-மகாத்மா காந்தி

16. கறுப்புப் பிளேக் – 2
காலி வீட்டை எடுத்துக்கொண்டு, நோயாளிகளையும் கவனித்துக் கொண்டதற்காக நகரசபை நிர்வாகி எனக்கு நன்றி தெரிவித்து எழுதினார். இப்படிப்பட்டதோர் அவசர நிலைமையைச் சமாளிப்பதற்கு நகரசபையிடம் உடனே செய்வதற்கான சிகிச்சை முறைகள் எவையும் இல்லை என்பதையும், அவர் மனம்விட்டு ஒப்புக்கொண்டார். நகரசபை தனது கடமையைக் குறித்து விழிப்படைந்தது; துரிதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுவதில் காலதாமதம் செய்யவில்லை.
மறுநாள், காலியாக இருந்த ஒரு கிடங்கை என்னிடம் ஒப்படைத்தார்கள். நோயாளிகளை அங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளலாம் என்றும் யோசனை கூறினர். ஆனால், அந்த இடத்தைச் சுத்தம் செய்யும் வேலையை நகரசபை எடுத்துக்கொள்ளவில்லை. அக் கட்டிடம் மிகவும் அசுத்தமாகவும் வசதியில்லாமலும் இருந்தது. அதை நாங்களே சுத்தம் செய்து கொண்டோம். தரும சிந்தனையுள்ள இந்தியரின் உதவியைக் கொண்டு சில படுக்கைகளையும் தேவையான மற்றவைகளையும் சேகரித்தோம். இவ்வாறு அதைத் தாற்காலிகமானதோர் வைத்திய சாலையாக்கிக் கொண்டோம். நகர சபை, உதவிக்கு ஒரு தாதியை அனுப்பியது. பிராந்தி முதலிய மற்ற ஆஸ்பத்திரிச் சாதனங்களுடன் அவர் வந்தார். டாக்டர் காட்பிரேயே இன்னும் பொறுப்பு வகித்து வந்தார். தாதி மிகுந்த அன்பானவர். தாமே நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய விரும்பினார். நோய் அவருக்கும் தொத்தி விடக்கூடும் என்பதற்காக நோயாளிகளைத் தொட அவரை நாங்கள் விடவில்லை.
நோயாளிகளுக்கு அடிக்கடி பிராந்தி கொடுக்குமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நோய்த் தடுப்பு முறையாகத் தாதியும் அடிக்கடி பிராந்தி சாப்பிட்டார். அதே போல எங்களையும் சாப்பிடச் சொன்னார். ஆனால், எங்களில் யாரும் அதைத் தொடவில்லை. நோயாளிகளுக்குக்கூட அது பயனளிக்கவல்லது என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. டாக்டர் காட்பிரேயின் அனுமதியின்பேரில் பிராந்தி சாப்பிடாமலேயே இருக்கத் தயாராயிருந்த மூன்று நோயாளிகளுக்கு மண் சிகிச்சை அளித்து வந்தேன். அவர்களுடைய தலைக்கும் மார்புக்கும் ஈர மண் வைத்துக் கட்டினேன். அவர்களில் இருவர் பிழைத்துக் கொண்டார்கள். கிடங்கிலிருந்த மற்ற இருபது பேர் இறந்து விட்டனர்.
இதன் நடுவே நகரசபை மற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுவதில் தீவிரமாக இருந்தது. ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து ஏழு மைல் தூரத்தில் தொத்துநோய் கண்டவர்களை வைப்பதற்கு என்று ஓர் இடம் இருந்தது. பிழைத்திருந்த இருவரையும் அங்கிருந்த கூடாரங்களுக்குக் கொண்டுபோயினர். புதிதாக நோய் கண்டவர்களை அங்கே கொண்டு போவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். இவ்விதம் இவ் வேலையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.
சில தினங்களுக்கெல்லாம் அந்த நல்ல தாதி அந்நோய் கண்டு இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டோம். நோயாளிகளில் அந்த இருவர் மாத்திரம் எப்படிப் பிழைத்தார்கள், எங்களுக்கு மாத்திரம் அந் நோய் எப்படிப் பற்றாமல் இருந்தது என்பதைக் கூறுவது சாத்தியமில்லை. ஆனால், இதில் ஏற்பட்ட அனுபவம், மண் சிகிச்சையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. மருந்து என்ற வகையில்கூட, பிராந்தியின் ஆற்றலில் எனக்கு இருந்த நம்பிக்கையின்மை பலப்பட்டது. இந்த நம்பிக்கையோ அல்லது இந்த நம்பிக்கையின்மையோ எந்த உறுதியான ஆதாரத்தையும் கொண்டது அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், அன்று நான் பெற்ற கருத்து இன்றும் எனக்கு அப்படியே இருந்து வருகிறது. ஆகையால், அதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதினேன்.
பிளேக் நோய் கண்டதும் நகரசபையைக் கண்டித்து பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதினேன். இந்தியர் குடியிருந்த பகுதி நகரசபைக்குச் சொந்தமாகிவிட்ட பிறகு அச்சபை அசட்டையாக இருந்துவிட்ட குற்றத்தைச் செய்திருக்கிறது என்றும், பிளேக் தோன்றியதற்கே அவர்கள்தான் பொறுப்பு என்றும் அதில் எழுதினேன். அந்தக் கடிதத்தினால் ஸ்ரீ ஹென்றி போலக் எனக்குக் கிடைத்தார். காலஞ்சென்ற பூஜ்யர் ஜோஸப் டோக்கின் நட்பு ஏற்பட்டதற்கும் அதுவே ஓரளவுக்குப் பொறுப்பாயிற்று.
