-உ.வே.சாமிநாதையர்

4. பிரபந்தங்கள் செய்யத் தொடங்கல்
பிள்ளையவர்கள், தம் தந்தையாருடைய கட்டளையின்படி தினந்தோறும் தேவார திருவாசகங்களைப் பாராயணஞ் செய்தலும் பொருள் தெரிந்து ஈடுபட்டு மனமுருகுதலும் வழக்கம். கிடைக்குமிடத்திற்குச் சென்று விசாரித்துப் பலவகைத் தமிழ்ப் பிரபந்தங்களை வாங்கி ஆவலோடு படித்து வருவார்; பிள்ளைப் பெருமாளையங்காருடைய அஷ்டப்பிரபந்தம், சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்கள், குமரகுருபர ஸ்வாமிகள் பிரபந்தங்கள் முதலியவற்றை முறையே படித்து அவற்றின் சுவைகளை அறிந்து இன்புறுவார்; தமிழ் நூலாக எது கிடைத்தாலும் அதை வாசித்து நயம் கண்டு மகிழ்வார். அன்றியும், புறச்சமய நூல்களாக இருந்தாலும் தமிழாயின் அவற்றைப் படித்துப் பொருளறிவதில் இவருக்கு விருப்பமுண்டு.
திட்டகுடிப் பதிகம்
அவ்வாறிருக்கையில் இவர் சில அன்பர்களுடன் *1 திட்டகுடி, ஊற்றத்தூர், பூவாளூர், திருத்தவத்துறை (லால்குடி) முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று சிவதரிசனம் செய்துவிட்டு வந்தார். திட்டகுடிக்குச் சென்றிருந்தபொழுது அந்தத் தலத்திற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வஸிஷ்டேசுவரர் விஷயமாக அக்கோயில் தர்மகர்த்தர் கேட்டுக்கொள்ள ஒரு பதிகம் பாடினாரென்றும் அது கோயிற்குச் சென்று தரிசித்த பின்பு அக் கோயிலிலேயே இருந்து சில நாழிகையிற் செய்யப்பட்டதென்றும் சொல்லுவார்கள். அந் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. முதன்முதலாகப் பிரபந்தங்கள் பாடத்தொடங்கினவர் பதிகம், இரட்டை மணிமாலை முதலிய எளியன பலவற்றைப் பாடியிருத்தல் கூடும்.
திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
ஒரு தலத்திற்கு நண்பர்களுடன் சென்றால் அத்தலத்திலுள்ளார் இவரது கவித்துவத்தை அறிந்து அத்தல விஷயமாகத் தனிப்பாடல்களையோ பிரபந்தங்களையோ இயற்றும் வண்ணம் கேட்டுக்கொள்வார்கள். செய்யுள் இயற்றுவதற்குரிய சமயம் வாய்க்கும்போதெல்லாம் அந்த ஆற்றலை வளர்ச்சியுறச் செய்து கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்தமையால், இவர் அவர்களுடைய விருப்பத்தின்படியே பாடல்கள் முதலியன இயற்றுவதுண்டென்பர். ஒருமுறை *2 ஊற்றத்தூருக்குச் சென்றிருந்தபொழுது பல அன்பர்கள் விரும்பியவண்ணம் திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற ஒரு பிரபந்தம் இவராற் செய்யப்பட்டது.
இவர் பிற்காலத்திற் பாடிய பிரபந்தங்களுக்கும் இளமையிற் பாடியவற்றிற்கும் வேறுபாடுகள் பல உண்டு. பிற்காலத்து நூல்களிற் கற்பனை நயங்களும் அணிகளும் சிறந்த கருத்துக்களும் அங்கங்கே அமைந்திருக்கும்; சைவ சித்தாந்த நூற்கருத்துக்களும் பழைய இலக்கியங்களிலுள்ள சொற்களும் பொருள்களும் காணப்படும். இளமையிற் பாடியவை எளிய நடையில் அமைந்தவை. சிவபெருமான்பால் இயல்பின் எழுந்த அன்பினால் பக்திச்சுவைமட்டும் மலிந்த செய்யுட்கள் அவற்றிற் காணப்படும். தேவார திருவாசகங்களிலுள்ள கருத்துக்கள் அமைந்த சில பாடல்களும் திரு ஊறைப்பதிற்றுப் பத்தந்தாதி முதலியவற்றில் உள்ளன. இவ் வந்தாதி,
"செய்ய முகிலின் மெய்யனயன் றெரிய வரிய பெரியானென்
ஐயன் வளர்தென் றிருவூறை யந்தா தியையன் பாலுரைக்க
நையன் பரைவிட் டகலாத நால்வாய் முக்க *3 ணிரண்டிணையோர்
கையன் மதத்த னழகியநங் கயமா முகத்த னடிதொழுவாம்"
என்னுங் காப்புடனும்,
"பூமா திருக்கு மணிமார்பன் புயநா லிணையன் புருகூதன்
நாமா றுறவே வழுத்தூறை நகர்வாழ் நம்பா நாறிதழித்
தாமா நினது தாட்குமலர் சாத்திப் பிறவிக் கடனீந்த
ஆமா றிதுவென் றறியேனை யாண்டாய் காண்டற் கரியானே"
என்னும் முதற் செய்யுளுடனும் தொடங்கப்பட்டுள்ளது. இச் செய்யுளில், “பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார், இறைவ னடிசேரா தார்” என்ற குறளின் கருத்தை அமைத்திருக்கின்றனர்.
