-இந்திரா பார்த்தசாரதி
திரு. இந்திரா பார்த்தசாரதி, பிரபல தமிழ் எழுத்தாளர்; ‘குருதிப்புனல், ராமானுஜர், ஔரங்கசீப், ஏசுவின் தோழர்கள்’ உள்ளிட்ட 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; சரஸ்வதி சம்மான் சாஹித்ய அகாதெமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சொந்த ஊர் கும்பகோணம். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே….

துறவி என்றால் உலக ஆசை அனைத்தையும் துறந்துவிட்டு காட்டுக்குப் பொய் வசிப்பவர்கள் என்று அர்த்தம் இல்லை; தன்னலம் துறந்தவர்கள் என்பது தான் பொருள்.
‘பற்றிலன் ஈசனும் நீயும் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே’ என்ற திருவாய்மொழிக்குப் பொருள் உரைக்கும்போது, ‘ஈண்டு, இறைவன் பற்றை இல்லமாகக் கொண்டிருக்கிறான், நீயும் பற்றை இல்லமாகக் கொண்டு வாழ வேண்டும் என்கிறது. அதாவது, இறைவன் உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்கள் மீதும் அன்பு கொண்டு ஆதரிக்கின்றான். அதுபோல நீயும் உலக மக்கள் மீது ஈடுபாடு கொண்டு தொண்டு செய்ய வேண்டும். இதில் தன்னலம் குறுக்கிடக் கூடாது. இதுவே உண்மையான துறவறம் என்கிறது இதைத் தான் ‘கைங்கர்யம் என்றார் ராமானுஜர்..
சுவாமி விவேகானந்தரை ‘துறவி’ என்று குறிப்பிடும்போது இப்பொருளைத் தான் மனதில் கொள்கிறோம்.பாரத மக்கள் மீது விவேகானந்தருக்கு அளவற்ற பற்று இருந்தது. தத்துவ தரிச்சனத்தில் உலகத்துக்கே வழிகாட்டியாக இருந்த பாரத தேசம், அவர் வாழ்ந்த காலத்தில், தவநெறி கெட்டு, மக்கள் அறியாமையிலும் வறுமையிலும் வாடுவதைக் கண்டு பொங்கி, ‘எழுமின், விழிமின்’ என்பதை அவர்களுக்குத் தேவையான தாரக மந்திரமாக அறிவுறுத்தினார் பொற்காலத்தைக் காணப் போகும் பாரதமே அவருடைய கனவாகவும் இருந்தது.
அவர் கனவு நிறைவேறிவிட்டதா?
‘நள்ளிரவில் விடுதலை பெற்றோம்
இன்னும் விடியவே இல்லை’.’
அரசியல் விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று. அறக் கோட்பாடுகளை அஸ்திவாரமாகக் கொண்டு அமையும் சமதர்ம ஆட்சி’ என்றார் காந்தி அடிகள். இது தான் அவர் வலியுறுத்திய ‘ராமராஜ்யம்’. விவேகானந்தர் தம் கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் இதே கருத்தைத் தான், அதாவது ஒவ்வொரு மனிதனும் பலன் கருதாது தர்ம ஆவேசம் கொண்டு தன் பணியைச் சமூகத்துக்கு ஆற்ற வேண்டும் என்பதைத் தான் அடிக்கடிக் குறிப்பிட்டு வந்தார்.
ஆனால் நாம் இன்று காணும் பாரத சமுதாயத்தில் அரசியல் சீரழிவின் காரணமாக ‘தர்மம்’, ஒழுக்கம் போன்ற சொற்கள் அகராதியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டன அரசியல் சௌகர்யங்களே எதனையும் நியாயப்படுத்திக் காட்டும் உன்னதக் கோட்பாடு என்ற நிலை வந்துவிட்டது. ‘ஆயிரம் உண்டிங்கு சாதி, இதில் அன்னியர் வந்து புகலென்ன நீதி?’ என்று ஆங்கிலேயர் சுதந்திரம் கொடுக்காமல் இருப்பதற்கு சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒரு காரணமாகக் காட்டியபோது, கொதித்துக் குமுறினார் பாரதி. துரதிர்ஷ்ட வசமாக இன்று ‘ஆயிரம்’ பல்லாயிரமாகி விட்டது.
ஹிந்து மதத்தின் இக்குறைபாட்டினை, பாரத நாட்டில் சென்ற இடமெல்லாம் சொல்லி இதனைக் களைய வேண்டும் என்று கூறிய விவேகானந்தர், இன்றைய பாரத நிலையைக் காணும்போது எப்படி வேதனையுற்றிருப்பார் பாருங்கள்!
ஆனால், இதைக் கண்டு அவர் சோர்வுறக் கூடியவரல்லர். அசாத்திய ஆத்ம பலமும், அஞ்சா நெஞ்சமும், பிரமிக்கத் தக்க நாவன்மையும் உடையவர் விவேகானந்தர். அவர் இன்றிருந்தால் பாரதம் முழுவதும் சுற்றி இன்றைய அவக்கேடுகளை எல்லாம் புறம் காணும் புனிதப் பணியில் தம்மை அர்ப்பணித்திருப்பார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.
நன்றி: ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல ஆண்டுவிழா மலர் 2013, பக்கம்: 30.
$$$