பாஞ்சாலி சபதம்- 1.1.13

-மகாகவி பாரதி

தந்தையின் அறவுரை துரியனை மேலும் வெறிகொள்ளச் செய்கிறது. இளையவர் ஆற்றல் பெருகுவது பின்னாளில் தனது ஆட்சிக்கு இடையூறாகும் என்கிறான்; பாண்டவரின் மீது மதிப்புக் கொண்ட அமைச்சன் விதுரன் தனது தந்தையை தவறாக வழிநடத்துவதாக ஏசுகிறான்; எவ்வகையிலேனும் ஆட்சியை விரிவாக்குவதே மன்னவன் கடமை என்கிறான்; இறுதியில், தந்தை தனக்கு உடன்படாவிடில், தனது சிரமறுத்து அங்கேயே சாவேன் என்றும் மிரட்டுகிறான். இவை அனைத்தையும் இனிய பாடலாகத் தருகிறார் மகாகவி பாரதி....

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.3. துரியோதனன் பதில்

வேறு

தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே,
      தாரி சைந்த நெடுவரைத் தோளான்;
‘எந்தை, நின்னொடு வாதிடல் வேண்டேன்
      என்று பன்முறை கூறியும் கேளாய்;
வந்த காரியங் கேட்டிமற் றாங்குன்
      வார்த்தை யின்றிஅப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்

.இங்கு நின்முன் என்ஆவி இறுப்பேன்.       97

‘மதித மக்கென் றிலாதவர் கோடி
      வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்.
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
      பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்;
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
      சுருதி யாமெனக் கொண்டனை நீ தான்;
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
      ஐவர் மீதில்,இங் கெம்மை வெறுப்பான்.       98

‘தலைவன் ஆங்கு பிறர்கையில் பொம்மை;
      சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ?
உலைவ லால் திரி தாட்டிர வர்க்கத்
      துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமும் மாண்பும்
      நித்தம் தேடி வருந்த விலாமே
”விலையி லாநிதி கொண்டனம்”என்றே
      மெய்கு ழைந்து துயில்பவர் மூடர்.       99

‘பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
      பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே
      வென்ற ழிக்கும் விதிஅறி யாயோ?
குழைத்த லென்பது மன்னவர்க் கில்லை;
      கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்;
பிழைஒன்றேஅர சர்க்குண்டு,கண்டாய்

.பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல்.       100

வேறு

‘செல்வதெங் குலத்தொழி லாம்;-எந்த
      விதத்தினில் இசையினும் தவறிலை காண்!
நல்வழி தீய வழி-என
      நாமதிற் சோதனை செயத்தகு மோ?
செல்வழி யாவினுமே-பகை
      தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்;
கொல்வது தான் படையோ?-பகை
      குமைப்பன யாவும்நற் படையல வோ?       101

வேறு

‘சுற்றுத் தாரிவர் என்றனை ஐயா!
      தோற்றத் தாலும் பிறவியி னாலும்;
பற்றலா ரென்றும் நண்பர்க ளென்றும்
      பார்ப்ப தில்லை உலகினில் யாரும்;
மற்றெத் தாலும் பகையுறல் இல்லை;
      வடிவினில் இல்லை அளவினில் இல்லை;
உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம்,
      ஓர்தொ ழில்பயில் வார்தமக் குள்ளே.       102

‘பூமித் தெய்வம் விழுங்கிடுங் கண்டாய்
      புரவ லர்பகை காய்கிலர் தம்மை;
நாமிப் பூதலத் தேகுறை வெய்த
      நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்.
நேமி மன்னர் பகைசிறி தென்றே
      நினைவ யர்ந்திருப் பாரெனில்,நோய்போல்,
சாமி,அந்தப் பகைமிக லுற்றே
      சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய்.       103

‘போர்செய் வோமெனில் நீ தடுக்கின்றாய்,
      புவியினோரும் பழிபல சொல்வார்,
தார்செய் தோளினம் பாண்டவர் தம்மைச்
      சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்;
யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான்
      எங்க ளாருயிர் போன்றைஇம் மாமன்;
நேர்செய் சூதினில் வென்று தருவான்;
      நீதித் தர்மனும் சூதில்அன் புள்ளோன்.       104

‘பகைவர் வாழ்வினில் இன்புறு வாயோ?
      பாரதர்க்கு முடிமணி யன்னாய்!
புகையும் என்றன் உளத்தினை வீறில்
      புன்சொற் கூறி அவித்திட லாமோ!
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்;
      நமரிப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையு றுந்துன்ப மேது? நம் மோடு
      வேறு றாதெமைச் சார்ந்து நன் குய்வார்.       105

‘ஐய,சூதிற் கவரை அழைத்தால்,
      ஆடி உய்குதும்,அஃதியற் றாயேல்,
பொய்யன் றென்னுரை,என்னியல் போர்வாய்;
      பொய்ம்மை னிறென்றுஞ் சொல்லிய துண்டோ?
நைய நின்முனர் என்சிரங் கொய்தே
      நானிங் காவி இறுத்திடு வேனால்;
செய்ய லாவது செய்குதி;’என்றான்;
      திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான்.       106

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s