-சுவாமி சுத்திதானந்தர்

ஒரு தேசம் அல்லது ஒரு இனம் அதன் உண்மையான வரலாற்றை, முழுமையான மகத்துவத்தை, பெருமிதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமானால் அது உள்ளுக்குள் வலிமை பெறும்; யாராலும் வெல்ல முடியாதபடி ஆற்றலுடன் வல்லமை பெற்றுத் திகழும். எனவே வரலாற்றுக்கும் தேசம் அல்லது இனத்தின் விழிப்புணர்வுக்கும் பெருமிதத்திற்கும், நெருங்கிய, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது…..
-2-
வரலாற்றுக்கும் தேசிய விழிப்புணர்வுக்கும் இடையேயான தொடர்பு
வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது என்றோ அல்லது இந்திய வரலாற்றைத் திரும்பவும் எழுத வேண்டிய தேவை வந்துள்ளது என்றோ நாம் கூறும்போது, தேசிய விழிப்புணர்வின் எழுச்சியும் வரலாறும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன என்ற ஒரு முக்கியமான விஷயத்தை வந்தடைகிறோம்.
தேசம் என்பதுடன் நாம் விழிப்புணர்வுடன் கொள்ளும் தொடர்பு, பெருமிதம் எல்லாம் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுடன் தொடர்புடையது. ஒரு தேசத்தின் குடிமக்களுக்கு, அந்த தேசம் படையெடுத்து வந்தவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது, வியாபாரம் செய்ய வந்தவர்களிடம் தாழ்வுற்றுக் கிடந்தது என்று ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் செய்தவர்களின் புகழைப் பாடி இதுவே நம் வரலாறு என்று சொல்லிக் கொடுக்கப்படுமானால், அந்த நாட்டு மக்களின் தன்மானமும் சுயமரியாதையும் இல்லாமல் போய்விடும். தேசத்தைப் பற்றிய பெருமிதமும் விழிப்புணர்வும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அதேபோல ஒரு இனத்திடம் அதன் வரலாற்றைப் பற்றியும் அந்த இனத்தைப் பற்றியும் அதன் கடந்த காலத்தைப் பற்றியும் தாழ்வுணர்ச்சி ஏற்படும் வகையில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால், அந்த இனம் வலிமையற்றதாகி பலவீனம் அடைந்து, தன் சுய அடையாளத்தை இழந்து தனக்கு சொந்தம் இல்லாத வேறொரு வடிவத்தை நோக்கி நகரும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு தேசத்திற்கும் அதற்கென ஒரு சொந்தக் கதை இருக்கும். எல்லா இனத்திற்கும் எல்லா ஜாதிக்கும் (இனக்குழு) ஒரு சொந்தக் கதை இருக்கும். நாம் ஒரு தேசத்தை அல்லது இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் வரலாற்றை அழித்தாலோ, தவறாகச் சித்தரித்தாலோ, துண்டு துண்டாக்கினாலோ போதும். ஒரு தேசத்தை, இனத்தை உள்ளுக்குள்ளே பலவீனப்படுத்தி சேதமாக்குவது அந்நிய கலாச்சாரமும் அந்நிய நாகரிகமும். அதை கபளீகரம் செய்வதற்கு இவை சரியான கருவிகளாகும். நவீன காலத்தில், ஐரோப்பியர்கள் இந்தக் கருவியை திறம்படப் பயன்படுத்தி ஆசிய இனங்களை, குறிப்பாக ஹிந்துக்களை, இந்தியாவை வென்று அவர்களை அடக்கி ஆண்டார்கள்.
இதற்கு மாறாக, ஒரு தேசம் அல்லது ஒரு இனம் அதன் உண்மையான வரலாற்றை, முழுமையான மகத்துவத்தை, பெருமிதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமானால் அது உள்ளுக்குள் வலிமை பெறும்; யாராலும் வெல்ல முடியாதபடி ஆற்றலுடன் வல்லமை பெற்றுத் திகழும். எனவே வரலாற்றுக்கும் தேசம் அல்லது இனத்தின் விழிப்புணர்வுக்கும் பெருமிதத்திற்கும், நெருங்கிய, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. இங்கு சுவாமிஜியின் வார்த்தைகளை மீண்டும் மேற்கோள் காட்ட விழைகிறேன்:
“இந்திய வரலாற்றை இந்தியர்கள் தான் எழுத வேண்டும். எனவே மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, காணாமல் போன உங்கள் பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் பணியில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். காணாமல் போன தன் குழந்தையைக் கண்டுபிடிக்கும் வரையில் ஒருவர் எப்படி ஓய்வின்றி தேடுகிறானோ அதுபோல இந்தியாவின் ஒளிபொருந்திய, புகழ்மிக்க வரலாற்றை அம்மக்கள் மனதில் நிலை நிறுத்தும் வரையில் ஓய்வின்றி பணி புரியுங்கள். அதுவே உண்மையான தேசியக் கல்வி. அதன் (தேசியக் கல்வியின்) முன்னேற்றத்தால் உண்மையான தேசிய உணர்வு விழிப்புறும்”.
