ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -2

II

6. புறநானூறு

செந்தமிழ் நாட்டின் பழம் பெருமையை எடுத்துக்காட்டும் நூல்களுள் புறநானூறு ஒன்று. பல புலவர்கள், பலரைப் பற்றி,  பல காலத்தில் பாடிய பாட்டுக்கள் அந்நூலிற் காணப்படும். அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்களில், அறத்தையும், பொருளையும் பற்றிய நானூறு பாட்டுக்கள் தொகுக்கப்பட்டிருத்தலால், அந் நூல் ‘புறநானூறு’ என்னும் பெயர் பெற்றது.

புறநானூற்றிலே படைத்திறம் உடைய பெரு வேந்தரைக் காணலாம். கொடைத் திறம் வாய்ந்த கொற்றவரைக் காணலாம்; கற்றறிந்தடங்கிய சான்றோரைக் காணலாம். சுருங்கச் சொல்லின், கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பண்டைத் தமிழ்நாட்டை புறநானூற்றிலே காணலாம்.

அக் காலத்து மன்னர் பலர் பொன்மலர் நறுமணம் கமழ்ந்தாற் போன்று, புவிச் செல்வத்தோடு கவிச் செல்வமும் பொருந்தப்பெற்று விளங்கினார்கள். முடியுடை மன்னராய் முத்தமிழ் நாட்டையாண்ட சேர சோழ பாண்டியரிற் சிலர் பாடிய கவிகள் புறநானூற்றிலே உண்டு. கற்பின் செல்வியாகிய கண்ணகியின் சீற்றத்தால் உயிரிழந்து அழியாப் புகழ் பெற்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டியன், புலமை வாய்ந்த முடிவேந்தருள் ஒருவன். கலையின் சுவையறிந்த அக் காவலன், எல்லோரும் கல்வி கற்று மேம்பட வேண்டும் என்று ஆசையுற்றான். ‘கற்றவர் மேலோர்; கல்லாதவர் கீழோர்’ என்பது அவன் கொள்கை.

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”

என்று அவன் பாடிய பாட்டால், பிறப்பினால் வரும் சிறப்பினும், கல்வியறிவினால் எய்தும் பெருமையே உயர்ந்த தென்பது இனிது விளங்குகின்றதன்றோ?

இனி, சோழ நாட்டு மன்னனாகிய கோப்பெருஞ் சோழனைப் பார்ப்போம்: அவனும் கவி பாடும் திறம் பெற்றவன்; தமிழறிந்த புலவர்களைத் தலைக்கொண்டு போற்றியவன். அச் சோழன், செல்வத்தில் தனக்கு நிகராகிய ஒருவனைத் தோழனாகக் கொண்டான் அல்லன்; பிசிராந்தையார் என்னும் புலவரை உயிர் நண்பராகக் கொண்டான். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருந்தான். பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்னும் சிற்றூரில் புலவர் குடியிருந்தார். சோழன், செல்வச் செழுமை வாய்ந்தவன். பிசிராந்தையார் புலவர்க்குரிய வறுமை பூண்டவர்; எனினும், சோழனுக்கு ஆந்தையே உயிர்த்தோழர் ஆயினார். இத்தகைய அரசன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணா விரதம் பூண்டான். அந் நிலையில் அவன் மனம் பிசிராந்தை யொருவரையே நாடிற்று. ‘நண்பர் வருவார் வருவார்’ என்று அவன் வழிமேல் விழிவைத்திருந்தான்;

செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன்”

என் ”தோழன்” என்று அருகே யிருந்த அன்பரிடம் அகங் குழைந்து கூறினான். இங்ஙனம் ஏங்கி நின்ற உயிர் நீங்கிப்போயிற்று. சோழன் சொல்லிய வண்ணமே ஆந்தை வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாமும் உண்ணாவிரதம் இருந்து, தம்முயிர்கொண்டு, சோழன் நல்லுயிரைத் தேடச் செல்பவர் போல, ஆவி துறந்தார். இவ்விருவரும் ஒன்றுபட்டு உணர்ச்சியின் பயனாகிய உயரிய நட்பிற்குச் சான்றாயினர்.

கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள்; கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான்.

கொங்கு நாட்டிலே குமணன் என்னும் குறுநில மன்னன் ஒருவன் இருந்தான். அவன் புலவரது வறுமைக்குப் பெரும் பகைவன். தம்பியின் கொடுமையால் நாடிழந்து, தன்னந்தனியனாய்க் காட்டிலே மறைந்து வாழ்ந்த அம் மன்னனைத் தேடிக் கண்டுகொண்டார் ஒரு தமிழ்க் கவிஞர்; அவன் நிலைமையைச் சிறிதும் கருதாது தம் பாட்டைச் சொல்லத் தொடங்கினார். ‘ஐயனே ! பலநாள் உணவின்றி, மனையாள் வற்றி ஒடுங்கிவிட்டாள். பாலற்ற கைக்குழந்தை பசியால் அழுது தாய் முகம் பார்க்கின்றது. தாய், கண்ணீர் நிறைந்த கண்களோடு என் முகம் பார்க்கின்றாள். ஏழையேன் என் செய்வேன்? உன் முகம் நோக்கி வந்தடைந்தேன்’ என்று உருக்கமாகப் பாடினார். கவிஞர் பாடிய பாட்டைக் கேட்ட குமணன் பெருந்துயரம் உற்றான். நாடிழந்த பொழுது அடைந்த துன்பத்தினும், வாடிய புலவரது வறுமையை அறிந்த நிலையில் அவன் பெருந்துயரம் அடைந்தான். “அந்த நாள் வந்திலை அருங்கவிப் புலவோய், இந்த நாள் வந்து நீ நொந்தெனை அடைந்தாய்” என்று சொல்லிக் கொண்டே தன் உடைவாளை எடுத்துப் புலவர் கையிற் கொடுத்து, இவ்வாளால் என் தலையை அரிந்து, நாடாளும் என் தம்பியிடம் கொடு. இத் தலைக்கு அங்கே விலையுண்டு. அவன் தரும் பொருளைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்’ என்று முகமலர்ந்து கூறினான். இவ்வாறு அறிஞர் ஒருவரைப் பற்றிய வறுமை கண்டு தரியாது தன் தலையையே கொடுக்க இசைந்த குமணனை ஈன்ற தமிழ்நாடு பெருமை வாய்ந்ததன்றோ?

இத்தகைய பெரியோரை ‘தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ என்று தமிழகம் போற்றுகின்றது. இவர்கள் இருத்தலாலேயே இவ் வுலகம் நிலைத்திருக்கின்றதென்ற தியாகத்தின் பெருமையைப் பாராட்டிப் பாடினான் இளம்பெருவழுதி என்னும் பாண்டியன்.

அதிகமான் என்னும் சிற்றரசன் அமுதம் நிறைந்த கருநெல்லிக் கனியைத் தான் உண்டு நெடுங்காலம் வாழக் கருதாது, நல்ல தமிழ்ப் பாட்டியற்றிய ஒளவையார்க்கு மனமகிழ்ந்து கொடுத்தான் அன்றோ? அதிகமானின் தமிழார்வத்தையும் தியாகத்தையும் ஒளவையார் வாயார வியந்து வாழ்த்தினார்.

ஆண் – பெண் ஆகிய இருபாலாரும் பாடியுள்ள கவிகளை புறநானூற்றிலே காணலாம். கல்வியிற் கடைப்பட்டோர் என்று இக்காலத்திற் கருதப்படுகின்ற குலங்களிற் பிறந்த பெண்மணிகள், முற்காலத்தில் கவி பாடியுள்ளார்கள். மலைநாட்டை யாண்ட ஏறைக்கோன் என்பவனை ஒரு குறமகள் பாடினாள். கரிகாற் சோழனை வெண்ணி என்னும் ஊரிற் பிறந்த குயத்தி பாடினாள். எயினக் குலத்திற் பிறந்த ஒரு மங்கை வஞ்சி மாநகரின் வளம் பாடினாள்.