ஒரு சைவ உணவு விடுதியில் நான் சாப்பிடுவது வழக்கம் என்று முந்திய அத்தியாயம் ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அங்கே தான் ஸ்ரீ ஆல்பர்ட் வெஸ்ட்டைச் சந்தித்தேன். ஒவ்வொரு நாள் மாலையில் இந்த விடுதியில் நாங்கள் சந்தித்துச் சாப்பிட்ட பிறகு உலாவப் போவது வழக்கம். ஒரு சிறு அச்சகத்தில் ஸ்ரீ வெஸ்ட் கூட்டாளி. பிளேக் நோய் ஏற்பட்டதைக் குறித்து நான் எழுதியிருந்த கடிதத்தை அவர் பத்திரிகையில் படித்தார். என்னை அந்த விடுதியில் காணாது போகவே அவருக்குக் கவலையாகிவிட்டது.
தொத்து நோய் ஏற்படும் காலங்களில் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு விடுவது என்பதை நீண்ட காலமாகவே நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிளேக் நோய் ஏற்பட்டதும் நானும் என் சக ஊழியர்களும் எங்கள் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டுவிட்டோம். ஆகையால், இந்த நாட்களில் மாலையில் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். மத்தியானச் சாப்பாட்டைக்கூட மற்ற விருந்தினர் வருவதற்கு முன்னால் சாப்பிடுவேன். அந்தச் சாப்பாட்டு விடுதியின் சொந்தக் காரரை எனக்கு நன்றாகத் தெரியும். பிளேக் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும் வேலையில் நான் ஈடுபட்டிருப்பதால் சாத்தியமான வரையில் நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்வது என்று இருக்கிறேன் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்.
சாப்பாட்டு விடுதியில் இரண்டொரு நாட்கள் என்னைக் காணாது போகவே ஸ்ரீ வெஸ்ட், ஒரு நாள் காலையில் என் வீட்டிற்கு வந்தார். உலாவப் போவதற்கு அப்பொழுதுதான் நான் தயாராகிக் கொண்டிருந்தேன். நான் கதவைத் திறந்ததும் ஸ்ரீ வெஸ்ட் கூறியதாவது: “உங்களைச் சாப்பாட்டு விடுதியில் காணவில்லை. எனவே, உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ என்று பயந்து விட்டேன். ஆகையால், உங்களை வீட்டிலாவது போய்ப் பார்ப்போம் என்பதற்காகக் காலையில் புறப்பட்டு வந்தேன். இப்பொழுது நீங்கள் சொல்லும் பணியைச் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன். நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் உதவி செய்யத் தயாராயிருக்கிறேன். என்னால் பராமரிக்கப்பட வேண்டியவர்கள் யாருமில்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.”
என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொண்டேன். ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல் பின்வருமாறு பதில் சொன்னேன்: “உங்களை நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. மேற்கொண்டும் புதிய நோயாளிகள் இல்லை என்றால், இரண்டொரு நாளில் எங்களுக்கே வேலையிராது ஆனால், நீங்கள் செய்யக் கூடியது ஒன்று இருக்கிறது.”
“அது என்ன?” என்று அவர் கேட்டார்.
“டர்பனிலிருக்கும் ‘இந்தியன் ஒப்பீனியன்’ அச்சக நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளுவீர்களா? ஸ்ரீ மதன்ஜித்துக்கு இங்கே வேலை இருக்கிறது. டர்பனில் யாராவது இருக்க வேண்டியிருக்கிறது. உங்களால் அங்கே இருக்க முடியுமானால் எனக்கு அந்தக் கவலை நீங்கியதாக எண்ணுவேன்” என்றேன்.
“எனக்கும் ஓர் அச்சகம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அநேகமாக நான் அங்கே போவது சாத்தியமாகலாம். ஆனால், என் முடிவான பதிலை இன்று மாலை கூறலாமல்லவா? மாலையில் நாம் உலாவப் போகும்போது அதைக் குறித்துப் பேசுவோம்” என்றார்.
நான் மகிழ்ச்சியடைந்தேன். மாலையில் பேசினோம். போவதற்குச் சம்மதித்தார். சம்பளத்தைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. ஏனெனில், பணம் அவர் நோக்கமல்ல. என்றாலும், மாதம் 10 பவுன் சம்பளமும், ஏதாவது லாபம் வந்தால் அதில் ஒரு பங்கும் என்ற முடிவுக்கு வந்தோம். தமக்கு வர வேண்டிய பணத்தை வசூலிக்கும் வேலையை என்னிடம் விட்டுவிட்டு அன்று மாலை மெயில் ரெயிலிலேயே ஸ்ரீ வெஸ்ட், டர்பனுக்குப் புறப்பட்டார். அன்று முதல், தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலேறிய வரையில், அவர் என்னுடைய இன்ப துன்பங்களில் பங்காளியாக இருந்து வந்தார்.
லௌத்தில் (லின்கன்ஷயர்) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வெஸ்ட். சாதாரணப் பள்ளிப் படிப்புத்தான் அவர்பெற்றிருந்த கல்வி. ஆனால், அனுபவம் என்ற பள்ளியிலும், திடமான சுயமுயற்சியினாலும் அவர் எவ்வளவோ அறிந்து கொண்டிருந்தார். அவர் எப்பொழுதும் தூய்மையும், நிதானமும், காருண்யமும், கடவுள் பக்தியுமுள்ள ஆங்கிலேயராக இருக்கக் கண்டேன்.
இனி வரும் அத்தியாயங்களில் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி அதிகமாகக் கவனிப்போம்.
$$$
17. ஒதுக்கலிடம் எரிந்தது
நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளவேண்டிய வேலை எனக்கும் என் சக ஊழியர்களுக்கும் இல்லாது போயிற்று என்றாலும் கறுப்புப் பிளேக்கினால் ஏற்பட்ட பல காரியங்களை நாங்கள் இன்னும் கவனிக்க வேண்டியிருந்தது.
