-மகாகவி பாரதி
அறிவுரை கேளாச் செவியனான தனது மைந்தனின் அடத்தைக் கண்டு வெறுத்துப்போன்ன மன்னர் திருதராஷ்டிரன், எதிர்காலத் தீமையை எண்ணி நானினாலும், வேறு வழியின்றி பாண்டவரை சூதுக்கு அழைக்க உடன்படுகிறார். இதனை விரித்துச் சொல்ல ஆர்வமின்றி, இரண்டே பாடல்களில் முடித்து விடுகிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1.14. திரிதராட்டிரன் சம்மதித்தல்
வேறு
‘விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு
வேறு செய்வார் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே-இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
”அதிசயக் கொடுங் கோலம்-விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும்”என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்-”நின்றன்
சதியினிற் றானது விளையும்”-என்றான். 107
‘விதி!விதி!விதி!மகனே!-இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ-இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய்,’-என்று
விழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான். 108
$$$