-மகாத்மா காந்தி

இரண்டாம் பாகம்
26. இரு ஆர்வங்கள்
பிரிட்டிஷ் அரசியல் முறைகளிடம் எனக்கு இருந்த அவ்வளவு விசுவாசத்தைப்போல் வேறு யாருக்கும் இருந்ததாக நான் அறிந்ததில்லை. சத்தியத்தினிடம் எனக்கு இருந்த பற்றே இத்தகைய விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்தது என்பதை நான் அப்பொழுது காண முடிந்தது. விசுவாசமோ, வேறு ஒரு நற்குணமோ என்னிடம் இருப்பதாக நடிப்பது என்பது மாத்திரம் என்னால் என்றுமே ஆகாது. நேட்டாலில் நான் போகும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ராஜ வாழ்த்துக் கீதம் பாடப்படும். அதைப் பாடுவதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுது நான் எண்ணினேன். பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் குறைகளை நான் அறியவில்லை என்பதல்ல. ஆனால், மொத்தத்தில் பார்த்தால் அந்த ஆட்சி, ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று நினைத்தேன். பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி, ஆளப்படுவோருக்கு நன்மையானது என்றும் அந்த நாட்களில் நம்பினேன்.
தென்னாப்பிரிக்காவில் நிற வெறியைக் கண்டேன். ஆனால் அது பிரிட்டிஷ் பாரம்பரிய குணத்திற்கு மாறுபட்டது என்று கருதினேன். அது தற்காலிகமானது, தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் இருப்பது என்று நம்பினேன். ஆகையால், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக்கொண்டு, மன்னரிடம் விசுவாசம் காட்டினேன். ராஜவாழ்த்துக் கீதத்தின் மெட்டைக் கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் கற்றுக்கொண்டேன். அக்கீதம் பாடப்படும் போதெல்லாம் நானும் சேர்ந்து பாடி வந்தேன். ஆர்பாட்டமும் வெளிப்பகட்டும் இல்லாமல் ராஜவிசுவாசத்தைத் தெரிவிக்கும் சமயம் வந்த போதெல்லாம் அதில் நானும் தயங்காது பங்குகொண்டேன்.
இந்த விசுவாசத்தை என் வாழ்க்கையில் என்றுமே நான் பயன்படுத்திக் கொண்டதில்லை. அதைக் கொண்டு சுய லாபத்தை அடைவதற்கு நான் என்றும் நாடியதும் இல்லை. விசுவாசம் காட்ட வேண்டியது என் அளவில் ஒரு கடமையாகவே இருந்தது. வெகுமதி எதையும் எதிர்பாராமல் அதை நான் காட்டி வந்தேன்.
நான் இந்தியாவுக்கு வந்தபோது, விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராஜ்கோட்டில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டியில் சேருமாறு என்னை அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், கொண்டாட்டம் பெரும்பாலும் பகட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெளி வேஷமாகவே காரியங்கள் நடந்ததைக் கண்டு, மனவருத்தம் அடைந்தேன். ‘கமிட்டியில் நான் இருக்க வேண்டுமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முடிவாக, நான் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுபோவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
விழாவை ஒட்டிச் செய்யப்பட்ட யோசனைகளில் ஒன்று, மரம் நடுவது என்பது. அநேகர் இதைப் பகட்டுக்காகவும் அதிகாரிகளைத் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும் செய்ததைக் கண்டேன். மரம் நடுவது, கட்டாயமானது அல்ல என்றும், அது ஒரு யோசனையே என்றும் அவர்களிடம் நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருந்துவிட வேண்டும். என் கருத்தைக் கேட்டு அவர்கள் நகைத்தார்கள் என்றே எனக்கு ஞாபகம். என் பங்குக்கு ஏற்பட்ட மரத்தை நான் உண்மையான சிரத்தையுடனேயே நட்டு, ஜாக்கிரதையாகத் தண்ணீர் ஊற்றியும் வளர்த்தேன் என்பது எனக்கு நினைவு இருக்கிறது.
