-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
74. மனப் பேழை மணம் கமழட்டும்
.
ஆசா’பாசா’ க்லேச’ துர்வாஸனாதி
பேதோத்யுக்தைர்- திவ்யகந்தை– ரமைந்தை: /
ஆசா’ சா’டீகஸ்ய பாதாரவிந்தம்
சேத: பேடீம் வாஸிதாம் மே தனோது//
.
ஆசைத்தளை ஐயமாம் தீயவாசனைக் கூட்டத்தை
அகல்வித்து குறைவில்லா தெய்வவாசனை கமழ்வித்து
திக்கணிந்தோன் திருவடித் தாமரைகள் என்மனதாம்
தக்கதொரு பேழையை நற்குணமாய் செய்கவே!
.
துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நல்வாசனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதுபோல்தான் நமது செய்கைகளாலும் (கர்மங்களாலும்) தீய வாசனை, நல் வாசனை ஏற்படுகிறது. தீய வாசனைகளைக் களைந்து, நல் வாசனையைப் பெற சிவபெருமானின் திருவடிகளே நமக்கு வழிகாட்டுகின்றன.
.நம்மை பிறவிச் சுழலில் பிணித்துவைத்திருக்கும் ஆசைகளாகிய தளை, ஞானம் அடையவொட்டாமல் நம்மைத் தடுக்கின்ற ஐயம் (சந்தேகம்) உள்ளிட்ட தீய வாசனைகளை அடியோடு அகலச் செய்து, எப்போதும் குறையில்லாத நல்ல தெய்வீக வாசனையைக் கமழச் செய்வது சிவபெருமானின் திருவடி குறித்த தியானம்.
.எல்லாவிடத்திலும் சிவபெருமான் நிறைந்திருப்பதால், திசைகளையே ஆடைகளாக அணிந்தவராய், திகம்பரராய் (திக் + அம்பரம் = திகம்பரம்) அவர் உள்ளார். அப்படிப்பட்ட சிவபெருமானின் திருவடிகளை எனது மனமாகிற பேழைகளில் தக்க வைக்கிறேன். அந்தத் திருவடிகள் எனது மனமாகிய பேழையை, நல்ல மணமுடையதாய், நல்ல குணமுடையதாய் திகழ வைக்கட்டும்.
“ஆசையறு மின்கள் ஆசையறு மின்கள் ஈசனோ டாயினும் ஆசையறு மின்கள் ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே”– என்ற திருமந்திரத்தின் வரிகளை இங்கே நினைவுகூர்வது பொருத்தமானதாக இருக்கும்.
$$$