இந்தியாவில் ஐரோப்பா எதிர்கொண்ட சவால்
ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் எதிரே எவரெஸ்ட் மலை போல் உயர்ந்த நாகரிகமும் மகத்தான பண்பாடும் நிற்பதைக் கண்டார்கள். ஐரோப்பியர்கள் என்றால் நான் ஆங்கிலேயர்களை மட்டும் குறிக்கவில்லை. பிரெஞ்சுகாரர்களையும் போர்ச்சுக்கீசியர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன். அவர்கள் முன்னர் அதுவரை எங்குமே பார்த்திராத, ஒப்பிட முடியாத, பெருந்தன்மை மிக்க ஹிந்து இனத்தின் நாகரிகமும் பண்பாடும் நிற்பதைக் கண்டார்கள். ஹிந்துக்களின் வாழ்வியல் கண்ணோட்டம், தர்மம் ஆகியவற்றுடன் தங்களுடைய மதம், வாழ்வியல் கண்ணோட்டத்தை ஒப்பிட்டால் தங்களுடையது தாழ்வாக, தட்டையாக, பிற்பட்டதாக இருப்பதை மிக விரைவில் உணர்ந்து கொண்டார்கள்; ஹிந்து சமுதாயமானது அறிவியல்பூர்வமான நெறிமுறைகளாலும் உன்னதமான கொள்கைகளாலும் நிர்வகிக்கப்படுவதைக் கண்டார்கள். இது ஐரோப்பியர் எவரும் அறியாதது. ஆயுர்வேதம், சமஸ்கிருதம், வானவியல், கணிதம், உலோகவியல், யோகா, வேதாந்தம், கட்டடக்கலை, இசை என இன்னும் எண்ணற்ற துறைகளில் ஹிந்து சமுதாயம் மிகவும் முன்னேறியதாகவும் உயர்வானதாகவும் இருப்பதை அவர்கள் கண்டார்கள்; ஸ்தம்பித்து நின்றார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதனால் அவர்கள் ஹிந்துக்களை, இந்தியர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள சதி செய்தனர். ஹிந்துக்களை ஆட்சி செய்ய வேண்டுமானால் ஹிந்துக்கள் தங்களுடைய முன்னோர்களைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் தாழ்வுணர்ச்சி கொள்பவர்களாக, குற்றவுணர்வு கொண்டவர்களாக, அவமானப்படுபவர்களாக வேண்டும். ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை உயர்வானவர்களாக, அண்ணாந்து பார்க்க வைக்க வேண்டுமென தெரிந்து கொண்டார்கள். ஏற்கனவே சொன்னது போல, இதற்கான சிறந்த வழி, ஹிந்துக்களின் வரலாற்றை தவறாகச் சித்தரிப்பது; அதை ஹிந்துக்களை ஏற்க செய்வது. ஹிந்துக்களின் உண்மையான வரலாற்றை அழிக்க வேண்டும், அதன்மூலம் ஹிந்துக்கள் பலவீனர்களாகி தங்களுக்குக் கீழ் வருவார்கள். அதற்காக திட்டம் தீட்டினார்கள். அதற்கேற்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலமாக ஹிந்துக்களை, இந்தியர்களை மூளைச் சலவை செய்தார்கள். துரதிஷ்டவசமாக, அது இன்றும் தொடர்கிறது.
ஹிந்துக்களின், இந்தியாவின் கதையை அவர்கள் எழுதினார்கள். ஹிந்துக்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஹிந்துக்களின் சிந்தனை முறையைப் பற்றியும் இருளடையும்படி எழுதினார்கள். ஹிந்துக்களுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று முத்திரை குத்தினார்கள். எனவே, ஹிந்துக்களுடைய, இந்தியர்களுடைய இரண்டு மகத்தான வரலாற்று அத்தியாயங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பழங்காலத்து கற்பனைக் கதைகள் என்று ஒதுக்கினார்கள். ஹிந்துக்களின் மகத்தான மாமனிதர்களை வெறும் புராணக் கதை நாயகர்களாக்கினார்கள். ஹிந்துக்களின், இந்தியர்களின் ஒட்டுமொத்த மனதையும் பல நூற்றாண்டு காலம் கவர்ந்து ஆண்ட, இந்திய தேசத்தின் ஆன்மாவோடு பிரிக்க முடியாதபடி பிணைந்து இருந்த ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் என்ற இரண்டு உதாரண புருஷர்களை வெறும் கற்பனைக் கதாநாயகர்கள் என்றனர். அவர்களுடன் தொடர்புடையவை யெல்லாம், அவர்களுடைய மேன்மைகள் எல்லாம் வெறும் கதைகளாயின. இவ்வாறு ஹிந்து சமுதாயத்தைப் பற்றி, இந்தியாவைப் பற்றி தவறான சித்திரங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு ஏற்ப, வெற்றிகரமாக ஹிந்துக்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மூளைச்சலவை செய்யப்பட்டனர்.
