-சேக்கிழான்

பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்.
1992, டிசம்பர் 6: இந்தியாவின் அயோத்தியில், ராமஜென்மபூமியில் இருந்த பாபர் மசூதி என்ற பழைய கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. உண்மையில் கட்டுக்கடங்காத கரசேவகர்களின் உள்ளக் கொந்தளிப்பால் நிகழ்ந்த வன்முறை அது. அங்கு ஏற்கனவே இருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டு அதன்மீது பாபரின் படைத்தளபதி மீர்பாகி கட்டிய அடிமைச்சின்னமான பாபர் மசூதியின் தகர்ப்பு, உலக அளவிலும், தேசிய அளவிலும் நிலநடுக்கம் போன்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிகழ்வு. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் அசுர வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த ராமர் கோயில் இயக்கம், மசூதி இடிப்பை அடுத்து சற்றே தேக்கம் அடைந்தது.
எனினும், பாரத ஹிந்துக்களுக்கு, டிச. 6, ஓர் அடிமைச்சின்னம் அகற்றப்பட்டதன் வெற்றித் திருநாள்தான். இந்திய அரசியலை அதுவரை வழிநடத்திய போலித்தனமான மதச்சார்பின்மையை கேள்விக்குறி ஆக்கிய நாளும் அதுவே. ஆனால், அந்த மசூதி இடிப்பின் எதிரொலி நமது அண்டை முஸ்லிம் நாடுகளிலும் ஒலித்ததை இந்தியர்கள் பேரளவில் அறியவில்லை. குறிப்பாக இந்திய உதவியால் பாகிஸ்தானிடமிருந்து 1971-இல் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொடுங்கரங்களுக்குள் சுமார் 10 நாட்கள் அந்நாட்டு ஹிந்துக்கள் சிக்கிக் கொண்டார்கள். அந்த நாட்களில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை பலநூறு; இடிக்கப்பட்ட கோயில்கள் பல்லாயிரம்; கண்ணுக்குத் தட்டுப்பட்ட ஹிந்துப் பெண்கள் பலரும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஹிந்துக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்களில் லட்சக் கணக்கானோர் இந்தியாவுக்கு அகதியாக வர நேரிட்டது. அந்த நாட்களில் நிகழ்ந்த இஸ்லாமிய வெறியர்களின் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளை அரிய ஆவணமாகவும், நெஞ்சை உலுக்கும் சமூகப் புதினமாகவும் பதிவு செய்திருக்கிறார், தஸ்லிமா நஸ்ரின்.
‘லஜ்ஜா’ என்றால் வங்க மொழியில் ‘அவமானம்’ என்று பொருள். அவமானம் யாருக்கு? வங்க மொழி அடிப்படையில் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடிப் பெற்றது தான் பங்களாதேஷ். ஆனால், அந்நாட்டில் எப்போதுமே ஹிந்துக்கள் இரண்டாம்தரப் பிரஜையாகவே நடத்தப்பட்டனர் என்பதை தனது புதினத்தில் ஆதாரப்பூர்வமாக காட்டி இருக்கிறார் தஸ்லிமா. ஹிந்துக்களின் வாழ்வாதாரங்களை மிரட்டிக் கைப்பற்றுதல், ஹிந்துப் பெண்களை பலவந்தமாக மதம் மாற்றுதல், சமூக வாழ்விலும் அரசுப் பணிகளிலும் மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுதல் என, பங்களாதேஷ் நாட்டின் பெரும்பான்மை மக்களான இஸ்லாமியர்கள் நடந்துகொண்ட நாகரிகமற்ற நடத்தையையும், அதன் உச்சமாக 1992, டிச. 6-ஐ அடுத்து நடத்திய கொடூர வன்முறைகளையும் எந்தப் பாசாங்குமின்றி எழுதி இருக்கிறார் அவர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும், உள்ளூர் முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை நம்பி கிழக்கு பாகிஸ்தானிலும், பின்னாளில் பங்களாதேஷிலும் தங்கிய ஹிந்துக்களை, அந்நாட்டு முஸ்லிம் மக்கள் வஞ்சித்துவிட்டதை தீராக்கோபத்துடன் எழுதிய தஸ்லிமா, அதுவே அவமானம் என்கிறார்.