அதேபோல என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜவாழ்த்துக் கீதம் பாடக்கற்றுக் கொடுத்தேன். உள்ளூர்ப் போதனாமுறைக் கல்லூரி மாணவர்களுக்கும் அதை நான் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி நான் சொல்லிக் கொடுத்தது ஜுபிளி சமயத்திலா அல்லது இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஏழாம் எட்வர்டுக்கு முடி சூட்டு விழா நடந்தபோதா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பிற்காலத்தில் அப் பாடலின் அடிகள் எனக்கு அருவருப்பை உண்டாக்கின. அகிம்சையைப் பற்றிய என் எண்ணங்கள் வளர்ச்சியடையவே, நான் எண்ணுவதிலும் பேசுவதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன்.
‘அவள் விரோதிகளைச் சிதறடித்து அவர்கள் வீழ்ச்சியடையச் செய்யும்; அவர்களது ராஜ்யம் குழப்பமடைந்து வஞ்சகமான அவர்கள் தந்திரங்கள் நிறைவேறாது செய்யும்’
முக்கியமாக அந்தக் கீதத்தின் மேற்கண்ட வரிகளே அகிம்சையைப் பற்றிய என் உணர்ச்சிக்கு முரணாக இருந்தன. என் அபிப்பிராயத்தை டாக்டர் பூத்திடம் தெரிவித்தேன். அகிம்சையில் நம்பிக்கையுள்ள ஒருவர், அந்த வரிகளைப் பாடுவது சரியல்ல என்பதை அவரும் ஒப்புக்கொண்டார். ‘விரோதிகள்’ என்று சொல்லப்படுகிறவர்கள், ‘வஞ்சகர்’களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக் கொள்ளுவது? விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா? ஆண்டவனிடமிருந்து நாம் நீதியையே கேட்கலாம். டாக்டர் பூத் என் உணர்ச்சிகளைப் பூரணமாக அங்கீகரித்தார். தமது பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்று புதியதொரு ராஜ வாழ்த்துக்கீதத்தையும் இயற்றினார். டாக்டர் பூத்தைக் குறித்து மேற்கொண்டும் பிறகு கவனிப்போம்.
ராஜவிசுவாசத்தைப் போலவே, நோயுற்றிருப்போருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் என் சுபாவத்திலேயே ஆழ வேர்விட்டிருந்தது. நண்பர்களாக இருக்கட்டும், முன்பின் தெரியாதவர்களாக இருக்கட்டும்; பிறருக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு ஆசை அதிகம்.
தென்னாப்பிரிக்க இந்தியர் சம்பந்தமான துண்டுப் பிரசுர வேலையில் நான் ராஜ்கோட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம், பம்பாய்க்கு உடனே போய்த் திரும்ப வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர் விஷயமாக நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் அந்த நிலைமையை அறியும்படி செய்ய வேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு முதல் நகரமாக பம்பாயைத் தேர்ந்தெடுத்தேன். முதலில், நீதிபதி ரானடேயைச் சந்தித்தேன். நான் சொன்னதை அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஸர் பிரோஸ் ஷா மேத்தாவைச் சந்திக்குமாறு கூறினார். அடுத்தபடியாக நான் சந்தித்த நீதிபதியான பத்ருதீன் தயாப்ஜியும் அதே யோசனைதான் கூறினார். “நீதிபதி ரானடேயும் நானும் உங்களுக்கு, அதிகமாக எந்த உதவியும் செய்வதற்கு இல்லை. எங்கள் நிலைமையை நீங்கள் அறிவீர்கள். பொது விஷயங்களில் நாங்கள் தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளுவதற்கில்லை. ஆனால், எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்குச் சரியானபடி வழிகாட்டக் கூடியவர், ஸர் பிரோஸ் ஷா மேத்தாவே” என்றார்.
