கண்ணன் பாட்டு- 1

-மகாகவி பாரதி

‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்படும் மகாகவியின் பாடல்கள்: கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவை. இவற்றில் கண்ணன் பாட்டு மிகவும் அலாதியானது. பக்திப் பேருவகையின் உச்சத்துக்கு இப்பாடல்கள் உதாரணம்.

பண்டைய நாட்களில் மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தையும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். இறைவன் ஒருவன். உயிர்கள் பல. அந்த ஒருவனான இறைவனை அடைய உயிர்களெல்லாம் நாயக நாயகி பாவங்களைக் கொண்டு பாடல்கள் வெளிவந்தன.

அவர்களின் நீட்சியாக, ஆன்மிகத் தமிழ்க் கவியாக முகிழ்த்த பாரதி, அதேசமயம் பழைமையை தவிர்த்துவிட்டு புதிய பாதை வகுத்திருக்கிறார். இங்கு பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தன் காதலி, காதலன், சேவகன், அரசன், அமைச்சன், தோழன் என பற்பல முறையில் பாவித்துப் பாடியிருக்கிறார்.

‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி, காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார். ‘கண்ணம்மா என் காதலி’ என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக, காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக்கண் புதைத்தல், குறிப்பிடம் தவறியது, யோகம் எனும் தலைப்பில் பாடல்களை அமைத்திருக்கிறார்.

கண்ணன் பாட்டை முதன்முதலில் பாரதியின் சீடர் பரலி சு.நெல்லையப்பர் 1917இல் பதிப்பித்தார். அவருடைய பதிப்பின் முன்னுரையில் அவர் பாரதி பற்றி கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது. அந்தப் பகுதி இதோ:

“பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய் விடும். ஒரு வார்த்தை மட்டும் கூறுகிறேன். இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கிறேன்.”

இந்நூலின் இரண்டாவது பதிப்பு 1919இல் வெளியானது. இந்த இரண்டாம் பதிப்பிற்கு வ.வெ.சு.ஐயர் முன்னுரை எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையில் ஐயர் குறிப்பிடுவதாவது:

“கவிதை அழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்து விடக் கூடாது. இதிலுள்ள பாட்டுகளிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. கடற்கரையில் சாந்திமயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும், மோக வயப்படுத்தி நீலக்கடலையும், பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.”

கண்ணன் பாட்டின் காதலன்- காதலி பாடல்கள் பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறுகையில் இவை தமிழிலக்கிய அகத்திணை நெறியைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்:

“ஐந்திணை ஒழுக்கப்படி கண்ணன் பாடல்களைப் புனைந்த பாரதியார் அதற்குள்ள துறைகள் பலவற்றையும் கையாண்டுள்ளார். வள்ளலாரைப் போன்று அகப்பொருள் துறையில் அதிகப் பாடல்களைப் பாரதியார் பாடிக் குவிக்கவில்லை. ‘கண்ணன் என் காதலன்’ என்ற தலைப்பிலே நாயகி பாவத்தில் ஆறு பாடல்களையும், ‘கண்ணம்மா – என் காதலி’ என்ற தலைப்பிலே நாயக பாவத்திலே ஆறு பாடல்களையுமாக பன்னிரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். தலைவன்பால் தோழியைத் தூது விடுதல், சிறைப்புறத்திருத்தல், நாணிக் கண்புதைத்தல், குறிப்பிடம் தவறுதல் ஆகிய அகப்பொருள் இலக்கியத் துறைகளைக் கண்ணன் பாட்டில் பாரதியார் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம் அகத்திணையில் வரும் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி ஆகியவையும் கண்ணன் பாட்டிலே கூறப்பட்டுள்ளன. முன்கூறப்பட்ட அகத்திணைத் துறைகளோடு, ‘முகத்திரை களைதல்’ எனும் புதிய துறை ஒன்றையும் பாரதியார் சேர்த்து வைத்துள்ளார்” என்று கூறுகிறார் ம.பொ.சி.

இனி வரும் நாட்களில் கண்ணன் பாட்டின் களியின்பத்தைப் பருகுவோம்…

$$$

1. கண்ணன் – என் தோழன்

புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம்
வத்ஸல ரசம்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
      புறங்கொண்டு போவ தற்கே – இனி
என்ன வழியென்று கேட்கில், உபாயம்
      இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்
”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
      காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு
உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம்
      ஒருகணத் தேயுரைப் பான்.       1

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
      கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
      தேர்நடத் திக்கொடுப் பான்; – என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
      உற்ற மருந்துசொல் வான்; – நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
      இதஞ்சொல்லி மாற்றிடு வான்.       2

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
      பேச்சினி லேசொல்லுவான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
      உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
      அரைநொடிக் குள்வருவான்;
மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்
      வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.       3

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
      கேலி பொறுத்திடு வான்; – எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
      ஆறுதல் செய்திடுவான்; – என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
      நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
      கொண்டவர் வேறுள ரோ?       4

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
      ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
      காறி யுமிழ்ந்திடு வான்; – சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
      பாசியை யெற்றி விடும் – பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
      மெலிவு தவிர்த்திடு வான்.       5

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
      சிரித்துக் களித்திடு வான்; – நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
      மாயங்கள் சூழ்ந்திடு வான்; – அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
      தொல்லை யிழைத்திடு வான்; – கண்ணன்
தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்
      சகத்தினில் வாழ்வதி லேன்.       6

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
      குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
      தளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
      அதனை விலக்கிடு வான்; – சுடர்த்
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்
      தீமைகள் கொன்றிடு வான்.       7

உண்மை தவறி நடப்பவர் தம்மை
      உதைத்து நசுக்கிடுவான்; – அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
      மலைமலை யாவுரைப் பான்; – நல்ல
பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்
      பித்தர் குணமுடை யான்; – மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
      தழலின் குணமுடை யான்.       8

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
      குணமிகத் தானுடை யான்; – கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
      சூதறி யாதுசொல் வான்; – என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
      நயமுறக் காத்திடு வான்; – கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
      அழலினி லுங்கொடி யான்.       9

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
      கண்மகிழ் சித்திரத் தில் – பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
      முற்றிய பண்டிதன் காண்; – உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
      மேவு பரம்பொருள் காண்; – நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
      கீர்த்திகள் வாழ்த்திடு வேன்.       10


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s