இங்ஙனம் கல்வி சிறந்த தமிழ்நாட்டில் முடிவேந்தருக்கு அடுத்த வரிசையில் அமைந்த சிற்றரசர்களிற் சிலர் சிறந்த வள்ளல்களாக விளங்கினார்கள். பாண்டி நாட்டிலுள்ள பறம்பு மலையையும், அம்மலையை யடுத்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான் பாரி என்னும் சிற்றரசன். அவன் மனத்தில் எழுந்த கருணைக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், ‘இல்லை’ என்ற சொல்லே இல்லை. காட்டிலே குழைந்து கிடந்த முல்லைக்கொடி யொன்றைக் கண்டு மனமிரங்கி, அது படர்ந்து தழைத்தற்காகத் தன் அழகிய தேரை அதன் அருகே விட்டுச் சென்ற பாரியின் மனப்பான்மையைத் தமிழுலகம் வியந்து மகிழ்ந்தது. பயன் கருதாது கொடுத்த பாரியின் பெருமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார்.

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

என்று பாடினார் கபிலர். ‘செந்தமிழ்ப் புலவரெல்லாம் பாரி ஒருவனையே மாறி மாறிப் புகழ்கின்றனரே! இவ்வுலகத்தைக் காப்பவன் பாரி ஒருவன் தானா? மழையும் உலகத்தைக் காக்கின்றதன்றோ’ என்று கபிலர் பழிப்பார் போலப் பாரியின் பெருமையைப் பாராட்டினார். இம் மண்ணுலகில் பாரிக்கு ஒப்பாகச் சொல்லத் தக்கார் யாருமில்லை; விண்ணினின்று கைம்மாறு கருதாது பொழியும் மாரியே அவனுக்கு இணையாகும் என்பது கபிலர் கருத்து. இங்ஙனம் கொடைத் திறத்தால் புகழ் பெற்ற பாரியைத் தேவாரமும் பாராட்டுவதாயிற்று. “கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை” என்று முறையிடுகின்றார் சுந்தரமூர்த்தி.

பொதியமலைத் தலைவனாய் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைந்தோரைத் தாயினும் சாலப் பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறநானூற்றால் அறியலாம்.

“இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும் அறவிலை வாணிகன் ஆய் அலன்” என்று அவன் மனப் பான்மையை ஒரு பாட்டு விளக்குகின்றது. பயன் கருதாது கொடுத்தான் அவ்வள்ளல். கைப் பொருளைக் கொடுத்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அவன் அல்லன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது என்று புலவர் வியந்து கூறுகின்றார். இத்தகைய செம்மனம் படைத்தவர் கோடியில் ஒருவர் என்று கூறவும் வேண்டுமோ?

$$$

7. சிலப்பதிகாரம்

சேர நாட்டில் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் ஒரு நாள் பெரியாற்றங்கரையின் மணற்பரப்பிலே உல்லாசமாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். அம் மன்னன் தம்பியாகிய இளங்கோவும், மதுரைத் தமிழ்ப் புலவராகிய சாத்தனாரும் உடன் இருந்தார்கள். அப்பொழுது மலைநாட்டுக் குறவர்கள் திரண்டு போந்து, சேரனை மனமார வாழ்த்தி, ‘மன்னர் மன்னா! நினது மலைநாட்டில் என்றும் கண்டறியாத ஒரு காட்சியை இன்று கண்டோம். வாடிய முகத்தோடு, ஒரு மாது மலைமேல் ஏறி வேங்கை மரத்தின் கீழ் வந்து நின்றாள். ஒரு விமானம் விண்ணினின்றும் இறங்கிற்று. அவள் அவ் விமானத்திலேறி எம் கண் காண விண்ணுலகம் சென்றாள். அவள் எந்நாட்டாளோ? யார் மகளோ? அறியோம்’ என்று கூறித் தொழுது நின்றார்கள். அது கேட்ட மன்னனும் இளங்கோவும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். அந் நிலையில் மதுரைச் சாத்தனார், ‘அரசே! அந் நல்லாள் வரலாற்றை நான் அறிவேன். அவள் சோழநாட்டுப் புகார் நகரத்திலே பிறந்தவள்; கண்ணகி என்னும் பெயருடையாள்; செல்வப் பெருங் குடியிற் பிறந்தும், முன்வினைப் பயனால் அவ்வூரை விட்டுத் தன் கணவனோடு மதுரையை அடைந்தாள். அங்கு அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று அரசன் ஆணையால் காவலாளர் அவள் கணவனைக் கொன்றார்கள். கணவனை யிழந்த மாது கொதித்தெழுந்து, பாண்டியன் முன்னே சென்று தன் கணவன் குற்றவாளியல்லன் என்று நிரூபித்தாள். அவள் சீற்றத்தால் மன்னனும் மடிந்தான், மதுரையும் எரிந்தது’ என்று சொல்லி முடித்தார்.

அக் கதையைக் கேட்ட இருவர் உள்ளமும் உருகின. கவியரசராகிய இளங்கோ அக் கதையின் மூலமாகச் சில சிறந்த உண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தலாமே என்று எண்ணினார். நீதி தவறிய அரசரை அறமே ஒறுக்கும் என்பது ஓர் உண்மை. கற்புடைய மாதரை விண்ணுலகும் மண்ணுலகும் போற்றும் என்பது மற்றோர் உண்மை. வினையின் பயன் விளைந்தே தீரும் என்பது பிறிதோர் உண்மை. இம் மூன்று உண்மைகளும் கண்ணகியின் கதையில் அமைந்திருத்தலால், இளங்கோ அக் கதையைக்கொண்டு ஒரு காவியம் இயற்றக் கருதினார்.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”

என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுமாற்றால் இளங்கோவின் மனத்தில் அமைந்த கொள்கை இனிது விளங்குகின்றது. கண்ணகியின் சிலம்பு காரணமாகவே கதை விளைந்ததாதலின் சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் அக் காவியத்திற்குப் பெயரிட்டார்.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழ்த்தாயின் கழுத்தில் இலங்கும் மணியாரமாகும் என்று கற்றறிந்தோர் கூறுவர். அக் காவியம் கற்போர் மனத்தை அள்ளும் திறம் வாய்ந்ததென்று கட்டுரைத்தார் பாரதியார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு” என்பது புனைந்துரையன்று; பொருளுரையே.

இத்தகைய காவியத்திலமைந்த நயங்களிற் சிலவற்றைக் காண்போம்:

கண்ணகியை மணந்து இன்புற்ற கோவலன், நலமெல்லாம் ஒருங்கே வாய்ந்த அந் நங்கையை நோக்கி,

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை”

என்று கூறும் கட்டுரையி லமைந்த காதற்சுவை நம் உள்ளத்தைக் கவர்கின்றதன்றோ?

தமிழ் வளர்த்த பாண்டியனுக்குரிய வைகை ஆற்றை, “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி” என்று இளங்கோவடிகள் போற்றும் பொழுது நம் செவியில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ? இன்னும் சோழநாட்டை வளநாடாக்கிய காவேரியாற்றை,

பூவார் சோலை மயிலால் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி”

என்று அவர் வாழ்த்தும்பொழுது நம்முள்ளம் குளிர்கின்றதன்றோ?

