காற்றிடைச் சாளரம் -1

திருப்பூரில் வசிக்கும் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், பின்னலாடை சார்ந்த உபதொழிலில் ஈடுபடுபவர். ஆரம்பக்காலத்தில் இடதுசாரியாக இருந்தவர்; பல சிற்றிதழ்களில் பங்கேற்றவர். எளிமையான, கவித்துவம் மிக்க கவிதைகள் இவரது சிறப்பு. இவரது கவிதைகள் இனி நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும். இது இவரது ‘காற்றிடைச் சாளரம்’ கவிதைத் தொடரின் முதல் கவிதை....

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -3

'யாழ்ப்பாணம்' என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப் பெயரின் வரலாறு அறியத் தக்கதாகும். தமிழ்நாட்டுப் பழங்குடிகளில் 'பாணர்' என்பார் ஒரு வகுப்பார். பண்ணோடு பாட வல்லவர் பாணர் என்று பெயர் பெற்றார் என்பர். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் 'யாழ்ப்பாணர்' ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்திப் பாடிய பாணர் யாழ்ப்பாணர் எனப்பட்டனர். பெரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணர்கள் குடியேறித் திருத்திய நகரமே 'யாழ்ப்பாணம்' என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் 'ஜாப்னா' என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி என்ற ஊர் உண்டு. பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் ஈழநாட்டிற் குடியேறிய மக்கள் தம் ஊர்ப் பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்..... திரு. ரா.பி.சேதுப்பிள்ளையின் ’தமிழ் விருந்து’ நூலின் மூன்றாம் பகுதியில் இருந்து....

சுயசரிதங்கள்: ஒரு பார்வை 

மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று தன்னைப் பற்றிப் பேசுவது. மற்றொன்று, இன்னொருவர் கதையைக் கேட்பது. இதுவும் சுய வரலாற்றை எழுத ஒரு காரணம். பொதுவாக சுய வரலாறு என்பது படிப்பவர்களுக்கு நம்பிக்கையும் தம் தவறுகளைச் சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது. ... அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் பொதுவாக சுய சரித்திரம் எழுதுவதில்லை. காரணம் அவர்கள் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் என்பதைத் தவிர சொல்லும்படியான முகமில்லை அவர்களுக்கு. ஆனால் இப்போது அவர்களுடைய எழுத்துதான் அரசியல்வாதிகளின், அதிகாரத்தில் இருப்பவர்களின் விளையாட்டுகளை வெளிப்படுத்துகிறது. எனவேதான் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் அரசின் அனுமதி பெற்றுத் தான் சுய வரலாற்றை வெளியிட வேண்டும் என நிபந்தனை வந்துள்ளது. ....

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்: நூல் அறிமுகம்

அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும்,  அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது....

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை

மகாகவி பாரதியின் கவிதைகளில் இரண்டாவது பிரிவான பக்திப் பாடல்களில் முதல் கவிதை ‘விநாயகர் நான்மணி மாலை’. பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய நான்கு மணிகளைக் கோர்த்து ஒரு மாலையாக்கினால் எவ்வாறு இருக்குமோ அதுபோல, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய நான்கு யாப்புக் கவிதைகள் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணி மாலை. மகாகவி பாரதியின் இலக்கணப் புலமைக்கும், யாப்பிலக்கணத் தேர்ச்சிக்கும் அடையாளமாக விளங்குபவை இக்கவிதைகள். அது மட்டுமல்ல, இறைவனை வேண்டும்போதும், நாட்டுநலனுக்காகத் துடிக்கும் அவரது தேசப்பற்றை இப்பாடலில் நாம் காணலாம்....

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -2

...கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள்; கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான். ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம்- இரண்டாவது பகுதி....

பத்மாவதி சரித்திரம் – நூல் அறிமுகம்

‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம். தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்....

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி-1

ரா.பி.சேதுப்பிள்ளை (1896- 1961), தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.  தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை கொண்ட இவர் மேடைச் சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். தமிழின் எழுத்து நடை வளர்ச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் கொண்டு வந்தவர் இவரே. சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளையை “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டினார். அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டுவந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ஆம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருதினை வழங்கியது.  அவரது ’தமிழ் விருந்து’ நூல் இங்கு 4 பகுதிகளாக வெளியாகிறது....

அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

1908இல் அனுசீலன் சமிதியைச் சேர்ந்த குடிராம் போஸும், பிரஃபுல்ல சாகியும் ஆங்கிலேய அதிகாரி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயன்றனர். இந்த  வழக்கில் குடிராம் போஸ் கைதானார்; பிரஃபுல்ல சாஹி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கு ‘அலிப்பூர் சதி வழக்கு’ என்று பெயர் பெற்றது. இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளாக அரவிந்தர், அவரது தம்பி உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இவ்வழக்கில் பிற்பாடு அரவிந்தர் விடுதலையானார். பரீந்திர கோஷ் உள்பட பலர் பலவேறு சிறைத் தண்டனைகளைப் பெற்றனர்; குடிராம் போஸ் தூக்கு தண்டனை பெற்றார். இதுவே இந்தக் குற்ற வழக்கின் சாரம். இவ்வழக்கில் 1908 மே 2-இல் கைது செய்யப்பட்ட அரவிந்தர், 1908 மே 5 முதல் 1909 மே 6 வரை அலிப்பூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கபட்டிருந்தார்; அங்கு பல சித்ரவதைகளை அனுபவித்தார். எனினும், இவ்வழக்கில் அரவிந்தர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1909 மே 30இல் உத்தர்பாரா என்ற நகரில் தனது ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டம் ஒன்றில் அரவிந்தர் உரை நிகழ்த்தினார். அதுவே, புகழ்பெற்ற ‘உத்தர்பாரா பேருரை’ என்று அழைக்கப்படுகிறது. விடுதலை வீரரான அரவிந்தர் ஆன்மிகவாதியாக மலர்ந்ததன் பின்னணியை அவரே இந்த உரையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, ‘சநாதன தர்மமே தேசீயம்’ என்ற அறைகூவலையும் அரவிந்தர் இந்த உரையின் இறுதியில் தெரிவித்திருக்கிறார்.

அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அயர்லாந்து மாதான அன்னிபெசன்ட் அம்மையார் (1857 அக். 1 - 1933 செப். 20), இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பெரும் பங்கு ஆற்றியவர்.  மகாகவி பாரதிக்கு, அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆரம்பத்தில் மேலான  அபிப்பிராயம் இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆங்கில மாது என்ற எண்ணமே இருந்தது. தவிர அவரது தியாஸபிகல் ஸங்கம் மீதும் பாரதிக்கு நல்லெண்னம் இருக்கவில்லை. எனவே ஆரம்பக் காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். எனினும், அன்னிபெசன்ட் அம்மையாரின் பாரதம் மீதான அபிமானத்தை பாரதி மதித்திருக்கிறார். தனது எழுத்துகளில் அவரைப் பாராட்டவும் செய்கிறார். பாரதியின் தேசபக்தியும், நமது நாட்டுக்கு அன்னிபெசன்ட் அம்மையாரால் ஆகும் லாபமென்ன என்ற எண்ணமும் தான் அவர் மீதான கருத்துகளில் வெளிப்படுகின்றன....

அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்

1901 ஏப். 30-இல் அரவிந்த கோஷ்- மிருணாளினி போஸ் திருமணம் நடைபெற்றது. அரசு அதிகாரியும் செல்வந்தருமான பூபால் சந்திர போஸின் மூத்த மகள் மிருணாளினி. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே; அரவிந்தரின் வயது 28. இவர்களது இல்லற வாழ்வு நீண்ட நாள் நிலைக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்ட அரவிந்தரால் மற்றையோர் போல வாழ முடியவில்லை. கல்வியாளரான தனது கணவர் அரசுக்கு எதிராகப் போராடுவதை அவரது மனைவியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரவிந்தரால் மனைவிக்கு நேசத்தைக் காட்ட முடியவில்லை. இதனால் இருவரிடையே மனக்கசப்பு நேரிட்ட வேளையில், அரவிந்தர் தனது மனைவி மிருணாளினிக்கு 1905 ஆக. 30 இல் எழுதிய கடிதம் இது…

பிற நாடுகள் குறித்த பாரதியின் பாடல்கள்

எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா? அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள். சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று - இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.

பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதி தமது அரசியல் குருவாக மதித்த பெருந்தலைவர்களை வாழ்த்திப் பாடிய பாடல்கள் இவை. ‘தேசிய கீதங்கள்’ பகுப்பில், ‘தேசீயத் தலைவர்கள்’ என்ற் உள்பகுப்பில் இடம் பெற்றுள்ள 9 கவிதைகள் இவை. அந்நாளில் தமது நலன் கருதாமல் வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணித்த பெரியோரை மட்டுமே மகாகவி பாரதி பாடி இருப்பது, அவர்தம் எண்ணத் துணிவையும் கொள்கைப் பற்றையும் வெளிப்படுத்துகிறது. இதோ அக்கவிதைகள்....

‘புதிய ருஷ்யா’ கவிதையும் கவிஞரின் தீர்க்கதரிசனமும்

ரஷ்யாவில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த யுகப் புரட்சி என்று மகாகவி பாரதி பாடியபோதும், அங்கு நிகழ்ந்த வன்முறைகளில் அவருக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கிடைத்த செய்திகளும் அவருக்கு உவப்பாக இல்லை. ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள் நடத்தும் வன்முறைகளால் நாட்டு மக்களுக்கு பயனேதும் கிடைக்காது என்று அவர் தீர்மானமாக நம்பினார். எனவேதான், சுதேசமித்திரனில், தனது சந்தேகங்களை ஒரு கட்டுரையாகவும் வடித்தார். மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்போது உண்மையாகி விட்டதைக் காண்கிறோம். ஆயுதபலத்தாலும், வன்முறையாலும் நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிஸக் கூட்டம் 1990களில் சிதிலமடைந்து வீழ்ந்ததை உலகம் கண்டது. பல்வேறு நாடுகளை ஆயுதபலத்தால் சேர்த்து ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யக் குடியரசு (யுஎஸ்எஸ்ஆர்) என்ற வல்லரசாகத் தோற்றம் அளித்த ரஷ்யா பலகூறுகளாக இன்று சிதறிவிட்டது. அங்கு இப்போது லெனின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; கம்யூனிஸம் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது....

அழகிய இந்தியா – நூல் அறிமுகம்

பேரறிஞர் தரம்பால் தாம் எழுதிய - அழகிய மரம், அழகிய நதி, அழகிய போராட்டம், அழகிய கிராமம் ஆகிய 4 நூல்களின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகங்களுக்கான முன்னுரையாக எழுதி இருக்கிறார். ’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான். தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம் இது.