-தஞ்சை வெ.கோபாலன்
தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கை நடத்திவந்த அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் விவேகானந்தம் குறித்த இரண்டாவது கட்டுரை இது….

‘அன்பே சிவம்’ என்கிறது திருமந்திரம். அன்பும் சிவமும் வேறல்ல என்கிறது அந்தத் திருமந்திரப் பாடல்.
“அன்பு சிவம் இரண்டென்ப அறிவிலார் அன்பே சிவமாவ தாரு மறிகிலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே” (திருமந்திரம் – அன்புடைமை 270)
அன்பின் முதிர்ச்சியால் சிவமாகிய அறிவு ஒளிவீசும். அன்புதான் சிவத்தை விளங்கிடச் செய்வது என்பதை அனைவரும் அறிந்துவிட்டால், அன்பே வடிவமாய் சிவத்தன்மையை அடைந்திடுவார் என்பது அதன் பொருள். திருவள்ளுவரும் திருக்குறளில் அன்பின் வலிமையை இப்படி எடுத்துரைக்கிறார்.
“அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” (திருக்குறள்- 80)
அன்பு இருந்தால் தான் மனிதன்; அஃதில்லையேல் அவன் தோலால் மூடப்பட்ட வெறும் எலும்புக்கூடு என்கிறார் வள்ளுவர். ஆக மனிதனை மனிதனாகவும், அதற்கு மேம்பட்டதாகவும் செய்யக்கூடிய ஆற்றல் அன்புக்கு இருக்கிறது.
இந்த அன்பு பற்றி சுவாமி விவேகானந்தர், இன்றைய அறிஞர்கள் ஆழ்மனத் திண்மை பற்றி கூறும் செய்திகளுக்கெல்லாம் முன்னோட்டமாக சுமார் 113 ஆண்டுகளுக்கு முன்பே கூறிச் சென்றிருக்கிறார். ‘ஒருவனிடம் அன்பு குடிகொண்டிருக்குமானால் அது பிறரிடம் எதையும் கேட்காது; மாறாக அன்பு அனைத்தையும் கொடுத்துவிடுகிறது. தன்னையே பிறர்க்கு நல்கும் பேராற்றல் இந்த அன்பினால் முடியும்’ என்பதை சுவாமி மிகத் தெளிவாகத் தொன் சொற்பொழிவொன்றில் எடுத்துக் கூறுகிறார்.
அன்பு பிறரிடம் எதையும் கேட்டுப் பெறாது, அது அனைத்தையும் கொடுத்துவிடுகிறது என்கிற கருத்துக்கு வலு சேர்க்க சுவாமி ஒரு கதையொன்றைக் கூறுகிறார்.
பண்டைய நாளில் பாரத புண்ணிய பூமியில் இருந்த ஓர் அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். போனவிடத்தில் காட்டில் தனிமையில் தவம் புரியும் ஒரு மகா முனிவரைச் சந்தித்தான். அவர் மிகப் பெரிய மகான் என்பதை உணர்ந்த மன்னன், அவரைத் தம் நாட்டிற்கு வரவேண்டுமென இறைஞ்சினான். முதலில் மறுத்த முனிவர் மன்னனின் வற்புறுத்தலால் சம்மதித்து அவனுடன் நாட்டுக்கு வந்தார்.
அரசனின் அரண்மனையில் தங்கிய முனிவரிடம் மன்னன் ‘சற்றுப் பொறுங்கள், இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லி உட்கார்ந்து பிரார்த்தனை செய்தான். மன்னன் இறைவனிடம் தனக்கு ஏராளமான செல்வத்தையும், பரந்து விரிந்த நாடும், உடல் ஆரோக்கியமும், குழந்தைப் பேறும் தந்தருள வேண்டும் என்று மனமுருக பிரார்த்தித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் எழுந்து வெளியேறத் தொடங்கினார். மன்னன் திடுக்கிட்டு முனிவரிடம் சென்று சுவாமி தாங்கள் என்னிடமிருந்து எதையும் பெறாமல் போகிறீர்களே என்றான். அதற்கு அந்த முனிவர் சொன்னார், “நான் பிச்சைக்காரர்களிடம் யாசகம் பெறுவதில்லை” என்று.
“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் சுவாமி?” என்றான் அரசன்.
