-ஸ்டாலின் குணசேகரன்
திரு.ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பின் நிறுவனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளுள் ஒருவர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இளைஞர் மாநாட்டில் 12.1.2013-இல் ஸ்டாலின் குணசேகரன் பேசியதன் சுருக்கம் இது.

நிலையான உறுதியான தன்னம்பிகைக்கு விவேகானந்தரின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையும், நமது நாடும் செம்மைப்படுவதோடு, நாட்டுப் பற்றும் சமுதாயச் சிந்தனையையும் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டுமென்றால் அதை விவேகானந்தரிடமிருந்து தான் நாம் பெற முடியும்.
உண்மையான ஆன்மிகம், மதம், மொழி, இனம் போன்றவற்றைக் கடந்தது. இதுவே உண்மையான மனிதநேயத்தை உணர்த்துகிறது. இந்த ஆன்மிகம் பாரத மண்ணில் விளைந்தது. இந்த உண்மையைத் தான் அவர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உலகிற்கு உணர்த்தினார்.
பாரத மக்களின் வறுமை. அதைப் போக்க ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உணர்வே அவரது இதயத்தின் அடிநாதமாக இருந்தது.இன்றைக்கு நாம் அவருக்காக பெரிய பிரமாண்டமான விழாக்களையெல்லாம் எடுத்து வருகிறோம். ஆனால் அமெரிக்காவில் அவர் சாலையோரத்திலும், ரயில்வே பிளாட்பாரத்திலும், சரக்கு ரயில் பெட்டியிலும் உறங்கி துன்பம் அனுபவித்துள்ளார்.
இது எதற்காக என்று கேட்பவர்களுக்கு அவர் உரைத்த பதில், “எனது நாட்டு மக்களின் வறுமையைப் போக்க வேண்டும், அவர்களின் நிலையை மேம்படுத்த வேண்டும். அதற்காகத் தான்” என்றார்.
மூச்சுக்கு மூச்சு ‘எனது நாடு, எனது மக்கள்’ என்று பெருமிதத்தோடு கூறிய ஒரு தேச பக்தரை இன்றுவரை நாம் பார்க்க முடியவில்லை. இளைஞர்களின் உணமையான வழிகாட்டி சுவாமி விவேகானந்தர். இவரைப் போன்ற இளைஞர்கள் சமூக அலவங்களைப் போக்க வீறுகொண்டு எழ வேண்டும்.
- நன்றி: தினமணி (13.01.2013)
$$$