*4 "பணிகின் றேனிலை நாத்தழும் புறநினைப் பலகவி யாற்பாடத்
துணிகின் றேனிலை தீவினை தொலைக்கநின் றொண்டரிற் றொண்டாகத்
தணிகின் றேனிலை யுள்ளநெக் குருகியுன் றாள்களி னறும்பூக்கொண்
டணிகின் றேனிலை யெங்ஙன முய்குவே னரதன புரத்தானே" (11)
*5 "இல்லையுன்க ழற்கணன்றி யெற்குவேறி ருப்புடற்
கல்லையன் றெடுத்துவில்லெ னக்குனித்த காவலா
வல்லையம்பு யப்பொகுட்டை மத்தகத்தை யெற்றியே
வெல்லைகொண்ட கொங்கைபங்க வேதவூறை நாதனே" (33)
*6 "சம்பு சங்கர வூறைச் சதாசிவ
அம்பு பம்பு நெடுஞ்சடை யாயெனா
வெம்பு கின்றிலன் வீரிட் டலறிலன்
நம்பு கின்றிலன் னானுய்யு மாறென்னே?" (66)
*7 "சூட வேண்டுநின் னடிகள் போற்றியான்
சுற்ற வேண்டுநின் னூறை போற்றிவாய்
பாட வேண்டுநின் சீர்கள் போற்றிகண்
பார்க்க வேண்டுநின் வடிவம் போற்றியான்
கூட வேண்டுநின் னடிகள் போற்றியுட்
கொள்ள வேண்டுநின் னன்பு போற்றிமால்
தேட வேண்டருண் மேகம் போற்றிநுண்
சிற்றிடைக் குயில் பாகம் போற்றியே" (97)
என்னும் செய்யுட்களில் திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடரமைப்பும் இலங்குவதைக் காணலாம். நீர்வளங்களையும் நிலவளங்களையும் புனைந்து மிக அரிய கற்பனைகளை மேகம்போலப் பிற்காலத்துப் பொழிந்த இப்புலவர் பெருமான் இந் நூலிற் பெயரளவில் நிலவளமென்னும்படியுள்ள சிலவற்றைக் கூறியிருத்தல் அறிதற்குரியது. அவற்றுட் சில வருமாறு:-
*8 "அளிக்கும் புறுபங் கயப்பொகுட்டி லளிந்த தேமாங் கனியுடைந்து
துளிக்கும் பிரசம் பெருகிவய றோறும் பாய்ந்து விளைசெந்நெல்
களிக்குங் கமுக மீப்பாய்ந்து காட்டு மூறை" (10)
“......... …….. …….. ……… தேமா
துளத்தின் மந்திபாய்ந் தக்கனி பறித்துவிண்
டொகுகழங் கென வோச்சு
வளத்தின் விஞ்சிய வூறை" (19)
"குருகுலத்தியர் கண்ணிழன் மீனெனக்
கொத்துதண் பணைச்செந்நெல்
அருகு சென்றன மடையுறு மூறை" (17)
"ஆலையிற் கழைக ளுடைந்தசா றோடி
யலர்தலை யரம்பையைச் சாய்த்துச்
சோலையிற் புகுந்து கமுகினை மாய்த்துத்
துன்னுசெந் நெல்வயற் பாய்ந்து
வேலையிற் பெருகு மூறை" (41)
"கொண்டறவழ் பெருஞ்சோலைப் பலவீன்ற கனியுடைந்த கொழுஞ்சா றோடி
ஞெண்டமையு மிடமுதலாப் பணைகடொறும் புகுமூறை." (75)
பிற்காலத்தில் திரிபு யமகப்பாடல்கள் பலவற்றை எளிதிற் பாடிய இப்பெருங்கவிஞர் இந்த நூலில் அந்த ஆற்றலைச் சிறிது காட்டியிருக்கின்றார்:
*9 "புரம டங்கமுன் வென்றவ னூறைவாழ்
புண்ணியப் பெருஞ்செல்வன்