இனி, மதுரையம்பதியிலே கணவனைப் பறிகொடுத்த கண்ணகி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு,

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில்
ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்”

என்று வஞ்சினம் கூறும்பொழுது நம் நெஞ்சத்தில் வீரம் பொங்குகின்றதன்றோ? சுருங்கச் சொல்லின், காவியத்தில் அமைதற்குரிய சுவைகள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் செவ்வையாக அமைந்திருக்கின்றன. ஆதலால், சிலம்பின் செல்வம் தமிழ்நாட்டுச் செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். கண்ணகி, மூன்று தமிழ் நாட்டுக்கும் உரிய பொருளாக விளங்குகின்றாள். சோழ நாட்டிலே பிறந்து பாண்டி நாட்டிலே கற்பின் பெருமையை நிறுவி, சேர நாட்டிலே தெய்விகமுற்ற கண்ணகியின் பெருமை தென்னாட்டிலுள்ள முந்நாடுகளுக்கும் உரியதன்றோ? இதனாலேயே மதுரைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கி,

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக

என்று வேண்டிக்கொண்டார். எனவே, மூன்று தமிழ்நாட்டின் தன்மையும், மூன்று முடிமன்னர் செம்மையும் ஒருங்கே சிலப்பதிகாரத்திற் காணலாம். மேலும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழின் சிறப்பையும் சிலப்பதிகாரத்தால் அறியலாம். செஞ்சொற் களஞ்சியமாகிய அக் காவியத்தில் சிந்தைக்கினிய செவ்விய தமிழ் நடையுண்டு; செவிக்கினிய இசைப் பாட்டு உண்டு; கண்ணுக்கினிய கூத்துண்டு. ஆகவே, முத்தமிழ் இன்பம் நுகர விரும்பும் வித்தகர்க்குச் சிலப்பதிகாரமே சிறந்த விருந்தாகும்.

இன்னும் எக் காலத்திற்கும் எந் நாட்டிற்கும் பொதுவாகிய மாதர் கற்பும், மன்னர் நீதியும் சிலப்பதிகாரத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்”

என்று திருவள்ளுவர் அருளிய உண்மைக்கு சிலப்பதிகாரமே சிறந்த சான்று. கற்பெனும் திண்மையே கண்ணகியின் வடிவம். அவ் வீரவடிவமே சேரன் செங்குட்டுவன் உள்ளத்தைக் கவர்ந்தது. கண்ணகிக்கு வீரக்கல் நாட்டி வழிபட விரும்பினான் சேரன்; விண்ணளாவிய இமயமலையிற் போந்து சிலை எடுத்தான்; கங்கையாற்றில் நீராட்டினான்;  தலைநகராகிய வஞ்சி மாநகரத்தில் கொண்டுவந்து அச் சிலையை நிறுவித் திருவிழாக் கொண்டாடினான். அத் திருவிழாவைக் காண வந்திருந்த பிற நாட்டுப் பெருவேந்தர், தம் நாடுகளிலும் பத்தினித் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு, பத்தினி வழிபாடு பாரத நாட்டிற் பரவியது. “கற்புக்கடம் பூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம்” என்ற வாக்கு மெய்யாயிற்று.

வீரக்கற்பு வாய்ந்த கண்ணகியின் கதையால் ஓர் அரசியல் உண்மையும் விளங்குகின்றது. நெறி தவறிய அரசனை அறமே ஒறுக்கும் என்னும் உண்மையை பாண்டியன் வரலாறு காட்டுகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் அகப்பட்டான் என்று பொற்கொல்லன் சொல்லிய சொல்லை ஆராய்ந்து பாராது, உண்மையை விசாரித்து அறியாது, ‘அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக’  என்று பணித்தான் பாண்டியன். அரசன் ஆணையால் தன் கணவன் இறந்தான் என்றறிந்த கண்ணகி சீறி எழுந்தாள்; ‘தீ வேந்தன் தனைக்கண்டு இத் திறம் . கேட்பேன்’ என்று புறப்பட்டாள்; கருங்கூந்தல் விரிந்து கிடக்க, கண்கள் கண்ணீர் வடிக்க, கையில் ஒற்றைச் சிலம்பேந்திக் காவலன் முன்னே தோன்றினாள்; கோவலனிடமிருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று, தன் சிலம்பே எனப் பாண்டியன் திடுக்கிடப் பேசினாள்; அச் சிலம்பை உடைத்துத் தன் வழக்கை மெய்ப்பித்தாள். அந் நிலையில் மன்னவன் கை சோர்ந்து, மெய் சோர்ந்தான்;

தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்

என மயங்கி விழுந்து மாண்டான். இங்ஙனம் கண்ணகிக்குச் செய்த தவறு காரணமாக உயிர் துறந்த மன்னவனை,

“தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ’

என்று நல்லார் வாழ்த்தினார்கள். ஆகவே, மாநிலம் காக்கும் மன்னவனை நீதி வழுவாத நெறி முறையே காக்கும் என்னும் அரசியற் கொள்கை சிலப்பதிகாரத் தால் உணர்த்தப்படுகின்றது. இத்தகைய செஞ்சொற் காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்த வஞ்சிக் கோவை நெஞ்சார வாழ்த்துவோமாக!

$$$

8. மணிமேகலையும் மதுவிலக்கும்

இயற்கை வளம் நிறைந்த தமிழ்நாட்டில் பனையும் தென்னையும் பல்லாயிரம் உண்டு. பாண்டிநாடு தொன்று தொட்டுப் பனைவளம் படைத்ததாகும் சோழ நாட்டிலும் சேர நாட்டிலும் தென்னைச் செல்வம் சிறந்து விளங்குகின்றது. தென்னையிலும் பனையிலும் ஊறுகின்ற மது ஆறாகப் பாய்வதற்குப் போதியதாகும். ஆயினும், தென்னாட்டில் பிறந்த சமயங்களும், புகுந்த சமயங்களும் மதுவிலக்குப் பிரசாரம் செய்தன. சைவமும் வைணவமும், பௌத்தமும் சமணமும், மகம்மதியமும் கிருஸ்தவமும் மதுபானத்தைக் கடிந்தன. மற்றைய கொள்கைகளில் பிணக்கமுற்ற இப் பெருஞ் சமயங்கள் மதுவிலக்குக் கொள்கையில் இணக்கமுற்றுப் பணிசெய்த பான்மையிலேயே தமிழ்நாட்டில் மதுபானம் மட்டுப்படுவதாயிற்று.

தமிழ் மொழியில் இறவாத பெருநூல்கள் இயற்றிய பேரறிவாளரும் தம் கவிகளின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்துள்ளார்கள். தமிழ்மறையென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறள், மனித சமுதாயத்துக்குக் கேடு விளைவிக்கும் மூன்று தீமைகளை மிக அழுத்தமாகக் கண்டிக்கிறது. விபசாரம், மதுபானம், சூதாட்டம் இம் மூன்றும் செல்வத்தைச் சிதைத்துச் சீர்மையை அழிக்கும் என்று அந் நூல் கூறுகின்றது.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு

என்பது வள்ளுவர் வாய்மொழி.

சமண முனிவராகிய பவணந்தியார், நன்னூல் என்னும் இலக்கண நூலின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்கின்றார். கள்ளுண்பவர் கல்வியறிவைப் பெறுதற்கு உரியரல்லர் என்பது அவர் கொள்கை. ‘களிமடி மானி காமி கள்வன்’ முதலியவர்கள் கல்வி பெறுதற் குரியராகார் என்று ஆசிரியர் கட்டுரைக்கின்றார். கள்ளுண்பவன் ‘களி’ எனப்படுவான். மாணவராதற்குத் தகுதியற்றவர்களில் முதல் வரிசையில் முதலாகக் கள்ளுண்பவனை வைத்தமையால் மதுவிலக்குப் பிரசாரத்தில் நன்னூலார்க்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்று விளங்குகின்றதன்றோ?

பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் மணிமேகலை. அந் நூல் ஐந்து சிறந்த கொள்கைகளைப் பஞ்சசீலம் எனப் பாராட்டுகின்றது. பஞ்சசீலம் வாய்ந்தோரே சிறந்தோர் ஆவர். கள்ளுண்ணாமை, பொய்யுரையாமை, கொலை செய்யாமை, களவு செய்யாமை, விபசாரம் செய்யாமை ஆகிய ஐந்தும்  ‘பஞ்சசீலம்’ எனப்படும்.

இனி, மணிமேகலையில் அமைந்த மதுவிலக்குப் பிரசாரத்தைப் பார்ப்போம்: சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து கோவலனைக் காதலனாகப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினாள். கோவலன் தன் குல தெய்வத்தின் பெயரைத் தன் காதல் மகளுக்கு இட்டு மகிழ்ந்தான். மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்த கொடுமையை அறிந்த மாதவி துறவறத்தை மேற்கொண்டாள். அவளோடு பருவ மங்கையாகிய மணிமேகலையும் தன் கருங்குழல் களைந்து துறவற நெறியிற் சேர்ந்தாள். இருவரும் அறவண அடிகள் என்னும் பெரியவரிடம் ஞானோபதேசம் பெற்றார்கள். மணிமேகலை தனக்கென வாழாது சமுதாயத்தின் நலத்திற்காகத் தன்னலத்தைத் தியாகம் செய்த தவநங்கை; சமுதாயத்தை அலைத்துக் குலைத்து அழிக்கும் நோய் பசிநோயே யாதலால் அந் நோயை நீக்கும் முயற்சியை மேற்கொண்டாள். அவள் கையில் அமுதசுரபி என்னும் திருவோடு வந்து சேர்ந்தது. அத் திருவோட்டில் முதன்முதல் கற்புடைய மங்கை ஒருத்தி தன் கையால் அன்னமிட்டால், அவ் வன்னம் அள்ள அள்ளக் குறையாமல் வளரும் என்று மணிமேகலை அறிந்தாள்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த ஆதிரை என்னும் நல்லாளே கற்பின் செல்வி என்று எல்லோரும் எடுத்துரைத்தார்கள். அவள், கணவனே தெய்வம் என்று கருதி வாழ்ந்த கற்புடையாள்; திருவாதிரை நாளில் பிறந்தமையால் அப் பெயர் பெற்றாள் போலும்! அம் மங்கையின் மனை முற்றத்திற் போந்து, மணிமேகலை திருவோடேந்திப் புனையா ஓவியம் போல நின்றாள். ஆதிரை அன்போடு அன்னமெடுத்து வந்து மணிமேகலையை வலம் வந்து தொழுது ‘பாரெங்கும் பசிப் பிணி ஒழிக’ எனத் திருவோட்டை வாழ்த்தி அதன் சுரை நிறைய அன்னமிட்டாள். இங்ஙனம் பசியைச் சபித்த பாவையின் திறத்தினை,

பாரக மடங்கலும் பசிப்பிணி யறுகென
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து

என்று மணிமேகலை போற்றுகின்றது.

பசிப்பிணி யென்னும் பாவியை இப் பாரினின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை; அவள் கணவனாய சாதுவன், மது என்னும் அரக்கனை இம்மாநிலத்தி னின்றும் அகற்ற முயன்றான். ஒரு நாள், கப்பலேறி வங்க நாட்டுக்குப் புறப்பட்டான். நடுக்கடலிற் கப்பல் செல்லும் பொழுது ஒரு சுழல் காற்று எழுந்தது. மரக்கலம் சின்னபின்னமாகச் சிதைந்து தாழ்ந்தது. கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சிலநாள், இரவு பகலாக அலைகளால் மொத்துண்டு அலைந்த அம் மரம், ஒரு தீவிலே அவனைக் கொண்டு சேர்த்தது. அங்கே, நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்து வந்தார்கள்; விலங்குகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்முள் ஒருவனைத் தலைவனாகவும் குருவாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண் கரடி போன்றவன். அவன் மனையாள் பெண்கரடி போன்றவள். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனை நாகர் சிலர் கண்டார்கள்; நரமாமிசம் கிடைத்ததென்று, நாக்கு ஊறினார்கள்; தம் குருநாதனிடம் அவனைக் கொண்டு சென்றார்கள். பசியால் மெலிந்து, குளிரால் நலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து நோக்கினான்; “நீ யார்? இங்கு வந்த காரணம் என்னை?” என்று நாக நாட்டு மொழியிலே வினவினான்.

அம் மொழியை அறிந்திருந்த சாதுவன் கருங்கடலில் நேர்ந்த துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான். அந் நிலையில் குருநாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயருற்ற நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் நல்ல ஊனும் கொடுக்கும்படி அவன் அருகே நின்ற நாகரைப் பணித்தான்! அவ்வுரை கேட்ட சாதுவன் திடுக்கிட்டான்; இருகையாலும் செவியைப் பொத்திக் கொண்டு, ‘ஐயனே! கள்ளும் ஊனும் வேண்டேன்’ என்று உறுதியாக உரைத்தான். அவ்வுரை கேட்ட குருநாதன் வியப்படைந்தான்; ‘கள் என்ற சொல்லைக் கேட்ட பொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ? நாவுக்கினிய ஊனையும், கவலையை ஒழிக்கும் கள்ளையும் விலக்கலாமோ?’ என்று வெகுண்டு வினவினான். இது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையைக் குருநாதன் மனங்கொள்ள உணர்த்தலுற்றான்: “ஐயனே! மானிடப் பிறவியில் நாம் அடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச் செல்வமே ஆகும். அவ் வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் இவற்றைப் பகுத்து உணர்கின்றோம். இத் தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர்; அதனைக் கெடுக்கின்றவர் கீழோராவர். மதுபானம் நம் அறிவை மயக்குகின்றது; நாளடைவில் அதனைக் கெடுத்துவிடுகின்றது. செய்யத் தக்கது இது, செய்யத் தகாதது இது’ என்று பகுத்தறியும் திறமையை இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி கெட்டொழியும். இதனாலேயே,

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்”

என்று சாதுவன் எடுத்துரைத்தான்.

உயிர்க்குறுதி பயக்கும் உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர் தலைவன் அவனடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அதுவரை, கடலிற் கவிழ்ந்த மரக்கலங்களிலிருந்து கைப்பற்றிய அரும்பெரும் பொருள்களை அவனுக்குக் கையுறையாகக் கொடுத்தான். வங்க நாட்டினின்றும் அங்கு வந்தடைந்த வாணிகக் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பினான்.

