-உ.வே.சாமிநாதையர்

3. திரிசிரபுர வாழ்க்கை
சோமரசம்பேட்டையை நீங்கியது
தமிழ்ப்பயிற்சியை மேன்மேலும் அபிவிருத்தி பண்ணிக் கொள்ள வேண்டுமென்ற விருப்பம் அதிகமாக உண்டானமையாலும், மேலே படிக்கத்தக்க நூல்கள் சோமரசம்பேட்டையில் அகப்படாமையாலும், கிடைத்த நூல்களைப் பாடங்கேட்பதற்கும் உண்டாகும் ஐயங்களை உடனுடன் போக்கிக்கொள்ளுதற்கும் சிறந்த பெரியோர்கள் அங்கே இல்லாமையாலும் திரிசிரபுரத்திலேயே சென்றிருக்க நினைந்த இவர், அங்கே சென்று அந்நகரிலுள்ள அன்பர்களிடம் தமது கருத்தைத் தெரிவித்தார். அவர்கள், ”நீர் இங்கே வந்திருத்தல் எங்களுக்கு உவப்பைத் தருவதாகும்; எங்களால் இயன்ற அளவு உதவி செய்து வருவோம்” என்றார்கள். அதனைக் கேட்டுத் திரிசிரபுரத்திற்குப்போய் இருக்கலாமென்று நிச்சயித்துச் சோமரசம்பேட்டையில் தம்மை ஆதரித்தவர்களிடத்தில் தம்முடைய கருத்தைத் தெரிவித்து அரிதின் விடை பெற்றுத் திரிசிரபுரம் வந்து சேர்ந்தனர். அங்கே மலைக்கோட்டைக் கீழைவீதியின் தென் பக்கத்துள்ள ஒரு பாறைமேற் கட்டப்பட்டிருந்த சிறியதான ஓட்டுவீடு ஒன்றில் மாதம் ஒன்றுக்குக் கால் ரூபாய் வாடகை கொடுத்து இருப்பாராயினர்.
புலவர்கள் பழக்கம்
அக்காலத்தில் திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்களிலும் தாங்களறிந்தவற்றை மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லும் தமிழ்ப்புலவர்கள் சிலர் இருந்து வந்தனர். ஒவ்வொருவரும் சில நூல்களையே பாடஞ்சொல்லுவார். பல நூல்களை ஒருங்கே ஒருவரிடத்திற் பார்ப்பதும் பாடங்கேட்பதும் அருமையாக இருந்தன. இவர் அவ்வூரிலும் பக்கத்தூர்களிலும் இருந்த தமிழ்க்கல்விமான்களிடத்திற் சென்று சென்று அவர்களுக்கு இயைய நடந்து அவர்களுக்குத் தெரிந்த நூல்களைப் பாடங்கேட்டும் அவர்களிடம் உள்ள நூல்களைப் பெற்றுவந்து பிரதி செய்துகொண்டு திருப்பிக் கொடுத்தும் வந்தனர். இவருடன் பழகுவதிலும் இவருடைய ஆற்றலை அறிந்து கொள்வதிலும் வேண்டிய நூல்களை இவருக்குக் கொடுத்து உதவுவதிலும் இவர் விரும்பிய நூல்களைப் பாடஞ் சொல்வதிலும் மகிழ்ச்சியும், இவரைப்போன்ற அறிவாளிகளைப் பார்த்தல் அருமையினும் அருமையென்னும் எண்ணமும் அவர்களுக்கு உண்டாயின. பழகப் பழக அவர்களிடம் படித்து வந்த ஏனை மாணாக்கர்களுக்கும் இவர்பால் அன்பு உண்டாயிற்று. *1 ‘மருவுக்கு வாசனை போல்’ வாய்த்த இவரது இயற்கை யறிவையும் கல்விப் பயிற்சியாலுண்டாகிய செயற்கையறிவையும் விரைவிற் கவிபாடுந் திறமையையும் அறிந்து அவர்கள் எல்லோரும் இவரிடம் அன்புடன் பழகி வந்தார்கள். அப்போது ஒழிந்த காலங்களில் தமக்குத் தெரிந்த நூல்களைப் பாடங் கேட்க விரும்புகிறவர்களுக்குப் பொருள் சொல்லி வந்தார்.
