-மகாகவி பாரதி

5. சுதேசமித்திரன் 22.02.1916
இன்று நமது தராசுக் கடைக்குச் சென்னப் பட்டணத்திலிருந்து ஒரு காலேஜ் மாணாக்கர் வந்து சேர்ந்தார்.
“ஓய்.எம்.ஸி.ஏ.யில் மிஸ்டர் காந்தி செய்த உபந்யாசத்தைப் பற்றி உம்முடைய ‘ஒப்பினியன்’ எப்படி?” என்று அந்த மாணாக்கர் கேட்டார்.
“இதென்னடா, கஷ்டகாலம்! காலை வேலையில் இந்த மனுஷன் ஹிந்துஸ்தானி பேச வந்தான்!” என்று சொல்லித் தராசு நகைக்கலாயிற்று. தராசுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஹிந்துஸ்தானி யதார்த்தத்திலே தெரியும். தெரியாததுபோல சில சமயங்களில் பாவனை செய்வதுண்டு.
ஒய்.எம்.ஸி.ஏ. என்பது வாலிபர் கிறிஸ்தவ சங்கம் என்று பெயர் கொண்ட ஒரு சபையைக் குறிப்பிடுவது. அந்த சபையாரின் பிரசங்க மண்டபத்தில் ஸ்ரீமான் காந்தி சில தினங்களின் முன்பு உபந்யாசம் செய்தாராம். அந்த உபந்யாசத்தைப் பற்றி, ‘ஏ தராசே, உன்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள வேண்டுகிறார்’ என்று தராசை நோக்கிச் சொன்னேன்.
அபிப்பிராயமென்ன? என்று கேட்டது தராசு.
ராஜீய விஷயத்தைக் கலக்காமல் பேசும் என்று நான் விண்ணப்பம் செய்து கொண்டேன்.
காலேஜ் மாணாக்கர் சொல்லுவதானார்:-
ஸ்ரீமான் காந்தி வாசம் செய்யும் ஆமதாபாதில் சத்யாக்கிர ஆசிரமம் ஏற்படுத்தியிருக்கிறார். அந்த ஆசிரமத்தில் யௌவனப் பிள்ளைகள் பலரை வைத்துக் கொண்டு அவர்களை தேச சேவைக்குத் தயார்படுத்துகிறார். அவருடைய ஆசிரமத்திலே பயிற்சி பெறுவோருக்குச் சில விரதங்கள் அவசியமென்று ஏற்படுத்தியிருக்கிறார். உண்மையிலே லோகோபகாரம் செய்ய விரும்புவோர் எல்லோருமே மேற்படி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்பது அவருடைய கொள்கை. கிறிஸ்தவ சங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அந்த விரதங்களைக் குறித்துத் தான் பேசினார். விசேஷமாக அவர் வற்புறுத்திச் சொல்லிய விஷயங்கள் பதினொன்று. அவை பின்வருமா:-
1. சத்ய விரதம்:- எப்போதும், யாரிடத்திலும், என்ன துன்பம் நேரிட்டாலும், பிரஹ்லாதனைப் போல ஒருவன் உண்மையே பேசவேண்டும்.
2. அஹிம்சா விரதம்:- எவ்வுயிருக்கும் துன்பஞ் செய்யலாகாது; யாரையும் பகைவராக நினைக்கலாகாது; ஒருவன் உன்னை அடித்தால் நீ திரும்பி அடிக்கக் கூடாது.
3. பிரமசரியம்:- விவாகம் பண்ணிக் கொள்ளக் கூடாது; ஏற்கெனவே மனைவியிருந்தால் அவளை சஹோதரம் போல நடத்த வேண்டும்.
4. நாக்கைக் கட்டுதல்:- உணவிலே மசாலா சேரக் கூடாது; ருசியை விரும்பி உண்பது பிழை; அதனால் உஷ்ணம் அதிகரித்து, போக இச்சையுண்டாகிறது.
5. உடைமை மறுத்தல்:- ஒருவன் ஒரு பொருளையும் தனது சொத்தாகக் கொள்ளலாகாது.
6. சுதேசியம்:- நமது தேசம், நமது ஜில்லா, நமது கிராமத் தொழிலை முதலாவது ஆதரிக்க வேண்டும்; நமது தேசம், நமது ஜில்லா, நமது கிராமத்து அம்பட்டன் நேரே க்ஷவரம் செய்யாமல் போனாலும், அவனுக்குப் பயிற்சி உண்டாகும்படி செய்து நாம் அவனிடமே க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். வெளியூர் அம்பட்டனை விரும்பக் கூடாது.
7. பயமின்மை:- எதற்கும் நடுங்காத நெஞ்சம் வேண்டும். அஃதுடையவனே பிராமணன்.
8. தீண்டல்:- தீண்டாத ஜாதி என்று ஒருவரையொருவர் அமுக்கி வைப்பது பாவம். அது பெருங்கேடு. எந்த ஜாதியையுந் தீண்டலாம்.
9. தேச பாஷை:- தேச பாஷையிலேயே கல்வி பயில வேண்டும்.
10. தொழிற் பெருமை:- எல்லாத் தொழில்களுக்கும் சமமான மதிப்புண்டு. ஒரு தொழில் இழிவாகவும் மற்றொரு தொழில் உயர்வாகவும் கருதலாகாது.
11. தெய்வ பக்தி:- பொதுக் காரியங்களிலும் ராஜீய விஷயங்களிலும் பாடுபடுவோருக்கு தெய்வ பக்தி வேண்டும்.
இதுதான் ஸ்ரீ காந்தி செய்த பிரசங்கத்தின் சாராம்சம்.
தராசு சொல்லலாயிற்று:-
“ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர்.
“அவர் செல்லுகிற சத்ய விரதம், அஹிம்சை. உடைமை மறுத்தல். பயமின்மை- இந்த நான்கும் உத்தம தர்மங்கள்- இவற்றை எல்லோரும் இயன்ற வரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திரும்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை.
“சுதேசியம், ஜாதி சமத்வம், தேச பாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்.
“நாக்கைக் கட்டுதல், பிரமசரியம், இவையிரண்டையும் செல்வர்கள், இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை. அவர்களுக்கு நாக்கை ஏற்கனவே கட்டித்தான் வைத்திருக்கிறது. பிரமசரியத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீ காந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை. அந்த வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லாமல் போய்விடும்.
காந்தி பதினோரு விரதம் சொன்னார். நான் பன்னிரண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது யாதெனில்:- எப்பாடுபட்டும் பொருள் தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலைபெறு. ‘இப்பன்னிரண்டாவது விரதத்தை தேசமுழுதும் அனுஷ்டிக்க வேண்டும்.
- சுதேசமித்திரன் 22.02.1916
$$$