்வத்தன்மை வாய்ந்ததும் எல்லாவற்றையும் பரிபாலிப்பதுமான வலிமையாக மாற்றப்படுகின்றன. கோருதல் அல்லது பிரார்த்தித்தல் என்பது அவாவின் விலங்குகளை உதறிவிடுவதற்காகச் செய்யும் ஒரு முயற்சி. அம்முயற்சியைச் செய்யுங்கால் ஆன்மா தனிமையையும் துன்பத்தையுமுற்று, ஞானத்தை அடைந்து, தனது தந்தையின் மாளிகைக்குத் திரும்பிப் போய்ச் சேரும்.
உலோபத்தன்மையுள்ள ‘யான்’ என்பதை நீங்கள் ஒழிக்கும்போது, உங்களைப் பந்தப்படுத்தியிருக்கிற விலங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் உடைக்கும்பொழுது, உலோபத்தால் உண்டாகும் துன்பத்தினின்று நீங்கள் நீங்கி நீங்கள் பிறருக்கு ஈதலால்- எங்கள் பொருளை ஈதலால்- உங்கள் விவேகத்தை ஈதலால்-உங்கள் அகத்துள் வளரா நின்ற அன்பையும் ஒளியையும் ஈதலால்-உளதாகும் இன்பத்தைக் காண்பீர்கள். நீங்கள் அப்பொழுது “கொள்வதிலும் கொடுத்தல் அதிக இன்பத்தைத் தரும்” என்று அறிவீர்கள். ஆனால், உங்கள் கொடை ‘யான்’ என்னும் பற்றுச் சிறிதுமில்லாததாயும், பிரதிபலனைக் கருதாததாயும், உள்ளத்தின் அடியினின்று வெளிப்படுவதாயும் இருத்தல் வேண்டும். கலப்பற்ற அன்பால் நிகழும் கொடை எப்பொழுதும் இன்பத்தைக் கொண்டு வரும். நீங்கள் கொடுத்த பின்னர், உங்களுக்கு வந்தனம் அளிக்கவில்லையென்றாவது, உங்களை முகஸ்துதி செய்யவில்லையென்றாவது, உங்கள் பெயரைப் பத்திரிகையில் பிரசுரிக்கவில்லையென்றாவது நீங்கள் வருத்தப்படுவீர்களாயின், உங்களுடைய கொடை அன்பினாற் செய்யப்பட்டதன்றென்றும், நீங்கள் கொள்வதற்காகவே கொடுத்தீர்களென்றும், நீங்கள் உண்மையில் உலோபம் செய்தீர்களேயன்றிக் கொடையைச் செய்யவில்லையென்றும் அறிந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களுடைய ஷேமத்திற்காக ‘யான்’ என்பதை நீங்கள் விட்டுவிடுங்கள்; நீங்கள் செய்யும் காரியங்களிலெல்லாம் ‘யான்’ என்பதை மறந்துவிடுங்கள்; இதுதான் வளரும் இன்பத்தின் மர்மம். சுயநலம் உங்களை அணுகாத விதத்தில் உங்களை எப்பொழுதும் ஜாக்கிரதையாக நீங்கள் காத்துக் கொண்டு அகத்துறவாகிய தெய்வ பாடத்தை நீங்கள் உண்மையோடு படியுங்கள்; அவ்வாறு செய்யின், இன்பத்தின் மிகமிக மேலான ஸ்தானங்களுக்கு நீங்கள் ஏறுவீர்கள்; அழியாமையாகிய பிரகாசமுள்ள உடையை உடுத்துக் கொண்டு, மேகத்தால் ஒருபொழுதும் மறைக்கப்படாத பேரின்பமாகிய சூரியப் பிரகாசத்தில் நித்தியமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
ஆசிரியப்பா
ஒருபொழுதும் அழியா உயர்ந்த இன்பத்தை
மருவுதற் கெண்ணி வருந்துகின் றனையா?
துன்பநாள் உன்னைத் தொடவிடா நித்திய
இன்பினை அடைவதற் கெண்ணுகின் றனையா?
அன்பும் வாழ்வும் அமைதியுமாகிய
மின்புனல் அருவியை விரும்புகின் றனையா?
மயல்தரும் அவாவெலாம் மாய்த்துச்
சுயநல நாட்டமுந் தொலைக்கவே ருடனே.
துன்பமும் பிணியும் துக்கமும் நிறைந்துள
வன்புதர் நெறிகளில் வருந்துகின் றனையா?
இளைத்தவுன் அடிகளை ஈர்க்கும் வழிகளில்
களைத்லைந் துழன்று கவல்கின் றனையா?
அழுகையும் துக்கமும் அணுவும் அணுகா
விழுமிய வீட்டை விரும்புகின் றனையா?
