-பி.ஆர்.மகாதேவன்

1. அழகிய நதி
(Volume I- Indian Science and Technology in the Eighteenth Century),
2. அழகிய போராட்டம்
(Volume II – Civil Disobedience in Indian Tradition),
3. அழகிய மரம்
(Volume III – The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century),
4. அழகிய கிராமம்
( Volume IV – Panchayat Raj and India’s Polity)
-இந்த நான்கு புத்தகங்களும் வரலாற்றறிஞர் தரம்பால் உதிரியாக, தனியாக எழுதிய பல கட்டுரைகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ‘கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் தரம்பால்’ என்று மொத்தம் ஐந்து புத்தகங்கள், அதர் இந்தியா பிரஸ் மூலம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தரம்பால் உதிரியாக எழுதிய கட்டுரைகள் நீங்கலாக பிற நான்கு நூல்களும், பிரிட்டிஷ் கால இந்தியா குறித்த நான்கு வேதங்கள் போல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒப்பீட்டளவில் இந்தியாவின் உன்னத நிலையை எடுத்துச் சொல்லும் அவற்றில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான மிக அரிய ஆவணங்கள் எல்லாம் பிரிட்டிஷாரால் எழுதப்பட்டவை. மிக விரிவான தரவுகளைக் கொண்டவை.
ஓர் எளிய வாசகருக்கு அவை முழுவதையும் படித்துப் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும். ஆய்வு மாணவர்கள், கல்வியாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், கணித நிபுணர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே அந்த விரிவான அறிக்கைகள் மிகவும் அவசியமாக இருக்கும்.
எளிய வாசகர்களுக்கு அந்த ஆவணங்களின் சாராம்சமே தேவையாக இருக்கும். தரம்பாலே அவற்றின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகத்துக்கான முன்னுரையாக எழுதியும் இருக்கிறார்.
’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான்.
தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது.
பழங்கால பாரதத்தில் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி கிடைத்த விவரம், அந்த நேரத்தில் பிரிட்டனில் கடைநிலைப் பணியாளர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட விவரம்,
பாரதத்தில் அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதைப் பயன்படுத்திய விவரம், பிரிட்டிஷ் மருத்துவர்களும் அதையே நகலெடுத்துப் பயன்படுத்திய விவரம்,
உலகத் தரம் வாய்ந்த இரும்பை பாரதத்தில் உருவாக்கிய விதம், நவீன கால கருவிகள் எதுவும் இன்றியே சூரிய, சந்திர, நட்சத்திர, கிரஹ நகர்வுகள் பற்றி அதி துல்லியமாகக் கணித்த விதம்,
அல்ஜீப்ரா, இருபடித் தேற்றம் போன்றவறை பாரதத்தில் முதன்முதலாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய விவரம்,
விளைநிலங்களில் உலக நாடுகளைவிட அதிக விளைச்சலை ஈட்டிய விதம், விதைக் கலப்பை என்ற அற்புதமான கருவியை உருவாக்கிய விதம் என அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம்.
$$$
நூல் விவரம்:
அழகிய இந்தியா
-தரம்பால்
(தரம்பால் படைப்புகளின் முன்னுரைகளின் தொகுப்பு)
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
கிழக்கு பதிப்பகம், சென்னை – அதர் இந்தியா வெளியீடு
விலை ரூ. 300/-
$$$
One thought on “அழகிய இந்தியா – நூல் அறிமுகம்”