இந்தியர் குடியிருப்பு ஒதுக்கல் பகுதி சம்பந்தமாக நகரசபை சிரத்தையின்றி இருந்துவிட்டதைக் குறித்து முன்னால் கூறியிருக்கிறேன். ஆனால், வெள்ளைக்காரரின் சுகாதாரத்தைப் பற்றிய வரை அச்சபை அதிக விழிப்புடனேயே இருந்தது. வெள்ளைக்காரரின் தேகநிலை கெடாமலே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவதற்காக நகரசபை ஏராளமான தொகையைச் செலவிட்டு வந்தது. இப்பொழுது பிளேக் நோயை ஒழிப்பதற்குப் பணத்தைத் தண்ணீர் போல வாரி இறைத்தது. இந்தியர் விஷயத்தில் அச்சபை செய்தது, செய்யாமலிருந்து விட்டது ஆகியவைகளை குறித்து அநேக குற்றச்சாட்டுகளை நான் அதன் மீது சுமத்தியிருந்த போதிலும், நகரிலிருந்த வெள்ளைக்கார மக்களின் நலன் விஷயத்தில் அது காட்டிய அக்கறையை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அதனுடைய சிறந்த முயற்சிக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்தேன். நகரசபைக்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்காதிருந்திருப் பேனாயின், அதனுடைய வேலைகள் அதிகக் கஷ்டமானதாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது ஆயுதந்தாங்கிய படை பலத்தை உபயோகிக்கவும், இன்னும் மோசமான முறைகளைக் கையாளவும் அச்சபை தயங்கியிராது.
ஆனால், அப்படி எதுவும் நடவாதபடி செய்துவிட்டோம். இந்தியர் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து நகரசபையினர் சந்தோஷம் அடைந்தார்கள். பிளேக் சம்பந்தமான எதிர்கால வேலைகள் பலவும் சுலபமாக்கப்பட்டன. நகரசபை விரும்புபவைகளுக்கெல்லாம் இந்தியர் உடன்பட்டு நடந்துகொள்ளும்படி செய்வதில் இந்திய சமூகத்தினரிடம் எனக்கு இருந்த முழுச் செல்வாக்கையும் உபயோகித்துக் கொண்டேன். எல்லாவற்றிற்குமே உடன்பட்டுச் செய்துகொண்டு போவது என்பது இந்தியருக்குக் கஷ்டமாகவே இருந்தது. ஆனால் என் ஆலோசனையை எந்த இந்தியரும் மறுதலித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
அந்த ஒதுக்கல் குடியிருப்புப் பகுதிக்குப் பலமான காவல் போட்டுவிட்டார்கள். அனுமதியில்லாமல் உள்ளே போவதோ, உள்ளே இருந்து வெளியே வருவதோ இயலாது. நானும் என் சக ஊழியர்களும் மாத்திரம் நினைத்தபோது உள்ளே போய்வருவதற்கு அனுமதிச் சீட்டுகள் கொடுத்திருந்தார்கள். அப் பகுதியில் குடியிருந்தவர்களை யெல்லாம் காலி செய்துவிடச் செய்வது, அவ்விதம் காலி செய்து விட்டவர்களெல்லாம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து பதின்மூன்று மைல் தூரத்திலுள்ள ஒரு திறந்த மைதானத்தில் கூடாரங்களில் வசிக்கும்படி செய்வது, பிறகு இந்த ஒதுக்கல் பகுதிக்கே தீ வைத்துவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. உணவுப் பொருள்கள் போன்ற அவசியமான பொருள்களுடன் இவர்களைக் கூடாரங்களில் போய் வசிக்கும்படி செய்யக் கொஞ்சகாலம் ஆகும். ஆகவே, இதற்கு நடுவில் காவல் போட வேண்டியது அவசியமாயிற்று.
மக்களோ, மிகவும் பயந்து போயிருந்தனர். ஆனால், நான் அடிக்கடி போய்க் கொண்டிருந்தது அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏழைகள் பலர், தங்களிடமிருந்த சிறு பொருள்களையெல்லாம் புதைத்து வைத்துவிடுவது வழக்கம். அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் “பாங்கு”கள் இல்லை. “பாங்க்” என்பது இன்னது என்றே அவர்களுக்குத் தெரியாது. நானே அவர்களுடைய ‘பாங்க்’கரானேன். ஏராளமான பணம் வந்து என் அலுவலகத்தில் குவிந்தது. இத்தகையதோர் நெருக்கடியில் என் உழைப்புக்காக எந்தக் கட்டணமும் விதிப்பதற்கில்லை. எப்படியோ இந்த வேலைகளையும் சமாளித்துக் கொண்டேன். நான் கணக்கு வைத்திருந்த பாங்கின் நிர்வாகியை நான் நன்றாக அறிவேன். இப்பணத்தையெல்லாம் அவர் பாங்கில் நான் போட்டுவைக்க வேண்டியிருக்கிறது என்று அவரிடம் கூறினேன். செப்புக் காசுகளையும் வெள்ளிப் பணத்தையும் ஏராளமாக வாங்கிக் கொள்ளுவது சிரமமானதால் வாங்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. பிளேக் நோய் பரவியிருக்கும் பகுதியிலிருந்து வருகிற பணம் என்பதனால், அதைத் தொடுவதற்கும் பாங்குக் குமாஸ்தாக்கள் மறுத்து விடக்கூடும் என்ற பயமும் இருந்தது. ஆனால், பாங்கு நிர்வாகி எல்லா வகையிலும் எனக்குச் சௌகரியம் செய்து கொடுத்தார். அப்பணத்தையெல்லாம் பாங்குக்கு அனுப்புவதற்கு முன்னால் அவற்றில் விஷக்கிருமிகள் இல்லாதபடி மருந்து கொண்டு சுத்தம் செய்து அனுப்புவது என்று தீர்மானித்தோம். சுமார் அறுபதாயிரம் பவுன் வரையில் பாங்கில் கட்டினோம் என்பது எனக்கு ஞாபகம். பணம் அதிகமாக வைத்திருந்தவர்களை – குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே வாங்குவது என்ற முறைப்படி – டிபாசிட்டில் போடும்படி சொன்னேன். அவர்களும் என் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். இதன் பலனாக, பணத்தைப் பாங்கில் போட்டுவைக்கும் வழக்கத்தைச் சிலர் கைக்கொண்டார்கள்.
