அழகிய போராட்டம் (பகுதி- 3)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 1

பொதுவாக இந்திய மக்கள் தனிநபர் என்ற வகையிலும் ஒட்டுமொத்த சமூகமாகவும் அரசு மற்றும் அரசாங்கத்தை எப்படி அணுகினார்கள். ஒரு சில விதிவிலக்குகள் நீங்களாக இந்திய மக்கள் மந்தமாக, அடங்கி ஒடுங்கி, சாதுவாக நடந்து கொண்டிருக்கிறார்கள்; பெற்றோர்கள் மீது குழந்தைகள் எப்படியான பய உணர்வுடன் இருப்பார்களோ அதுபோலவே இந்திய மக்கள் தம்மை ஆட்சி செய்தவர்களுக்கு அடி பணிந்தே இருந்தனர் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். இப்படியாக இந்திய வரலாறு பற்றி எழுதப்பட்ட நூல்கள் ஏராளம்.

கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருபவை இந்தியர்கள் அப்படி அடிமைகளாக அடங்கி ஒடுங்கி இருந்திருக்கவில்லை என்பதையே நூல்கள் காட்டுகின்றன. இப்படியான  ‘புதிய’ மாற்றத்தை சிலர் வருத்தத்துடன் பார்க்கின்றனர். ஆனால் ஒருவர் எதிர்த்தாலும் வரவேற்றாலும், அந்தப் போராட்ட மனோபாவத்தை ஐரோப்பிய சிந்தனைகளின் பரவலால் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மேலும் இந்தியப் பொதுவெளியில் இந்த மனோபாவம் வெளிப்படுவதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்றும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். ஐரோப்பிய சிந்தனைகள், மற்றும் காந்திய சிந்தனைகள் ஆகியவற்றிலிருந்து இந்திய மக்களை விலக்கிவைக்க முடிந்தால் இந்திய மக்கள் அமைதியாக, அடங்கி ஒடுங்கித்தான் கிடப்பார்கள் என்று அவர்கள்  கருதுகிறார்கள்.

அரசாங்கத்தின் அநீதி, சுரண்டல், அடக்குமுறை (நிஜமான மற்றும் கற்பிதமான) ஆகியவற்றுக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் இந்திய மக்களின் எதிர்ப்பானது இரண்டு வழிகளில் வெளிப்பட்டுள்ளது. ஒன்று ஆயுதங்கள் மூலமான எதிர்வினை. இன்னொன்று ஆயுதங்கள் இல்லாத எதிர்வினை. ஆயுதப் போராட்டமானது ஒரு சிலர் அல்லது கடுமையான ஒழுங்குக்கு உட்பட்ட சிறிய குழுக்கள் மூலமே முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. அரவிந்தர், சாவர்க்கர், பகத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்றோர் அவர்களுடைய காலத்தில் ஆயுதப் போராட்டத்துக்கான மகத்தான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆயுதங்கள் இல்லாத அமைதிப் போராட்டமானது ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், சத்யாகிரகம் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் அகிம்சைப் போராட்டமானது இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.

காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டமானது முதலில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு சிலருடைய கூற்றின்படி காந்தியடிகள் அந்த அகிம்சைப் போராட்டத்தை தொரேயூ, டால்ஸ்டாய், ரஷ்கின் போன்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். வேறுசிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒத்துழையாமை இயக்கமும் சட்டமறுப்பு இயக்கமும் காந்தியடிகளின் மகத்தான சுயமான கண்டுபிடிப்பு. அவருடைய மேதமையினாலும் ஆன்மிக உயர் சிந்தனையினாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கச் சிந்தனைகளின் வேர்கள் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில்தான் உள்ளன என்ற கூற்று பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. தொரோ பற்றி எழுதிய ஒருவர்,  “அரசு நியாயமற்ற முறையில் நடந்து கொண்டால் மக்கள் எப்படி எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்பது தொடர்பாக தொரோ எழுதிய  ‘ரெசிஸ்டென்ஸ் டு சிவில் கவர்மெண்ட்’ கட்டுரைதான் இந்திய ஒத்துழையாமை இயக்கத்தின் அஸ்திவாரமாகத் திகழ்கிறது”*1 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் எழுதிய வேறொரு எழுத்தாளர்,  “தொரோவிடமிருந்து காந்தி ஒத்துழையாமை தொடர்பான உந்துதலைப் பெற்றார். ரஸ்கினிடமிருந்து அரசுடன் எப்படி ஒத்திசைவுடன் செயல்பட்டுப் போராட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்” *2 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு எழுத்தாளர் குறிப்பிடுகையில்  “தொரோ, வில்லியம் லாய்ட் கேரிஸன், டால்ஸ்டாய் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்டதை சீலேயின் கருத்துகளுடன் ஒப்பிட்டு காந்தி வடிவமைத்துக் கொண்டார். பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியர்கள் தந்து வரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் பிரிட்டிஷாரின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை அவர்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டார்” *3 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி ஒத்துழையாமை இயக்க வழிமுறையை சுயமாகவே கற்றுக்கொண்டார் என்ற இரண்டாவது கோட்பாட்டை முன்வைப்பவர்களும் மிக அதிகமாகவே இருக்கிறார்கள். அவர்களில் விஷய ஞானம் மிகுந்தவர்கள், பிரகலாதனிடம் தொடங்கி பழங்காலத்தில் இருந்த பலரிடமிருந்து காந்தி அதைக் கற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள். ஆர்.ஆர்.திவாகர் என்ன சொல்கிறாரென்றால்,  “பிரகலாதன், சாக்ரடீஸ் ஆகியோரிடமிருந்து மகாத்மா காந்தி, மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்னைகளுக்கு முழு வடிவம் பெறாத, பாதி அளவுக்கு மத நம்பிக்கை சார்ந்த ஒரு தீர்வை முன்வைத்தார். தீமை மற்றும் அநீதிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடுவதற்கான ஒரு ஆயுதத்தை மனித இனத்துக்கு உருவாக்கிக் கொடுத்தார்” என்கிறார். தர்ணா, ஹர்த்தால், தசத்யாகா (கைவசம் இருக்கும் அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்லுதல்) போன்ற இந்திய பாரம்பரிய வழிமுறைகளைச் சொல்லிக்காட்டி, “இந்தியர்கள் அன்றாட லௌகிக விஷயங்கள் தாண்டியே சிந்தித்தனர். தனிநபர் முக்தி சார்ந்தே சிந்தித்தனர். ஒரு குழுவாக சமூகமாக அவருடைய தேவைகள் சார்ந்து எதையும் முன்னெடுக்கவில்லை. இன்றைய காலம் போன்ற நீண்ட நாட்கள் ஹர்த்தால் செய்வது போன்ற தொழில் முடக்கங்கள் எல்லாம் இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திருக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். *4.

மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவத்தை ஆராய்ந்து எழுதி இருக்கும் ஒருவர்,  “காந்தி முன்னெடுத்த அகிம்சைப் போராட்டமானது மனித சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத ஒன்று. மிகவும் புதுமையானது” *5 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மகாத்மா காந்தியை ஆய்வுசெய்த இன்னொருவர்,  “ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்றவையெல்லாம் மகாத்மா காந்தியின் சமூகச் சூழலிலிருந்து இயல்பாக மலர்ந்த சிந்தனையே” என்று குறிப்பிட்டிருக்கிறார். *6

இந்த இரண்டு பார்வைகளுமே  ‘ஆன் த ட்யூட்டி ஆஃப் சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்ற தொரோவின் கட்டுரைக்கான அறிமுகப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நூலாசிரியர் அந்த முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

தொரோவின் ஒத்துழையாமை பற்றிய கட்டுரையானது அகிம்சை வழியிலான போராட்டங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொரோவுக்கு முன்பாக, தீமைகள் நிறைந்த உலகில் தமது மத நம்பிக்கைகளுக்கு விசுவாசமாக இருக்க விரும்பிய சில தனிநபர்கள் மற்றும் குழுக்களினால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. சமூக, அரசியல் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அரசை எதிர்த்து அகிம்சை வழியில் போராடுதல் என்பதற்கு எந்த ஆர்வமும் காட்டப்பட்டிருக்கவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து மகாத்மா காந்தியின் மூலமாக இது மக்கள் போராட்ட இயக்கமாக அரசியலில் அக்கறை கொண்டு முன்னெடுக்கப்பட்டது. அன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், முதல் அணுகுமுறையிலிருந்து இரண்டாவது அணுகுமுறை நோக்கிய நகர்வுக்கு தொரோதான் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியிருக்கிறார். *7.