சுயநய அகத்தினைத் துறந்து
பரநய அகத்தினைப் பாத்தடை வாயே.
$$$
12. வலிமையை அடைதல்
உண்மையும், நம்பிக்கையும், தயாளமும் அன்பும் நிறைந்திருக்கின்ற அகத்திற்கு மாத்திரம் மெய்யான வலிமை கொடுக்கப்படுகின்றது. இக் குணங்களைக் கொண்டிராத அகமானது வலிமையை அறிய முடியாது; ஏனெனில் வலிமை, சுகத்தைப் போலவே ஒரு புற உடைமையன்று; ஓர் அக அநுபவம். பேராசையுள்ள ஒரு மனிதன் ஒரு கோடீசுவரனாகலாம். ஆனால், அவன் எப்பொழுதும் துன்பமுள்ளவனாகவும், இழிஞனாகவும், எளியனாகவும் இருப்பான். தன்னினும் மிகுந்த செல்வமுள்ள ஒருவன் உலகத்தில் இருக்கிற வரையில் தன்னைப் புறத்திலும் எளியவனென்றே அவன் நினைத்துக் கொண்டிருப்பான்; ஆனால், நேர்மையும் உதாரமும், அன்புமுள்ள மனிதர் தமது புறஉடைமைகள் கொஞ்சமாயிருந்தபோதிலும் அஷ்ட ஐசுவரியங்களுக்குமுரிய வலிமையை அடைந்திருப்பர்; “அதிருப்தி உடையவனே எளியன்; தனக்குக் கிடைத்துள்ளவற்றோடு திருப்தியுடையவனே வலியன்.” தயாளமுள்ளவனாயிருப்பவனே அதிக வலிமையுள்ளவன்.
பிரபஞ்சத்தில் ஜடமும் சித்துமாகிய சகல நல்ல பொருள்களும் நிறைந்திருக்கின்ற விஷயத்தை நாம் சிந்தித்து, அதனோடு மனிதன் சில தங்க நாணயங்களையோ, சில காணி புழுதி நிலங்களையோ சம்பாதிக்கக் கொள்ளும் குருட்டுத்தனமான ஆசையை நாம் ஒப்பிட்டுப் பார்க்குங்காலையில் சுயநலம் எவ்வளவு இருண்டதென்பதையும், மடத்தனமென்பதையும் நாம் காண்போம். அப்பொழுதுதான் தன்னல நாட்டம் தன்னையே அழிப்பதென்பதைத் தெரிவோம். பிரகிருதியானது ஒன்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் எல்லா உயிர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தும், அஃது ஒன்றையும் இழப்பதில்லை; மனிதன் எல்லாவற்றையும் தனக்கென்று வைத்துக் கொண்டிருந்தும், அவன் ஒவ்வொன்றையும் இழந்துவிடுகிறான்.
நீங்கள் உண்மையான வலிமையை அடைய விரும்புவீர்களாயின், நியாயமாகச் செய்யப்படும் ஒவ்வொன்றும் அநியாயமாக முடியுமென்று அநேகர் கொண்டிருக்கிற தப்பு நம்பிக்கையை நீங்கள் கொள்ளாதீர்கள். ஒழுக்கத்தின் வலிமையிலுள்ள உங்கள் நம்பிக்கையை அசைக்கக் கூடிய ‘போட்டி’ என்பதற்கு நீங்கள் இடங்கொடாதீர்கள். ‘போட்டி’யின் விதிகளைப்பற்றி மனிதன் பேசுங்காலையில் நான் சிறிதும் கவனிப்பதில்லை; ஏனெனில், ஒருநாள் அவற்றையெல்லாம் ஓட்டுவதும், இப்பொழுதும் அவற்றையெல்லாம் நியாயமான மனிதனுடைய அகத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓட்டுகிறதுமான மாறாத சட்டத்தை நான் அறிந்திருக்கிறேன். இச் சட்டத்தை அறிந்திருப்பதனால், சகல வகை அயோக்கியங்களும் அழிவை அடையுமென்று தெரிந்து அசையாத அமைதியுடன் இருக்கின்றேன்.
