இந்தியக் கலாச்சாரத்தின் கட்டுமானம்- 1

-சுவாமி சுத்திதானந்தர்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி சுவாமி சுத்திதானந்தர். கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் இருக்கிறார். அம்மடத்தில் புதிதாகச் சேரும் பிரம்மச்சாரிகளுக்கு (இளம் துறவிகளுக்கு) பயிற்சி அளிப்பவராக  இருக்கிறார். அவரது இந்தக் கட்டுரைத் தொடர் (BUILDING BLOCKS OF INDIAN CULTURE) ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மாத இதழான 'பிரபுத்த பாரதா'வில் தொடராக வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது. தமிழில் வழங்குபவர்: திரு. திருநின்றவூர் ரவிகுமார். 

-1-

தலைப்புக்குள் நுழைவதற்கு முன் பேராசிரியர் கே.என்.தீக்ஷித் (காசிநாத் நாராயண தீக்ஷிதர்) மற்றும் இதர அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு என் நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வெளிப்படுத்திய நம் முன்னோர்களின் பொக்கிஷங்கள் இந்தியாவைப் புரிந்துகொள்ள, இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கின்றன. ஒவ்வொரு இந்தியனுக்கும் இது முக்கியமான விஷயம். அகழ்வாராய்ச்சியாளர்கள் தொடர்ந்து, இணைந்து பற்பல ஆண்டுகள் அமைதியாக வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு பூமிக்கடியில் –  நம் காலுக்கு அடியிலே என்றுகூட சொல்லலாம் – மறைந்து கிடந்த பண்பாட்டுப் புதையல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இந்தியா பாரம்பரியம் மிக்க நாடு என்று பலரும் சொல்லியுள்ளனர். புராதனக் கட்டடங்களும் அரிய பொக்கிஷங்களும் இதன் மேற்பரப்புக்குக் கீழே நிரம்பியுள்ளன. அகழ்வாராய்ச்சியாளர்கள் பல பத்தாண்டுகள் தொடர்ந்து அவற்றைத் தோண்டி எடுத்து வருகின்றனர். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய தொடர்ந்த உழைப்பினால் மறைந்திருந்த பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. உலகம் அவற்றைக் கண்டது. அந்த உண்மைகள் வெளிப்பட்டதால் நம் வரலாற்றைப் பற்றிய புரிதல், இந்தியா அல்லது பாரதம் என்றால் என்ன என்பதை பற்றிய புரிதல் அடியோடு மாறியது.

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் அயற்சி தரும் அந்தப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்திய அந்தப் பேராசிரியர்களுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, அயோத்திக் கட்டமைப்பு பற்றிய உண்மையை பேராசிரியர் தீக்ஷிதர் வெளிக்கொண்டு வந்தார். பாரதம் மற்றும் ஹிந்துயிஸத்தின் மீது இழைக்கப்பட்ட மிகப் பெரிய தவறு, வரலாற்றுப் பிழையானது திருத்தப்பட்டது.  ஏன் அயோத்தி அவ்வளவு முக்கியமானது?

***

புராணங்கள் வரலாறானது!

அயோத்தி ஒவ்வொரு இந்தியனுக்கும், இந்துவுக்கும் முக்கியமானது. அவர் இந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. இந்தியாவின் ஆன்மாவாக விளங்குகின்ற பகவான் ராமர் அந்த இடத்தில்தான் பிறந்தார். தொன்மையான பாரதத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது. அவரது (ஸ்ரீ ராமபிரான்) கதைதான் பாரதத்தின் கதை. இந்த தேசத்தில் குறுக்கும் நெடுக்குமாக அவர் நடந்துள்ளார். அவரது காலடித் தடங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. காலங்களைக் கடந்து, இந்திய மக்களின் ஒட்டுமொத்த மனத்தின் மீது அவர் ஏற்படுத்தியுள்ள பிடிப்பு அபாரமானது. காலம் காலமாக இந்த நாட்டுக் குழந்தைகள் ஸ்ரீ ராமபிரானைப் போல வாழ வேண்டுமென போதிக்கப்படும் அளவுக்கு அவரொரு லட்சிய மனிதர்.

நகைமுரணாக, நவீன ஐரோப்பிய வரலாற்றாளர்களும், அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல இந்தியர்களும், ஸ்ரீ ராமபிரானை புராண கற்பனைப் பாத்திரம் என்கிறார்கள். அவர்கள் உள்நோக்கத்துடன் வெற்றிகரமாகக் கட்டமைத்த,  ‘ஸ்ரீ ராமபிரான் ஒரு புராண கதாபாத்திரம், ராமாயணம் ஒரு பழங்கதை’ என்பதை ஹிந்து இனமே நம்ப வைக்கப்பட்டது. மகாபாரதம் ஒரு தொல்கதை என முத்திரை குத்தப்பட்டது. இந்த மண்ணின் ஒப்பற்ற மற்றொரு வரலாற்று நாயகனான ஸ்ரீ கிருஷ்ணரும் இன்னொரு புராணக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டார். இவ்விதமாக இந்திய, ஹிந்து வரலாற்றின் பெரும்பகுதி பழங்கதை எனவும், தொல்நாயகர்கள் எனவும் வகைப்படுத்தப் பட்டனர். இது தேர்ந்தெடுத்த முடிவை நோக்கி திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட சதி.

