சுவாமி விவேகானந்தரின் உலகளாவிய கண்ணோட்டம்

-பேரா.கே.குமாரசாமி

பேராசிரியர் திரு. கே.குமாரசாமி,  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின்  வட தமிழகத் தலைவர். மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு  பெற்றவர்;   சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா கல்வி மைய உறுப்பினராகவும், ராசிபுரம் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

சில செய்திகளைக் கேட்டால் மூக்கின்மீது விரலை வைக்க நேரிடும்,  இதோ அப்படியொரு செய்தி.  நேற்றுவரை முன்பின் தெரியாத ஒரு சாதாரணமானவர் இன்று உலகமே போற்றும் அசாதாரணவராக உயர்ந்துள்ளார்  (Zero to Hero) என்றால், ஆச்சரியமாக இல்லையா?

ஆமாம். அவர் தான் இளந்துறவி சுவாமி விவேகானந்தர்.

1893 செப்டம்பர் 11-ம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வமத மகாசபையில், அநேகமாக எல்லா பிரதிநிதிகளும் சபையிலிருந்தவர்களை  ‘சீமான்களே, சீமாட்டிகளே’ என விளித்தபோது,  சுவாமி விவேகானந்தர்  சபையோரை நோக்கி, ‘எனதருமை அமெரிக்க சகோதரிகளே. சகோதரர்களே’ என்ற வார்த்தைகளால் உள்மனதிலிருந்து பீறிட்டு வந்த உண்மையான தூய அன்பைப் பொழிந்தாரே, அதுதான் அவரது உலகம் தழுவிய கண்ணோட்டத்தைப் பிரதிபலித்தது.

மற்றவர்கள் அவரவர்  கடவுளையும், மதத்தையும், மதநூலையும் மட்டுமே உயர்வாக பெருமையடித்துக் கொண்டபோது,  இவர் மட்டும்  “இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வெவ்வேறு மார்க்கங்கள் மட்டுமே” என்பதை எளிய உதாரணத்தோடு விளக்கினார்;  ஆறுகள் பல இடங்களிலிருந்து புறப்பட்டு பல்வேறு திசைகளில் ஓடினும், அவை அனைத்தும் ஒரே கடலில்தான் சங்கமமாகின்றன என்ற எளிய எடுத்துக்காட்டு மூலம் இக்கருத்தை சுவாமிஜி அழகாகப்  புரியவைத்தார்.

மதம்,  மாகாணம்,  ஜாதி, மொழி, இனம் போன்ற பல்வேறு வேற்றுமைகள் உலகில் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) காணும் பரந்த மனப்பான்மையை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்…

யாதும் ஊரே, யாவரும் கேளிர்…

மனித சமத்துவம் மற்றும் உலக சகோதரத்துவம் (Human equality and universal brotherhood) என்பது கானல் நீரல்ல, நிகழ்கால உண்மை.

-போன்ற  கருத்துகளைப் புரிய வைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

எனவே தான், கடல்கடந்து வெளிநாடு செல்வது தீட்டு என்பதையும் பொருட்படுத்தாமல், தன்னந்தனி ஆளாக அமெரிக்கா சென்றார் சுவாமிஜி.  அதனால், திருமதி குட்வின்,  குட்வின், மார்கரெட் நோபிள் (சகோதரி நிவேதிதை),  ஜோசபின் மெக்லியாப்,  திருமதி ஒலீபுல்,  கிறிஸ்டி போன்ற ஒரு பெரும் பட்டாளமே இவரது பக்தர்களாக மாறி இவருடன் பாரதம் வந்தார்கள்.

மேற்கத்திய லௌதீக செல்வச் செழிப்பும்,  கிழக்கத்திய நாடுகளின்- குறிப்பாக பாரத நாட்டின்- ஆன்மிகச் சிந்தனையும் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படவேண்டும். உலகின் சமன்நிலை மற்றும் இணக்கம் (Equilibrium and synthesis)  ஏற்பட வேண்டும். உலகிற்கு இன்றைய தேவை அமைதியும், இசைவும் ஆகும் (Peace and Harmony). இவை அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அப்போது மட்டுமே உலகம் ஒரு குடும்பமாகும் என்றும், ‘வசு தைவ குடும்பகம்’ என்ற உபநிடதக் கருத்து சாத்தியமாகும் என்றும்,  சுவாமி விவேகானந்தர் நம்பினார். (The Western materialism + eastern spiritualism = one world, one family).

நாம் அனைவரும் இறைவனின் அம்சங்கள்,  பாவிகள் அல்ல (Amritasya Putraha, not sinners) என்ற சுவாமிஜியின் உலகளாவிய கண்ணோட்டம்,  கருப்பு / வெள்ளை என்ற தோலின் நிறத்தால் ஏற்பட்ட வெறுப்புணர்வுகளைப் பொசுக்கியது;  குறுகிய வேற்றுமை உணர்வுகளால் எழுப்பப்பட்ட சுவர்களை இடித்துத் தூள்தூளாக்கியது.

