-வி.எஸ்.அச்சுதானந்தன்
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ‘பாரதிய விசார கேந்திரம்’ நிறுவனர் பி.பரமேஸ்வரன் தொகுத்த ‘விவேகானந்தரும் கேரளமும்’ என்கிற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பேசியதன் சுருக்கம் இது…

சுவாமி விவேகானந்தரை ஹிந்துத்துவத்தின் முன்னோடி என்று கூறி அவரை ஒரு சிறு கூட்டுக்குள் அடைக்க ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. அவர் ஹிந்து மதத்தின் ஒற்றுமைக்காக உழைத்தவர் என்பதையும் அதனைச் சீர்திருத்த முயற்சி செய்தார் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் வாழ்க்கையை மறுத்துப் பேசும் மதரீதியான கோட்பாடுகளையும் ஹிந்து மதத்தின் ஜாதிப் பாகுபாடுகளையும் அவர் விமர்சித்தார். அதுதான் விவேகானந்தரின் மகத்துவம்.
விவேகானந்தர் கேரளத்துக்கு வந்திருந்தபோது அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று கேட்டதற்கு பதில் கூற மறுத்ததனால், ஒரு கோயிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜாதிப் பாகுபாட்டின் கொடுமையை உணர்ந்த அவர் கேரளத்தை ‘பித்தர்களின் புகலிடம்’ என்று வர்ணித்தார்.
அனைத்து மக்களும் கண்ணியத்துடனும் சம உரிமைகளுடனும் வாழும் நியாயமான ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது தான் அவருடைய லட்சியமாக இருந்தது. ஐரோப்பாவில் ‘சோஷலிசம்’ என்கிற அரசியல் கோட்பாடு உருவாகத் தொடங்கியபோதே அதனைப் பற்றி முற்றிலும் அறிந்து அதுகுறித்துப் பேசிய முதல் இந்தியர் விவேகானந்தர் தான்.
- நன்றி: தினமணி (15.03.2013)
$$$