காகா கலேல்கர் *8, ஆர்.பைன் *9 போன்றவர்கள், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கும் இந்தியாவின் பழங்கால வழிமுறைகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி லேசாகக் குறிப்பிடுகிறார்கள். எனினும் கலேல்கர் சொல்வதுபோல,   ‘மனித குலத்துக்கு மஹாத்மா காந்தி உருவாக்கிக் கொடுத்த போராட்ட வழிமுறை’ என்றே கருதுகிறார்கள்.  “த்ராகா (Traga – நவீன எழுத்தாளர்களில் பாரதத்தின் பழம்பெரும் த்ராக வழிமுறை பற்றிக் குறிப்பிட்டிருப்பது கேல்கர் மட்டுமே), தர்ணா, பாஹர்வாடியா என மகாத்மா காந்தி வாழ்ந்த சௌராஷ்டிரா பகுதியில் நிலவிய வழிமுறைகள் மகாத்மாவின் மனதில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கக்கூடும்” என்பதைப் பற்றியும் கலேல்கர் லேசாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார். *10.

பழங்கால இந்திய அரசாட்சி, மன்னர்கள் அல்லது பிற ஆட்சியாளர்களின் கடமைகள், உரிமைகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் சமீபகாலப் படைப்புகள் அனைத்தும் இந்திய மக்கள் ஆட்சியாளர்களுக்கு அடங்கி ஒடுங்கி நடந்துகொண்டார்கள் என்ற சமீபத்திய கருத்தாக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. ராஜா என்றாலே மக்களை திருப்திப்படுத்துபவர் என்றுதான் அர்த்தம். அப்படி என்றால் அந்த ராஜா மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் சில குறிப்பிட்ட கடமைகளைச் செய்தாக வேண்டும். அதைச் செய்யவில்லையென்றால் அந்த ராஜாவைப் பதவியிறக்கம் செய்துவிடுவார்கள் என்று சில நூலாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதியை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.

தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்களைப் பாதுகாக்காமல், வரியை வசூலித்து, மக்களின் செல்வத்தைக் கொள்ளை அடித்துத் தீயவனாக நடந்துகொள்ளும் ஒரு மன்னனை மக்கள் வெகுண்டெழுந்து கொன்றுவிட வேண்டும். தலைமைப் பண்பு இல்லாத அப்படியான மன்னன் தீமை மற்றும் அழிவின் அதாவது கலியின் அவதாரம்.  ‘மக்களைக் காப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்களைக் காப்பாற்றவில்லை என்றால், பைத்தியம் பிடித்த நாயைக் கொல்வதுபோல அந்த மன்னரை மக்கள் ஒன்று கூடிக் கொன்றுவிட வேண்டும். *11.

பழங்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்னவிதமாகவும் இருந்திருக்கலாம்; துருக்கியர்கள் அல்லது மொகலாயர்களின் ஆட்சியில், 17, 18ஆம் நூற்றாண்டில் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஜேம்ஸ் மில் இதுபற்றிக் கூறும்போது,  “இந்தியாவில் மன்னர்களை மக்கள் பயத்துடனும் பக்தியுடனுமே பார்த்தார்கள்” என்கிறார் *12. மேலும், காந்தியடிகளைப் பொருத்த வரையில்,  “மக்கள் நல்லதோ கெட்டதோ, சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். முற்காலத்தில் அப்படி இருக்கவில்லை. அப்போதெல்லாம் மக்கள் தங்களுக்குப் பிடிக்காத சட்டங்களை மதித்து நடக்கவில்லை” *13. அமைதி வழியிலான போராட்டத்தைப் பற்றி மேலும் விவரித்துச் சொல்கையில் காந்தி சொல்கிறார்:

இந்தியாவில் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மன்னர்கள் மக்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யாத போது மக்கள் மன்னர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுத்திருக்கிறார்கள். இதுவே அகிம்சைப் போராட்டம். *14.

தனக்குத் தெரிந்து நடந்த ஒத்துழையாமைப் போராட்டம் ஒன்று பற்றியும் காந்தி குறிப்பிடுகிறார்:

ஒரு சிறிய சமஸ்தானத்தில் மன்னர் கொண்டுவந்த ஒரு விஷயம் சில கிராமத்தினருக்குப் பிடிக்கவில்லை. உடனே அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். அந்த மன்னர் மிகுந்த பதற்றத்துக்கு உள்ளானார். தனது மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, தான் கொண்டுவந்த புதிய சட்டத்தைப் பின்வாங்கிக் கொண்டார். இப்படியான பல சம்பவங்கள் இந்தியாவில் இதற்கு முன் நடந்துள்ளன. *15.

