-தரம்பால்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம் – 4
1810-11 வாக்கில் பனாரஸில் நடந்த போராட்டங்கள் எல்லாம் அரசாங்கம் மற்றும் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகச் சொல்ல முடியாது. 18-19ஆம் நூற்றாண்டு தொடர்பான (அதற்கு முந்தைய காலம் பற்றியும் இருந்தால்) அனைத்து முதல் நிலை ஆவணங்களையும் முறையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் வேறு என்ன விதமான போராட்ட வடிவங்கள் இருந்திருக்கின்றன; அவற்றின் தன்மைகள் எத்தகையவை என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.
“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது.
உள்ளுணர்வு சார்ந்தோ, ஏதேனும் சம்பவத்தைப் பார்த்தோ, காந்தியடிகளுக்கு இந்தப் பாரம்பரியம் பற்றி நன்கு தெரிந்திருக்கிறது.
ஒத்துழையாமை அணுகுமுறையும் சட்டமறுப்பு மனோபாவமும் இந்தியப் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற விஷயத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் இன்று இந்தியாவுக்கு ஏதேனும் பலன் உண்டா?
நிச்சயமாக, மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இதனால் நல்ல பலன் உண்டு. மக்கள்- ஆட்சியாளர்கள் இடையேயான உறவு மேம்படுவதற்கு இது தொடர்பான புரிதல் மிகவும் அவசியம். இன்றும் இந்திய அரசு நல்ல முறையில் நடப்பதற்கு இந்த மனோபாவத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.
மேலே இதுதொடர்பாகப் பார்ப்பதற்கு முன்னால், இன்றைய இந்திய அரசு 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கற்றுக்கொண்டு பின்பற்றி வரும் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்:
முதலாவது, மக்கள் பற்றியும் அரசாங்கம் பற்றியும் 18- 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரின் மனநிலை, அணுகுமுறை ஆகியவை என்னவாக இருந்தனவோ அதையேதான் இன்றைய நமது ஆட்சியாளர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
1810-11 காலகட்ட அரசாங்க ஆவணங்களைப் பார்த்தால், ‘மக்கள் அரசுக்கு எந்த விதக் கேள்விகளும் கேட்காமல் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்’ என்று அன்றைய ஆட்சியாளர்கள் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடியும். ‘ஓர் அரசானது, மக்களுடைய கூச்சல் குழப்பங்களுக்கு வளைந்து கொடுத்துவிடக் கூடாது. மக்களுடைய விருப்பங்கள் எதையாவது நிறைவேற்றித் தருவது என்றால் அரசின் மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்காத வகையில் அதை செய்ய வேண்டும்‘ என்று குறிப்பிட்டு இருப்பதையும் பார்க்க முடியும்.
பாகல்பூர் கலெக்டரைப் பொருத்த வரையிலோ, சட்டவிரோதமான எதிர்ப்புக் கூட்டங்கள் நடப்பதால் வரி விதிப்புப் பணிகளின் தொடக்க்க் கட்டத்திலேயே அதை நிறுத்துவதென்பது அரசின் அதிகாரத்தின் ஆணிவேரை அறுப்பது போன்றது. ஓர் அரசுக்கு அதன் மக்கள் மீது அந்த அதிகாரம் இருந்தே ஆக வேண்டும்.
பனாரஸ் மாஜிஸ்ட்ரேட் ஜனவரி 20, 1811-இல் அனுப்பிய கடிதத்தில் இந்தவிதமாகவே குறிப்பிட்டிருக்கிறார். ‘அரசுக்கு எதிரான இப்படியான எதிர்ப்பை அனுமதிப்பது சரியல்ல. அரசின் வலிமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. ஒரு நாட்டின் அரசின் மீது அதன் மக்கள் மரியாதை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்’.
இப்படியான எண்ணங்கள், வார்த்தைகள் எல்லாம் இன்றைய இந்திய அரசின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றிலும் அப்படியே இடம் பெற்றுள்ளன; தொடர்கின்றன.
இரண்டாவதாக, மகாத்மா காந்தி முன்னெடுத்த போதிலும் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் பழைய துணிச்சலும், தன்னம்பிக்கையும் சம அளவில் மீட்டெடுக்கப்படவில்லை. பலர் மனதில் இது எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லையோ என்று கருதும் அளவுக்குத் தான் இதன் செல்வாக்கு இருக்கிறது. அல்லது ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பொறியைத் தாண்டி வேறெதுவும் நடக்காமல் மயான அமைதிக்குள் அடங்கியதுபோல ஆகிவிட்டது. பனாரஸில் பார்த்ததுபோல ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் போராடிவிட்டு, இனிமேல் நம்மால் தடுக்க முடியாது; வெற்றி பெற முடியாது என்று சோர்ந்து போனது போலாகிவிட்டது.