நிச்சயமாக நானும் ஸர் பிரோஸ் ஷா மேத்தாவைப் பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அவர் யோசனைப்படி நடந்து கொள்ளுமாறு இப் பெரியவர்கள் எனக்குப் புத்திமதி கூறியது, பொதுமக்களிடையே ஸர் பிரோஸ் ஷாவுக்கு இருந்த மகத்தான செல்வாக்கை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது. பிறகு அவரிடம் சென்றேன். அவர் முன்னிலையில் பயத்தால் திகைத்து நின்றுவிட நான் தயாராக இருந்தேன். பொதுமக்கள் அவருக்குக் கொடுத்திருந்த பட்டங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ‘பம்பாயின் சிங்கத்தை’, ‘மாகாணத்தின் முடிசூடா மன்னரை’ நான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதையும் அறிவேன். ஆனால், ‘மன்னர்’ முன்னெச்சரிக்கையுடன் என்னை அடக்கி விடவில்லை. அன்புமிக்க ஒரு தந்தை, தம்முடைய வயது வந்த மகனை எவ்விதம் சந்திப்பாரோ அவ்வாறே என்னை அவர் சந்தித்தார். நான் அவரைச் சந்தித்தது, ஹைகோர்ட்டில். அவர் காரியாலயத்தில் பல நண்பர்களும் சீடர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஸ்ரீ டி.ஈ.வாச்சாவும் ஸ்ரீ காமாவும் அங்கே இருந்தனர். ஸர் பிரோஸ் ஷா மேத்தா, அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ வாச்சாவைக் குறித்து முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஸர் பிரோஸ் ஷாவுக்கு அவர் வலக்கரம் போன்றவர் என்று கருதப்பட்டு வந்தார். புள்ளி விவரங்களில் அவர் பெரிய நிபுணர் என்று ஸ்ரீ வீரசந்திர காந்தி எனக்குச் சொல்லியிருக்கிறார். “காந்தி, நாம் திரும்பவும் சந்திக்க வேண்டும்” என்றார் ஸ்ரீ வாச்சா.
இவ்விதம் அறிமுகம் செய்து வைத்ததெல்லாம் இரண்டே நிமிஷங்களில் முடிந்து விட்டது. நான் கூறியதையெல்லாம் ஸர் பிரோஸ் ஷா கவனமாகக் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் ரானடேயையும் தயாப்ஜியையும் நான் பார்த்தேன் என்றும் சொன்னேன். “காந்தி, உமக்கு நான் உதவி செய்தாக வேண்டும் என்பதைக் காண்கிறேன். இங்கே நான் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று சொல்லிவிட்டுத் தம் காரியதரிசி ஸ்ரீ முன்ஷியைப் பார்த்து, கூட்டத்திற்குத் தேதியை நிச்சயிக்கும்படி கூறினார். தேதியும் முடிவாயிற்று. பொதுக்கூட்டத்திற்கு முதல் நாள், தம்மை வந்து பார்க்கும்படி கூறி, எனக்கு அவர் விடை கொடுத்து அனுப்பினார். இந்தச் சந்திப்பு அவரிடம் எனக்கிருந்த பயத்தைப் போக்கிவிட்டது. குதூகலத்துடன் வீடு திரும்பினேன்.