சிரம டங்கலுஞ் செஞ்சடைக் காட்டினன்
றிரண்டதூண் டனிற்றோன்றும்
நரம டங்கலை யுடல்வகிர்ந் தாண்டவ
னாயினுங் கடையேனை
உரம டங்களைத் தாண்டுகொண் டானிதை
யொக்குமூ தியமென்னே?” (12)
*10 “அகத்திரா தெடுங்கோ ணென்னலிற் கழிந்த
தாகுமீ தெனப்பலர் கூடிச்
சகத்திரா வருமுன் றொலைக்குது மெனவே
சாற்றுதன் முன்னமெட் டிரண்டு
முகத்திரா வணன்வெற் படிவிழுந் தலற
முன்னநின் றடர்த்திடு மலர்த்தாள்
நகத்திரா டரவப் பணியிரூ றையினும்
நல்லடி காணநின் றேனே" (44)
*11 "செய்க்குவளை நயனமர விந்தமுகங் கோங்கரும்பு திரண்ட கொங்கை
கைக்குவளை பொருந்தலின்மின் சுற்றியயாழ் கடிதடங்காக் கணம்பூ வென்னா
மெய்க்குவளை வுறுமளவு மடவார்பாற் றிரிந்துழலும் வீண னானேன்
ஐக்குவளைச் செவிபாகற் கூறையற்கெஞ் ஞான்றுநல்ல னாவ னெஞ்சே" (79)
என்பனவற்றில் திரிபின் முளை தோன்றியிருத்தல் காண்க. இடையிலே 41 – ஆம் செய்யுள் முதல் 48 – ஆம் செய்யுள் வரையில் மரணகாலத்துண்டாகும் துன்பினின்றும் போக்கியருளவேண்டுமென்னும் கருத்து அமைந்துள்ளது. இங்ஙனம் ஒரே கருத்தைப் பலவிதமாக அமைத்துச் சில செய்யுட்களைத் தொடர்ந்து இவர் பாடியிருத்தலை இளமைக்காலத்திற் செய்த பிரபந்தங்களிற் காணலாம்.
தலசம்பந்தமான செய்திகளை இவ்வந்தாதியின்பால் உரிய இடங்களில் அமைத்துள்ளார்; “அன்ன வூர்தியன் மான்முத லோர்க்கரு மரதன புரத்தம்மான்”, “அணையரி வையைமேற் சூடியரதன புரத்து ளானே”, “வெம்புகின்றன னரதன புரத்துறை விமலா” (13, 29, 82) என்னுமிடங்களில் தலத்தின் வேறு பெயராகிய அரதனபுரமென்பதனையும், “ஊறை நகருறை தேவவெற்பு, மானவா”, “வேயநேகமுற்ற தேவவெற்ப னூறை யற்புதன் ” (23, 36) என்று அத்தலத்திலுள்ள தேவகிரியையும், “இருக்கு மோதுதற்கரிய நந்தாநதிக் கிறைவா” (84) என அத்தலத்து நதியையும், காப்பில் தலத்து விநாயகரையும், “ஊறையும் பதிவாழையனே துய்யமாமணியே”, “துய்யமாமணியே பரஞ்சோதியே” (50, 64) என அத்தலத்து மூர்த்தியின் திருநாமமாகிய சுத்தரத்தினேசுவரரென்பதன் பரியாயத்தையும் அமைத்துள்ளார்; “மருள் கடந்தவர் சூழ்தரு மூறைவாழ் மாசிலா மணியே”, “ஊறைக் கோதிலா மணியைத் தானே” (18, 22) என்று அந்நாமம் குறிப்பாற் புலப்படும்படி சேர்த்தும், “சீரவாணி பாகனேக னாகர் தேவர் தேவனே ” (31) என அத்தலத்து அம்பிகையின் பெயரைக் காட்டியும் பாராட்டியிருத்தல் காண்க. ஈற்றிலுள்ள பத்துப்பாடல்களுள் ஒவ்வொன்றும் போற்றி போற்றியென்று முடிகின்றது.