வித்துவான்கள்
அக்காலத்தில் திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பின்னே காட்டிய வித்துவான்கள் இருந்து வந்தார்கள்:
- உறையூர் முத்துவீர வாத்தியார்:
இவர் திரிசிரபுரம் வண்டிக்காரத் தெருவில் இருந்தவர்; சாதியிற் கொல்லர்; கம்மாள வாத்தியாரென்றும் கூறப்படுவார்; முத்துவீரியமென்னும் இலக்கண நூல் முதலியன இவராற் செய்யப்பெற்று வழங்குகின்றன. இவரை நான் பார்த்திருப்பதுண்டு,
2. திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்:
இவர் தொண்டைமண்டல வேளாளர்; திரிசிரபுரம் மாணிக்க முதலியாருடைய வீட்டு வித்துவானாக இருந்து விளங்கியவர்; சைவ நூல்களில் நல்ல பயிற்சியை உடையவர்.
3. வீமநாயக்கன் பாளையம் இருளாண்டி வாத்தியார்:
இவருடைய கால்கள் பயனற்றனவாக இருந்தமையால் எருத்தின் மேலேறி ஒரு மாணாக்கனை உடன் அழைத்துக்கொண்டு செல்வவான்களிடம் சென்று தமது பாண்டித்தியத்தை வெளிப்படுத்திப் பரிசு பெற்றுவரும் இயல்புடையவர்.
4. பாலக்கரை வீரராகவ செட்டியார்:
இவர் சோடசாவதானம் தி.சுப்பராய செட்டியாருடைய தந்தையார்.
5. கொட்டடி ஆறுமுகம் பிள்ளை:
இவர் இருந்த இடம் திரிசிரபுரம் கள்ளத்தெரு; தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலன்றி வைத்திய நூல்களிலும் பயிற்சி மிக்கவர். பலவகையான மருந்துகளைத் தொகுத்து ஒரு கொட்டகையில் வைத்துக்கொண்டு நோயாளிகளுக்குக் கொடுத்து வந்தமையால் இவர் பெயர்க்கு முன்னம் ‘கொட்டடி’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று சொல்வர். சென்னை இராசதானிக் கலாசாலையில் இருந்தவரும் குணாகரமென்னும் நூல் முதலியவற்றை இயற்றியவருமாகிய சேஷையங்காரென்பவர் இவரிடம் பாடங்கேட்டவர். இவரும் சேஷையங்காரும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளவேண்டிய செய்திகளைச் செய்யுட்களாகவே அஞ்சற் கடிதங்கள் மூலம் தெரிவித்துக்கொள்வது வழக்கம்; அச்செய்யுட்களிற் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன்.
6. கற்குடி மருதமுத்துப் பிள்ளை:
இவர் சோதிடத்திலும் வல்லவர்.
7. *2 திருநயம் அப்பாவையர்:
இவர் திருவிளையாடற் கீர்த்தனம் முதலியவற்றை இயற்றியவர்; பரம்பரையாகத் தமிழ்ப்புலமை வாய்ந்த குடும்பத்தினர்; அடிக்கடி திரிசிரபுரம் வந்து செல்வார்.
8. மருதநாயகம் பிள்ளை:
இவர் இலக்கிய இலக்கணங்களிலும் மெய்கண்ட சாத்திரத்திலும் நல்ல பயிற்சியுடையவர்; முதன்முதலாக மெய்கண்ட சாத்திரங்களைப் பதிப்பித்தவர் இவரே.
