அதிகமான் நெடுமான் அஞ்சி-2

-கி.வா.ஜகந்நாதன்

2. அதிகமானும் ஒளவையாரும்

இத்தகைய சிறந்த குலத்திலே பிறந்தான் நெடுமான் அஞ்சி என்பவன், அதிகர் குலத்திலே பிறந்தவனாதலின் அவனுடைய முழுப் பெயர் அதிகமான் நெடுமான் அஞ்சி என்று வழங்கியது. அவ்வளவு நீளமாக வழங்காமல் அஞ்சி என்றும் சொல்வது உண்டு. அதிகமான், அதிகன், அதியன் என்றும் சொல்வார்கள். அதிகர் குலத்தில் தோன்றிய எல்லா மன்னர்களுக்கும் பொதுவான பெயர் அதிகமான் என்பது. ஆனாலும் அதிகமான் என்று அடையின்றிச் சொன்னால் அது நெடுமான் அஞ்சியைத்தான் குறிக்கும். இரகு குலத்தில் தோன்றிய ஒவ்வொரு மன்னனையும் இரகுநாதன் என்று சொல்லலாம். ஆனாலும் இரகுநாதன் என்றால் இராமன்தான் நினைவுக்கு வருகிறான். அவனுடைய இணையற்ற பெருமையே அதற்குக் காரணம்.

அதிகமான் என்ற பொதுப் பெயரும் அதைப் போலவே அஞ்சிக்கு உரியதாயிற்று. ஈடும் எடுப்பும் இல்லாதபடி பல் திறத்திலும் அவன் சிறந்து விளங்கியதே அதற்குக் காரணம்.

தகடூர் என்பது இன்று சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயரோடு நிலவுகிறது. அதற்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. இவை யாவும் சேர்ந்த பெரிய பரப்புள்ள இடமே பழங்காலத்தில் அதிகமான் இருந்து அரசாட்சி நடத்திய தகடூராக விளங்கியது.

அதிகமான் இளம் பருவத்திலேயே அரசாட்சியை மேற்கொண்டான். துடிதுடிப்புள்ள இளமையும் உடல் வன்மையும் உள்ளத்துறுதியும் உடையவனாக அவன் விளங்கினான். தகடூர்க் கோட்டையை விரிவுபடுத்தி மிக்க வலிமையை உடையதாக்கினான், புதிய புதிய ஊர்களைத் தன் செங்கோலாட்சிக்குள் கொண்டு வந்தான். சிறிய சிறிய நாடுகளை வைத்துக்கொண்டு வாழ்ந்திருந்த குறுநில மன்னர்கள் கொங்கு நாட்டிலும் அதற்கு அருகிலும் இருந்தார்கள். அவர்களிற் பலர் கொடுங்கோலர்களாக இருந்தார்கள். அவர்களால் மக்களுக்கு விளைந்த தீங்கை உணர்ந்த அதிகமான் அத்தகையவர்களைப் போர்செய்து அடக்கினான். இப்படி அவன் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஏழு பேர்களை அடக்கி, அவர் ஆண்ட இடங்களைத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்தான். அவனுக்கு முன்பும் அவன் முன்னோர்கள் ஏழு பேர்களை வென்றதுண்டு. அவர்கள் ஏந்தியிருந்த ஏழு கொடிகளையும் தம் கொடிகளாகப் பிடித்துத் தாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள். அதிகமான் இப்போது தன் வலிமையினால் வேறு ஏழு பேர்களை வென்றான்.[*1]

இளமையில் அரசாட்சியை மேற்கொண்டதனால் அவனுக்கு ஊக்கமும் தன் நாட்டை விரிவாக்க வேண்டும் என்னும் ஆர்வமும் இருந்தன. அதனால் ஒவ்வொரு குறுநில மன்னனாக அடக்கி வந்தான். அந்தக் காலங்களில் எப்போதும் போரைப் பற்றியே சிந்தனை செய்து வந்தான். அவனுடைய வீரத்தை மக்கள் பாராட்டினார்கள். புலவர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவர்களிடம் பெருமதிப்பு வைத்துப் பழகினான். அதிகமான் போர் சம்பந்தமாகத் தன்னுடைய படைத் தலைவர்களுடன் சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்தால் அவனைப் பார்ப்பது அரிது. ஒருமை மனத்தோடு மேலே செய்ய வேண்டிய வினைவகைகளைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பான்.

