-சேக்கிழான்

தமிழகத்தின் போக்கை மாற்றி அமைத்ததில் திராவிட அரசியலின் பங்கு மிகப் பெரிது. இன்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக திராவிட இயக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று என்றாவது இருந்ததுண்டா? இந்தக் கேள்வியே திடுக்கிடலை ஏற்படுத்தக் கூடியது.
இந்தக் கேள்வியுடன், ‘அப்படி எந்த ஒரு இயக்கமும் இருந்ததில்லை’ என்ற தெளிவான பதிலுடன் தான் இந்த நூலையே ஆரம்பிக்கிறார், மலர்மன்னன். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளராக இருந்த, அண்மையில் மறைந்த மலர்மன்னன், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் தருணங்களில் நேரடி சாட்சியாக நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு பெற்றவர்.
தனது வாழ்பனுவம், சரித்திரத் தேர்ச்சி, மொழியறிவு, இதழியல் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்நூலை மிகப் பொருத்தமான சமயத்தில் எழுதி தமிழுலகத்துக்கு நன்மை செய்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கத்துக்கு நூற்றாண்டுக் கொண்டாடும் காலத்தை விட, அதை விமர்சிக்க பொருத்தமான நேரம் எது?
உண்மையில் ‘திராவிட’ என்ற வார்த்தையே சமஸ்கிருத வார்த்தை என்பதையும், அது எவ்வாறு அரசியல்வாதிகளின் கருவியானது என்பதையும் நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. இதில் தமிழறிஞராகப் போற்றப்படும் கால்டுவெல்லின் பங்கு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
‘திராவிட’ என்ற சொல் அரசியல் மயமாவதற்கு வித்திட்ட அயோத்திதாசர் (திராவிட ஜனசபை), எம்.சி.ராஜா (ஆதிதிராவிடன்), நடேச முதலியார் (சென்னை திராவிட சங்கம்) போன்ற மறைக்கப்பட்ட பலரைப் பற்றிய சுவையான தகவல்கள் இந்நூலில் உள்ளன.
பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பாக மாறியது? அது எவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது? அதில் இருந்த பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் போன்றவர்கள் எவ்வாறு தடம்புரண்டனர்? ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா?
இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.
நூல் விவரம்:
திராவிட இயக்கம்- புனைவும் உண்மையும்
–மலர்மன்னன்
200 பக்கங்கள், விலை: ரூ. 135,
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,
57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை,
தி.நகர், சென்னை- 17.
$$$