"காதும் பிறவிக் கடல்வீழ்த் திருவினையின்
தீதுங் குறைத்துமுத்தி சேர்க்குமே - போதம்
அடையூறை யந்தாதி யைக்கருது வாருக்
கிடையூறை நீக்குவதன் றி "
என்னும் பயனுடன் இந்நூல் நிறைவுறுகின்றது.
இந்நூலுக்குப் பலர் சிறப்புப்பாயிரம் கொடுத்திருத்தல் கூடும். செய்தவர் பெயர் தெரியாத ஒரு செய்யுள் மட்டும் இப்பொழுது கிடைக்கின்றது. அது வருமாறு:
"உய்ய மணிமார் பரியயன்விண் ணோரும் புகழ்ந்த திருவூறைத்
துய்ய மணியீ சருக்கன்பு துலங்கந் தாதி சொற்றுயர்ந்தான்
செய்ய மணிச்சீர்ச் சிதம்பரமன் சேயா வுதித்தெம் மானருளைப்
பெய்ய மணிமாக் கவிசொலுநாப் பெறுமீ னாட்சி சுந்தரனே."
மயில்ராவணன் சரித்திரம்
ஒருசமயம் இவர் பூவாளூருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது அங்கே உத்தமதானபுரம் *12 லிங்கப்பையர் குமாரர்களாகிய சேஷுவையர், சாமிநாதையரென்ற இருவர் சீர்காழி அருணாசல கவிராயர் இயற்றிய இராமாயணக் கீர்த்தனத்தையும் *13 பம்பரஞ்சுற்றிச் சுப்பையரென்பவர் இயற்றிய மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனத்தையும் படித்துப் பொருள் சொல்லிக் காலக்ஷேபம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய வேண்டுகோளின்படி இவர் மயில்ராவணன் சரித்திரத்தை நூறு பாடலாகச் சில நாட்களிற் செய்துமுடித்து அவர்களுக்குக் கொடுத்தார். அவ்விருவரும் அதனைப் பெற்றுத் தாம் செல்லும் பல இடங்களிலும் அருணாசலகவி ராமாயணத்தைச் சொல்லும்பொழுது இடையிடையே கம்ப ராமாயணப் பாட்டுக்களைச் சொல்வது போல் மயில் ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களைச் சொல்லும்பொழுது இவர் செய்த செய்யுட்களைச் சொல்லிப் பொருட் பயனடைந்து வந்தனர். இச் செய்தியை அவ்விருவருள் ஒருவராகிய சாமிநாதையரே கூறக் கேட்டிருப்பதுடன் அந்நூற் செய்யுட்களிற் சிலவற்றையும், நான் இளமையிற் கேட்டதுண்டு. அவற்றின் நடை எளிதாக இருந்தது.
$$$
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. வதிட்டகுடியென்பது திட்டகுடி யென்று ஆயிற்றென்பர். இது வட வெள்ளாற்றின் கரையிலுள்ளது; ஒரு வைப்புஸ்தலம்.
2. இஃது ஊட்டத்தூரென வழங்கும். இது வைப்புஸ்தலங்களுள் ஒன்று. இதனைத் தலைநகராகக் கொண்ட நாடு ஊறை நாடென்றும் அந்நாட்டில் இருந்த ஒரு பகுதியினராகிய வேளாளர் ஊற்றை நாட்டாரென்றும் வழங்கப்படுவர்.
3. இரண்டு இணை – மோத்தலுணர்ச்சியும் பரிச உணர்ச்சியும் ஆகிய இரண்டும் பொருந்திய.
4. ஒப்பு: திருச்சதகம், 31.
5. ஒ: திருச்சதகம், 94. வெல்லை – வெல்லுதலை
6. ஒ: திருச்சதகம், 14.
7. ஒ: திருச்சதகம், 100.
8. அளிக் கும்பு – வண்டின் கூட்டம்.
9. புரம் மடங்க. சிரம் அடங்கலும். நரமடங்கலை – நரசிங்கத்தை. உரத்தையுடைய மடத்தைக் களைந்து; மடம் – அறியாமை.
10. சகத்து இரா வரும் முன். தாள் நகத்திர் – திருவடியின் நகத்தை யுடையவரே.
11. ஐக்கு வள்ளைச்செவி பாகற்கு; ஐக்கு – தலைவனுக்கு.
12. இவர் சாமிமலைக் குறவஞ்சி முதலிய பிரபந்தங்களைச் செய்து அரங்கேற்றியவர்.
13. பம்பரஞ்சுற்றி யென்பது ஒரூர்.
$$$