பிரபுக்கள்
அப்பொழுது பிள்ளையவர்களை ஆதரித்து வந்த பிரபுக்கள் (1) பழனியாண்டியா பிள்ளை, (2) லட்சுமண பிள்ளை, (3) ஆண்டார் தெரு சிதம்பரம்பிள்ளை, (4) சிரஸ்தேதார் செல்லப்ப முதலியார், (5) வரகனேரி நாராயண பிள்ளை, (6) சொக்கலிங்க முதலியார், (7) உறையூர் அருணாசல முதலியார், (8) உறையூர்த் தியாகராச முதலியார், (9) உறையூர்ச் சம்புலிங்க முதலியார் என்பவர்கள்.
வேலாயுத முனிவர் முதலியோரிடம் பாடங்கேட்டது
இவர் இங்ஙனம் திரிசிரபுரத்தில் இருந்து வருகையில் வேலாயுத முனிவரென்பவர் அந்நகருக்கு வந்தார். அவர் திருவாவடுதுறையாதீன மடத்தில் முறையாகப் பல நூல்களைப் பெரியோர்கள்பாற் கற்றுத் தேர்ந்தவர். ஆதீனத் தலைமை ஸ்தானம் ஒரு வேளை தமக்குக் கிடைக்கலாமென்பதை எதிர்பார்த்துப் பல நாள் காத்திருந்தார். என்ன காரணத்தாலோ அவர் அவ்வாறு நியமிக்கப்படவில்லை; அதனாற் பிணக்குற்று உசாத்துணைவர்களும் தூண்டுபவர்களுமாகிய சில நண்பர்களுடன் தாம் படித்த சுவடிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு, மதுரைத் திருஞானசம்பந்தமூர்த்தி ஆதீனத்திற்காவது குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்திற்காவது சென்று காத்திருந்து தலைமை ஸ்தானத்தைப் பெறலாமென்றெண்ணி புறப்பட்டுத் திரிசிரபுரம் வந்து ஆண்டுள்ளார் வேண்டுகோளின்படி மலைக்கோட்டையிலுள்ள மெளன ஸ்வாமிகள் மடத்திற் சில மாதங்கள் அவர் தங்கியிருந்தார்.
அங்ஙனம் இருக்கையில் திரிசிரபுரத்திலிருந்தும் அயலூர்களிலிருந்தும் வந்து அவரிடம் படித்தோர் பலர். பிள்ளையவர்கள் அவருடைய கல்வியறிவின் மேம்பாட்டை யறிந்து அவரிடம் காலை மாலைகளில் தவறாது சென்று முயன்று வழிபட்டு நூல்களை முறையே பெற்றுப் பிரதிசெய்துகொண்டு படித்தும் பல நாட்களாகத் தாம் படித்த நூல்களில் உள்ள ஐயங்களை வினாவித் தெளிந்தும் வந்தனர். அம்முனிவரால் இவருக்குப் பல தமிழ் நூற் பெயர்களும் தெரிய வந்தன. அக்காலத்தில் இவருடன் திரிசிரபுரம் வித்துவான் ஸ்ரீ கோவிந்தபிள்ளை யென்பவரும் அவரிடம் பாடங்கேட்டுவந்தனர். அவரிடம் தாம் படித்தமைக்கு அறிகுறியாகத் தாம் எழுதும் கடிதங்களின் தலைப்பிலே, கோவிந்தபிள்ளை ‘வேலாயுத முனிவர் பாதாரவிந்தமே கதி’ என்று எழுதி வந்தனர். அம்முனிவரிடம் படித்த நூல்கள் இன்ன இன்னவென்று கோவிந்த பிள்ளையே பிற்காலத்தில் என்னிடம் சொல்லியதுண்டு.