அவனுடைய வீரச் சிறப்பும், புலவர்களை ஆதரித்துப் பரிசில் தரும் கொடைப் புகழும் தமிழ் நாட்டில் மெல்ல மெல்லப் பரவின. நாளடைவில் பல புலவர்கள் அவனிடம் வந்து பாடிச் சென்றனர்.

தமிழ்நாட்டுப் புலவருக்குள் பெண்பாலார் பலர் உண்டு. அவர்களில் மிக்க சிறப்பைப் பெற்றவர் ஒளவையார். அவர் நல்லவர்கள் எங்கே இருந்தாலும் சென்று கண்டு நட்புரிமை பூண்டு பாராட்டும் பண்பாளர். அவர்களுக்கு வேண்டிய நல்லுரை கூறி மேலும் நற்செயல்களைச் செய்யச் செய்யும் இயல்புடையவர்.

அவர் காதில் அதிகமானுடைய புகழ் விழுந்தது. இளையவனாக இருந்தாலும் பெருந்தன்மையும் கொடையும் வீரமும் உடையவன் என்று புலவர்கள் பாராட்டுவதை அவர் கேட்டார். அப்படியானால் நாமும் அவனைப் போய்ப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டார். பல நாள் நடந்து தகடூரை அடைந்தார். அப்போது அதிகமான் யாரோ சிற்றரசன் மீது படையெடுத்துப் போர் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்; அமைச்சரோடும் படைத் தலைவரோடும் தனியே இருந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ஒளவையார் அங்கே போய்ச் சேர்ந்தார்.

அப் பெருமாட்டியைக் கண்ட அரண்மனை அதிகாரி ஒருவர் அவரை வரவேற்று அமரச் செய்தார்; நன்னீர் அளித்து அருந்தச் சொன்னார்; “தாங்கள் யார்?” என்று கேட்டார்.

“நான் ஒளவை யென்னும் பெயரை உடையவள்” என்று விடை வந்தது.

அதிகாரி அதைக் கேட்டவுடன் திடுக்கிட்டார். ஒளவையாரின் பெருமையைக் கேள்வி வாயிலாக நன்றாக உணர்ந்தவர் அவர். அந்தப் புலமை செறிந்த பிராட்டியின் பெருமையைத் தமிழுலகம் முழுவதுமே நன்கு அறிந்து கொண்டிருந்தது; அப்படியிருக்க அதிகமான் அரண்மனை அதிகாரி தெரிந்து கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. அவர் கையைக் குவித்து ஒளவையாரைத் தொழுதார்; “ஏதேனும் சிறிது உணவு கொள்ளலாமா?” என்று கேட்டார்.

“அதிகமானைக் காண வேண்டும் என்று வந்தேன். அந்த மன்னனைக் கண்ட பிறகுதான் உணவு முதலியவற்றைக் கவனிக்கவேண்டும்; அவனைக் காண முடியும் அல்லவா?” என்றார்.