ஆகவே, மதுவிலக்குப் பிரசாரம் தமிழ்நாட்டில் புதிதாகத் தோன்றிய தொன்றன்று என்பது இக்கதையால் விளங்கும் செல்லுமிடந்தோறும் தமிழ் மக்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள் நாட்டில் இருந்தாலும் நடுக்கடலிற் போந்தாலும் அப் பணியை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல்லாம் செய்து வந்தார்கள். நரமாமிசம் புசிக்கும் நாகர் நாட்டிலே ஒதுக்கப்பட்ட ஒரு தமிழ் வணிகன், அறவுரையால் அந் நாட்டு அரசனைத் திருத்தியருளினான் என்னும் தெள்ளிய வரலாறு நாம் போற்றுதற்குரியதன்றோ?

$$$

9. நளவெண்பா

நளன் கதை நாடறிந்த பழங்கதை. வடமொழியில் உள்ள பாரதத்திலும், தமிழ் மொழியில் உள்ள சிலப்பதிகாரத்திலும் நளன் கதை குறிப்பிடப்படு கின்றதென்றால் அதன் தொன்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? “பஞ்ச பாண்டவருள் தலைசிறந்த தருமர் சூதாடி, நாடிழந்து, வனவாசம் செய்தபோது அவரைக் காணப்போந்தார் வியாச முனிவர். மெய்யன்புடைய முனிவரைக் கண்ட தருமர் மனம் வருந்தி, ‘ஐயனே! மதியிழந்து மாயச் சூதாடினேன்; நாடும் பீடும் இழந்தேன்; காடு போந்தேன்; கடுந்துயர் உழந்தேன்; என்னைப்போல் துன்புற்றோர் இவ் வுலகில் உண்டோ!’ என்று கண்ணீர் வடித்தார். அது கேட்ட முனிவர், தருமர் மனத்தைத் தேற்றக் கருதி, நளன் கதையை எடுத்துரைத்தார். கலியின் கொடுமையால் மதியிழந்து சூதாடி, நாடும் செல்வமும் இழந்து, கானகம் சென்று காதல் மனையாளைப் பிரிந்து கடுந்துயர் அடைந்த நளன் கதையைக் கேட்ட தருமர் ஒருவாறு மனந்தேறினார்” என்று மகாபாரதம் கூறுகின்றது.

செந்தமிழ்ப் பழங்காவியமாகிய சிலப்பதிகாரமும் நளன் கதையைக் குறிக்கின்றது. சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தில், வளமார்ந்த வணிகர் குடியிலே பிறந்த கோவலன், பொது மாதின் வசப்பட்டுப் பொருளெல்லாம் இழந்தான்; பெருமை சான்ற வீட்டையும் நாட்டையும் விட்டு, கற்பிற் சிறந்த மனையாளோடு மதுரை மாநகரை நோக்கிப் புறப்பட்டான். வழிநடந்து சென்ற இருவருக்கும் துணையாகக் கவுந்தியடிகள் என்ற முனிவர் வந்து சேர்ந்தார். காடும் நாடும் கடந்து மதுரையின் அருகே வந்தபோது, கோவலன் மனம் கரைந்து முனிவரை நோக்கி, ‘மாதவப் பெரியீர்! பாவியேன் சிறுநெறியிற் சேர்ந்து சிறுமையுற்றேன்; காதல் மனையாளாகிய கண்ணகிக்கும் கடுந்துயர் விளைவித்தேன்’ என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான். அப்பொழுது முனிவர், இராமன் கதையையும் நளன் கதையையும் எடுத்துரைத்து, ‘அப்பா! வினையின் பயனை எவ்வாற்றானும் விலக்க வொண்ணாது; அது வந்தே தீரும்’ என்று அவன் உள்ளத்தைத் தேற்றினார்.

இத்தகைய பழமை வாய்ந்த நளன் கதையைத் தமிழிலே பாடிப் புகழ் பெற்றார் புகழேந்திப் புலவர். அவர் இயற்றிய ‘நளவெண்பா’ என்னும் நூல் சிந்தைக்கினிது; செவிக்கினிது. அவ் வெண்பாக்களிற் சிலவற்றைப் பார்ப்போம்:

விதர்ப்ப நாட்டரசனாகிய வீமன் மகள் தமயந்தி என்பாள், கட்டழகு வாய்ந்த கன்னியாய்த் திகழ்ந்தாள். அவள் நலங்களை ஓர் அன்னத்தின் வாயிலாக அறிந்தான் நளன் என்னும் மன்னன். பள்ளத்திற் பாயும் வெள்ளம் போல் அவனுள்ளத்தில் காதல் விரைந்து நிறைந்தது. கங்கு கரையின்றிப் பொங்கிய காதலால் ஆண்மைக் குணங்களாய மானமும் நாணமும் இழந்த நளன் அன்னத்தை நயந்து நோக்கி, ‘உன் நாவிலே உள்ளது என் நல்வாழ்வு’ என்றுரைத்தான். இக் கருத்தைக் கவி அழகாகப் பாடுகின்றார்.

இற்றது நெஞ்சம், எழுந்தது இருங்காதல்
அற்றது மானம்; அழிந்ததுநாண் – மற்றினிஉன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான்”

என்ற பாட்டு, காதலின் வெம்மையாற் கனிந்த நளன் உள்ளத்தை நன்கு காட்டுகின்றது.

நளனுக்கு நன்மை செய்ய விரும்பிய நல்லன்னம் தமயந்தியிடம் விரைந்து போந்தது. அக் கன்னியைத் தனியிடத்திற் கண்டு நளனுடைய நலன்களை யெல்லாம் எடுத்துரைத்தது :

செம்மனத்தான், தண்ணளியான், செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் – மெய்ம்மை
நளன்என்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளன் என்பான் வேந்தன் உனக்கு”

என்று அன்னம் சொல்லிய பொழுது கன்னி உள்ளம் கனிந்தாள்; நளனிடம் காதல் கொண்டாள்; அவனையே மணப்பதாக வாக்களித்தாள். உருவிலும் திருவிலும் ஒப்பற்ற காதலர் இருவரும் மணம் புரிந்து இன்புற்று வாழ்ந்தார்கள். இவ்வாறிருக்கையில், ஒரு நாள் நளன் சூதாடினான்; தனக்குரிய செல்வத்தை யெல்லாம் பணயமாக வைத்துத் தோற்றான்; கண்போன்ற மக்கள் இருவரையும் விதர்ப்ப மன்னனிடம் அனுப்பிவிட்டு, மனையாளோடு கானகம் போந்தான்; அங்கு நள்ளிரவில் கண்ணுறங்கிய காதலியைக் கைவிட்டு அகன்றான்.

தீக்கா னகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன்
கோக்கா தலியைக் குறிக்கொள்மின் – நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டு இன்று
ஏதிலன் போல் போகிறேன் யான்

என்று காதலியைப் பிரியும் தறுவாயில் நளன் கானகத் தெய்வங்களை வணங்கிக் கூறும் மொழிகள் நம் உள்ளத்தை உருக்குவனவாகும்.

விடியற்காலத்தில் விழித்தெழுந்தாள் தமயந்தி. காதலனைக் காணாது கலங்கினாள்; மயங்கினாள்; கண்ணீர் பெருக்கினாள். அவ் வழியாக வந்த வணிகன் ஒருவன் கருணை கூர்ந்து, ‘மாதே, நீ யார்? இக்கடுங் கானகத்தில் தன்னந் தனியாய் எவ்வாறு வந்தாய்?’ என்று வினவினான். அதற்குத் தமயந்தி கூறும் மறுமொழி கற்பிற் சிறந்த குலமாதர் ஒழுக்கத்தை விளக்குகின்றது.

முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் – அன்னவனைக்
காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும் பூ
ணாரம் பூண்டாள் புலர்ந்து”

கானகத்தில் கதறவிட்டுச் சென்ற கணவன்மீது தமயந்தி குற்றம் குறையொன்றும் சொல்லவில்லை. முன்னை வினையின் கொடுமையை நினைந்து வருந்துவாள் ஆயினாள். ‘கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும்’ கொண்டானைக் குறை கூறாது தம் தீவினையை நொந்து கொள்வது பண்டைக் குலமாதர் கற்புமுறை என்பது தமயந்தியின் வாய்மொழியால் இனிது விளங்குகின்றது.