ஒதுக்கல் பகுதியில் இருந்தவர்களைத் தனி ரெயிலில் ஜோகன்னஸ்பர்க்குக்கு அருகில் கிளிப்ஸ் புரூயிட் பண்ணைக்குக் கொண்டு போயினர். அங்கே அவர்களுக்கு நகரசபை தனது சொந்தச் செலவில் உணவுப் பொருள்களை அளிக்க ஏற்பாடு செய்தது. கூடாரங்களினாலாகிய இந்த நகரம், ஒரு ராணுவ முகாம்போலத் தோன்றியது. மக்கள், கூடாரங்களில் வாழ்ந்து பழக்கமில்லாததனால் எப்படி இருக்குமோ என்று கஷ்டத்துடன் இருந்தார்கள். ஆனால், அங்கே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் கண்டு திகைத்துப் போயினர். குறிப்பிடத்தக்க அசௌகரியம் எதுவும் அவர்களுக்கு இல்லை. தினமும் சைக்கிளில் அந்த இடத்திற்கு நான் போய் வருவேன். அங்கே குடியேறிய இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் மக்கள் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து குதூகலமாக வாழ ஆரம்பித்துவிட்டனர். நான் அங்கே போன சமயங்களிலெல்லாம் அவர்கள் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பதையே கண்டேன். திறந்தவெளியில் மூன்று வாரங்கள் வசித்ததால் அவர்களுடைய தேக நிலையும் விருத்தியடைந்தது.
இவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்ட மறுநாளே அந்த ஒதுக்கல் பகுதி தீயிடப்பட்டுவிட்டது என்றுதான் எனக்கு ஞாபகம். தீயினுக்கு இரையாகாமல் எதையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் நகரசபைக்கு சிறிதேனும் இல்லை. அதே சமயத்தில்தான் – இதே காரணத்திற்காகவே – மார்க்கெட்டிலிருந்த நகரசபையின் மர உத்திரங்கள் எல்லாவற்றையும் கொளுத்தி விட்டார்கள். இதனால் நகரசபைக்கு பத்தாயிரம் பவுன் போல் நஷ்டம். மார்க்கெட்டில் எலிகள் செத்துக் கிடக்கக் கண்டதே இத் தீவிரமான நடவடிக்கைக்குக் காரணம்.
நகரசபைக்குச் செலவு ஏராளமாக ஆயிற்று. என்றாலும், மேற்கொண்டும் பிளேக் பரவாதபடி வெற்றிகரமாகத் தடுத்து விட்டார்கள். நகர மக்களும் பயம் தீர்ந்து பெருமூச்சு விட்டனர்.
$$$
18. ஒரு நூலின் மந்திர சக்தி
கறுப்புப் பிளேக், ஏழை இந்தியரிடையே என் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அதனால், என் தொழில் வருவாயும் அதிகமானதோடு என் பொறுப்பும் அதிகமாயிற்று. புதிதாகத் தொடர்பு ஏற்பட்ட ஐரோப்பியருடன் நெருங்கிப் பழகியதனால் எனக்கு ஒழுக்க ரீதியான கடமைகள் அதிகமாயின.
சைவச் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீ வெஸ்ட் எனக்குப் பழக்கமானது போல, ஸ்ரீ போலக்கும் அங்கே பழக்கமானார். ஒரு நாள் மாலை, என் மேஜைக்குக் கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இளைஞர், என்னைப் பார்க்க விரும்புவதாக ஒரு சீட்டு அனுப்பினார். என் மேஜைக்கே வருமாறு அழைத்தேன். அவ்வாறே வந்தார்.
“நான், ‘கிரிடிக்’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியன். என் பெயர் போலக். பிளேக் சம்பந்தமாகப் பத்திரிகைகளுக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் பார்த்தது முதல் தங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்குப் பலமான ஆர்வம் ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார், அவர்.
ஸ்ரீ போலக்கின் கபடமற்ற தன்மை என்னை அவர்பால் இழுத்துவிட்டது. அன்று மாலை நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களிலெல்லாம் நாங்கள் இருவரும் ஒரேவிதக் கருத்து உடையவர்களாக இருப்பதாகத் தோன்றியது. இவர் எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். தமது புத்திக்குப் பிடித்தமாக இருக்கும் எதையும் உடனே நடைமுறையில் கொண்டு வந்துவிடும் அற்புதமான ஆற்றல் அவருக்கு இருந்தது. தம் வாழ்க்கையில் அவர் செய்துகொண்ட மாறுதல்கள், தீவிரமானவைகளாக இருந்ததைப் போன்றே துரிதமாகவும் செய்து கொள்ளப்பட்டவைகளாகும்.
‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகைக்கு நாளுக்குநாள் செலவு அதிகமாகிக்கொண்டு வந்தது. ஸ்ரீ வெஸ்ட் அனுப்பியிருந்த முதல் அறிக்கையே பீதி தருவதாக இருந்தது. அவர் எழுதியதாவது: “லாபம் வரக்கூடும் என்று நீங்கள் நினைத்தது போல இந்த ஸ்தாபனம் லாபம் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நஷ்டமும் வரலாம் என்றே அஞ்சுகிறேன். கணக்குகள் சரிவர இல்லை. வசூலாக வேண்டிய பாக்கி ஏராளமாக இருக்கிறது. அவைகளின் விவரத்தையே புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் அடியோடு மாற்றியாக வேண்டும்! ஆனால், இதையெல்லாம் கேட்டு நீங்கள் பீதியடைந்துவிட வேண்டாம். என்னால் முடிந்த வரையில் எல்லாவற்றையும் ஒழுங்காக்க முயல்கிறேன். லாபம் இருந்தாலும் இல்லாது போனாலும், நான் இங்கே வேலை பார்க்கவே போகிறேன்.”
அதில் லாபம் எதுவும் வராது என்று கண்டதுமே ஸ்ரீ வெஸ்ட் அந்த வேலையைவிட்டுப் போயிருக்கலாம். அவர்மீது நான் குறை சொல்ல முடியாது. உண்மையில் போதுமான ருசுக்கள் இல்லாமல் அந்த ஸ்தாபனம் லாபம் தரக்கூடியதென்று நான் வருணித்ததற்காக என் மீது குற்றஞ் சொல்லவும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு ஒரு வார்த்தையேனும் அவர் புகார் சொல்லவில்லை. என்றாலும், தாம் கண்டுபிடித்த நிலைமை, நான் எவரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவன் என்று என்னை எண்ணும்படி ஸ்ரீ வெஸ்ட்டைச் செய்திருக்கும் என்பதே என் அபிப்பிராயம். ஸ்ரீ மதன்ஜித் கூறியதைப் பரிசீலனை செய்து பார்க்காமலேயே நான் ஏற்றுக்கொண்டு விட்டேன். அதைக் கொண்டு லாபம் வரும் என்று ஸ்ரீ வெஸ்ட்டிடம் சொல்லிவிட்டேன்.
தமக்கு நிச்சயமாகத் தெரியாதவைகளை வைத்துக்கொண்டு பொதுஜன ஊழியர் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். அதிலும் சத்தியத்தை நாடுபவன் இதில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தான் பரிசீலனை செய்து நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும். ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுவிட வேண்டி இருப்பதற்காக மனம் வருந்துகிறேன். இந்த அனுபவம் எனக்கு இருந்தும், பிறரைச் சுலபத்தில் நம்பிவிடும் என் சுபாவத்தை நான் இன்னும் போக்கிக்கொண்டு விடவில்லை. நான் சமாளிக்கக் கூடியதை விட அதிகமான வேலையைச் செய்துவிட எனக்கு இருக்கும் ஆசையே இதற்குக் காரணம். இந்த ஆசை, என்னைவிட என் சக ஊழியர்களுக்கே அதிகத் தொந்தரவாக முடிந்து விடுகிறது.
ஸ்ரீ வெஸ்ட்டின் கடிதம் கிடைத்ததும் நேட்டாலுக்குப் புறப்பட்டேன். ஸ்ரீ போலக் என் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமானவர் ஆகிவிட்டார். என்னை வழியனுப்ப ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். பிரயாணத்தின்போது படிக்க எனக்கு ஒரு புத்தகம் கொடுத்து விட்டுப் போனார். அது எனக்குப் பிடித்தமான புத்தகமாக இருக்கும் என்றும் சொன்னார். ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூலே அது.
இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த பின் நடுவில் கீழே வைக்கவே முடியவில்லை. அது என் உள்ளம் முழுவதையும் கவர்ந்துகொண்டுவிட்டது. ஜோகன்னஸ்பர்க்கிற்கும் டர்பனுக்கும் இருபத்துநான்கு மணி நேரப்பிரயாணம். ரெயில் அங்கே மாலையில் போய்ச் சேர்ந்தது. அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அந்நூலில் கண்ட லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன்.
ரஸ்கினின் நூல்களில் நான் படித்த முதல் நூல் இதுவே. நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த காலத்தில் பாடப் புத்தகங்களைத் தவிர அநேகமாக வேறு புத்தகங்களை நான் படித்ததில்லை எனலாம். சேவை வாழ்க்கையில் இறங்கிவிட்ட பிறகு படிப்பதற்கு எனக்கு நேரமே இருப்பதில்லை. ஆகையால், நூல்களைப் படித்த அறிவு எனக்கு உண்டென்றே சொல்லிக் கொள்ளுவதற்கில்லை. என்றாலும், இந்தக் கட்டாயமான தடையால் நான் அதிகமாக நஷ்டம் அடைந்து விடவில்லை என்றே கருதுகிறேன். ஆனால், இதற்கு மாறாக நான் கொஞ்சமாகப் படித்தது, நான் படித்ததையெல்லாம் அப்படியே முற்றும் கிரகித்துக்கொண்டு விடுவதற்கு உதவியாக இருந்தது. அத்தகைய நூல்களில், என் வாழ்க்கையில் உடனேயே நடைமுறையான மாறுதலை உண்டாக்கிய நூல் ‘கடையனுக்கும் கதி மோட்சம்’ என்ற நூலேயாகும். பின்னர் அதைக் குஜராத்தியில் மொழிபெயர்த்து, ‘சர்வோதயம்’ (சர்வஜன நலம்) என்ற பெயருடன் வெளியிட்டேன். ரஸ்கினுடைய இம் மகத்தான நூலில் என் உள்ளத்தில் உறுதிப்பட்டிருந்த கொள்கைகள் பிரதிபலித்திருப்பதை நான் கண்டுகொண்டதாகவே நினைக்கிறேன். அதனால்தான் அது என்னை ஆட்கொணடதோடு என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும்படி செய்தது. மனித உள்ளத்திலிருக்கும் நல்ல தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி. ஆனால் கவிகள், எல்லோரின் உள்ளங்களிலும் இதேபோன்ற மாறுதல்களை உண்டாக்கி விடுவதில்லை. ஏனெனில், எல்லோரும் சரி சமமான வளர்ச்சியை அடைந்திருக்கவில்லை. ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூல் பின்வருபவைகளைப் போதிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது:
1. எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது. 2. தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், க்ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் உண்டு. 3. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள்.