1947-ல் இருந்து சுதந்திர இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு போராட்டமும் அவசியம்தானா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த அமைதிப் போராட்ட வழிமுறையானது சமூக, அரசியல் மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள் உட்பட இந்திய அரசியல் களத்தில் பிரச்னைகள் தொடர்பாக அக்கறை கொண்டவர்கள் அனைவரையும் பதற்றமடையச் செய்கிறது.
சுதந்திர தேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் ஆட்சிதான் நடக்கிறது என்பதால் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்றவற்றுக்கெல்லாம் இடமில்லை என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். வேறு சிலரோ சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும் அதை பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். எந்த விஷயங்களுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற விஷயத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை வலியுறுத்த மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள். வேறு சிலரோ ஏற்றுக்கொள்ளப்பட்ட, சில அடிப்படையான மதிப்பீடுகளை மாற்றியமைப்பதற்கும் கூட ஒத்துழையாமை இயக்கத்தை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
ஆனால் இது ஒன்றும் புதிய கருத்து மோதல் அல்ல. காந்தியடிகளால் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம், சட்ட மறுப்பு இயக்கம் போன்றவை மறு உருவாக்கம் செய்யப்பட்ட காலத்திலேயே இத்தகைய விவாதங்கள் நடந்துள்ளன. இதை எதிர்த்தவர்களில் அரசியல் அங்கமாக இருந்தவர்கள் மட்டுமல்லாது, ஸ்ரீனிவாச சாஸ்திரி, ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களும் இருந்தனர்.
சட்டதிட்டங்களை அழிக்கக்கூடிய, சமூக ஒழுங்கு மற்றும் ஒழுங்கமைவு பெற்ற அரசை அழிக்கக்கூடிய, அனைத்தையும் கவிழ்க்க முனையக் கூடிய, தூக்கி எறியக் கூடிய, அராஜகத்தைக் கொண்டுவரக் கூடிய எந்த ஒரு இயக்கமும் தவறானது தான் என்று சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். *25
ஒத்துழையாமை இயக்கம் என்பது இந்தியாவின் கௌரவத்துக்கு இசைவானது அல்ல. அந்தப் போராட்டங்கள் உள்ளார்ந்த பல அபாயங்களை கொண்டவையாக இருக்கின்றன *26 என்று தாகூர் கருதினார்.
ஒத்துழையாமை இயக்க அணுகுமுறைக்கு மிகக் கடுமையான எதிர்ப்பானது ஆர்.பி.பராஞ்சபே மூலம்தான் முன்வைக்கப்பட்டது. டிசம்பர் 26, 1924 அன்று லக்னோவில் நடைபெற்ற இந்திய தேசிய தாராளவாதக் கூட்டமைப்பு மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தியபோது அவர் அதைக் கடுமையாக விமர்சித்தார். ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை தொடர்பான மிகவும் தீவிரமான காத்திரமான விமர்சனப் பார்வை என்பதால் அவர் பேசியதை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். பராஞ்சபே கூறியது:
“ஓரளவுக்கு படித்த மக்களிடையே, ஒத்துழையாமை இயக்கம் என்பது மிகப் பெரிய தேசபக்திச் செயல்பாடு என்ற எண்ணம் அழுத்தமாக ஊன்றப்பட்டிருக்கிறது. இதுவே இன்றைய காலகட்டத்தில் தீவிர பிரசாரத்தினால் நடந்தேறி இருக்கும் மிக மிக மோசமான செயல். சத்யாகிரஹம் என்ற பெயரிலும், ஒத்துழையாமை, சட்ட மறுப்பு என்ற பெயரிலும் தேசம் முழுவதிலும் மிகுந்த அக்கறையுடன் முன்னெடுக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் அபாயங்களை நாம் ஏற்கனவே நன்கு பார்க்க முடிகிறது.
இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கத்தில் தவிர்க்கமுடியாமல் வன்முறையைக் கைக்கொள்ளும் படியாகவே அது செய்துவருகிறது. அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அவ்வப்போது அது தரக்கூடும். ஆனால் மக்கள் மீது அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் நிரந்தரமானது. இதனால் சட்டம்- ஒழுங்கு மீதான மரியாதையானது முழுவதுமாக மறைந்து போய்விடுகிறது. சமூகத்தில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் தேசபக்தர்கள் என்று சொல்லப்படுபவர்களை நகலெடுப்பதன் மூலம் தாமும் தேசபக்தர்களாக ஆகி விடுவதாக நம்பிக்கை கொள்ள அது வழிவகுக்கிறது.
மகாத்மாக்கள், மெளல்விகள், தேசபந்துக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியான பின்னரும், மக்கள் மத்தியில் இந்த ஒத்துழையாமை குணமும் சட்டமறுப்பு மனோபாவமும் தொடர்ந்து் நீடிக்கும். அவர்களுடைய கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது, அவர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இப்போது விதைத்து வரும் இந்தக் களைகள் எல்லாம் அன்று மிகப் பெரிதாக வளர்ந்து அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதைப் பார்ப்பார்கள். வில்லங்கமான, குறுகியகால ஆதாயத்தை பெறும் நோக்கில் முடிவற்ற துன்பத்தை தரக்கூடிய ஒரு செயலை முன்னெடுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு செயல் இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
தீவிர சிந்தனை கொண்ட தலைவர்கள் வரிகொடா இயக்கத்தை சற்று நகைப்புடனேயே பார்ப்பார்கள். எந்த அரசாக இருந்தாலும் வரிகள் விதிக்கப்படத்தான் செய்யும். மக்கள் அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். வரிகளைக் கொடுக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய தேசபக்திச் செயல் என்று மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டதென்றால், எதிர்கால அரசுகளுக்கு வரி வசூலிப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒரு செயல் ஆகிவிடும்.” *27.
காலப்போக்கில் இந்திய தேசியவாதத்தின் ஒற்றை முகமாக மகாத்மா காந்தி ஆகிவிட்டார். எனவே இதுபோன்ற விமர்சனங்கள் வலுவிழந்துவிட்டன. ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை தொடர்பாக தனிநபர்கள் பலர் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். என்றபோதிலும் 1930 -ன் நடுப்பகுதி வாக்கில் அநீதிக்கு எதிரான இந்தியப் போராட்ட வடிவமாக அவையே நிலைபெற்றுவிட்டன.
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்டதும், சாஸ்திரி, தாகூர், பராஞ்சபே போன்றோரின் கருத்துகள் முன்னிலைக்கு வந்தன. எதிர்பார்த்தது போலவே இதுதொடர்பான எதிர்ப்பும் அதிருப்தியும் அரசாங்கத்தில் அங்கமாக இருப்பவர்களாலேயே முன்வைக்கப்பட்டன. இதில் வருத்தத்துக்குரிய நகைமுரண் என்னவென்றால், ஒத்துழையாமை இயக்கத்தையும், சட்ட மறுப்பையும் இன்று எதிர்ப்பவர்கள் பலர், காந்தியின் காலத்தில் அந்தப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள் தான்.
ஆனால் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றுக்கு எதிரான அந்த மனோபாவத்தை எதிர்த்த பெரிய தலைவர்கள் அப்போதும் இருக்கத்தான் செய்தார்கள். ஜே.பி.கிருபளானி 1953, டிசம்பர் மாதம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:
“ஜனநாயக நாட்டில் சத்யாகிரஹத்திற்கு இடமில்லை என்று இன்றைய காங்கிரஸ் எஜமானர்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். காந்தியடிகள் வடிவமைத்த சத்யாகிரஹம் என்பது வெறும் அரசியல் போராட்டக் கருவி மட்டுமே அல்ல. சமூக, பொருளாதாரத் தளங்களிலும் அதைப் பயன்படுத்த முடியும். நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எதிராகவும் கூட அதைப் பயன்படுத்த முடியும். காந்தியடிகள் அதை ஒரு வாழ்க்கைக் கோட்பாடாக முன்வைத்திருக்கிறார். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டில் சத்யாகிரஹத்துக்கு இடமில்லை என்பது அபத்தம். அதிலும் அதிகார வர்க்கத்தின் கையில் அனைத்து அதிகாரமும் குவிந்திருக்கும் இன்றைய நிலையில் அப்படிச் சொல்லவே முடியாது.”