அவ்வுரை கேட்ட வணிகன் மனங் குழைந்து மங்கையை அழைத்துச் சென்று, அண்மையில் இருந்த ஒரு நாட்டிலே சேர்த்தான்; அந் நாட்டரசன் அவளைத் தமயந்தி என்று அறிந்தவுடன் விதர்ப்ப மன்னனிடம் சேர்ப்பித்தான்.

தமயந்தியின் நிலை இவ்வாறாக, கானகத்தில் தனியனாய்ப் பொறி கலங்கி, நெறி மயங்கி, நடந்து சென்ற நளனை ஒரு கரும்பாம்பு கடித்தது. நஞ்சு, உடல் முழுவதும் பரவி, அவன் உருவத்தை மாற்றியது. கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவரும் திருமேனி கருகிக் குறுகிற்று. காட்டைக் கடந்து காலைப் பொழுதில் நளன் கடற்கரை வழியாகச் சென்றான்; அங்கு மலர்ந்திருந்த நீலப் பூக்களையும், பரந்துலாவிய மெல்லிய தென்றலையும், இரை தேடித் திரிந்த பறவைகளையும் பார்த்துப் பலவாறு புலம்பலுற்றான்.

பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே வேலைக் கழிக்குருகே-யானுடைய
மின்னிமைக்கும் பூணாள் அவ் வீங்கிருள்வாய் ஆங்குணர்ந்தால்
என்நினைக்கும் சொல்வீர் எனக்கு”

என்று காதலிக்குச் செய்த தீங்கை நினைந்து கரைந்தழுதான்.

இவ்வாறு கடற்கரையில் நடந்து செல்லும் பொழுது நளனைக் கண்டு நண்டுகள் ஓடி, வளைகளின் உள்ளே ஒளிந்தன; அவற்றைக் கண்ட மன்னன் மனத்தில் துன்பம் பொங்கி எழுந்தது. காதல் மனையாளைக் காட்டிலே கைவிட்ட பாதகனைப் பார்க்கவும் கூடாதென்று நண்டுகள் ஓடி மறைந்தன என்று எண்ணி நளன் மனம் நைந்தான்.

காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ- நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை”

என்று மனம் உடைந்து வினவினான். இன்னும் அடுக்கடுக்காக அலைகள் வருவதையும், கரையில் விழுந்து புரண்டு போவதையும் கண்டு மனம் புழுங்கினான் நளன். கருங்கடலின் நிலையும் தன் மனநிலையை ஒத்திருப்பதாகக் கருதி வருந்தினான்.

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் -தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கலியே மாதை
இரவகற்றி வந்தாய் கொல் இன்று”

என்று அலைகடலை நோக்கி அழுதான். “என்னைப் போல் கருங்கடலே! நீயும் உன் காதலியை நள்ளிரவிற் பிரிந்தாயோ!” என நளன் புலம்பும் மொழிகளில் சோகம் பொங்குகின்றது.

இவ்வாறு கடற்கரை வழியாகச் சென்ற நளன் அயோத்தி நகரை அடைந்தான்; ஊரும் பேரும் சொல்லாது அங்கு அரசு புரிந்த மன்னனிடம் தேர்ப்பாகனாக அமர்ந்தான். சில காலம் சென்றது; நளன் இருப்பிடத்தை ஒற்றர் மூலமாக அறிந்தான் தமயந்தியின் தந்தை; அவனைத் தன் மாளிகைக்கு அழைப்பதற்கு ஒரு சூழ்ச்சி செய்தான்; தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம் என்று அயோத்தி மன்னனுக்கு அறிவித்தான்; உடனே புறப்பட்டான் அவ் வரசன்; தேர்ப் பாகன் கொண்டுவந்த தேர்மீது ஏறினான்; விதர்ப்ப நாட்டு மாளிகைக்குச் சென்றான். தேர்ப் பாகனாக வந்தவன் நளன்தானா என்று நன்றாகத் தெரிந்து கொள்ளுமாறு தன் மக்களை அவனிருந்த இடத்திற்கு அனுப்பினாள் தமயந்தி. குழந்தைகளைக் கண்டான் நளன். காதலால் இவனுள்ளம் கரைந்தது. கண்களில் கண்ணீர் பொங்கிற்று. இரு மக்களையும் கட்டி அணைத்துக்கொண்டு, ‘என் மக்கள் போல்கின்றீர், யார் மக்கள் நீர்?’ என்று நாத்தழும்ப அவன் வினவினான். அதற்கு மழலை மொழிகளால் அவர்கள் மறுமொழி தந்தார்கள்.

மன்னன் நிடதத்தார் வாள்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட்டு அவன் ஏக – இந்நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் என்றார் அழுது

அவ் வாசகத்தைக் கேட்ட நளன் கண்ணீர் சொரிந்து பெருமூச்செறிந்தான். குழந்தைகளைத் தமயந்தி மாளிகைக்கு அழைத்து நிகழ்ந்ததைக் கேட்டாள்; ஐயம் தீர்ந்தாள். தேர்ப்பாகனாக வந்த நளனை விதர்ப்ப மன்னன் தன் மாளிகையினுள்ளே அழைத்து வந்தான். அந் நிலையில் முன்னைய வடிவத்தைப் பெற்ற நளன் கானகத்திற் கைவிட்ட காதலியைக் கண்டான்; ஆனந்த வாரியில் மூழ்கினான். பிரிந்தவர் கூடினாற் பேசல் வேண்டுமோ? சூதினால் இழந்த நாட்டை நளன் மீண்டும் பெற்று மனைவி மக்களோடு வாழ்வானாயினான்.

இக் கதையைக் கொண்ட ‘நளவெண்பா’  நானூற்று இருபத்து நான்கு வெண்பாக்களை உடையது. வெண்பாப் பாடுவதில் புகழேந்தி இணையற்றவர் என்பது கவிச்சுவை தேரும் அறிஞர் கருத்து. “வெண்பாவிற் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர்கம்பன்’ என்ற மதிப்புரையை மறுப்பார் எவருமிலர். கம்பர் கருத்தும் புகழேந்திப் புலவர் கருத்தும் சில விடங்களில் ஒத்திருக்கக் காணலாம். ஒரு கருத்தைப் பார்ப்போம்.

இவ்வுலகில் செம்மனம் வாய்ந்தவர் சுகத்தையும் துக்கத்தையும், செல்வத்தையும் வறுமையையும் சமமாகவே கருதுவர். மட்டற்ற செல்வம் வந்தடைந்தால் மகிழ்ந்திடவும் மாட்டார்; அடுத்தடுத்துத் துன்பம் வந்தால் அழுங்கிடவும் மாட்டார். இத்தகைய மனப்பான்மை இராமனிடத்தில் அமைந்திருந்ததாகக் கம்பர் காட்டுகின்றார். நாட்டின் தலைவனாக வீற்றிருந்து அரசாளும் பதவியைத் தந்தை அளித்த போதும், காட்டில் அலைந்து திரியும் கடமையைத் தாய் விதித்த போதும் இராமன் திருமுகம் சித்திரத்தில் எழுதிய செந்தாமரையை ஒத்திருந்தது என்னும் உண்மையை,

மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும்
இத்திருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தின் அலர்ந்த செந் தாமரை
ஒத்தி ருந்தமு கத்தினை உன்னுவாள்”

என்று சீதையின் வாயிலாகக் கம்பர் உணர்த்துகின்றார்.

பஞ்சபாண்டவருள் தருமர் அத் தன்மை வாய்ந்தவர் என்று நளவெண்பா கூறுகின்றது.