இவைகளில் முதலில் கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ, என் புத்தியில் தோன்றவே இல்லை. இரண்டாவதும் மூன்றாவதும், முதலாவதாகக் கூறப்பட்டிருப்பதிலேயே அடங்கியிருக்கின்றன என்பதைக் ‘கடையனுக்கும் கதி மோட்சம்’ பட்டப்பகல் போல் எனக்கு வெட்டவெளிச்சமாகி விடும்படி செய்தது. பொழுது புலர்ந்ததும் நான் எழுந்து இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவரத் தயாரானேன்.
$$$
19. போனிக்ஸ் குடியிருப்பு
எல்லாவற்றையும் குறித்து ஸ்ரீ வெஸ்டுடன் பேசினேன். ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூல் என் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை அவருக்கு விவரித்துச் சொன்னேன். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையை ஒரு பண்ணைக்கு மாற்றிவிட வேண்டும்; அப் பண்ணையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும், வாழ்க்கைக்கு வேண்டிய ஒரே மாதிரியான ஊதியத்தை எல்லோரும் பெற வேண்டும், ஓய்வு நேரங்களில் அச்சக வேலையைக் கவனிக்க வேண்டும் என்று ஒரு யோசனையை அவரிடம் கூறினேன். இந்த யோசனையை ஸ்ரீ வெஸ்ட் அங்கீகரித்தார். எந்த நிறத்தினராக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் மாத ஊதியம் மூன்று பவுன்தான் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அச்சகத்தில் வேலை செய்யும் பத்துப் பன்னிரண்டு பேரும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளுவார்களா? எங்கோ மூலை முடுக்கிலிருக்கும் ஒரு பண்ணைக்குப் போய்க் குடியேறி, உயிர் வாழ்வதற்கு மாத்திரமே போதுமான ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்களா? இதுவே பிரச்னையாயிற்று. ஆகையால், ஒரு யோசனை செய்தோம் புதிய திட்டத்தை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள், இப்பொழுது பெறும் சம்பளத்தையே தொடர்ந்து வாங்கிக்கொள்ளுவது, நாளா வட்டத்தில் குடியேற்றத்தின் உறுப்பினராகும் லட்சியத்தை அடைய முடிவு செய்வது என்பதே அந்த யோசனை.
இந்தத் திட்டத்தையொட்டி ஊழியர்களிடம் பேசினேன். ஸ்ரீ மதன்ஜித்திற்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. என் திட்டம் பைத்தியக்காரத்தனமானது என்றார். தமக்குள்ள சகலத்தையும், நான் ஈடுபட்டிருக்கும் இந்த முயற்சி நாசமாக்கிவிடும் என்றார். ஊழியர்களெல்லோரும் ஓடிப் போய் விடுவார்கள் என்றும், ‘இந்தியன் ஒப்பீனியன்’ நின்று விடும் என்றும், அச்சகத்தையும் மூடிவிட வேண்டியதாகிவிடும் என்றும் கூறினார்.
அச்சகத்தில் வேலை செய்து வந்தவர்களில் என் சிற்றப்பா பிள்ளையான மதன்லால் காந்தியும் ஒருவர். என் யோசனையை ஸ்ரீ வெஸ்ட்டிடம் கூறியபோதே அவரிடமும் சொன்னேன். அவருக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். ஆனால் அவர், குழந்தைப் பருவத்திலிருந்தே என்னிடம் பயிற்சி பெற்று என்னிடம் வேலை செய்ய விரும்பி வந்தவர். என்னிடம் அவருக்குப் பூரணமான நம்பிக்கை உண்டு. ஆகவே, எந்தவித வாதமும் செய்யாமல் என் திட்டத்தை ஒப்புக்கொண்டார். அது முதல் என்னுடனேயே இருக்கிறார். இயந்திரத்தை ஓட்டுபவரான கோவிந்தசாமியும் என் திட்டத்திற்குச் சம்மதித்தார். மற்றவர்கள் இத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அச்சகத்தை எங்கே நான் கொண்டு போனாலும் அங்கே வருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
இந்த விஷயங்களையெல்லாம் ஆட்களுடன் இரண்டு நாட்களில் பேசி முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு, டர்பனுக்குப் பக்கத்தில் ஒரு ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கமாக இருக்கக்கூடிய நிலம் விலைக்குத் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். போனிக்ஸ் சம்பந்தமாகப் பதில் வந்தது. அந்தப் பண்ணையைப் பார்த்து வர ஸ்ரீ வெஸ்ட்டும், நானும் போனோம். ஒரு வாரத்திற்குள் இருபது ஏக்கர் நிலம் வாங்கினோம். அதில் இனிய சிறிய நீர் ஊற்று ஒன்றும் ஆரஞ்சு செடிகளும் மாமரங்களும் இருந்தன. அந்த நிலத்திற்கு அடுத்தாற் போல எண்பது ஏக்கர் நிலப்பகுதி ஒன்றும் இருந்தது. அதில் மேலும் பல பழ மரங்களும், இடிந்துபோன ஒரு பழைய குடிசையும் இருந்தன. அந்த நிலத்தையும் வாங்கிவிட்டோம். எல்லாம் சேர்ந்து ஆயிரம் பவுன் விலையாயிற்று.
