சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும்

சென்னையில் பழைய கட்சியாருக்கு (கோகலே கோஷ்டி- நிதானக் கட்சியார்) ஆதரவு குறைந்து புதிய கட்சியாருக்கு (திலகர் கோஷ்டி- தீவிரவாதிகள்) ஆதரவு பெருகியதை பெருமகிழ்ச்சியுடன் செய்தியாகத் தீட்டுகிறார் இதழாளர் பாரதி. ஸர் பட்டம் இனி மரியாதைக்குரியதல்ல என்றும் பகடி செய்கிறார்.  “ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்” என்று எழுதும்போது, பாரதியின் அரசியல் நுண்ணுணர்வும், தீவிரக் கொள்கைப் பிடிமானமும் வெளிப்படுகின்றன...

                                    பிலவங்க வைகாசி 5

சென்னை வாசிகளின் நிதானமெல்லாம் சந்திர பாலரின் சந்நிதானத்திலே பறந்து காற்றாய்ப் போய்விட்டது. நேற்று மாலை விக்டோரியா நகர மண்டபத்தில் லாலா லஜபதிராய் தீபாந்தரத்திற்கேற்றி அனுப்பப்பட்ட விஷயமாக மஹாஜன சபையாரால் கூட்டப்பெற்ற பெருங் கூட்டத்தில் நடந்த செய்திகளை நேரே வந்து கண்டவர்களெல்லாம் இனி மயிலாப்பூர் வக்கீல்கள் ஜனத் தலைவர்களென்று மூச்சுவிடக் கூட இடமில்லை யென்பதை நன்றாக அறிந்திருப்பார்கள்.

நேற்று மாலை மீட்டிங்கிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின் வருவனவாகும்:-

இதுவரை பழைய கட்சிக்காரருக்கு முக்கிய தர்மமாக இருந்த விண்ணப்ப முறைமையை நேற்று அவர்கள் தாமாகவே பேதமையாகுமென்று நிறுத்திவிட்டனர்.

அப்படி அவர்கள் விண்ணப்பம் செய்ய விரும்பாதபோதிலும் வெறுமே இந்தியா மந்திரிக்கு மீட்டிங்கைப் பற்றித் தகவல் கொடுக்க வேண்டுமென்று மிஸ்டர் பி.ஆர். சுந்தரய்யர் சொன்னதைக் கூட ஜனங்கள் அங்கீகரிக்காமல் கோபமடைந்தார்கள்.

மயிலாப்பூர் வக்கீல்கள் தாம் ஜனத்தலைவர்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தது பொய்க் கனவென்பதை அறிந்து கொண்டார்கள்.

ஸர்க்காரிலே ஸர் என்றும் உர் என்றும் பட்டம் பெற்றுத் திரிந்தவர்களை யெல்லாம் ஜனங்கள் மதிப்புடன் நடத்திய காலம் போய், இப்போது அவர்களைப் பகிரங்க ஸ்தானங்களிலே பேசவொட்டாக நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள்.

இங்கிலீஷிலே பேசக் கூடாது. தமிழ் நாட்டிலே ஜனத் தலைவர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு வருவோர் பொது விஷயங்களைப் பற்றித் தமிழிலேயே பேச வேண்டுமென்று ஜனங்கள் வற்புறுத்தினார்கள்..

ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். சென்னை மாணாக்கர்களிலே பெரும்பாலார் வெளியூருக்குச் சென்றிருந்தபடியால் பழைய கட்சியார் இம்மட்டோடு பிழைத்தார்கள். ஒரு வாரத்திற்குமுன் இந்தப் பொதுக் கூட்டம் நடந்திருக்குமானால் நமது மயிலாப்பூர் நண்பர்களின் ஸ்திதி இன்னும் வேடிக்கையாக முடிந்திருக்கும். லாலா லஜபதிராய் தீபாந்திரத்துக்குப் போவதைப் பற்றி ஜனங்கள் மனது கொதித்துக் கொண்டிருக்கும்போது கூட இவர்கள் சர்க்காராரை ஸஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்வதுதான் சரியான பாதையென்று நினைப்பது வினோதமாயிருக்கிறது. இவர்கள் என்ன நினைத்தாலும் சரியே. இனி அதைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கூறத் துணிய மாட்டார்கள் என்று நேற்றே தெளிவாய்விட்டது.

  • இந்தியா (18.05.1907)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s