பின்பு, இவர் கம்பராமாயணம் முதலிய நூல்களை எழுதிப் பலமுறை படித்துத் தமக்கு உண்டாகும் சந்தேகங்களை அங்கங்கே சென்று தெரிந்தவர்களிடம் கேட்டு நீக்கிக்கொண்டு வந்தனர்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களையும் இவ்வண்ணமே இவர் இளமை தொடங்கித் தக்கவர்களிடம் பாடங்கேட்டும் ஆராய்ந்தும் வாசித்து முடித்தார். பின்பு தண்டியலங்காரம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்; அதைப் பாடஞ்சொல்லுபவர்கள் கிடைக்கவில்லை. யாரிடமிருந்தேனும் அந்நூல் கிடைத்தால் பிரதி செய்து கொண்டு படிக்கலாமென்று எண்ணிப் பலவாறு முயன்றார். அவ்வூரில் ஒவ்வொருநாளும் வீடுதோறும் சென்று அன்னப்பிட்சை யெடுத்து உண்டு காலங்கழித்து வந்த பரதேசி ஒருவர் தமிழ் நூல்களிற் பழக்கமும் அவற்றுள் தண்டியலங்காரத்தில் அதிகப் பயிற்சியும் உடையவராயிருந்தார். ஆனாலும் அவர் பிறரை மதிப்பதில்லை; முறையாக ஒருவருக்கும் பாடம் சொன்னதுமில்லை. அவர் தாம் இருக்கும் மடத்திற் சில ஏட்டுப் புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார். அவர் தாமாக விரும்புவாராயின் ஏதேனும் சில தமிழ் நூல்களிலுள்ள கருத்துக்களை வந்தோருக்குச் சொல்லுவார். ‘தானே தரக்கொளி னல்லது தன்பால், மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை” என்னும் உவமைக்கு அவரை இலக்கியமாகச் சொல்லலாமென்பர்.
அவர் நன்றாகப் படித்தவரென்பதையும் அவரிடம் தண்டியலங்காரப் பிரதியிருப்பதையும் கேள்வியுற்ற இவர், எவ்வாறேனும் அவரிடம் தண்டியலங்காரத்தைப் பெற்றுப் பாடங்கேட்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு அவர் பிட்சையெடுக்க வரும் காலமறிந்து தெருத்தோறும் கூடவே தொடர்ந்து பேசிக் கொண்டு சென்றும், அவருக்குப் பிரியமான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து உரிய காலத்திற் சேர்ப்பித்தும் அவர் உவகையோடு இருந்த சமயத்தில் தம் கருத்தை மெல்லப் புலப்படுத்தி அவரிடமிருந்த புத்தகத்தைப் பெற்று எழுதிக்கொண்டு பாடமும் கேட்டார். இவ்வாறு பணிவுடன் தம்மோடு தொடர்ந்து வந்து கேட்டது அவருக்குத் திருப்தியே. அதனால் இவருக்கு அவரிடம் இருந்த வேறு சில நூல்களும் கிடைத்தனவாம்.
இவ்வாறு ஐந்திலக்கணங்களையும் முறையே தெரிந்தவர்களிடம் சென்று சென்று இவர் கற்றுக்கொண்டார். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள கற்குடியில் இருந்த ஒரு பெரியவரிடத்தில் பொருத்த இலக்கணத்தையும் அஷ்டநாகபந்தம் முதலிய சித்திர கவிகளின் இலக்கணத்தையும் அறிந்துகொண்டார்.
இவர் இப்படி *3 அங்கங்கே கலைகளைத் தேடியறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் இவருடன் ஒத்த பிராயத்தினர் சிலர் தமிழ்க்கல்வி கற்று வந்தனர். அவர்களும் இவரும் ஒருவரையொருவர் விஞ்சவேண்டுமென்று நினைந்து கொண்டு மிக முயன்று படித்தார்கள்.
$$$
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. வெங்கைக் கோவை.
2. இக்காலத்தில் இவ்வூர்ப்பெயர் திந்நியமென வழங்கும். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ளது.
3. ”அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்குமன்றே” திருவிளை. தருமிக்கு.
$$$