இது போன்ற என் முயற்சிகளிலெல்லாம் காலஞ்சென்ற ஸ்ரீ ருஸ்தம்ஜி எப்பொழுதும் எனக்கு ஆதரவு அளித்து வந்தார். இந்தத் திட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு பெரிய கிடங்கிலிருந்து எடுத்த பழைய இரும்புத் தகடுகளையும், வீடு கட்டுவதற்கான மற்ற சாமான்களையும் அவர் எனக்குக் கொடுத்தார். அவற்றைக் கொண்டு வேலையை ஆரம்பித்தோம். போயர் யுத்தத்தில் என்னோடு வேலை செய்தவர்களான சில இந்தியத் தச்சர்களும், கொத்து வேலைக்காரர்களும் அச்சகத்திற்கு ஒரு கொட்டகை போட எனக்கு உதவி செய்தனர். 75 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள இக் கொட்டகை ஒரு மாதத்திற்குள்ளேயே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீ வெஸ்டும் மற்றவர்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் தச்சர்களுடனும் கொத்து வேலைக்காரர்களுடனும் தங்கினர். அந்த இடம், இதற்கு முன்பு மனித சஞ்சாரமே இல்லாமல் இருந்த இடம். புல்லும் காடாக மண்டிப் போயிருந்தது. அங்கே பாம்புகள் ஏராளமாக இருந்ததால் வசிப்பதற்கு ஆபத்தான இடம். முதலில் எல்லோரும் கூடாரங்களில் வசித்து வந்தோம். ஒரு வாரத்தில் எங்கள் சாமான்களையெல்லாம் வண்டிகளில் ஏற்றிப் போனிக்ஸூக்குக் கொண்டு வந்துவிட்டோம். அந்த இடம் டர்பனிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. போனிக்ஸ் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டரை மைல் தூரம்.
‘இந்தியன் ஒப்பீனியனின்’ ஓர் இதழை மாத்திரமே வெளியில் மெர்க்குரி அச்சகத்தில் அச்சிட வேண்டியிருந்தது.
சம்பாதிக்கும் நோக்கத்தோடு இந்தியாவிலிருந்து என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்த என் உறவினர்களையும் நண்பர்களையும் போனிக்ஸு க்கு இழுத்துவிட இப்பொழுது முயன்றேன். அவர்கள் பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்கள் செல்வம் திரட்ட வந்தவர்களாகையால் அவர்களை இங்கே வந்துவிடும்படி செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், சிலர் ஒப்புக்கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டவர்களில் மகன்லால் காந்தியின் பெயரை மாத்திரம் நான் முக்கியமாகக் கூறுவேன். மற்றவர்கள் திரும்பவும் வியாபாரம் செய்யப் போய்விட்டனர். மகன்லால் காந்தி மட்டும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொண்டார். தார்மிகத் துறையில் நான் செய்த சோதனைகளில் என் ஆரம்ப சக ஊழியர்களாக இருந்தவர்கள் சிலர் உண்டு. அவர்களுள், திறமையிலும் தியாகத்திலும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கியவர் இவரே. கைத்தொழில்களை இவர் தாமே கற்றுக்கொண்டார். அதனால், கைத்தொழிலாளிகளிடையே இவர் வகித்த ஸ்தானம் இணையில்லாதது.
இவ்விதம் போனிக்ஸ் குடியிருப்பு 1904-இல் ஆரம்பமாயிற்று. எவ்வளவோ கஷ்டங்களெல்லாம் ஏற்பட்டபோதிலும் ‘இந்தியன் ஒப்பீனியன்’ அங்கிருந்தே பிரசுரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், செய்யப்பட்ட மாறுதல்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் ஆகியவைகளுக்கு ஒரு தனி அத்தியாயமே அவசியமாகிறது.
$$$
20. முதல் இரவு
போனிக்ஸிலிருந்து ‘இந்தியன் ஒப்பீனியனி’ன் முதல் இதழை வெளியிடுவது எளிதான காரியமாகவே இல்லை. இரு முன்னெச்சரிக்கையான காரியங்களை நான் செய்யாது இருந்திருப்பேனாயின், முதல் இதழை நிறுத்திவிடவே நேர்ந்து இருக்கும்; அல்லது வெளியாவது தாமதப்பட்டிருக்கும். அச்சு இயந்திரத்தை ஓட்ட ஓர் இன்ஜின் வைத்துவிடுவது என்ற யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. விவசாய வேலையையும் கையினாலேயே செய்ய வேண்டியிருக்கும் ஓர் இடத்தில், அச்சு இயந்திரமும் கையினாலேயே சுற்றப்படுவதாக இருப்பதே அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த யோசனை சரியானதாகத் தோன்றாது போகவே ஓர் எண்ணெய் இன்ஜினை அமைத்தோம். இன்ஜின் சரியாக வேலை செய்யாது போனால், உடனே செய்வதற்கான வேறு ஏற்பாடும் தயாராக இருக்கட்டும் என்று வெஸ்டுக்கு யோசனை கூறி இருந்தேன். ஆகவே கையினால் சுற்றக்கூடிய ஒரு சக்கரத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார். பத்திரிகையின் அளவு, தினப் பத்திரிகையின் அளவாக இருப்பது, போனிக்ஸ் போன்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு வசதியானதல்ல என்று யோசிக்கப்பட்டது. அவசர நிலைமை ஏற்பட்டால் ‘டிரடில்’ அச்சு இயந்திரத்திலேயே பத்திரிகையை அச்சிட்டு விடுவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்பதற்காக பத்திரிகை, ‘புல்ஸ்காப்’ அளவுக்குக் குறைக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் பத்திரிகை வெளியாவதற்கு முன்னால் நாங்கள் இரவில் வெகுநேரம் கண் விழிக்கும்படி ஆயிற்று. இளைஞர்களும், கிழவரும் ஒவ்வொருவரும் பத்திரிகைத் தாள்களை மடிக்க உதவ வேண்டியிருந்தது. வழக்கமாக இரவு பத்து மணிக்கு மேல் பன்னிரெண்டு மணிக்குள் வேலையை முடிப்போம். ஆனால், முதல் நாள் இரவு என்றுமே மறக்க முடியாது. பக்கங்களை முடுக்கியாயிற்று; இயந்திரமோ வேலை செய்ய மறுத்துவிட்டது. இன்ஜினை முடுக்கி அதை ஓட்டிக் கொடுப்பதற்காக டர்பனிலிருந்து ஒரு இன்ஜினீயரைத் தருவித்து வைத்திருந்தோம். அவரும் வெஸ்டும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் பயன்படவில்லை. எல்லோருக்கும் ஒரே கவலையாகி விட்டது. எல்லா முயற்சியும் முடியாது போய்க் கடைசியாகக் கண்களில் நீர் வழிய வெஸ்ட் என்னிடம் வந்தார். “இன்ஜின் வேலை செய்யாது. உரிய காலத்தில் பத்திரிகையை நாம் வெளியிட முடியாது என்றே அஞ்சுகிறேன்” என்றார்.
