ரங்கூன் ஸர்வகலா ஸங்க பஹிஷ்காரம்

-மகாகவி பாரதி

பர்மாவில் பல்கலைக்கழகங்களை அதிகப்படுத்த வேண்டும்; அவை அனைவரும் பயிலக் கூடியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, மாணவர்கள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி மீது குற்றம் சாட்டுவது பயனற்றது என்கிறார் மகாகவி பாரதி. கூடவே பர்மாவையும் பம்பாய் மாகாணத்தையும் கல்விக்கூடங்கள் தொடர்பாக ஒப்பீடு செய்கிறார். “ஜெர்மனியிலும் ருஷியாவிலுந்தான் காலச் சக்கரம் சுழலுகிறதென்றும் பர்மாவில் சுழலவில்லையென்றும்” ஸர்க்கார் கருத வேண்டாம் என்று  எச்சரிக்கவும் செய்கிறார்…

18 ஜனவரி 1921                                                                         ரெளத்திரி தை 6



ரங்கூன் ஸர்வகலா ஸங்கத்தையும், ராஜாங்க உதவி பெற்ற மற்ற பாடசாலைகளையும், மாணாக்கர் பஹிஷ்காரம் செய்யும்படி நேர்ந்த விருத்தாந்தங்களைக் குறித்து, மிஸ்டர் மோங் தின் மோங் விடுத்திருக்கும் அறிக்கையை நோக்குமிடத்தே, ஸர்க்கார் அறிக்கை பக்ஷபாதமுடைய தென்பது வெளிப்படுகிறது. ரங்கூன் ஸர்வகலா ஸங்கத்தின் நிர்மாண நிபந்தனைகள் ஆக்ஷேபத்துக் கிடமானவையென்று ஜனங்கள் கூக்குரலிட்டதை அதிகாரிகள் சிறிதேனும் பொருட்படுத்தாமல் நிராகரித்துவிட்டு, அந்த நிர்மாணத்தை மிதமிஞ்சிய விரைவுடன் சட்டமாக்கினார்கள்.

இந்த விஷயத்தில் பர்மிய அறிவாளிகள் செலுத்திய ஆத்திரத்தை அதிகாரிகள் கவனிக்கவேயில்லை. இவ்வித அசிரத்தையை பர்மிய அறிவாளிகள் முன்னைப்போல, ஆட்டுக் குட்டித்தனமாகப் பொறுத்துக் கொண்டிருப்பார்களென்று, “ஆகாசத்திலிருந்து நேராக இறங்கி வந்த” ஆங்கிலேய அதிகாரிகள் தீர்மானம் செய்து கொண்டனர். ஜெர்மனியிலும் ருஷியாவிலுந்தான் காலச் சக்கரம் சுழலுகிறதென்றும் பர்மாவில் சுழலவில்லையென்றும், ஸ்தம்பித்து நிற்கிறதென்றும், மேற்படி ஆகாச குமாரர்கள் எண்ணினார்கள். ஆனால், பர்மாவில் காலச்சக்கரம் இங்கிலாந்தைக் காட்டிலும் அதிக வேகமாகச் சுழன்று வந்திருக்கிறது. இந்த விஷயந் தெரியாமல் வழக்கம் போலே அதிகாரிகள் மஹாத்மா காந்தியின்மீது பழி சுமத்தி அவரைத் தூற்றுகிறார்கள்.

பர்மிய படிப்பாளிகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையே நிகழ்ச்சி பெற்றிருக்கும் மனஸ்தாபத்தின் ஆதாரம் பின்வருமாறு:- பம்பாய் மாகாணத்தைப் போல் பர்மா ஒன்றரை மடங்கு பெரிது. ஆயினும் பர்மா முழுமைக்கும் ரங்கூன் நகர மொன்றிலுள்ள இரண்டே முதல்தரக் கலாசாலைகளிருக்கின்றன. பர்மா முழுமைக்கும் உயர்தரப் பாடசாலைகள் 23; ஆரம்பப் பாடசாலைகள் சுமார் 8000 (எண்ணாயிரம்). பம்பாய் மாகாணத்திலோ 200 (இருநூறு) உயர்தரப் பாடசாலைகளுக்கதிகமேயுள்ளன. ஏறக்குறைய 15000 (பதினையாயிரம்) ஆரம்பப் பாடசாலைகளிருக்கின்றன.