இப்போது நாம் ஏற்கனவே சொன்ன அகழ்வாராய்ச்சிகள் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. அந்த உண்மைகள் இப்பொழுது சதிகாரர்களை நோக்கிப் பாய்கின்றன. ‘புராணங்கள் வரலாறாகியுள்ளன’, ‘கற்பனை கதாபாத்திரங்கள் உண்மையாகியுள்ளன’. இந்தியாவின் உண்மையான வரலாற்றை, தொன்மையை, பண்பாட்டை, நாகரிகத்தைப் புரிந்துகொள்ள இந்த வகையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் பெரும் மதிப்புள்ள பங்காற்றி உள்ளனர். ஐரோப்பியர்கள் இந்திய வரலாற்று நாயகர்களை தொல்கதைப் பாத்திரங்கள் என தவறாக சித்தரித்தது இப்பொழுது மாறுகிறது. சரி செய்யப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சினௌலி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியில் வெளிப்பட்ட முக்கியமான சான்றுகள் இந்திய நாகரிகத்தின் மீது பிரகாசமான வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன; வேதகாலத்தைப் பற்றியும் அப்போதிருந்த சமுதாயத்தைப் பற்றியும் நமக்கு புதிய புரிதலை தருகின்றன. இவ்வாறு நம் நாட்டின் அகழ்வாராய்ச்சியாளர்களின் பங்களிப்பால் புராணங்கள் வரலாறாக மாறிக்கொண்டு வருகின்றன.

திருத்தி எழுதப்படும் இந்திய வரலாறு:

அந்த அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் இன்று வரலாறு மீண்டும் திருத்தி எழுதப்படுகிறது. இதுதான் சுவாமி விவேகானந்தர் விரும்பியது.  ‘உங்கள் சொந்த வரலாற்றை நீங்களே எழுதுங்கள். தேசியத்தின் அடிப்படையில் எழுதுங்கள்’ என்று அவர் இந்தியர்களுக்கு, குறிப்பாக ஹிந்துக்களுக்குச் சொன்னார். இந்தக் கருத்தை அவர் மிக அழுத்தமாகச் சொல்லி உள்ளார். அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்:

“இந்திய வரலாறு ஒழுங்கற்று இருக்கிறது. கால வரிசைப்படி தெளிவாக இல்லை. ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய நம் நாட்டு வரலாறு நம்மவர்களின் மனதை பலவீனப்படுத்துவதாகவும், நம்முடைய வீழ்ச்சிகளை மட்டுமே சொல்வதாகவும் உள்ளது. நம் பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் அல்லது நம்முடைய சமயங்களையும் தத்துவங்களைப் பற்றியும் மிகக் குறைவாகவே புரிந்துகொண்ட அந்நியர்கள் இந்திய வரலாற்றை பக்கச் சாய்வு இன்றி நேர்மையாக எப்படி எழுத முடியும்? அதனால் இயல்பாகவே, பல பொய்யான கருத்துக்களும் தவறான கண்ணோட்டங்களும் அதில் புகுந்து விட்டன.

....எனவே வரலாற்று ஆய்வில் நாம் நமக்கென ஒரு தனியான பாதையை வகுக்க வேண்டும். வேத, புராணங்களையும் இந்தியாவின் தொன்மையான ஆவணங்களையும் ஆழ்ந்து கற்க வேண்டும். அதிலிருந்து ஆன்மாவை எழுச்சி பெற வைக்கும் இந்த மண்ணின் வரலாற்றை, பரிவுடனும் கூரிய மதியுடனும் அணுகி சரியாக, தெளிவாக  எழுதும் வேலையை நம் வாழ்நாள் பணியாக அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். இந்திய வரலாற்றை இந்தியர்கள்தான் எழுத வேண்டும். எனவே, மறைக்கப்பட்ட மற்றும் கவனிக்கப்படாத புதைக்கப்பட்டுள்ள நம் பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். காணாமல் போன தன் குழந்தையைக் கண்டுபிடிக்கும் வரை ஒருவன் எப்படி ஓய்வின்றித் தேடுவானோ அதுபோல, இந்தியாவின் ஒளி பொருந்திய, புகழ்மிக்க வரலாற்றை மக்களின் ஆழ்மனதில் நிலைநிறுத்தும் வரை ஓய்வின்றிப் பாடுபட வேண்டும். அதுதான் உண்மையான தேசியக் கல்வி. அதன் முன்னேற்றத்தின் மூலமே உண்மையான தேசிய உணர்வு விழிப்புறும்”.
சுவாமி சுத்திதானந்தர்

நமக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு, துரதிருஷ்டவசமாக, இந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்தவர்களும் படையெடுத்து வந்து வென்றவர்களும் எழுதியது. நாம் படிக்கும் வரலாறு ஆக்கிரமிப்பாளர்களின் வரலாறு. இந்த மண்ணின் மைந்தர்களின் வரலாறு அல்ல; ஹிந்துக்களின் வரலாறு அல்ல. நம்முடைய பாடநூல்களில் ஹிந்துக்களில் வரலாறு எங்கே இருக்கிறது? ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றால் அது நிரம்பிக் கிடக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களை ஆண்ட சிறந்த ஹிந்து அரசர்களைப் பற்றியும் ஆட்சியாளர்களைப் பற்றியும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, இந்த மண்ணை ஆக்கிரமிப்பு செய்த இஸ்லாமிய, ஐரோப்பிய ஆட்சியாளர்களின் வரலாற்றைப் பற்றி மட்டுமே பற்பல தொகுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

எனவே இன்று நம் வரலாற்றைத் திரும்பவும் எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. சீராகத் திருத்தி எழுதப்பட்டும் வருகிறது. அவ்வாறு வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கு இந்த அகழ்வாராய்ச்சிகள் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன. அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் மூலமாக பாரதிய சமஸ்கிருதி (பாரதியப் பண்பாடு) அல்லது ஹிந்து சமஸ்கிருதியின் பெருமையும் மேன்மையும் அறிவியல் சான்றுகளுடன் ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுகின்றன.

  • நன்றி: பிரபுத்த பாரதா

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s