இச்சமயம் பம்பாயில் இருந்தபோது அங்கே நோயுற்றிருந்த என் மைத்துனரைப் பார்க்கப் போனேன். அவர் வசதியுடையவர் அல்ல. என் சகோதரி (அவர் மனைவி) யாலும் அவருக்குப் பணிவிடை செய்ய முடியவில்லை. நோயோ கடுமையானது. அவரை ராஜ்கோட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவதாகக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். எனவே என் சகோதரியுடனும் அவர் கணவரோடும் நான் வீடு திரும்பினேன். நான் எதிர்பார்த்ததை விட அவருடைய நோய் அதிக நாள் நீடித்திருந்தது. என் மைத்துனரை என் அறையில் தங்கச் செய்து, இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். இரவில் பாதி நேரம் நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்து கொண்டே என் தென்னாப்பிரிக்க வேலைகள் சிலவற்றையும் நான் செய்ய வேண்டியிருந்தது. முடிவாக நோயாளி இறந்து விட்டார். ஆனால், அவருடைய கடைசி நாட்களில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது, எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு இருந்த விருப்பு, நாளாவட்டத்தில் அடங்காத அவாவாக வளர்ந்து விட்டது. இதன் பலனாக நான் என்னுடைய மற்ற வேலைகளைப் பல சமயங்களில் சரிவரக் கவனிப்பதில்லை. சில சமயம் இவ்விதப் பணிவிடை செய்வதில் என் மனைவிக்கும் வேலை கொடுத்து, வீட்டிலிருந்த எல்லோரையும் அவ் வேலையில் ஈடுபடுத்திவிடுவேன்.
ஒருவர் இத்தகைய சேவையைச் செய்வதில் இன்பம் கொண்டாலன்றி இதைச் செய்வதில் அர்த்தமே இல்லை. வெளிப்பகட்டுக்காகவோ, பொதுஜன அபிப்பிராயத்திற்குப் பயந்தோ இதைச் செய்வதாயின், அப்படிச் செய்பவரின் ஆன்ம வளர்ச்சியை அது குன்றச் செய்து, உணர்ச்சியையும் நசுக்கி விடுகிறது. சந்தோஷம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடைமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.
$$$
27. பம்பாய்க் கூட்டம்
என் மைத்துனர் இறந்த அன்றே பொதுக் கூட்டத்திற்காக நான் பம்பாய் போக வேண்டியிருந்தது. நான் அங்கே செய்ய வேண்டிய பிரசங்கத்தைக் குறித்துச் சிந்திக்கக்கூட எனக்கு அவகாசம் இல்லை. இரவும் பகலும் கவலையுடன் விழித்திருக்க நேர்ந்ததால், நான் களைத்துப் போனேன். தொண்டையும் கம்மிப் போயிருந்தது. என்றாலும், கடவுளிடமே முழு நம்பிக்கையையும் வைத்து, நான் பம்பாய்க்குப் போனேன். என் பிரசங்கத்தை முன்னாலேயே எழுத வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை.
ஸர் பிரோஸ் ஷா கூறியிருந்தபடி, பொதுக் கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு, அவர் காரியாலயத்திற்குப் போனேன்.
“காந்தி, உமது பிரசங்கம் தயாராக இருக்கிறதா?” என்று அவர் என்னைக் கேட்டார்.
“இல்லை, ஐயா. ஞாபகத்தில் இருந்தே கூட்டத்தில் பேசி விடலாம் என்று இருக்கிறேன்” என்று நான் நடுங்கிக் கொண்டே சொன்னேன்.
“பம்பாயில் அது சரிப்படாது. இங்கே நிருபர்கள் பத்திரிகைக்குச் செய்தி அனுப்புவது மோசமாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தினால் நாம் பயனடைய வேண்டுமாயின், உமது பிரசங்கத்தை நீர் எழுதிவிட வேண்டும். அதோடு நாளை விடிவதற்குள் அதை அச்சிட்டும் விட வேண்டும். இதைச் செய்துவிட உம்மால் முடியும் என்றே நம்புகிறேன்” என்றார்.
எனக்கு ஒரே நடுக்கம் எடுத்துவிட்டது. என்றாலும் முயல்வதாகச் சொன்னேன்.
“அப்படியானால், கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொள்ள ஸ்ரீ முன்ஷி உம்மிடம் எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்பதைச் சொல்லும்” என்றார்.
“இரவு பதினொரு மணிக்கு” என்றேன்.