(காந்தியடிகள் சொல்லியிருக்கும் இந்த நிகழ்வு, 1810 – 11இல் முர்ஷிதாபாத்தில் நடந்ததாகக் குறிப்பிட்டிருப்பது போன்ற கிராமத்தை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் எல்லாம் பிந்தைய காலத்தில் நடந்ததுதான். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் அதற்கு முந்தைய காலத்தில் நடந்தவை. ஊரை விட்டு வெளியேறுதல் என்பது போன்ற எதிர்ப்புகள் எல்லாம் ஆட்சியாளரிடம் இருந்து மக்கள் வெகுவாக அந்நியப்பட்டுப் போவதையே காட்டுகின்றன. இப்படி அவர்கள் சென்றுவிடுவதால் மன்னருடைய அதிகாரம் கணிசமாக வலுவிழந்துவிடுகிறது. இப்படியான நிகழ்வுகள் எல்லாம், மக்கள் மன்னர்களை பயபக்தியுடன் பார்த்தார்கள் என்ற கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. இப்படியான அதீத எதிர்ப்பு நிலையானது இந்திய ஆட்சியாளர்கள் இருந்தபோது செல்லுபடியாக இருக்கலாம்; ஏனென்றால், அந்த மன்னர்கள் எல்லாம் பிரிட்டிஷாரைப்போல மக்களிடமிருந்து அந்த அளவுக்கு அந்நியமானவர்கள் கிடையாது. எனவே, அந்த வழிமுறையை முற்றிலும் அந்நியர்களான பிரிட்டிஷாருக்கு எதிராகப் பயன்படுத்தும்போது அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்).

காந்தி இந்தியப் பாரம்பரிய வழிமுறைகளில் இருந்தே ஒத்துழையாமை இயக்கத்துக்கான விடுதலையுணர்வைப் பெற்றார் என்று நிறுவுவதற்கு இதற்கு மேலும் எதுவும் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அது அவருக்குள்ளாக இருந்து இயல்பாகவே வெளிப்பட்டது. ஐரோப்பாவில், அமெரிக்காவில் அந்தப் போராட்ட வழிமுறை சொற்ப அளவில் பயன்படுத்தப்பட்டது என்பது காந்தியின் மனதில் ஏற்கனவே இருந்த அந்த விஷயத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கக்கூடும். எனினும் தனது தலைமையின் கீழ் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்ததற்கு இந்தியாவில் அப்படியான போராட்ட வழிமுறை முன்பாகவே வேரூன்றியிருந்ததுதான் முக்கியமான காரணம்.

மகாத்மா காந்தியும், ஜேம்ஸ் மில் ஆகிய இருவரும் முறையான வரலாற்று ஆசிரியர்களைவிட இந்தியாவில் ஆட்சியாளருக்கும் ஆளப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவு பற்றி மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருந்திருக்கிறார்கள். ரொம்பவும் பின்னால் எல்லாம் போக வேண்டியது இல்லை. 1819ஆம் நூற்றாண்டுகளில் இந்திய, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் எழுதியிருப்பவற்றை முறையாக ஆராய்ந்து பார்த்தாலே போதும். மகாத்மா காந்தியும் ஜேம்ஸ் மில்லும் எவ்வளவு துல்லியமாக இந்திய வரலாற்றைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்துவிடும். அதுபோலவே சட்டமறுப்பு, ஒத்துழையாமை ஆகியவையெல்லாம் நியாயமற்ற அரசுக்கு எதிராக இந்திய மக்கள் முன்னெடுத்த போராட்ட வழிமுறைகளில் மிகவும் முக்கியமானவை என்பதையும் தெரிந்துகொண்டுவிடமுடியும்.