மேலும் அவர் கூறுகையில், “எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அடுத்த தேர்தல் வரும் வரையில் அல்லது ஒரு ஆட்சியைத் தூக்கி எறியும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அந்த பிரச்னையானது உடனே தீர்க்க வேண்டிய வாழ்வா, சாவா பிரச்னையாக இருக்கக் கூடும். சத்யாகிரஹ வழியில் போராடும் உரிமையை மறுப்பது என்பது நீண்ட காலத்திற்கு சர்வாதிகார சக்திக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இணையானது” என்றார். *28.
இந்தப் புதிய எதிர்ப்பு மற்றும் அதிருப்தியானது மிகவும் சிக்கலானது; தீவிரமானதும் கூட. இவற்றில் பெரும்பாலானவை, ஒத்துழையாமை இயக்கத்தையும் சட்டமறுப்பு போராட்டத்தையும் முழுவதுமாக எதிர்க்கவில்லை. ஜனநாயக அரசுக்கு இது *29 தேவையற்றது, தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதாகவே கே.சந்தானம் போன்றோர் கூறுகிறார்கள். அவரைப் பொறுத்த வரையில் சில விஷயங்களில் ஜனநாயக அரசுக்கு எதிரான சத்யாகிரஹப் போராட்டத்தை நியாயப்படுத்தவே முடியாது *30.
யு .என்.திபார் 1955-ல் (அப்போது அவர்தான் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்) சொன்னது: “ஜனநாயகத்தில் அல்லது ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் சத்யாகிரஹத்திற்கான தேவை மிக மிக்க் குறைவு தான்”. *31.
எனினும் சந்தானம் போன்றவர்கள் கூட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற விசேஷத் தருணங்களில் தனிநபர்கள் சத்யாகிரஹத்தில் ஈடுபடுவதை ஆதரிக்கவே செய்கிறார்கள். முன்னாள் தலைமை நீதிபதியான பி.பி.கஜேந்திர கட்கர் இதுபோன்ற கருத்தை கொண்டவர்தான். மார்ச் 1967-ல் அவர் குறிப்பிட்டது: வேறு அனைத்து வழிகளிலும் முயன்று பார்த்துவிட்டு, அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றால் ஜனநாயகத்திலும் கூட சத்யாகிரக வழிமுறையை ஒருவர் பின்பற்றலாம். *32
அப்படியாக ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றுக்கான இப்போதைய எதிர்ப்பானது 1920களில் இருந்ததற்கு முற்றிலும் மாறானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் மரியாதைக்குரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்போதும் ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றுக்கு ஆதரவாக இருப்பதில்லை. எனினும் மக்கள் மத்தியில் இந்தப் போராட்டங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அது ஒருவகையில் அறிவுத் தன்மை கொண்டது என்றாலும், ஜனநாயகத்துக்கு நேரிடையாகப் பங்களிக்கவும் முடியும் .
உண்மையான ஜனநாயகத்துக்கு உண்மையான சத்யாகிரஹம் என்பது உதவிகரமாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சந்தானத்தின் பார்வையை *33 பலரும் இன்று ஏற்றுக் கொள்வார்கள். எனினும் இப்போதைய (1971இல் எழுதியது) ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கங்கள் இதைப் புரிந்து ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. இதற்கு முக்கியமான ஒரு காரணம் என்னவென்றால் இன்றைய ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்கள் எல்லாம் அற்ப விஷயங்களுக்காக எல்லாம் முன்னெடுக்கப்படுகின்றன.
யு.என்.திபோர், சந்தானம் ஆகியோர் தமது கூற்றுகளை முழுவதுமாக விளக்கிச் சொல்லாமல் மைய விஷயம் பற்றியே பேசியிருக்கிறார்கள். திபோரைப் பொருத்தவரையில், ஜனநயகத்தில் சத்யாகிரஹம் என்பது அரசு அல்லது அரசியல் சாசனத்தின் அஸ்திவாரத்தையே குலைக்கும் செயல் அல்லது திட்டத்துக்கு எதிராக மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். *34.
சந்தானத்தைப் பொருத்தவரையில், மக்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்கான மிக எளிய, துரிதமான தீர்வுகளை தரக்கூடிய வழிமுறையாக சத்யாகிரஹத்தை அவர் பார்க்கிறார். எப்படியான செயல்களெல்லாம் அரசு அல்லது அரசியல் சாசனத்தின் அஸ்திவாரத்தைச் சிதைக்க முடியும்? இவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்ற விஷயத்தில்தான் இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் தவறு செய்கிறார்கள். *35
அரசு முன்னெடுக்கும் எந்தச் செயல் அரசையே அழிக்கும்? அடிப்படை உரிமைகளை மறுப்பது என்றால் என்ன? வெறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்து இதற்கான பதில்களைச் சொல்லிவிட முடியாது.