அடுத்த நாள் கூட்டத்திற்குப் போனதும், ஸர் பிரோஸ் ஷா கூறிய யோசனை, எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைக் கண்டு கொண்டேன். ஸர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒரு கூட்டத்தில் ஸர் பிரோஸ் ஷா மேத்தா பேசுகிறார் என்றால் எப்பொழுதுமே மண்டபம் நிறைந்துவிடும். அவர் பிரசங்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முக்கியமாக மாணவர்கள், எள் விழவும் இடமின்றி வந்து கூடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் அனுபவத்தில் அப்படிப்பட்ட முதல் கூட்டம் இதுதான். நான் பேசுவது, சிலருக்கு மாத்திரமே கேட்கும் என்பதைக் கண்டேன். என் பிரசங்கத்தைப் படிக்க ஆரம்பித்ததுமே என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. உரக்க, இன்னும் கொஞ்சம் உரக்கப் பேசும்படி கூறி ஸர் பிரோஸ் ஷா தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது என்னை உற்சாகப் படுத்துவதற்குப் பதிலாக, என் தொனி மேலும் மேலும் குறைந்து கொண்டு போகும்படியே செய்தது என்பது என் ஞாபகம்.
எனது பழைய நண்பர் ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே என்னைக் காப்பாற்ற வந்தார். என் பிரசங்கத்தை அவர் கையில் கொடுத்து விட்டேன். அவர் பேச்சுத் தொனிதான் ஏற்ற தொனி. ஆனால், கூடியிருந்தவர்களோ, அவர் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டனர். ‘வாச்சா!’ ‘வாச்சா!’ என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. ஆகவே, ஸ்ரீ வாச்சா எழுந்து என் பிரசங்கத்தைப் படித்தார். அற்புதமான பலனும் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் முற்றும் அமைதியோடு இருந்து, பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவசியமான இடங்களில் கரகோஷமும், ‘வெட்கம்!’ என்ற முழக்கமும் செய்தார்கள். இது என் உள்ளத்துக்குக் குதூகலம் அளித்தது.
பிரசங்கம் ஸர் பிரோஸ் ஷாவுக்குப் பிடித்திருந்தது. நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
ஸ்ரீ தேஷ்பாண்டே, ஒரு பார்ஸி நண்பர் ஆகியவர்களின் ஆதரவை இக்கூட்டம் எனக்குத் தேடித் தந்தது. அந்தப் பார்ஸி நண்பர் இன்று உயர்தர அரசாங்க அதிகாரியாக இருப்பதால் அவர் பெயரைக் கூற நான் தயங்குகிறேன். இருவரும் என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வர முடிவு செய்து இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். அப்பொழுது ஸ்மால் காஸ் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஸ்ரீ சி.எம்.குர்ஸேத்ஜி, அந்தப் பார்ஸி நண்பர்க்குக் கல்யாணம் செய்துவிடத் திட்டம் போட்டிருந்தார். ஆகவே, அவர் பார்ஸி நண்பரைத் தமது தீர்மானத்தை மாற்றிக் கொள்ளும்படி செய்துவிட்டார். ‘கல்யாணமா, தென் ஆப்பிரிக்காவுக்குப் போவதா?’ -இந்த இரண்டில் ஒன்றை அவர் தீர்மானிக்க வேண்டியதாயிற்று. அவர் கல்யாணத்தையே ஏற்றுக் கொண்டார். ஆனால், இவ்விதம் அவர் தீர்மானத்தைக் கைவிட்டதற்காக, பிற்காலத்தில் அச்சமூகத்தைச் சேர்ந்த பார்ஸி ருஸ்தம்ஜி பரிகாரம் செய்துவிட்டார். அநேக பார்ஸிப் பெண்கள், கதர் வேலைக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டதன் மூலம், அந்தப் பார்ஸி நண்பர் உறுதியை மீறுவதற்குக் காரணமாக இருந்த அவர் மனைவிக்காகப் பரிகாரம் செய்து விட்டனர். ஆகையால், அத் தம்பதிகளுக்குச் சந்தோஷமாக நான் மன்னிப்பு அளித்துவிட்டேன். ஸ்ரீ தேஷ்பாண்டேக்குக் கல்யாண ஆசை எதுவும் இல்லை. என்றாலும், அவராலும் வர