மிகவும் மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தால்கூட ஒத்துழையாமைப் போராட்டம் தொடர்பான பல உதாரணங்கள் எளிதில் கிடைக்கும். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரின் கடிதப் பரிமாற்றங்களில் இதற்கான ஆவணங்கள் தெளிவாகக் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக, மதராஸில் இருந்த பிரிட்டிஷ் கவர்னர் அண்ட் கவுன்சிலின் கடிதப் பரிமாற்றத்தில் நவம்பர் 1680 தேதியிட்ட ஆவணம் ஒன்று,  ‘மதராசப்பட்டணத்தில் அதிருப்தியுற்ற சில மக்கள்’ பிரிட்டிஷாரின் தவறான செயல்பாடாக அவர்கள் கருதியதற்குக் காட்டிய எதிர்வினை பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

வெள்ளையடிக்கும் பெயின்டர்களும் பிறரும் செயின்ட் தாமஸ் சர்ச்சுக்கு அருகில் ஒன்றுகூடினர். டவுனில் இருந்த வேறுசில இந்து ஜாதியினருக்குக் கடிதங்களும் அனுப்பியிருந்தனர். துபாஷிகளாக கம்பெனியில் பணிபுரிந்தவர்கள், தலைமை  ப்யூன்கள், துணி துவைப்பவர்கள் என பலருக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு உதவியாக வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று வேறு சிலரை மிரட்டியும் இருந்தனர். அப்படியாக ஒன்றுதிரண்டு அனைவரும் டவுனுக்குள் வரும் உணவுப் பொருள் வண்டிகளைத் தடுத்தனர். நாங்கள் பெத்த வெங்கடாத்ரி மூலம் பக்கத்து டவுனில் இருந்து வாடகைக்கு பிடித்திருந்த வண்டிகள் அனைத்தையும் வரவிடாமல் தடுத்தனர். சென்ன பட்டணம் அல்லது மதராச பட்டினத்துக்கு உணவுப் பொருட்கள், விறகு போன்றவையோ எதுவுமே கொண்டு செல்லக் கூடாது என்று முரசறைந்து தெரிவித்தனர். எங்களுக்காக சுண்ணாம்பு தயாரித்துத் தந்தவர்களின் வீடுகள் முற்றுகை இடப்பட்டன. மேற்கொண்டு விறகு எரித்து எதுவும் தயாரித்துத் தர முடியாதபடியும் சுண்ணாம்பு சிப்பிகளை சேகரிக்க முடியாமலும் தடுத்தனர். *16

இந்த மோதல் சில நாட்கள் நீடித்தது.  ‘கருப்பு போர்ச்சுகீசியர்’ பலரை பிரிட்டிஷார் படையில் நியமித்தனர். மிதமாக இருந்தவர்களைத் தீவிரமாகப் போராடியவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மனைவி,  குழந்தைகளைச் சிறைபிடித்து வைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரப்படும் என்று எச்சரித்தனர். இறுதியில் ஒருவித சமரசத்துக்குப் பின் அந்த மோதல் முடிவுக்கு வந்தது.

1830 – 31 வாக்கில் கனரா பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுகுறித்துத் துணை கலெக்டர் எழுதியது:

இங்கு நிலைமை மோசமாகிக் கொண்டுவருகிறது. இங்கு மக்கள் அமைதியாகத்தான் இருந்தனர். திடீரென்று சில நாட்களில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டனர். நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எண்ணூர் பகுதியில் 11,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக 300 ரயத்கள் கூட்டமாக வந்தனர். தாசில்தாரின் கச்சேரி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். ஒரு பைசாகூடக் கொடுக்க முடியாது; முழு வரியையும் நீக்கித்தான் ஆக வேண்டும் என்றனர். தாசில்தார், பயிர் விளைச்சல் நன்றாக இருக்கிறது; ஜமாபந்தி இதமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று எடுத்துரைத்தார். போராட்டக்காரர்கள்,  ‘எங்களுக்கு இவையெல்லாம் பிரச்னை இல்லை. அரசாங்கத்தின் செயல்பாடு பொதுவாகவே சரியாக இல்லை. நீதிமன்றம், அரசு எல்லாம் அவர்களை ஒடுக்குகிறது. ஸ்டாம்ப் ரெகுலேஷன், உப்பு, புகையிலை மீதான ஏகபோக உரிமை, இவற்றையெல்லாம் நீக்கியாக வேண்டும்’ என்று சொன்னார்கள். *17.