மெய்த்திரு வந்துற் றாலும் வெந்துயர் வந்துற் றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே”

என்று வியாச முனிவர் வாயிலாகப் புகழேந்திப் புலவர் தருமரைப் பாராட்டுகின்றார். இரு கவிகளின் சொல்லும் பொருளும் ஒன்றுபட்டிருக்கக் காண்கிறோம்.

$$$

10. நகைச்சுவை

இவ் வுலகம் ஒரு நாடகசாலை: இந்நாடக சாலையில் அரசராய் வருவார் சிலர்; வீரராய் விளங்குவார் சிலர், காதலராய்த் தோன்றுவார் சிலர்; விகடராய் வருவார் சிலர். கூத்துக்கேற்ற கோமாளியைக் கண்டால் எல்லோருக்கும் ஆனந்தம்! அவர் பேச்சைக் கேட்டால் பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்; பெரியோர்கள் அக்கம் பக்கம் பார்த்து அடக்கமாகச் சிரிப்பார்கள்; மாதர்கள் மறைவாகச் சிரிப்பார்கள். இப்படி எல்லோரும் ஏன் சிரிக்கிறார்கள்? விகடர் சொல்லும் சொல்லில் அமைந்த சுவை, எல்லோரையும் சிரிக்கச் செய்கின்றது. இச் சுவையைத்தான் நகைச்சுவை என்பர். நகைச்சுவை ஏச்சிலும் தோன்றும், பேச்சிலும் தோன்றும். கற்றவர் கவியிலும் பிறக்கும்; மற்றவர் உரையிலும் பிறக்கும். முதலில் ஏச்சிலே பிறக்கும் சுவையைச் சிறிது பார்ப்போம்:


முக்கூடல் என்ற ஊரிலே ஒரு பள்ளன். அவனுக்குத் தாரம் இரண்டு; மூத்தாள் முக்கூடற் பள்ளி; இளையவள் மருதூர்ப்பள்ளி. மூத்தாள் பெருமாளைச் சேவிப்பவள்; இளையாள் சிவனடியாள். இவ் விருவரிடையே ஏச்சும் பேச்சும் இல்லாத நாள் இல்லை. ஏசுவதற்கு வேறொன்றும் தோன்றாவிட்டால், இவர்கள் கும்பிடும் சாமிகளைக் கூசாமல் ஏசுவார்கள். சிவனும் பெருமாளும் இப் பள்ளிகள் வாயில் அகப்பட்டுப் படும்பாட்டைப் பார்ப்போம்:

”பிச்சைக்காரச் சாமியைக் கும்பிடும் மருதூராளுக்குப் பேச்சென்ன பேச்சு” என்று தொடங்கினாள் மூத்தாள். “பிச்சை எடுத்தான் உங்கள் சாமி; பின்னும் பசி தீர வழியின்றி நஞ்சைத் தின்றான். சாமியைப் பார் சாமியை!”

நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் – வாரி
நஞ்சை யெல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி

என்று பழித்தாள் மூத்தாள். இளையாள் அவளுக்கு இளைத்தவளா? பெருமாள் குட்டை உடைத்து விட்டாள்.

மாட்டுப்பிற கேதிரிந்தும் சோற்றுக்கில்லாமல் – வெறும்
மண்ணையுண்டான் உங்கள் முகில்வண்ண னல்லோடி

“உங்கள் சாமி சேதி தெரியாதோ? மாட்டை ஓட்டி ஓட்டி மேய்த்தான்; பின்னும் சோற்றுக்கில்லை ; மண்ணை வாரித் தின்றான்” என்றாள் இளைய பள்ளி.

இப்படி உண்டிக்குத் திண்டாடிய சாமிகளுக்கு ஒரு வண்டியாவது உண்டா? அதேது!

ஏறஒரு வாகனம் தானும் இல்லாமல் – மாட்டில்
ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி

என்று இடித்துரைத்தாள் மூத்த பள்ளி. ‘அப்படியா செய்தி! அந்த மாடுகூடக் கிடையாமல் பருந்தின் மேலேறிப் பறக்கிறானே உங்கள் பெருமாள்’ என்றாள் இளைய பள்ளி.

வீறு சொன்னதென்ன மாடுதானும் இல்லாமல் – பட்சி
மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதனல்லோடி”

என்று பழித்தாள்.

இவ் விரு பள்ளியருக்கும் வாய்த்த கணவன் அழகக் குடும்பன். அவன் பெருமாள் அடியான். அதைப் பிடித்துக் கொண்டாள் மூத்த பள்ளி.
“பெருமாளடியானுக்குப் பெண்டிருந்துமே – எங்கள்
பெருமாளை நீ பழித்துப் பேசலாமோடி”

என்றாள். ஒருவாறு அன்று சண்டை ஓய்ந்தது.

இனி, ஒரு குறவனுக்கும் ஒரு குறத்திக்கும் இடையே நடந்த பேச்சைப் பார்ப்போம் : குற்றால மலையிலே வேட்டையாடப் போனான் சிங்கன் என்ற குறவன். அவனுக்கு மனைவியாக வாய்த்த சிங்கி என்ற குறத்தி குறி சொல்லப் புறப்பட்டுச் சென்றாள். வேட்டையாடி வளமான பறவைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் சிங்கன்; சிங்கியைக் காணவில்லை; மயங்கினான்; தயங்கினான்.

மேடை மயிலுக்குக் கண்ணியை வைத்துநான்
மாடப் புறாவுக்குப் போனேன்
மாடப் புறாவும் மயிலும் பிடித்தேன்
வேடிக்கைச் சிங்கியைக் காணேன்

என்று அங்கும் இங்கும் பார்த்தான்; மனந் துடித்தான்; பல்லைக் கடித்தான்; ‘வரட்டும் சொல்கிறேன்’ என்று வழி பார்த்திருந்தான். குறி சொல்லப்போன சிங்கி பட்டு உடுத்திப் பணிபூண்டு சிங்காரமாக வந்து சேர்ந்தாள்.

அவள் கோலத்தைக் கண்டான் சிங்கன், கோபமெல்லாம் எங்கேயோ பறந்து போய்விட்டது.

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி?”

என்று மெத்தக் கனிவாக அவன் வினவினான்.

கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்
குறிசொல்லப் போனேனடா சிங்கா”

என்றாள் சிங்கி.

அவள் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி அவனுக்கு மிக்க புதுமையாயிருந்தது. அது புன்னைப் பூவின் அரும்பு போல் தோன்றிற்று.

“வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கி?” என்று கேட்டான் சிங்கன். முத்துப் பதித்த மூக்குத்தியைக் கண்டறியாத சிங்கனை முகமலர்ந்து நோக்கி,
“முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா?” என்றாள் சிங்கி.

மெல்லிய பட்டைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருந்தாள் அக் குறவஞ்சி. அதைக் கண்ட சிங்கன், “இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி?” என்று வியந்தான். அது கேட்ட காதலி,

“நாட்டில் நல்லாரைக் காண்பவர்க்கு எல்லாம்
வருமடா சிங்கா’

என்று நல்ல பாடம் கற்பித்தாள்.

