மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…

-ஆசிரியர் குழு

‘சூடான ஐஸ்கிரீம்’ சுவைத்திருத்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், தீண்டாமையைக் காரணம் காட்டி, இந்து மதத்தை வெறுத்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, சலுகைகளைப் பெறும் தந்திரசாலிகளைப் பார்க்கும் போது, சூடான ஐஸ்கிரீம் தான் நினைவுக்கு வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்து வருவது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல். இது தொடர்பான  3 வெவ்வேறு வழக்குகள் தொடர்பான செய்தி ஆவணங்கள் இங்கே…

அ. சிந்ததா ஆனந்த் வழக்கு

மதம் மாறினால் எஸ்.சி, எஸ்.டி. அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, 2026 மார்ச் 24: ‘ஹிந்து, சீக்கியர் அல்லது பௌத்த மதத்தைத் தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்’ என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சிந்ததா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, போதகராகப் பணியாற்றி வருகிறார். தன்னை ஜாதி ரீதியில் துன்புறுத்துவதாகக் கூறி, ராமி ரெட்டி என்பவர் மீது எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிநாத், ‘ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால், சிந்ததா ஆனந்த், பட்டியலின அந்தஸ்தை இழந்து விட்டார்.  எனவே, எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் பாதுகாப்பு கோர முடியாது’ என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆனந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா  அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

***

விரிவான செய்தி:

ஹிந்து, சீக்கியர், பௌத்த மதங்களைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தினர், பிற மதத்துக்கு மாறினால், பட்டியல் இன சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச  மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்தாதா ஆனந்த். இவர் ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி மதபோதகராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆந்திரா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அவர், சில நபர்கள் தன்னைத் தாக்கி, ஜாதி ரீதியிலான இழிசொற்களைப் பயன்படுத்தி தீட்டியதாக போலீசாரிடம் புகார் அளித்தார். குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அக்கலா ராமி ரெட்டி, ஆனந்த் மதம் மாறிய நிலையில் அவர் எஸ்.சி,எஸ்.டி. சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர் நீதிமன்றம், ”பட்டியலின மற்றும் பழங்குடியினர் சட்டமானது பாதுகாப்புக் கட்டமைப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம் அந்த பிரிவில் உள்ள சலுகைகளை ஒருவர் பயன்படுத்த முடியாது ” என உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து சிந்தாதா ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு 2026, மார்ச் 24-இல் உச்ச நீதைமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

ஹிந்து, சீக்கியர், பௌத்த மதங்களைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தினர், பிற மதத்துக்கு மாறினால், பட்டியல் இன சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற முடியாது என்று உச்ச நீதிஅம்ன்றம் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

* கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அம்மதத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாகப் பின்பற்றி வரும் ஒரு நபர், தொடர்ந்து பட்டியல் ஜாதிச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினராக நீடிக்க முடியாது.

* மேல்முறையீட்டாளர் 10 ஆண்டு காலமாக தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்ததுடன், ஞாயிறு நேரப் பிரார்த்தனைகளை நடத்திவரும் ஒரு போதகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

* ஹிந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் ஜாதியினருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புகளைக் கோர முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • ஆதாரம்: தினமலர் (24.03.2026)

$$$

ஆ. செல்வராணி வழக்கு

கிறிஸ்தவ மதத்தைக் கடைபிடிப்பவரை அரசு வேலைக்காக
இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது:

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, 2024 நவ. 27: புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவாலயத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர்.

இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். பின்னர் ஜாதி சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என ஜாதி சான்​றிதழ் வழங்​கும்படி கோரி​யுள்​ளார். அவரது விண்​ணப்​பத்தை அதிகாரிகள் நிராகரித்​தனர்.

இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதில், இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறு​வதற்காக மதம் மாறு​பவர்​களுக்கு இதுபோல ஜாதி சான்றிதழ் வழங்க முடி​யாது எனக்​கூறி வழக்கை நீதி​மன்றம் தள்ளுபடி செய்​தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்ற நீதிப​திகள் பங்கஜ் மித்​தல், ஆர்.ம​காதேவன் அடங்கிய அமர்வு பிறப்​பித்​துள்ள உத்தரவு:

ஒரு மதத்​தில் இருந்து மற்றொரு மதத்​துக்கு மாறுவது என்பது அதன் கொள்​கைகள் மற்றும் கோட்​பாடு​களால் உண்மையாக ஈர்க்​கப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் மதமாற்​றத்​தின் நோக்கம் இடஒதுக்​கீட்​டின் பலனைப் பெறு​வது​தானே அன்றி, பிற மதத்​தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருந்​தால், அதை ஒருபோதும் அனும​திக்க முடி​யாது.

