-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
63. குறைகளை நிறைவாக்கும் பக்தி
.
மார்காவர்த்தித பாதுகா பசு’பதே- ரங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூஷாம்பு– நிஷேசனம் புர-ரிபோர்- திவ்யாபிஷேகாயதே/
கிஞ்சித்பக்ஷித மாம்ஸசே’ஷ கபலம் நவ்யோபஹாராயதே
பக்தி: கிம் ந கரோத்யஹோ வனசரோ பக்தாவதம்ஸாயதே//
.
வழிதேய்ந்த செருப்பே பசுபதியின் கூர்ச்சமாய்
வாயுமிழ்ந்த தண்ணீரே திரிபுரனின் நீராட்டாய்
சிறுகடித்த ஊண்துணுக்கே சிறந்ததோர் படையலாய்
உறுவனத்து வேடனவன் தலைத்தொண்டன் ஆனானே!
.
உண்மையான பக்தி இருக்கும் இடத்தில், பக்தனுக்குரிய குறைகளை சிவபெருமான் பார்ப்பதில்லை. இருக்கின்ற குறைகளும் அவனருளால் நீங்கி, நிறைவே தோன்றும். பக்தனுக்குரிய குறைகளைப் பார்க்காமல், பக்தியைப் பாராட்டி, அவனுக்கு உயர்ந்த பதவியைத் தந்தருள்பவர் சிவபெருமான். இதற்குப் பல புராணங்களும், சரித்திரங்களுமே சான்று. அவற்றில் கண்ணப்ப நாயனாரின் சரிதத்தைக் கோடிட்டுக் காட்டி, பக்தனை மதிக்கும் பரமசிவனின் பெருமையை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
காளத்தியைச் (காளஹஸ்தி) சேர்ந்த திம்மன் என்ற வேடன், ஆழ்ந்த பக்தியால், சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வடிவதைப் பார்த்து, தனது கண்ணொன்றை எடுத்து அப்பினார். அப்போது அவரைப் பரிசோதிக்க இறைவன் திருவுளம் கொண்டதால், மறு கண்ணிலும் ரத்தம் கசிந்தது. சளைக்காத கண்ணப்ப நாயனார், தமது மற்றொரு கண்ணையும் தர முன்வந்தார். இரண்டாவது கண்ணையும் தாம் இழந்துவிட்டால், சிவலிங்கத்தின் கண்ணில் தமது கண்ணைச் சரியாகப் பொருத்த முடியாதே என்ற நினைப்பால், அடையாளத்திற்கு தமது செருப்புக் காலைத் தூக்கி சிவலிங்கத்தின் இரண்டாவது கண் அருகே வைத்து, தமது மற்றொரு கண்ணையும் தோண்ட முயன்றார் திம்மன். உடனே சிவபெருமான் வெளிப்பட்டு, “கண்ணப்பா நில்” என்று கூறித் தடுத்து அவரை ஆட்கொண்டார். அதனால் திம்மன் என்ற வேடன், அனைவரும் வணங்கும் ‘கண்ணப்ப நாயனார்’ என்ற நாயன்மார் ஸ்தானத்துக்கு உயர்ந்தார்.
அந்தக் கண்ணப்பர், தினமும் சிவலிங்கத்தைப் பூஜிக்க வரும்போது, காட்டு மிருகமொன்றை வேட்டையாடிக் கொன்று சமைத்து, அது சுவையாக இருந்தால்தானே சிவபெருமான் சாப்பிடுவார் என்பதற்காக, அந்த ஊண் உணவை ருசித்துப் பார்த்து ஒரு இலையிலே வைத்து எடுத்து வருவார். அபிஷேகம் செய்வதற்குப் பாத்திரம் இல்லாமையால், தமது வாயினுள் நீரை அடக்கிக்கொண்டு வருவார். சிவலிங்க பூஜைக்குரிய பூக்களை, தமது குடுமியிலே செருகிக்கொண்டு வருவார். சிவலிங்கத்தின் மீது ஏற்கெனவே சாத்தப்பட்டிருக்கும் பூக்களை தமது செருப்புக் காலால் அகற்றி, தமது தலையில் செருகி வைத்த பூவை அணிவித்து, வாய் நீரால் கொப்பளித்து அபிஷேகம் செய்து, எச்சில்படுத்திக் கொண்டுவந்த இறைச்சியையே நைவேத்தியமாகப் படைத்து வணங்குவாராம் கண்ணப்பர்.
கண்ணப்ப நாயனார், காடு மேடெல்லாம் அலைந்து திரிந்ததால் தேய்ந்துபோன அவரது செருப்பே, பசுபதியாகிய சிவபெருமானுக்கு, அபிஷேகத்துக்கு முன்பு சிரசில் வைக்கப்படும் கூர்ச்சம் (தர்ப்பையால் செய்யப்படும் பூஜைப் பொருள்) போலானதாம். அவர் வாயில் கொண்டுவந்து உமிழ்ந்த நீரே சிவபெருமானுக்கு நீராட்டாய் (அபிஷேகமாய்) அமைந்தது. கண்ணப்பர் சிறிது கடித்துப் பார்த்து எச்சிலாகிய இறைச்சி உணவே, சிவபெருமானுக்கு மிகச் சிறந்த படையலாய் (நைவேத்தியமாய்) ஆனது. இப்படியாக மிகவும் அருவருக்கத் தக்க வகையில் வினோதமாக பூஜை செய்த, படிப்பறிவில்லாத, மலை வேடனான கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தனாகப் போற்றப்படுகிறானே என வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
.எளியோரின் தெய்வமாகிய சிவபெருமான், வெளிவேஷங்களைப் பார்ப்பதில்லை, உளப்பூர்வமான உண்மையான பக்தியைத்தான் பார்த்து அருள்புரிகிறான் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$