“அதுதான் நிலைமையென்றால் இதில் நாம் செய்வதற்கு எதுவுமில்லை. கண்ணீர் விட்டு ஒரு பயனும் இல்லை. மனிதப் பிரயத்தனத்தில் சாத்தியமானதையெல்லாம் செய்வோம். கைச்சக்கரம் இருக்கிறதல்லவா?” என்று அவருக்கு ஆறுதல் அளித்துச் சொன்னேன்.
“அதைச் சுற்றுவதற்கு நம்மிடம் ஆட்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். “அந்த வேலையைச் செய்வதற்கு நாம் போதாது. நான்கு நான்கு பேராக மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும். நம் ஆட்களோ, களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார்.
கட்டிட வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. ஆகையால், தச்சர்கள் அந்த வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் அச்சுக் கூடத்திலேயே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களைச் சுட்டிக்காட்டி, “இந்தத் தச்சர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாதா? நமக்கு இரவு முழுவதும் வேலை இருக்கும். இந்த உபாயம் நமக்குப் பாக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றேன்.
“தச்சர்களை எழுப்ப எனக்குத் தைரியமில்லை. நம் ஆட்களோ உண்மையில் மிகவும் களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார் வெஸ்ட்.
“சரி, அவர்களோடு நான் பேசிக் கொள்ளுகிறேன்” என்றேன்.
“அப்படியானால், வேலையை முடித்துவிடுவது சாத்தியமே” என்றார், வெஸ்ட்.
தச்சர்களை எழுப்பினேன். ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. “அவசரத்திற்கு எங்களைக் கூப்பிட்டுக் கொள்ளுவதற்கில்லை யென்றால் நாங்கள் இங்கே இருந்துதான் என்ன பயன்? நீங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள். சக்கரத்தைச் சுற்றும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். அது எங்களுக்குச் சுலபம்” என்றார்கள். எங்கள் சொந்த ஆட்களும் தயாராக இருந்தனர்.
வெஸ்ட்டுக்கு ஒரே ஆனந்தம். நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் அவர் ஒரு தோத்திரப் பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார். தச்சர்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன். மற்றவர்களெல்லாம் அவரவர்கள் முறையில் கலந்து கொண்டு வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை செய்தோம். இன்னும் வேலை எவ்வளவோ பாக்கியாக இருந்தது. ஆகவே, வெஸ்ட்டிடம் ஒரு யோசனை கூறினேன். இன்ஜினீயரை எழுப்பி இயந்திரத்தை ஓட்டச் சொல்லிப் பார்க்கலாம் என்றேன். இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டால் காலத்தில் வேலையை முடித்துவிடலாம்.
வெஸ்ட் அவரை எழுப்பினார். எழுந்ததும் இன்ஜின் அறைக்குப் போனார். என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக்கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி? இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே?” என்று விசாரித்தேன்.
“இது எப்படி என்று கூறுவது கஷ்டம். நம்மைப் போலவே தனக்கு ஓய்வு தேவை என்பதுபோல இயந்திரமும் சில சமயம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது போல் இருக்கிறது” என்று வெஸ்ட்டோ, இன்ஜினீயரோ கூறினார்கள். சொன்னது யார் என்பதை மறந்துவிட்டேன்.
இன்ஜின் கோளாறு ஆகிவிட்டது எங்கள் எல்லோருக்கும் ஒரு சோதனையாக ஆயிற்று என்றும், எங்களுடைய யோக்கியமான, மனப்பூர்வமான உழைப்பின் பலனாகவே இன்ஜின் வேலை செய்யத் தொடங்கியது என்றும் எனக்குத் தோன்றிற்று.
பிரதிகளும் உரிய காலத்தில் அனுப்பப்பட்டன. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம்.
ஆரம்பத்தில் காட்டிய இந்தப் பிடிவாதம், பத்திரிகை ஒழுங்காக வெளியே வந்து கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போனிக்ஸில் சுயபலத்தில் நிற்கும் சூழ்நிலையையும் உண்டாக்கியது. வேண்டுமென்றே இன்ஜினை உபயோகிப்பதை நாங்கள் நிறுத்திவிட்டு, ஆள் பலத்தைக் கொண்டே வேலை செய்த சமயமும் உண்டு. போனிக்ஸில் குடியேறியிருந்தவர்களின் தார்மிக குணம் உச்ச நிலைக்கு எட்டியிருந்த சமயமே அது என்பது என் கருத்து.
$$$