இதுபோன்ற மறைமுக நோக்​கங்கள் இடஒதுக்​கீட்டுக் கொள்​கை​யையே கேலிக்​கூத்​தாக்​கி​விடும். மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாகக் கடைபிடிக்​கும்​போது, அரசு வேலை​வாய்ப்புக்காக இந்துவாக தன்னை அடையாளப்​படுத்த முற்​படுவதை ஏற்க முடி​யாது. மேலும் அது அரசி​யலமைப்பு சட்டத்​தையே மோசடி செய்​வதற்கு சமம். எனவே, இந்த வழக்​கில் சென்னை உயர் நீ​திமன்​றம் பிறப்பித்​துள்ள உத்​தரவை நாங்​களும் உறுதி செய்​கிறோம்.

இவ்​வாறு உத்தர​விட்டு வழக்கை தள்​ளுபடி செய்​தனர்​.

  • நன்றி: இந்து தமிழ் திசை (27.11.2024)

$$$

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்து முன்னணி வரவேற்பு

கிறிஸ்தவ மதத்தைக் கடைபிடிப்பவரை அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியைச் சார்ந்த செல்வராணி என்பவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர். இவர் தன்னை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் (பட்டியல் சமுதாயம்) சார்ந்தவர் எனக் கூறி சாதி சான்றிதழ் கோரியுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி மாநில அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதம் மாறியவர்களுக்கு இது போல் சாதி சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி அவரது வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து செல்வராணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி பங்கஜ் மிட்டல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்புமிக்க ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அதன் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டு அதனடிபடையில் மதம் மாறியதாக இருக்க வேண்டும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் அரசு வேலை வாய்ப்பிற்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுவதை ஏற்க முடியாது. இது அரசியலமைப்புச்சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் என உச்ச நீதிமன்றம் (27.11.2024) தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை இந்து முன்னணி பேரியக்கம் அனைத்து இந்து மக்களின் சார்பாக மனதார வரவேற்கிறது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மதம் மாறிய பிறகும் தங்களை இந்து எனக் கூறிக்கொண்டு மோசடியாக சலுகைகளை அனுபவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என இந்துமுன்னணி நெடுங்காலமாக பிரசாரம் செய்து வருகிறது.

தமிழகத்தில் சிலர் மதம் மாறிய பிறகும் தன்னை இந்து பட்டியல் சமுதாயத்தவர் என ஏமாற்றி சான்றிதழ் பெற்று உண்மையான இந்து பட்டியல் சமுதாய மக்களின் சலுகைகளை மோசடியாக அபகரித்து வருகின்றனர். இத்தகைய மோசடிக்கு தற்போது உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் மதம் மாறியவர்களுக்கு இந்து பட்டியலினத்தவர் என போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதன் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும்; அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும்; உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது. இந்து பட்டியலின மக்களின் உரிமைகளை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது.

-என்று தெரிவித்துள்ளார்.

  • நன்றி: இந்து தமிழ் திசை (28.11.2024)

$$$

The Commission, headed by former Chief Justice of India K G Balakrishnan (center), former University Grants Commission member Sushma Yadav and IAS officer Ravinder Kumar Jain.

இ. உச்ச நீதிமன்ற வழக்கும் நீதிபதி பாலகிருஷ்ணன் ஆணையமும்

மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து அவசியமில்லை:
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

புதுதில்லி:  “இந்து மதத்தின் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ஆம் ஆண்டில் பௌத்த மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில் இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2004-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2020-ஆம் ஆண்டு தலித் கிறிஸ்தவர்களின் தேசிய கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 13.11.2022-இல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்து மதத்தில் பல நூறு ஆண்டுகளாக தீண்டாமை இருந்தது. அதனால் இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடந்த 1956-ஆம் ஆண்டில் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று இந்து மதத்தின் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மக்கள், சமூக, அரசியல் காரணங்களால் புத்த மதத்துக்கு மாறினர். இதன் காரணமாக புத்த மதம் மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு மதங்கள்: கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. அந்த மதங்களில் சாதிய நடைமுறை கிடையாது; தீண்டாமைக் கொடுமை கிடையாது. எனவே பல்வேறு காரணங்களால் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை.