இப்படியே குழந்தைகள் போடும் விளையாட்டுச் சண்டைகளும் விநோதமாய் இருக்கும். பெரிய இடத்துப் பிள்ளைகளாகிய விநாயகனும் முருகனும் ஒரு நாள் சண்டை போட்டுக் கொண்டார்கள். கண்ணைக் கசக்கி அழுது சிணுங்கிக்கொண்டு விநாயகன் அப்பாவிடம் சென்றான்: ‘பார் அப்பா! தம்பி என் காதைப் பிடித்துக் கிள்ளிவிட்டான்’ என்று தன் பெரிய காதைத் தொட்டுக் காட்டினான். ”முருகா, நீ ஏன் அப்படி அண்ணன் காதைக் கிள்ளினாய்?’ என்று கேட்டார் தந்தை. ‘அண்ணன் மட்டும் என் கண்ணை ஆறு,  ஏழு என்று எண்ணலாமோ?’ என்று பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை எதிர்க்கேள்வி போட்டான். ‘விநாயகா! நீ ஏனடா அப்படி விகடம் செய்தாய்?’ என்று வினவினார் தந்தை. ‘அவன் என் தும்பிக்கையைப் பிடித்து முழம் போட்டு அளந்தானப்பா’ என்றான் மூத்த பிள்ளை. குறும்பு செய்த முருகன் சிரித்துக்கொண்டு நின்றான். அங்கும் இங்கும் பார்த்தார் பரமசிவன். ஒரு பிள்ளையையும் குறை சொல்லத் தோன்றவில்லை. பெற்றவளை நோக்கி, ‘உன் அருமைப் பிள்ளைகளைப் பார்’ என்று ஏளனம் பேசினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனடியார் ஒருவர் இப் பிள்ளைச் சண்டையைப் பெரிய பாட்டாகப் பாடி விட்டார் :

அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான்
ஐயஎன் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன்என்
விளங்குகண் எண்ணினன்என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து, நீ அப்படி
விகடமேன் செய்தாய் என
மருவும் என் கைந்நீள முழமளந் தானென்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கிநின்
மைந்தரைப் பாராய்எனக்
கருதரிய கடலாடை உலகு பல அண்டம்
கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைகாக்கவே”

என்பது அவர் பாடிய பாட்டு.

இனி, காதல் மணம் புரிந்து கொண்ட ஒரு கற்புடையாள் பேச்சைப் பார்ப்போம் : மதுரையில் திருமலை நாயக்கர் அழகான மாளிகை கட்டி, அதன் சுவர்களில் பேர்போன வித்தகரைக் கொண்டு சித்திரம் எழுதுவித்தார். அதைக் காண ஆசைப்பட்ட கணவன் ஒருவன், ‘சித்திர மாளிகைக்கு வருகிறாயா?’ என்று தன் காதலியை அழைத்தான். ‘அங்கே என்ன விசித்திரமான சித்திரம் எழுதுகிறான்?’ என்று வினவினாள் மனைவி. அழகு வாய்ந்த ஆண் பெண் இவர்களின் வடிவங்களை எழுதுகிறானாம். கண்ணையும் மனத்தையும் கவர்கின்றனவாம் அவ் வுருவங்கள்’ என்றான் கணவன். ‘அப்படியானால் நான் வரமாட்டேன்; நீங்களும் போகலாகாது’ என்று மங்கை அழுத்தமாகப் பேசினாள். ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று வியப்புடன் வினவினான் காதலன். ‘அங்கு வரைந்துள்ள சித்திரம் ஆண் உருவமாய் இருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் உருவமாய் இருந்தால் நீங்கள் பார்க்க நான் சகிக்க மாட்டேன்’ என்ற பதில் வந்தது. இக்கருத்தமைத்து வேதநாயகம் பாடியுள்ளார்:

ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையான் அழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்
பாவையர்தம் உருவெனில் பார்க்க மனம் பொறேன் என்றாள்
காவிவிழி மங்கை இவள் கற்புவெற்பின் வற்புளதால்”

என்றார் கவிஞர்.

இனிப் புலவர்கள் பேசும் முறையில் அமைந்த சுவையைப் பார்ப்போம். இரண்டு புலவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். ஒருவர் முடவர்; மற்றவர் குருடர். குருடர் தோளில் முடவர் ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று இருவரும் கவி பாடிப் பிழைத்தார்கள். ஒரு நாள் இவர்கள் சொக்கலிங்கர் கோயில் பொற்றாமரைக் குளத்தில் நீராடப் போனார்கள். குருடர் குளத்தில் இறங்கிப் படியிலே ஆடையைத் துவைத்துக் கொண்டிருந்தார். முடவர் கரையிலிருந்தார். ஓர் ஆடையைத் துவைத்து ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து, மறு ஆடையைத் தப்பிக் கொண்டிருந்தார் குருடர்; ஒதுக்கி வைத்த ஆடை தண்ணீரில் நழுவி விழுந்தது; மெல்ல மிதந்து போய்க் கொண்டிருந்தது. கரையிலிருந்த முடவர் பார்த்தார்; சிரித்தார். ஆடை தப்பிப் போவது சரிதான் என்று அவருக்குத் தோன்றிற்று. ‘இதுவரை நாம் அதைத் தப்பினோம். இப்போது அது நம்மைத் தப்புகிறது.’ ”அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத் தப்பினால் நம்மை அது தப்பாதோ” என்றார் முடவர். அதுகேட்ட குருடர், ஆடை தண்ணீரில் விழுந்துவிட்டதென்று அறிந்தார். ஆனால், எப்படிக் கண்டு எடுப்பார்? ‘போனால் போகட்டும்; பழைய ஆடை போனால் புதிய ஆடை தருவார் பரமசிவம். இக் கலிங்கம் போனால் சொக்கலிங்கம் தருவார்’ என்று நம்பிப் பதில் உரைத்தார் குருடர்.

”… …. …. – இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கம்
மாமதுரைச் சொக்கலிங்க முண்டே துணை

என்றார்.

இனி, கட்டுக்கடங்காத காதல் வயப்பட்டோரும் பிறர் நகைக்கப் பேசுவர்; இராவணன் தங்கையாகிய சூர்ப்பநகை பஞ்சவடிச் சாலையில் இராம லட்சுமணர்களைக் கண்டு காதல் கொண்டாள்; அவர்களை அடைவதற்குச் சீதை இடையூறாக இருந்தாள் என்று எண்ணிச் சமயம் பார்த்து அவளை அப்புறப்படுத்த முயன்றாள்; அப்போது மறைவில் இருந்த இலட்சுமணன் வெளிப்பட்டு, அரக்கியின் மூக்கை வாளால் அறுத்தான். மானம் அழிந்தாலும் சூர்ப்பநகையின் மையல் ஒழிந்தபாடில்லை. அறுத்த புண் ஆறுவதற்கு முன்னே மலர்ந்த முகத்தோடு வீரரிடம் வந்தாள். அவர்கள் முன்னே நாணிக் கோணி நின்று கொண்டு பேசத் தொடங்கினாள்: “வீரரே ! நீங்கள் என் மூக்கை ஒட்ட அறுத்தீர்கள். அதன் கருத்து எனக்கு நன்றாய் விளங்கிவிட்டது. இவள் மூக்கை யறுத்து விட்டால் வெளியே எங்கும் போகமாட்டாள்; வேறுள்ள ஆடவர் எவரும் இவளை விரும்பிப் பார்க்க மாட்டார்; நம்மருகே எப்போதும் இருப்பாள் என்ற ஆசையால் அறுத்தீர்கள். உங்கள் கருத்தை யறிந்தேன்; முன்னிலும் அதிகமாக உங்களிடம் காதல் கொண்டேன்” என்றாள்.

பொன்னுருவப் பொருகழலீர்! புழைகாண
மூக்கரிவான் பொருள் வேறுண்டோ
இன்னுருவம் இதுகொண்டு இங்கு இருந்தொழியும்
நம்மருங்கே ஏகாள் அப்பால்
பின்னிவளை அயலொருவர் பாரார் என்றே
அரிந்தீர் பிழைசெய்தீரோ
அன்னதனை அறிந்தன்றோ அன்பிரட்டி
பூண்டது நான் அறிகிலேனோ”

என்ற கம்பர் பாட்டில் மானத்தையும் கடந்த மையலைக் கண்டு நாம் நகைக்கின்றோம்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s