தாசில்தாருக்கு கலெக்டர் என்ன சொன்னார் என்பது பற்றியும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்:

தினமும் கூடிக் கொண்டிருக்கும் கூட்டத்தை எல்லா வழிகளையும் பயன்படுத்தித் தடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். பல்வேறு தாலுகாக்களுக்குப் போராட்ட உணர்வைத் தூண்டியபடி எழுதப்பட்டுக் கொண்டு செல்லப்படும் கடிதங்களை வழியில் பறிமுதல் செய்யச் சொன்னேன். *18

மேலும் அவர் குறிப்பிடுகையில்…

ரயத்கள் தங்களைத் தண்டிக்க முடியாதென்று சொல்கிறார்கள். கிஸ்தியைக் கொடுக்க முன்வந்த ஒரு விவசாயியை அவர்கள் ஊர் விலக்கம் செய்துவிட்டனர். போராட்டம் பரூர் வரை வந்துவிட்டது. சீக்கிரமே கடம்பூரையும் எட்டி விடும். ஜமாபந்தி தணிக்கைகள் கடுமையாக இருப்பதால் அல்ல இந்த அதிருப்தி. பிரிட்டிஷ் அரசின் மீது ஒட்டுமொத்தமாகவே அவர்களுக்கு ஒரு அதிருப்தி எழுந்துள்ளது. மிக விரைவாகவே இந்த அதிருப்திக் கனலை அணைத்தாக வேண்டும். இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு கூலித் தொழிலாளியைக்கூட பணிக்கு வரவைக்க முடியவில்லை. தாசில்தார் மிகுந்த சிரமத்துக்குப் பின்னரே நேற்று இங்கு என்னை வந்து சந்தித்தார். *19.

இந்தப் போராட்டங்கள் சில நேரங்களில் வன்முறையை நோக்கி நகர்ந்தன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் த்ராகா, கூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஒரு வழிமுறையை, அதாவது போராட்டக்காரர்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல் என்பதாகவே இருந்தன. அரசு வன்முறையை கையில் எடுத்தபோதுதான் அதைத் தடுத்துக் கொள்ளும் முகமாகவே மக்கள் வன்முறையில் இறங்கினார்கள். 1820 – 40களில் மகாராஷ்டிராவில் நடந்த  ‘பந்த்’ போராட்டங்களில் அப்படித்தான் நடந்தது. *20. எந்தவிதமான அரசின் வன்முறைக்கு எதிராக மக்கள் வன்முறையைக் கையில் எடுத்தனர் என்பது தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம்.

நவீனகால ஒத்துழையாமை இயக்கங்களில் வன்முறை வெடிக்கின்றன. அதை ஒடுக்குவதற்கு அரசும் மிகப் பெரிய வன்முறையில் ஈடுபடுகிறது. இந்த விஷயத்தையும் நாம் தனியாக விரிவாக அலசிப் பார்க்க வேண்டும்.  ‘கலெக்டிவ் வயலன்ஸ் இன் ஐரோப்பியன் பெர்ஸ்பெக்டிவ்’  என்ற படைப்பில் சார்லஸ் டிலி சொல்கிறார்: சட்டவிரோதமான ஆனால் அகிம்சை வழியிலான போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு எப்போது தீவிரமாகக் களமிறங்குகிறதோ அப்போதுதான் பெரிய அளவிலான வன்முறை நிகழ்வதை எங்களுடைய ஆய்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன. மிகப் பெரிய அளவிலான படுகொலைகள், காயங்கள் எல்லாம் அரசுத் தரப்பு படைகள் மற்றும் காவலர்களால் தான் நிகழ்த்தப்பட்டுள்ளன. கலகக்காரர்களாலோ போராட்டக்காரர்களோ செய்யப்பட்ட வன்முறையைவிட அரசின் வன்முறையே மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இதுபற்றி மைக்கேல் வால்சர் குறிப்பிடுகையில், அமெரிக்காவிலும் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டிருக்கிறார். (ஓப்ளிகேஷன்ஸ்: எஸ்ஸேஸ் ஆன் டிஸொபீடியன்ஸ், வார் அண்ட் சிட்டிசன்ஷிப், 1970, பக் 32).

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் புதிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்களில் எதுவுமே வெற்றி பெறவில்லை (இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் போராட்டம் உட்பட). அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பொதுவான, ஏற்றுக்கொள்ளத்தக்க மதிப்பீடுகள் இருந்தால்தான் இத்தகைய போராட்டங்கள் வெற்றி பெற முடியும். இந்திய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் அப்படியான எந்த ஒரு பொதுவான மதிப்பீடுகளும் இருந்திருக்கவில்லை.