இந்த நிலைமையில், பர்மா கவர்ன்மெண்டார் ரங்கூன் யூனிவர்ஸிடியை மாகாணத்துக்குப் பொதுவாக்காமல், வஸதி ஸஹிதமாக, (ரங்கூன் நகரத்தில் வந்து வஸிப்போருக்கு மாத்திரம் பயன்படும்படி) வைக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது, ஜனங்களுக்கு வருத்தமுண்டாயிற்று. ஏனென்றால், ஸர்வகலா ஸங்கம் மாகாணத்துக்குப் பொதுவாக இருக்குமாயின், அதன் மூலமாக அதிகப் பிள்ளைகள் கடைத்தேற முடியும். இப்போதுள்ள சட்டப்படி, அதன் கட்டிடத்தில் ஏராளமான பணம் செலவு செய்துகொண்டு வாஸம் செய்யக்கூடிய மிகச் சில மாணாக்கருக்கே அது பயன்படும். வஸதி ஸஹிதமான ஸர்வகலா ஸங்கத்தால் விளையக்கூடிய விசேஷ நன்மைகளை மாணாக்கர் எய்தும்படி செய்வதே நோக்கமெனின்; அப்போது, மாகாண முழுமைக்கும் போதியவாறு ஐம்பது அல்லது நூறு ஸங்கங்கள் ஸ்தாபனம் செய்வதற்குரிய பணச்செலவை ராஜாங்கத்தார் பொறுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

மேலும், அந்த ஸர்வகலா ஸங்கத்துடன் ரங்கூன் நகரத்திலுள்ள பாடசாலைகளை மாத்திரமே சேர்க்கலாமென்று சட்டம் செய்திருக்கிறார்கள். எனவே, மற்ற எவ்விடத்திலும் முதல்தரக் கலாசாலை ஏற்படுத்தக் கூட வழியில்லாமற் போய்விடும். ஸர்வகலா ஸங்க ஸம்பந்தமில்லையெனில் முதல்தரக் கலாசாலை ஸ்தாபித்தால் பயன்படாதன்றோ?

ராஜாங்கத்தார் ஜனங்களுக்குக் கல்வியளிக்க வேண்டுமென்ற விருப்பம் உண்மையாகவே உடையோரென்று காண்பிக்க வேண்டுமாயின், மாகாணமெங்கும் ஆயிரக்கணக்கான பாடசாலைகளையும் கலாசாலைகளையும் ஸ்தாபித்து, அங்கங்கே முக்ய நகரங்களில் வஸதி ஸஹிதமான ஸர்வகலா ஸங்கங்களை அமைத்தல் இயலும்படி செய்ய வேண்டும்.

இதையன்றி, ஒரு வருஷ ஆரம்பப் பயிற்சி அதிகமாக வைத்திருத்தல், “ஸெனேட்” ஸபையில் பிரதிநிதித் தன்மையின்மை, என்ற வேறு சில அம்சங்களிலும் பர்மியப் படிப்பாளிகளின் கொள்கை ஸர்க்கார் கொள்கையினின்றும் மாறுபட்டிருக்கிறது.

இந்த அம்சங்களனைத்திலும் பொது ஜனங்களின் நன்மைக்கும் தீர்மானத்துக்கும் தக்கபடி தம்முடைய சட்டத்தை மாற்றிக் கொள்வதே ஜனங்களிடையே கொழுந்து விட்டெறியும் அதிருப்திக் கனலை அவிக்க வழியாகுமன்றி, மஹாத்மா காந்தியை தூஷணை செய்வதில் அதிகப் பயன் விளையாதென்பதை பர்மா கவர்னர் தெரிவாராகுக.

-சக்திதாஸன்

  • சுதேசமித்திரன் (18.01.1921)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s