இதற்காக அவர் எடுத்துக்கொண்ட ஒரு குடும்பத்தின் கதை, நமது நெஞ்சைப் பிழிவது. மருத்துவரான சுதாமய், அவரது மனைவி கிரண்மயி, மகன் சுரஞ்சன், மகள் நிலஞ்சனா என்ற மாயா- ஆகியோரின் தவிப்புகளே புதினம் முழுவதும் வருகின்றன. இடதுசாரிக் கட்சியின் ஆதரவாளரான சுதாமய், பங்களாதேஷ் விடுதலைப் போரில் ஈடுபட்டு தியாகத் தழும்புகள் பெற்றவர். அவரது மகன் சுரஞ்சன், பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினரான பத்திரிகையாளன். செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தும் முஸ்லிம் குண்டர்களின் மிரட்டலால் பூர்விகச் சொத்துகளை இழந்தவர்கள் சுதாமய்- கிரண்மயி குடும்பத்தினர். கிரண்மயிக்கு கொல்கத்தா சென்றுவிட வேண்டும் என்ற தாகம். ஆனால், கணவன், மகன் ஆகியோரின் கொள்கைப்பிடிப்பால் அது நிறைவேறாது போகிறது. இருப்பினும், வங்க ஹிந்துப் பெண்களுக்கு நடக்கும் அதே அநீதி இறுதியில் மாயாவுக்கும் நடந்தேறுகிறது. தாள முடியாத துயரங்களுக்குப் பிறகு அப்பாவும் மகனும் இந்தியா திரும்பத் தீர்மானிக்கின்றனர். புதினம் முடிகிறது. நமது நெஞ்சில் கேள்விகள் ஆரம்பமாகின்றன.
ஒரே நாட்டின் பிரஜைகளான ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்படுவதன் அடிப்படை என்ன? 1947-இல் கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 22 சதவிகிதமாக இருந்தது 70 ஆண்டுகளில் 10 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது ஏன்? உலக சகோதரத்துவம் பேசும் இஸ்லாம், அயல் மதத்தினர் மீது கொடூரமாக நடந்துகொள்வது எதனால்? உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் வன்முறையில் நாட்டம் கொண்டவர்களாகவே தோற்றம் அளிப்பதன் காரணம் என்ன? நிர்கதியான சுதாமய் குடும்பத்துக்கு உதவ அண்டைவீட்டு இஸ்லாமியர் ஒருவரும்கூட வராதது ஏன்? இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு ஜமாத்களின் கட்டுப்பாட்டுக்கு நேர்ந்துவிடப்படுவது எப்படி? பங்களாதேஷில் 1992 டிசம்பரில் ஹிந்துக்கள் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டபோது இந்திய அரசு வேடிக்கை பார்த்தது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கே தெரியும். தெரியாதது போல நடிக்கிறீர்கள் என்றால், மற்றொரு லஜ்ஜா புதினத்துக்கு நீங்களும் வித்திடுகிறீர்கள் என்றே பொருள்.
தனது புதினத்தில் ஆங்காங்கே தஸ்லிமா அளித்துள்ள கொடிய நிகழ்வுகளின் பட்டியல்கள் ஆயாசமூட்டுகின்றன. படித்தாலே நடுக்கமுறச் செய்யும் அந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் கதியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. புதினத்தின் கட்டற்ற போக்கில் அந்தத் தகவல்கள் சிறு தடையாக இருப்பினும், அதன் ஆதாரப்பூர்வமான ஆவணத்தன்மையை உறுதி செய்கின்றன.
“மதச்சார்பு இல்லாமல் மனித நேயத்துடன் சிந்திக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீயசக்திகளுக்கு (இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு) எதிராகத் தீவிரமாகப் போராடினால்தான் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். அதுவரையிலும் எனது எதிர்ப்பை என்றும் நிறுத்திக்கொள்ள மாட்டேன்” என்று நூலின் முன்னுரையில் பிரகடனம் செய்கிறார் தஸ்லிமா. ஆனால், இந்தியாவில் மதச்சார்பின்மை பேசுவோர்தான் தஸ்லிமாவை வேப்பங்காயாக ஒதுக்குகிறார்கள்.
மானுடம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூல் லஜ்ஜா. இந்நூலை இந்தியர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் சமுதாயம் காக்கும் திண்மையை நமக்கு அளிக்கும்.
$$$
நூல் விவரம்:
லஜ்ஜா
-தஸ்லிமா நஸ்ரின்
தமிழில்: ஜவர்லால்
232 பக்கங்கள்; விலை: ரூ. 200-
கிழக்கு பதிப்பக வெளியீடு,
177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங்,
லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014
தொலைபேசி: 044- 4200 9603.
- (இந்த நூலை நூல் உலகம் இணையதளத்தில் வாங்கலாம்)
$$$