1819ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களின் ஒழுக்கம், மனோபாவம், சிந்தனை ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாகவே இருந்தனர். ஜேம்ஸ் மில் குறிப்பிட்ட,  ‘ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது இயல்பான விஷயம்தான்’  என்ற பார்வையானது மெள்ள மெள்ள மாறி  ‘மக்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டு ஆகவேண்டும்’ *21 என்பதாக மாறிவிட்டது. 1900களின் ஆரம்பகட்டத்தில் கோபாலகிருஷ்ணன் கோகலே குறிப்பிட்டதுபோல்,  ‘மக்களின் வேலையே அடிபணிந்து கிடப்பதுதான்’ என்ற மனோபாவமே பிரிட்டிஷாரிடம் இருந்தது. *22.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

 1. என்சைக்ளோபீடியா ஆஃப் தி சோசியல் சயன்சஸ் (1963), தொரேயு பற்றிய கட்டுரை, மாக்ஸ் லெர்னர்.
 2. அதுலானந்த சக்கரவர்த்தி, தீ லோன்சம் பில்க்ரிம் (1969), பக் 32.
 3. சி.டி.எஸ். தேவனேசன், தி மேக்கிங் ஆஃப் மகாத்மா (1969) பக் 378-9.
 4. ஆர்.ஆர்.திவாகர், சாகா ஆஃப் சத்யாகிரஹா (1969), பக் 8-11.
 5. புத்த்தேவ் பட்டாச்சார்யா, எவல்யூஷன் ஆஃப் தி பொலிடிக்கல் பிலாசஃபி ஆஃப் காந்தி (1969) பக் 286.
 6. வி.வி.ரமண மூர்த்தி, நான் வயலன்ஸ் இன் பாலிடிக்ஸ் (1958) பக் 148.
 7. ஜெனே ஷார்ப், தொரேயு: ஆன் தி ட்யூட்டி ஆஃப் சிவில் டிஸ் ஒபீடியன்ஸ் (1963) பக் 1
 8. ககா கலேகர், எவல்யூஷன் ஆஃப் டி பிலாசஃபி ஆஃப் சத்யாகிரஹா (1969) காந்தி தர்ஷனில் வெளியிடப்பட்டது. 1969-பிப்ரவரி 2, 1970.
 9. ஆர்.பைன், தி லைஃப் அண்ட் டெத் ஆஃப் மஹாத்மா காந்தி (1969)  பக் 217.
 10. காகா கலேகர்: அதே புத்தகம்
 11. மஹாபாரத மேற்கோள். பி.வி.கனே. ஹிஸ்டரி ஆஃப்தர்ம சாஸ்திரம், தொகுதி 3, (1946) பக் 26.
 12. ஜேம்ஸ் மில், எவிடன்ஸ் டு ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கமிட்டி, இன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பேப்பர்ஸ், 1831-31, தொகுதி 14, பக் 6-7.
 13. ஹிந்த் ஸ்வராஜ் (1946) பக் 58
 14. அதே புத்தகம் பக் 60.
 15. அதே புத்தகம் பக் 61.
 16. ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ்: டைரி அண்ட் கன்சல்டேஷன்ஸ், நவம்பர், 1680.
 17. இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ் (ஐ.ஓ.ஆர்) போர்ட்ஸ் கலெக்‌ஷன்ஸ்: எஃப் 4/தொகுதி 1415, எண் 558444. அசிஸ்டெண்ட் கலெக்டர் பிரதான கலெக்டருக்கு அனுப்பியவை, கனரா, ஜனவரி 17, 1831, பக் 158-61.
 18. அதே புத்தகம்
 19. அதே புத்தகம்
 20. பிரிடிட்ஷாருக்கு எதிராக மஹாராஷ்டிரா மக்கள் எண்ணற்ற Bunds பண்ட்கள் அமைத்தது தொடர்பான தகவல்கள் 1820-40 காலகட்டத்து பம்பாய் பிரஸிடன்ஸி அரசியல் மற்றும் நீதித்துறை ஆவணங்கள் தொகுப்பில் இருக்கின்றன. 1826-28-ல் ராமோசஸ் மூலம் அமைக்கப்பட்ட போர்பந்தர் பண்ட் அவற்றில் ஒன்று.
 21. கேம்ஸ் மில் புத்தகம்.
 22. எம். ராமசந்திர ராவ், பி.ஏ.பி.எல். எம்.எல்சி. (மெட்ராஸ் 1917) எழுதிய தி டெவலப்மெண்ட் ஆஃப் இந்தியன் பொலிட்டி நூலில் கோபால கிருஷ்ண கோகலே சொன்னதன் மேற்கோள். பக் 291.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s