-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
73. விடுதலைக்கு விளைநிலம்
.
பூதாரதா முதவஹத்– யதபேக்ஷயா ஸ்ரீ-
பூதார ஏவ கிமதஸ்- ஸுமதே லபஸ்வ/
கேதார மாகலித முக்தி மஹௌஷதீனாம்
பாதாரவிந்த பஜனம் பரமேச்’வரஸ்ய//
.
திருமகள் நிலமகள் நாதனுந்தான் வராகமாய்
உருகொண்டு தேடியதாம் உலகமே விரும்பிடும்
முக்திமூலிகை விளைநிலமாம் அப்பரமன் திருவடி
பக்தியால் பற்றுமனதே வேறென்ன வேண்டுவதே?
.
அனைத்து விதமான இன்ப – துன்ப அவஸ்தைகளில் இருந்தும், பிறவிச் சுழலில் இருந்தும் விட்டு விடுதலையாகி நிற்பதே முக்தி ஆகும். அப்படிப்பட்ட முக்தியை நல்குவது, சிவபெருமானின் திருவடிகள்தாம். அந்தத் திருவடிகளைக் காணத்தான், திருமகள் (ஸ்ரீதேவி), நிலமகள் (பூதேவி) ஆகியோரின் நாதனாகிய மகாவிஷ்ணுவே வராக உருவம் எடுத்துத் தேடினார். அந்தப் பாதாரவிந்தங்கள்தாம், இந்த உலகமே விரும்புகின்ற முக்தி எனப்படும் பிறவிப்பிணி தீர்க்கும் மூலிகையின் விளைநிலமாகும். அப்படிப்பட்ட அந்தப் பரமனின், பரமசிவனின் திருவடிகளை, மனதே நீ பக்தியினால் பற்றிக் கொள்வாயாக. அப்படிப் பற்றிக்கொண்டால், வேறு என்னதான் வேண்டுவதற்கு இருக்கிறது? என்று வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$