அதிகாரி தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டார். அதிகமான் தனியாக இருந்து ஆலோசனை செய்யும்போது யாரும் அங்கே செல்லக் கூடாது. எந்த வேலையானாலும் அவனுடைய ஆலோசனை முடிந்த பிறகே சொல்ல வேண்டும். ஆனால் இப்போது வந்திருப்பவரோ, புலவர் உலகம் போற்றும் பொற்புடைய அம்மையார். அவருடைய வருகையை மன்னனுக்கு உரையாமல் இருந்தால் அவரை அவமதித்ததாகும். இத்தகைய சிக்கலான நிலையில் அகப்பட்டுத் திண்டாடினார் அதிகாரி.  “இதோ மன்னர் வந்துவிடுவார்; சற்றே பொறுத்திருங்கள்” என்று சொன்னார். “புறத்தே சென்றிருக்கிறார்” என்று எளிதிலே சொல்லிவிடலாம். ஆனால் பேரறிவுடைய அந்த மூதாட்டியிடம் பொய் சொல்லும் துணிவு அதிகாரிக்கு உண்டாகவில்லை.

சிறிது நேரம் கழிந்தது. அதிகமான் வெளியே வரவில்லை. அதிகாரி புழுவாய்த் துடித்தார்.  “நான் வந்ததைப் போய்ச் சொல்லவில்லையா?” என்று ஒளவையார் கேட்டார், அதிகாரி உள்ளே போய் வந்தார்; “வந்துவிடுவார்” என்று மீட்டும் சொன்னார். அவர் அதிகமானை அணுகவே இல்லை. பின்னும் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தார் ஒளவையார் அதிகாரியைச் சிறிதே சினக்குறிப்புத் தோன்றப் பார்த்தார். அதற்கு மேல் அவ்வதிகாரியால் அங்கே நிற்க முடியவில்லை; உள்ளே போய்விட்டார்.

மீட்டும் சிறிது போழ்து காத்திருந்த மூதாட்டியாருக்குப் பொறுமை சிதைந்தது; சினம் மூண்டது; எழுந்தார். அங்கே வாயிலைக் காத்துநின்ற காவலனைப் பார்த்தார்.

‘ஏ வாயில் காவலனே, வாயில் காவலனே!’ என்று அழைத்தார். அவன் திரும்பிப் பார்த்தான். “இதோ நான் சொல்வதை உன்னுடைய மன்னனிடம் போய்ச் சொல்” என்று சொல்லத் தொடங்கினார். “புலவர்கள் கொடையாளிகளைத் தேடிச் சென்று தம்முடைய இன்சொல்லாகிய விதையை அவர்கள் காதில் தூவுவார்கள். தாம் நாடி வந்ததைப் பெற்றுக் கொள்வார்கள். தம்முடைய தாம் அறிந்து, வரிசையை அறிந்து, பரிசளிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாடிச் செல்வார்கள். அத்தகைய பரிசிலருக்கு அடைக்காமல் திறந்திருக்கும் வாயிலைக் காக்கும் காவலனே!”

வாயில் காவலனுக்கு வியப்புத் தாங்கவில்லை. ‘இவர் நம்மைப் பார்த்தல்லவா பாடுகிறார்?’ என்று மகிழ்ச்சியும் உண்டாயிற்று.

 “வேகமான குதிரையை நடத்தும் தலைவனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி தன் பெருமையைச் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. தன்னைத் தேடி வந்த புலவர்களை மதிப்பாக உபசரித்துப் பரிசில் வழங்குகிறவன் என்ற பெயரை அவன் பெற்றிருக்கிறான். அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவன் மறந்து விட்டானோ?”

 “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று வாயில் காவலன் ஒன்றும் தெரியாத நிலையில் கேட்டான்.

 “அவன் என்னைக்கூட அறிந்து கொள்ளவில்லை போலும்! வறுமையால் வாடிப் பிச்சை கேட்க வந்தவள் என்று நினைத்தானோ?”