முடியவில்லை. அவர் அப்பொழுது, தம் வாக்குறுதியை மீறியதற்கு, இப்பொழுது தக்க பிராயச்சித்தங்களைச் செய்துகொண்டு வருகிறார். நான் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிப்போன போது ஜான்ஸிபாரில் தயாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் வந்து, எனக்கு உதவி செய்வதாக அவரும் வாக்களித்தார். ஆனால், அவர் வரவே இல்லை. அந்தக் குற்றத்திற்கு ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, இப்பொழுது பரிகாரம் தேடி வருகிறார். இவ்விதம் சில பாரிஸ்டர்கள் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும்படி செய்ய நான் செய்த மூன்று முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
இது சம்பந்தமாக ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் நினைவு எனக்கு இருக்கிறது. நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முதற்கொண்டு அவரிடம் நட்புடன் இருந்தேன். லண்டனில் ஒரு சைவ உணவு விடுதியில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அவருடைய சகோதரர் ஸ்ரீ பர்ஜோர்ஜி பாத்ஷா ஒரு ‘கிறுக்கர்’ என்று பெயர் பெற்றிருந்ததைக் கொண்டு, அவரைக் குறித்தும் எனக்குத் தெரியும். நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் விசித்திரப் போக்குடையவர் என்று நண்பர்கள் சொன்னார்கள். குதிரைகளிடம் இரக்கப்பட்டு அவர் (குதிரை பூட்டிய) டிராம் வண்டிகளில் ஏறுவதில்லை. அவருக்கு ஞாபக சக்தி அபாரமாக இருந்தும், பரீட்சை எழுதிப் பட்டங்களைப் பெற மறுத்து விட்டார். சுயேச்சையான மனப்போக்கை வளர்த்துக் கொண்டிருந்தார். பார்ஸி வகுப்பினராக இருந்தும் அவர் சைவ உணவே சாப்பிடுவார். பேஸ்தன்ஜிக்கு இத்தகைய கியாதி இல்லை. ஆனால், அவரது புலமைக்கு லண்டனிலும் பிரபல்யம் இருந்தது. எங்கள் இருவருக்கும் இருந்த ஒற்றுமை சைவ உணவில்தான். புலமையில் அவரை நெருங்குவதென்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
அவரை நான் பம்பாயில் மீண்டும் சந்தித்தேன். அவர் ஹைகோர்ட்டின் பிரதம குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உயர்தரக் குஜராத்தி அகராதி ஒன்று தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். என் தென்னாப்பிரிக்க வேலையில் எனக்கு உதவி செய்யுமாறு நான் கேட்காத நண்பர் இல்லை. பேஸ்தன்ஜி பாத்ஷா எனக்கு உதவி செய்ய மறுத்ததோடல்லாமல், இனி தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டாம் என்று எனக்குப் புத்திமதியும் சொன்னார்.
அவர் கூறியதாவது: “உமக்கு உதவி செய்வது சாத்தியமில்லை. நீர் தென்னாப்பிரிக்காவுக்குப் போவது என்பது கூட எனக்குப் பிடிக்கவில்லை. செய்வதற்கு நம் நாட்டில் வேலையே இல்லையா? இப்பொழுது பாரும், நம் மொழிக்குச் செய்ய வேண்டியதே எவ்வளவோ இருக்கிறது. விஞ்ஞானச் சொற்களை நம்மொழியில் நான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், செய்ய வேண்டியிருக்கும் வேலையில் இது ஒரு சிறு பகுதியே. நாட்டில் இருக்கும் வறுமையை எண்ணிப் பாரும். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உம்மைப்போன்ற ஒருவர் அந்த வேலைக்காகப் பலியிடப்படுவதை நான் விரும்பவில்லை. முதலில் இங்கே சுயாட்சியைப் பெறுவோம். அதனால் அங்கிருக்கும் நம்மவர்களுக்குத் தானே உதவி செய்தவர்கள் ஆவோம். உம் மனத்தை மாற்ற என்னால் ஆகாது என்பதை அறிவேன். என்றாலும், உம்மைப் போன்றவர்கள் யாரும் உம்முடன் சேர்ந்து உம்மைப் போல் ஆகிவிடுவதற்கு உற்சாகம் ஊட்ட மாட்டேன்.”