கிணற்றுத் தவளைகளாய்க் கிடந்த எத்தனையோ குறுகிய மனம் படைத்தோர்க்கு கடல் தவளையாய் வந்து உலக  சகோதரத்துவத்தைப் புரிய வைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

தன்னுடைய கடைசி சிகாகோ சொற்பொழிவில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்:

“ஒரு கிறிஸ்துவர் ஹிந்துவாகவோ. பௌத்தராகவோ மாற வேண்டாம்,  அதேபோல் ஒரு ஹிந்து அல்லது பௌத்தர் கிறிஸ்துவனாக மாற வேண்டாம்,  ஒவ்வொருவரும் மற்றவர்களிடமுள்ள நல்லவற்றை ஏற்றுக்கொண்டு, தனது சுய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சர்வமத மகாசபை உலகிற்கு வழங்கும் செய்தி என்ன தெரியுமா?  புனிதம், தூய்மை, கருணை ஆகியவை எந்த ஒரு மதப் பிரிவினருக்கு மட்டுமே  தனிச்சொத்து ஆகாது…. தனது மதம் மட்டுமே நிலைக்கும். மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று கருதுபவன்பால் நான் இரக்கம் கொள்கிறேன்”

            (Complete Works of Swami Vivekananda, Vol 1 , Page 24)

உலகம் ஒரு குடும்பமாகவே சுவாமிஜியின் கண்களில் தென்பட்டது.  இறைவன் உலகின் தந்தை என்றால் நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளாவோம்,  நமக்குள் மலரும் உறவு  சகோதரத்துவமேயாம்.  எனவே நம்முள் தீண்டாமை கூடவே கூடாது என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர். (No Touch me not notism).

ஏழைகளுக்காற்றும் தொண்டு இறைவனுக்காற்றும் தொண்டாகும்.  மக்கள் சேவையே மகேசன் சேவை. நரசேவையே நாராயண சேவை. ஜீவ சேவையே சிவசேவை என்று குறிப்பிட்டவர் சுவாமிஜி. மக்களுள்ளும்,  தன்னுள்ளும் பரமனைக் கண்டார்.  அவரது பரந்து விரிந்த இந்த மனப்பான்மையே உலகை ஒரு குடும்பமாகப் பார்க்க வைத்தது. விவேகானந்தரின் உலகளாவிய இந்தப் பார்வையே உலகில் பலநாடுகளில் காணப்படும் பயங்கரவாதம், பிரிவினை மனப்பான்மை, ஜாதி மற்றும் சமயமோதல்கள், இனவேறுபாடு, அமைதியின்மை போன்ற இன்றைய பல பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர் கண்ட பல பணக்கார நாடுகள் இன்று பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ளன.  நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார மேன்மையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா இன்று  பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.

முதலாளித்துவம்,  பொதுவுடைமை ஆகிய இருபெரும் சித்தாந்தங்கள் இன்று எடுபடாதவையாகிவிட்டன. மேலைநாடுகளின் சமூக மற்றும் சமயக் கோட்பாடுகள் உலக சகோதரத்துவத்தையும். சமூக சமத்துவத்தையும்,  மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தோல்வியுற்றுவிட்டன.

எனவே பல ஆய்வு நிறுவனங்களின் பார்வை பாரத நாட்டின் பக்கம் திரும்பியுள்ளது.  உதாரணமாக ஜி-20 நாடுகளிடையே பாரதத்தின் செல்வாக்கு குறிப்பிடும்படி உயர்ந்துள்ளது.

சுவாமி விவேகானந்தா போதித்த எளிமை, உழைப்பு, சத்யம், தர்மம், குடும்ப அமைப்பு முறை, அஹிம்சை மற்றும் அமைதியில் நாட்டம் கொள்ளுதல், தொண்டு மற்றும் தியாகத்திற்கு முன்னுரிமை, ஆன்மிக ஈடுபாடு, வேற்றுமையில் ஒற்றுமை பேணுதல், தாய்மையை தெய்வீக குணமாகக் கருதுதல், மக்களுள் உறையும் தெய்வத்தை வழிபட மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என சேவையில் ஈடுபடுதல் போன்ற உன்னதமான கருத்துகள் மூலமாகவே உலக அமைதியும்,  உலக சகோதரத்துவமும் ஏற்பட முடியும்.

சுவாமி விவேகானந்தரின் இந்த உலகளாவிய  கண்ணோட்டத்தின் மூலமாகவே உபநிடதம் கூறுகின்ற உலகம் ஒரு குடும்பம்  (வசுதைவ குடும்பகம்) என்பது சாத்தியமாகும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s