புத்த மதம், சீக்கிய மதத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆணையை மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அளித்த பரிந்துரைகள் தெளிவில்லாமல் உள்ளன. அதனை ஏற்க முடியாது.

மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கோருவது குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 2 ஆண்டுகளில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

  • நன்றி: இந்து தமிழ் திசை (13.11.2022)

$$$

நீதிபதி பாலகிருஷ்ணன் ஆணையத்தின் அறிக்கை வெளியாவது எப்போது? 

புதுதில்லி, ஜூன் 11: அக்டோபர் 2022-இல் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பலமுறை கால நீட்டிப்பு பெற்றுள்ளது; தலித்துகளாக மதம் மாறியவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு, அவர்களின் பட்டியல் ஜாதி (SC) அந்தஸ்து கோரிக்கை, அக்கோரிக்கைக்கு எழும் எதிர்ப்பு, மற்றும் ஏற்கனவே உள்ள பட்டியல் ஜாதி சமூகங்கள் மீதான தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்வதே இதன் நோக்கம்.

மதம் மாறிய தலித்களுக்கு பட்டியல் ஜாதி அந்தஸ்து வழங்குவது தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆணையம், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வழங்கப்பட்ட ஆய்வை முடித்து, அறிக்கையைத் தயாரித்துள்ளதாக ‘ தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

தலித் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து கோரிய மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், 2022 அக்டோபரில் மத்திய அரசால் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியல் ஜாதியினர்) ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள மதங்களைத் தவிர வேறு ஏதேனும் மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் ஜாதியினர் அந்தஸ்து வழங்க முடியுமா என்பதை ஆராய்வதும் ஆணையத்தின் பணிகளில் அடங்கியிருந்தது. தற்போது, ​​மத அடிப்படையைக் கொண்டிராத பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்தைப் போலல்லாமல், இந்து, பௌத்த மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த தலித்துகள் மட்டுமே பட்டியல் சாதியினர் வகைப்பாட்டிற்குத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.

பல நீட்டிப்புகள்: ஆணையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்விவகாரம் குறித்து அறிந்த அதிகாரிகள், அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிப்பதற்காக தற்போது ‘புத்தக வடிவில்’ ஆயத்தப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.  

தனது பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, ஆணையத்திற்கு ஆரம்பத்தில் இரண்டு வருட காலக்கெடு வழங்கப்பட்டது. 2024 முதல், ஆணையத்திற்குப் பலமுறை கால நீட்டிப்புகள் வழங்கப்பட்டுள்ளன; கடைசியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட கால நீட்டிப்பின்படி, இறுதிக் காலக்கெடு ஜூன் 10, 2026 என நிர்ணயிக்கப்பட்டது.  இந்த அறிக்கை விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஆதாரம்: தி இந்து (11.06.2026)

$$$

2 thoughts on “மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…

  1. மதம் மாறினாலும் அவர்கள் பிறந்த சாதிப்பெயரால் அவரை அறிந்தோர் அவமானம் செய்வதை எவ்வாறு அனுமதிக்க முடியும். மதம் மாறாத பட்டியலினத்தார் அனுபவிக்கும் எல்லா இன்னல்களும் மதம் மாறிய பின்பும் தொடர்கின்றன. மதம் மாறியதால் அவர்தம் சமூக மதிப்பு மாற இச்சமூகம் அனுமதிப்பதில்லை. மேலும் மதம் மாறியவர்களின் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகள் அனுபவித்ததுதான். ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை மதிப்பதே மான்புடைமையாகும்.

    எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமையாகும்.

    சலுகை என்ற பெயரால் குறிப்பிட்ட மதத்திலேயே தொடர கட்டாயப்படுத்துவதே இச்சலுகை மறுப்பாகும்.

    சாதிகளற்ற சமூகம் உருவாகும்வரை இச்சலுகைகள் பட்டியலினத்தில் பிறந்தோருக்கு கிடைத்திட ஆவன செய்திடல் வேண்டும். சமூக நீதி காக்க உறுதியேற்போம்.

    சாதிகளற்ற சமூகத்தை கட்டமைக்க ஆவன செய்வோம்.

    Like

Leave a comment