நியாயமென்று நீங்கள் நம்புகிற காரியத்தையே சகல சந்தர்ப்பங்களிலும் செய்யுங்கள்; மெய்ச் சட்டத்தை நம்புங்கள்; பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்காநின்ற தெய்வ சக்தியை நம்புங்கள்; ஒருபோதும் உங்களை அது கைவிடாது; எப்பொழுதும் உங்களை அது காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கையால் உங்களுடைய நஷ்டங்களெல்லாம் இலாபங்களாக மாறும்; உங்களை வருத்துகின்ற நிந்தனைகளெல்லாம் ஆசீர்வாதங்களாக மாறும். உண்மையையும் தயாளத்தையும் அன்பையும் ஒருபொழுதும் நீங்கள் கைவிடாதீர்கள். அவை உங்களை உண்மையான வலிமையுள்ள நிலைமைக்கு உயர்த்துமாகலான், ‘தனக்குப் போய்த் தானம்’ என்று உலகத்தார் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். அதனை நம்புதல் ஒருவனது சொந்த சௌகரியங்களை மட்டும் நினைக்கும்படி செய்யுமேயன்றி, மற்றவர்களைப் பற்றி நினைக்கவே விடாது. அதனைக் கைக்கொண்டு நடக்கிறவர்களுக்கு ஒருநாள் வரும்; அந்நாளில் அவர்களை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள்; அவர்கள் தனிமையாலும் துன்பத்தாலும் அழும்பொழுது அவர்களை ஏனென்று கேட்கவும் அவர்களுக்கு உதவி புரியவும் ஒருவரும் முன்வர மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி நினைத்தற்கு முன்னர்த் தன்னைப்பற்றி நினைத்தல் மேம்பாடும் தெய்வத்தன்மையுள்ள ஒவ்வொரு மனோ எழுச்சியையும் தடுத்தும் கெடுத்தும் அழித்தும் விடும். உங்கள் ஆன்மா விரிவுறுக; உங்கள் அகம் அன்போடும் தயாளத்தோடும் மற்றவர்களிடத்துச் செல்லுக; உங்கள் இன்பம் பெரியதாகவும் நீடித்து நிலை நிற்பதாகவும் இருக்கும்; சகல வலிமையும் உங்கள் பால் வந்து சேரும்.
நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர், ‘போட்டி’ தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்ளுதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர். நீதி மார்க்கத்தில் ஒழுகுகின்றவர் ‘போட்டி’யினின்று தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய ஆவசியகமில்லை. இது வெறும் வார்த்தையன்று. யோக்கியதையாலும் நம்பிக்கையாலும், சகல ‘போட்டி’களையும் வென்று, தம்மோடு ‘போட்டி’ செய்த காலத்தில் தாம் தமது ஒழுக்கங்களிலிருந்தும் சிறிதும் விலகாது நடந்து வலிமையை அடைந்துள்ள மனிதர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக முயன்றவர்களெல்லாம் தோல்வியடைந்து கீழே விழுந்துவிட்டார்கள்.
நன்மை என்று சொல்லப்படும் குணங்களையெல்லாம் ஒருவன் கைக்கொண்டிருத்தல் அவனைத் தீமையின் சகல சக்திகளினின்றும் தப்புவிக்கும், இக்குணங்களை வளர்ப்பதனால் ஒருவன் அசைக்க முடியாத வெற்றியை அடைவான். என்றென்றும் நிலை நிற்கத்தக்க வலிமையை அடைவான்.
வெண்பா
தீயவினை நோவு செறிதுன்பம் உட்கவலை
தூயமன வெள்ளுடையில் தோய்ந்ததனால்-ஆயகறை
பின்னிரங்கற் கேணி பிரார்த்தனையூற் றால்நீங்கி
முன்னிறத்த வெண்மைவரு மோ!
அறியாமை மார்க்கத் தடிவைத்த போழ்து
செறியாநிற் கும்பெருகித் தீமை – அறியாமை
எய்தியதன் காரணம் ‘யான்‘ என்னும் சுயநயத்தைச்
செய்ததுவே யென்று தெரி.
அறிவுடைமை யாலாம்நீர் அவ்வுடையி லாய
செறிகறையைப் போக்கி வெண்மைசேர்க்கும்;- அறிவுடைமை
அன்புசமா தானம் அறியாமெய்ஞ் ஞானமெனும்
மின்புனலை நல்கும் விரைந்து.
பாவம் செயல்பின் பரிந்திரங்கல் துன்பநெறி;
ஏமநல்கும் மெய்ஞ்ஞானம் இன்பநெறி- ஞால
உயிர்க்கெல்லாம் நன்றாற்ற ஓடிவரும் மெய்ஞ்ஞானம்
செயிர்க்கெல்லாம் வேராம் ‘யான்‘ சென்று.
யான் உள்ளே யின்றாக இம்மண்நீர் தீக்காற்று
வான்உள்ளே நிற்கின்ற வாலறிவோம்;- தேன்உள்ளே
ஊறிப் பெருகியெங்கும் ஓடி நிறைந்துவெளி
ஏறிப் பெருகிநிற்கும் இங்கு
வலிமைக்கு மார்க்கம் முற்றும்
$$$