அதன் விளைவை இன்று எல்லோரும் பார்க்கலாம். பாரதம் சமயங்களின் பிறப்பிடம். இங்கு தோன்றிய சமயங்கள் மட்டுமன்றி, இங்கு பிறக்காத மற்ற சமயங்களும் இதன் மறைமுகத் தாக்கத்தினால் தோன்றியவையே. மகத்தான மகான்கள், மதத் தலைவர்கள் இந்த புனித மண்ணில் பிறந்தவர்கள்; நாம், ஓரினமாக, அவர்களின் பிள்ளைகள். இன்றைய தலைமுறை ஹிந்துக்களுக்கு, இந்தியர்களுக்கு – சிலரைத் தவிர்த்து பெரும்பாலானோருக்கு – தங்கள் மதத்தைப் பற்றியோ தங்களது மகத்தான முன்னோர்களைப் பற்றியோ உறுதியாக எதுவும் தெரியவில்லை. பலருக்கும் தாங்கள் ஹிந்து என்பதிலோ, இந்தியர்கள் என்பதிலோ பெருமிதம் இல்லை. இதுபோன்ற நிலை, தங்கள் முன்னோர்களைப் பற்றிய அறியாமை, அவமானம் உலகில் வேறெங்கும் இல்லை.
ஆனால் இதற்கு நாம் இன்றைய தலைமுறையினரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. ஹிந்து இனத்தின் மதிப்பைப் பற்றியோ இந்த இனம் உலகிற்கு அளித்துள்ள பங்களிப்பு பற்றியோ ஏதும் தெரியாததாலேயே இந்த பெருமித உணர்வு ஏற்படாமல் மழுங்கியுள்ளது. அது பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை. ஹிந்துக்களைப் பற்றிய, இந்தியாவைப் பற்றிய உண்மையான விவரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஐரோப்பிய வர்ணிப்புகளால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஹிந்துக்கள் தொடர்பான எல்லாவற்றையும் தாழ்வாகப் பார்க்கவும் ஐரோப்பிய வாழ்க்கை முறையை அப்படியே பின்பற்றவும் அதை உயர்வாக, அண்ணாந்து பார்க்கவும் பழக்கப்படுத்தப் பட்டுள்ளனர். அதனால்தான் இந்திய வரலாற்றை நாம் தேசிய கண்ணோட்டத்தோடு எழுதுவது அவசரத் தேவையாக உள்ளதென்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.
ஹிந்து இனம், இந்தியாவின் பெருமை
இந்தியாவின் உண்மையான கதை என்ன? இது போன்ற சின்ன கட்டுரையில் இந்தியாவின் கதையைச் சொல்ல யாராவது முயற்சித்தால் அது மூர்க்கதனமாகும். ஆனால் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், புகழ்மிக்க பாரதியப் பண்பாட்டைப் பற்றி சுவாமிஜியின் வார்த்தைகளை நான் மேற்கோள் காட்டுவேன். அதற்கு முன்னதாக இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்தி விடுகிறேன்.
- இந்த கட்டுரையில் பாரதியப் பண்பாடு என்றால் அது ஹிந்துப் பண்பாட்டைத் தான் குறிக்கும்.
- ஹிந்து என்றால் அது பௌத்த, சமண, சீக்கிய சமயங்கள் மட்டுமன்றி இப்போது ‘தலித்’ என்ற பெயருடன் வரும் எல்லா கோஷ்டிகளையும் உள்ளடக்கியது. இவர்கள் எல்லோரும் ஹிந்துக்கள் என்பது அனைவரும் அறிந்த சாதாரண உண்மை. இவையெல்லாம் தனித்தனியானவை, ஹிந்துயிசத்தில் இருந்து வேறுபட்டவை என்பது நம் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி, நம் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் செலுத்திய விஷம்.
- நன்றி: பிரபுத்த பாரதா
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
(தொடர்கிறது)
$$$