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். மிகப் பெருமளவிலான பட்டினி, பாதுகாப்பின்மை போன்றவையெல்லாம் அரசு மற்றும் அரசியல் சாசனத்தின் அடித்தளத்தை சிதைக்கக் கூடியவை தான். கூடவே அவையெல்லாம் அடிப்படை உரிமைகளை மறுப்பவர். நம் நாட்டில் 40 சதவீதத்துக்கு அதிகமான மக்கள் பசி, பாதுகாப்பின்மை, மோசமான சுற்றுச்சூழலில் வாழ்வது போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாக அது இப்போது இந்திய அரசு, அல்லது அரசியல் சாசனத்தின் மூலம் உருவானது அல்ல என்பது உண்மைதான். கடந்த 200 ஆண்டுகளாக நடந்து வந்த வீழ்ச்சி அது. இன்றைய அரசுகளால் அதை நீக்குவதற்கு முடியவில்லை; அல்லது போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்பதும் உண்மைதான். இவையெல்லாம் நம் அரசாங்கம் மற்றும் அரசியல் சாசனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடியவைதான். பட்டினி, பாதுகாப்பின்மை போன்றவற்றை நீக்க (பணி உத்தரவாதம், வேலை இல்லாதவர்களுக்கு, முதியோருக்கு, உடல் குறைபாடு உடையவர்களுக்கு உதவித்தொகை, நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்குதல் மற்றும் அரசியல் சாசனம் வகுத்திருக்கும் பிரிவினருக்கு உதவுதல்) ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்றவற்றை முன்னெடுப்பது என்பது வீழ்ச்சியிலிருந்து நம்மை நிச்சயம் காப்பாற்றும்.
முழுவதுமாகத் தடுக்க முடியாவிட்டாலும். வினோபா பாவே போன்ற பொறுப்புணர்வு மிகுந்த, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவர் கூட இப்படிச் சொல்லியிருக்கிறார்: “மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் அதை நடைமுறைப்படுத்த சத்தியாகிரகத்தில் ஈடுபடலாம்”. (சத்யாக்ரஹ விசார்- பக் 65).
பசி மற்றும் பாதுகாப்பின்மையை சரி செய்வதைத் தவிர வேறு சிக்கலான, விவகாரமான பணி வேறு எதுவும் இல்லை. அந்தப் பணிகளுக்கான சட்டபூர்வ அங்கீகாரம் ஆதரவு போன்றவையெல்லாம் அரசியல் சாசனத்திலும் மக்களாட்சியிலும் அழுத்தமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. *36
$$$
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
24. ஜேம்ஸ் மில் (ஹெச்.ஹெச். வில்சன்) ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா, தொகுதி ஏழு, பக் 467.
25. பி.கோதண்ட ராவ், வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி: எ பொலிட்டிகல் பயோக்ரஃபி (1963) பக் 195.
26. டி.ஜி.டெண்டுல்கர், தி மஹாத்மா (1951-54) தொகுதி 2, பக் 59-60.
27. ஆர்.பி. பராஞ்சபே, செலக்டட் ரைட்டிங்ஸ் அண்ட் ஸ்பீச்சஸ் (1940) பக் 176-7.
28. ஜனதா (வார இதழ்) ஜனவரி 26, 1954 : ஜே.பி. கிருபளானியின் பேச்சு. முன்னணி கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஜனவரி, 17, 1954, பக் 3.
29. கே.சந்தானம், சத்யாக்ரஹா அண்ட் ஸ்டேட் (அ960) பக் 62.
30. கே.சந்தானம், அதே புத்தகம்.
31. டைம்ஸ் ஆஃப் இந்தியா: செப்டம்பர் 22, 1955, யு.என்.திபோரின் கட்டுரை, சத்யாகிரஹத்தின் பின்னால் உள்ள காரணம்.
32. ஃப்ரீ பிரஸ் ஜர்னல், மார்ச் 3, 1967: பிரஸ் ரிப்போர்ட் ஆஃப் லெக்சர்
33. கே.சந்தானம், அதே புத்தகம், பக் 67.
34. டைம்ஸ் ஆஃப் இந்தியா, அதே
35. கே.சந்தானம், அதே,பக் 67.
36. கான்ஸ்டிட்யூஷன் ஆஃப் இந்தியா, ஆர்ட்டிகிள் 41
(தொடர்கிறது)
$$$