முனிவர் மீண்டும் சொன்னார், “இத்தனை நேரம் நீ இறைவனிடம் என்னவெல்லாமோ வேண்டும் என்று கேட்டு பிரார்த்தனை செய்தாயல்லவா? அப்படி உனக்கு வேண்டியவற்றை அவரிடம் யாசிக்கும் நீ, எனக்கு என்ன கொடுக்கப் போகிறாய்? முதலில் உன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள், பிறகு என் போன்றவர்களுக்கு தானம் அளிக்கலாம்” என்றார்.
யாரிடம் அன்பு வைத்தாலும் அந்த அன்பின் பெயரால் எதையும் யாசிப்பதோ, கேட்டுப் பெறுவதோ உண்மையான அன்பு அல்ல. அன்பு இருப்பவன் தன்னிடம் இருப்பதைத் தான் கொடுக்க விரும்புவான். இறைவனிடம் நாம் காட்டும் அன்பு, எதையும் வியாபார ரீதியில் கேட்டுப் பெறுவதற்கல்ல. தனக்கன்றி, ஊருக்கும் உலகுக்கும் நல்லது வேண்டி பூஜிப்பது கூட அன்பின் அடையாளமல்ல. படைத்தவனுக்குத் தெரியும் யாருக்கு எப்போது எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று. கேட்டுப் பெறுவதற்குப் பெயர் பக்தியோ, அன்போ அல்ல என்பதை மிகத் தெளிவாக சுவாமிஜி தெரிவித்திருக்கிறார்.
அடுத்ததாக ‘அன்பு பயம் அறியாது’ என்கிறார் சுவாமி. அது எப்படி? அதற்கும் ஒரு நிகழ்ச்சியை இங்கு சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு பெண்மணி பயந்த சுபாவம் உள்ளவள்; தெருவில் நடந்து செல்கையில் ஒரு தெருநாய் குரைத்துக் கொண்டு அவளை நோக்கி வருகிறது. அவள் பயந்துபோய் நடுங்கி, அந்த நாய் தன்னைக் கடித்துவிடுமோ என்று அஞ்சுகிறாள்.
ஆனால் ஒரு சமயம் அவள் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு போகும்போது ஒரு புலி எதிர்ப்படுகிறது. அந்தப் புலி தன் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்தை விளைவிக்கும் என்று பயந்துபோய் தைரியமாக அந்தப் புலியை எதிர்த்துப் போராடுகிறாள்.
ஒரு நாயைக் கண்டு பயந்த அந்தப் பெண்மணி இந்த இடத்தில் ஒரு புலியை எதிர்த்துப் போரிடும் உறுதியை எப்படிப் பெற்றாள்? அவள் தன் குழந்தை மீது வைத்திருந்த அன்பின் காரணமாக, அவளுக்கு பயம் என்பது தெரியவில்லை. உண்மையான அன்பு பயம் அறியாது என்பது தெய்வ வாக்கு.
உண்மையான தெய்வ வழிபாட்டிற்கு ஆதார ஸ்ருதியாக இருப்பது அன்பு மட்டுமே. இறைவழிபாடு என்று வருகின்றபோது, எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே நம் நினைவில் இருத்தல் வேண்டும். அந்தப் பரம்பொருள் மீது மாசு மருவற்ற பரிசுத்தமான அன்பைச் செலுத்த வேண்டும். இறைவழிபாடு என்று வரும்போது லோகாயதமான செயல்கள், விருப்பு வெறுப்புகள், உடைமைகள், அதன் பாதுகாப்பு இவைகளெல்லாம் மறைந்து பரம்பொருள் எனும் பிரகாசமான ஒளி மட்டுமே மனத்தை வியாபித்திருக்க வேண்டும். இறைசிந்தனை தவிர வேறு எதற்கும் அங்கு இடமில்லாத நிலை வேண்டும்.
இதைப் பற்றி சொல்லும்போது சுவாமிஜி சொல்கிறார்: ‘தாய்க்குக் குழந்தை மீதுள்ள பாசம், கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன் மீதுமுள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவை அனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பை இறைவன் மீது செலுத்த வேண்டும்’.
இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக சுவாமிஜி சொல்கிறார்:
“எனது குருதேவர் கூறுவார் – ‘இந்த அறையில் ஒரு பை நிறைய பொற்காசுகளும் அடுத்த அறையில் ஒரு திருடனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த அறையில் பொற்காசுப் பை இருப்பது திருடனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்குமானால், அங்கு அவனால் தூங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்தப் பொற்காசுகளை எப்படி எடுப்பது என்பது பற்றித் தான் அவன் நாள் முழுவதும் சிந்தித்துக் கொண்டிருப்பான்’. அதைப் போல ஒருவன் இறைவனை நேசிப்பானானால், வேறு ஒன்றை அவனால் எங்ஙனம் நினைத்துப் பார்க்க முடியும்?”
சுவாமி மற்றொரு கதையொன்றையும் இங்கு சொல்கிறார்.
யோகி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த பக்திமான். அவருக்கு உடலில் புற்றுநோய் வந்துவிட்டது. நோய் முற்றி இறக்கும் தறுவாயை அடைந்தார். அவரைப் பார்க்க வந்த ஒருவர் யோகியைப் பார்த்து, ‘சுவாமி உங்கள் தவ வலிமையாலும் இறைபக்தியாலும் உங்கள் நோயை ஏன் குணப்படுத்திக் கொள்ள முடியாது?’ என்று வினவினார். அதற்கு அந்த யோகி சொன்னார், “இறைவனுக்குப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்ட என் மனத்தை, கேவலம் இந்த உடல் உபாதையைக் குணப்படுத்திக் கொள்வதில் ஈடுபடுத்திக் கொள்ள முடியுமா?” என்றார்.
சுவாமி சொன்ன இந்த வரலாறு ஒரு மகானுக்கு நம் காலத்திலும் நடந்தது என்பதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். காஞ்சியில் வாழ்ந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் மகா சுவாமிகளுக்குக் கண்களில் புரை ஏற்பட்டது. அதை கண் வைத்தியர் வந்து பார்த்து அறுவைச் சிகிச்சை செய்தார். அப்போது ஒரு பக்தர் அவரிடம் கேட்டார், சுவாமி தங்கள் தவ வலிமையால் இந்த நோய் வராமலோ, அல்லது வந்தபின் அதனை மருந்தில்லாமல் குணப்படுத்தவோ முடியாதா? என்றார். பெரியவர் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்துவிட்டுச் சொன்னார், “நான் மீண்டும் பிறவி எடுக்க வேண்டுமென்பது உன் எண்ணமா?” என்றார்.
புராணத்தில் விஸ்வாமித்திர முனிவரும் ஒவ்வொரு முறையும் கோபம் கொண்டு யாரையாவது சபித்துவிடும்போது, அவர் பலகாலம் வருந்தி தவம் செய்த பலன்கள் எல்லாம் போய் மீண்டும் தவம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகப் படிக்கிறோம். அதையேதான் இங்கு ஒரு மகான் சொன்னதாக சுவாஜியும் தன் உரையில் எடுத்துரைக்கிறார்.
‘அன்பு’ பற்றி சுவாமிஜி சொல்ல வந்த கருத்து இது. ‘அன்பு நிரந்தரமானது, முடிவற்ற தியாகம் அது. எல்லாவற்றையும் நாம் கைவிட்டுவிட வேண்டி நேரும். அன்பை அறிந்து கொண்டுவிட்டால், வேறு எதுவுமே தேவைப்படாது. இறைவனை, பரம்பொருளை தந்தையாக, தாயாக, நண்பனாக, குழந்தையாக நேசிக்கலாம்’ என்கிறார் சுவாமிஜி.
ஆம்! மகாகவி பாரதி கண்ணனை இப்படிப் பலபடியாகக் கருதி அவன் மீது பக்தி செய்திருக்கும் செய்தியைத் தான் நாம் அறிந்திருக்கிறோமே.
சுவாமி நமக்கு ஏராளமான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார். அவற்றை முழுமையாக இல்லாவிடினும் ஏதாவது ஒன்றையாவது, முழுமையாகச் செயல்படுத்திப் பார்த்தோமானால் அந்த மகான் சொன்னதற்கும் பொருள் உண்டு, அதனை நாம் படித்தோம், பின்பற்றினோம் என்பதில் நமக்கும் ஒரு திருப்தி உண்டு. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’
$$$