சிறிது நேரம் புலமைப் பிராட்டியார் சிந்தித்தார்; மறுபடியும் தொடர்ந்து பேசினார்.  “அறிவுடையோரும் புகழுடையோரும் ஒரு காலத்தில் தோன்றி மறைந்து போய் விடுகிறார்கள் என்பது இல்லை. உலகம் சூனியமாகப் போய் விடவில்லை. ஆதலால் இந்த இடத்தை விட்டால் எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. வளர்ந்து செறிந்த மரங்களையுடைய காட்டிலே கோடரியைக் கொண்டு புகும் தச்சனுக்கு மரத்துக்கா பஞ்சம்? உலகம் அதுபோன்றது. எந்தத் திசையிலே சென்றாலும் அங்கே எங்களுக்குச் சோறு கிடைக்கும்.”

இந்தக் கருத்தை அமைத்து ஒரு பாடலை அவர் சொல்லி வாய் மூடினார்; அதிகமான் விரைவாக வந்து அங்கே நின்றான்; “வரவேண்டும்; வரவேண்டும். வந்து நெடுநேரம் ஆயிற்றுப் போலும்! இந்தப் பிழையைப் பொறுத்தருள் வேண்டும். ஏதோ பாடலைப் பாடியது காதில் விழுந்ததே!” என்றான்.

“ஆமாம்; என் உள்ளத்திலே தோன்றியதைப் பாடினேன்; கேள்” என்று பாட்டைச் சொன்னார். [*2]

அதைக் கேட்டு அதிகமான் நடுங்கினான். “இனி நடத்த இருக்கும் ஒரு போர் சம்பந்தமான யோசனையில் ஈடுபட்டிருந்தேன். நீங்கள் வந்திருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் முன்பே வந்து பார்த்திருப்பேன். இப்போதுதான் செய்தி தெரிந்து ஓடி வந்தேன். என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என்று மிகவும் பணிவாகக் கூறினான். அதைக் கேட்ட மூதாட்டியாருக்கு உள்ளம் நெகிழ்ந்தது. அவன்மேல் பிழை இல்லை என்பதை நன்கு உணர்ந்து சினம் ஆறினார்.

அதிகமான் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். தக்க இருக்கையில் அமரச் செய்தான். உண்ணச் செய்தான். பின்பு மிகவும் அன்போடு பேசிக் கொண்டிருந்தான். ”இதுவரையிலும் தங்களை நான் காணும் பேறு பெற்றிலேன். இன்று தாங்களே கருணையினால் வலிந்து வந்தீர்கள். அப்படி வந்தும் என் கடமையை உடனே செய்யாமல் இருந்து விட்டேன். இந்தப் பெரும் பிழையை இனி ஒரு நாளும் செய்ய மாட்டேன். தங்களைத் தமிழ்நாடே புகழ்ந்து மதித்துப் பாராட்டுகின்றது. இவ்வளவு பெரு மதிப்புடைய அன்னையாராகிய தாங்கள் என்னையும் ஒரு பொருளாகக் கருதி வந்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்!” என்று மனம் குழைந்து கூறினான்.

இருவரும் உரையாடினார்கள். ஒளவையாரின் புலமைச் சிறப்பை ஒவ்வொரு சொல்லிலும் உணர்ந்து மகிழ்ந்தான் அதிகமான். அவனுடைய பண்பின் பெருமையைப் பேசப் பேச அறிந்து கொண்டார் ஒளவையார். இரண்டு நாட்கள் புலவர் பெருமாட்டியார் அங்கே தங்கினார்; பிறகு விடைபெற்றுப் புறப்பட்டார். அப்போது அதிகமான் மிக வருந்தினான். “நான் ஆண்டிலும் சரி; அறிவிலும் சரி, மிகவும் சிறியவன்; நீங்களோ இரண்டிலும் பெரியவர்கள். தங்களைப் போன்றவர்கள் எனக்கு வழி காட்டினால் எத்தனையோ மேன்மை உண்டாகும். இனிமேல் தாங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லிப் பல பரிசுகளை வழங்கி விடை. கொடுத்தனுப்பினான்.

(தொடர்கிறது)

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1]. புறநானூறு 99.

2]. புறநானூறு 92.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s