இந்தப் புத்திமதி எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும், ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷா மீது நான் கொண்டிருந்த மதிப்பை இது அதிகமாக்கியது. நாட்டினிடமும் தாய் மொழியினிடமும் அவர் கொண்டிருந்த பக்தி என் மனத்தைக் கவர்ந்தது. இச் சம்பவம் எங்களை இன்னும் அதிகமாக நெருங்கிப் பழகும்படி செய்தது. என்றாலும் தென்னாப்பிரிக்காவில் எனக்கு இருந்த பணியை நான் விடுவதற்குப் பதிலாக என்னுடைய தீர்மானத்தில் நான் அதிக உறுதி கொள்ளலானேன். தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய வேலையின் எப்பகுதியையும் தேசபக்தி உள்ள ஒருவர் அலட்சியம் செய்துவிட முடியாது. எனக்கோ கீதையின் வாசகம் மிகத் தெளிவாகவும் கண்டிப்பாகவும் இருந்தது: “நன்றாக அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தருமத்தைவிட, குணமற்ற தனது தருமமே சிறந்ததாகும். தனது தருமத்தை நிறைவேற்றும் போது இறப்பது சிறந்தது. பிறர் தருமம் பயத்தைக் கொடுப்பதாகும்”.
$$$
28. புனாவும் சென்னையும்
என் வேலையை ஸர் பிரோஸ் ஷா எளிதாக்கிவிட்டார். ஆகவே, பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன். அங்கே இரு கட்சியினர் இருந்தார்கள். எல்லாவிதக் கருத்துக்களும் கொண்ட எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவை. முதலில் லோகமான்ய திலகரைப் பார்த்தேன். அவர் கூறியதாவது:
“எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும் சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக அபிப்பிராய பேதமே இருப்பதற்கில்லை. ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர், உங்கள் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். பேராசிரியர் பந்தர்காரைச் சந்தியுங்கள். கொஞ்ச காலமாக அவர் பொதுஜன இயக்கம் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் பார்த்துவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னிடம் கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம். வேண்டியதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்.”
லோகமான்யரை நான் சந்தித்தது இதுவே முதல் தடவை. பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின் ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது.
பின்பு கோகலேயைப் போய்ப் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம் அப்பொழுதே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவரைச் சந்திப்பதும் இதுதான் முதல் தடவை. என்றாலும், ஏதோ பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போலவே தோன்றியது. ஸர் பிரோஸ் ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில், யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது; ஆனால், கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம். பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போல கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார். யாரிடம் போக வேண்டும் என்பதை அவர் எனக்குச் சொன்னார். நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை முன்னால் தாம் பார்க்க விரும்புவதாகக் கூறினார். கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டினார். தம்மால் ஆனதைச் செய்யத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார். டாக்டர் பந்தர்காரைச் சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவிக்கச் சொன்னார். மிக்க மகிழ்ச்சியுடன் என்னை அனுப்பினார். அன்றுமுதல் – ராஜீயத் துறையில் – அவர் ஜீவித்திருந்த காலத்திலும் அதற்குப் பின்னர் இன்றளவும், முற்றும் என் உள்ளத்தில் இணையற்றதான பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.
