சிவகளிப் பேரலை- 75

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

75. மனக் குதிரையில் இறைப் பயணம்

.

கல்யாணினம் ஸரஸ சித்ரதிம் ஸவேம்

ஸர்வேங்கிதஜ்ஞ மனம் த்ருவலக்ஷணாட்யம்/

சேதஸ்துரங்திருஹ்ய சர ஸ்மராரே

நேதஸ்- ஸமஸ்தஜதாம் வ்ருஷபாதிரூ//

.

வடிவுடைத்து நல்லின்ப நடையுடைத்து விரைவுடைத்து

குறிப்பறி செயலுடைத்து குறையிலது நிலையான

குணமுடைத்து என்மனதாம் அசுவமேறி பயணிப்பீர்

குவலயத்து நாயகரே காளையூர் காமாரியே!

.

     நல்ல வாசனை நிரம்பிய பக்தனின் மனம், இறைவன் சவாரி செய்கின்ற குதிரையாக, வாகனமாக ஆகிவிடுகிறது. ஆகையால், அப்படிப்பட்ட பக்தனாகிய எனது மனத்தினிலே பயணம் மேற்கொள்ள வாருங்கள் என்று நம்மைப் போன்றவர்களுக்கா எம்பிரானிடம் அழைப்பு விடுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

.இந்த ஸ்லோகத்தின் பொருள்: எனது மனமாகிய குதிரை நல்ல வடிவுடையது, கல்யாண குணங்களை உடையது. எனது மனத்தின் நடை (நடத்தை) நல்ல விதமான இன்பங்களைத் தரக்கூடியது. இறைவா உனது விருப்பத்திற்கேற்ப ஓடக்கூடிய வேகம் உடையது. மேலும், சிவபெருமானே உனது குறிப்பை அறிந்து செயல்படக் கூடிய லாவகமும் என் மனத்திற்கு உள்ளது. எந்தவிதமான குறையும் சொல்ல இயலாதது. நிலைத்து இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொண்டது. இப்படிப்பட்ட எனது மனக் குதிரையிலே, உலகின் நாயகரும், வழக்கமாக காளை மீது ஊர்கின்றவரும் (பவனி வருபவரும்), காமனை அழித்தவருமான சிவபெருமானே, நீங்கள் இனி பயணம் செய்யுங்கள்.

     இந்த ஸ்லோகத்தில் குமரக்கடவுள் தோற்றத்தோடு தொடர்புடைய புராணச் சம்பவத்தை, மிக அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறார் ஆதிசங்கரர். ஸ்மரன், காமன் என்றழைக்கப்படும் மன்மதனை சிவபெருமான் அழித்ததனால், அவருக்கு ஸ்மராரி, காமாரி எனப் பெயர் வந்தது. தாரகாசுரனால் அவதிப்பட்ட தேவர்கள், அப்போது தவத்தில் இருந்த சிவபெருமானுக்கும் பார்வதியம்மைக்கும் ஒரு குமாரன் அவதரித்தால்தான், தாரகாசுர வதம் நடைபெறும் என்பதை அறிந்ததால் பரமேஸ்வரனை அணுகினார்கள். அப்போது தவத்தில் இருந்த சிவனாரை நிஷ்டையில் இருந்து எழுப்பி, பார்வதி மீது காதல் வயப்படுத்துவதற்காக மன்மதனை தேவர்கள் ஏவிடவே, அவன் சிவபெருமான் மீது மலர்க்கணைகளைப் பொழிந்தான். தவத்தில் இருந்து விழித்த சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து அழித்ததால் ஸ்மராரி, காமாரி என்று பெயர் பெற்றார். பின்னர் மன்மதனின் தேவி ரதியின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து, மன்மதனை உயிர்ப்பித்து, ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் அவன் தெரியும்படியும், மற்றவர்களுக்கு அரூபியாக இருக்கும்படியும் சிவபெருமான் அருள்பாலித்தார். (குமரப் பெருமானின் பிறப்பு உயர்ந்த லட்சியம் கொண்டது, வெறும் காமச்செயல் அல்ல என்பதை உணர்த்தவே காமனை சிவபெருமான் எரிக்கிறார்.)

.இந்தச் சம்பவத்தை, மகாகவி காளிதாஸரின்  ‘குமார சம்பவம்’ மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டும். காமத்தை வென்ற மனத்தில்தான் இறைவன் கொலுவிருக்க வருவார் என்பதை “சர ஸ்மராரே” (மன்மதனைக் கொன்றவரே சஞ்சரியுங்கள்) என்ற பதத்தின் மூலம் பாங்காகக் கூறியுள்ளார் பகவத்பாதர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s