டாக்டர் பந்தர்கார், தந்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன் என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான வேளை. அந்த நேரத்தில்கூட ஓய்வின்றி நான் எல்லோரையும் சந்தித்து வந்தது, சோர்வு என்பதையே அறியாத அப் பண்டிதமணிக்கு என் மீது அதிகப் பரிவை உண்டாக்கியது. பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும் சேராதவரே தலைவராக இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர் ஏற்றுக்கொண்டார். “அதுதான் சரி”, “அதுதான் சரி” என்றும் அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.
நான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு அவர் கூறியதாவது “ராஜீய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதில்லை என்பதை எல்லோரும் உங்களுக்குச் சொல்வார்கள். ஆனாலும், உங்கள் கோரிக்கையை மறுக்க என்னால் முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள் முயற்சியோ அற்புதமானது. ஆகவே, உங்கள் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து விடுவதற்கில்லை. திலகரையும் கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும் சரியானதே. அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள். கூட்டத்தின் நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம், எனக்கும் சௌகரியமானதே”. இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும் ஆசீர்வாதமும் தந்து, அவர் விடை கொடுத்து அனுப்பினார்.
புலமை மிக்கவர்களும், தன்னலமே இல்லாதவர்களுமான புனாத் தலைவர்கள் குழாத்தினர், எந்தவிதப் படாடோபமும் இன்றி, ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். நான் பெரும் மகிழ்ச்சியும், என் வேலையில் மேலும் அதிக நம்பிக்கையும் கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும் வைத்தார்கள்.
அடுத்தபடியாக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே மக்கள் மட்டற்ற உற்சாகம் கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய சம்பவம், பொதுக்கூட்டத்தில் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப்பட்டிருந்தது. எனக்கு அது ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின் முடிவில், பச்சைத் துண்டுப்பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி. சில மாற்றங்களுடன் இரண்டாம் பதிப்பில் 10,000 பிரதிகள் அச்சிட்டேன். அவை ஏராளமாக விற்பனையாயின. என்றாலும், அவ்வளவு அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன். என் உற்சாகத்தில், இருக்கக்கூடிய தேவையை அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன். நான் பிரசங்கம் செய்தது, பொது ஜனங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே. சென்னையில் அந்த வகுப்பினர் இவ்வளவு பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.
சென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர், ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிகையின் ஆசிரியரான காலஞ்சென்ற ஸ்ரீ. ஜி.பரமேஸ்வரன் பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர் கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி தமது காரியாலயத்திற்கு என்னை அழைத்து, வேண்டிய யோசனைகளைக் கூறினார். ‘ஹிந்து’ பத்திரிகையின் ஸ்ரீ. ஜி.சுப்பிரமணியமும், டாக்டர் சுப்பிரமணியமும் அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ. ஜி.பரமேசுவரன் பிள்ளை தமது ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்க முன்வந்தார். அந்த வாய்ப்பை நானும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம், பச்சையப்பன் மண்டபத்தில் டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது என்றே எனக்கு ஞாபகம்.
நான் சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது அன்பைப் பொழிந்தார்கள். நான் கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர். அன்பினால் தகர்த்துவிட முடியாத தடையும் உண்டா?
$$$
29. விரைவில் திரும்புங்கள்
சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குப் போனேன். அங்கே சங்கடங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. யாரையுமே அங்கே எனக்குத் தெரியாது. ஆகவே, கிரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். ‘டெயிலி டெலிகிராப்’ பத்திரிகையின் பிரதிநிதியுடன் அங்கே எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. தாம் தங்கியிருந்த ஐரோப்பியரின் ‘பெங்கால் கிளப்’புக்கு என்னை அழைத்தார். அந்தக் கிளப்பின் பிரதான அறைக்கு இந்தியர் எவரையும் அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்பது அவருக்குத் தெரியாது. இவ்விதத் தடை இருப்பதை அவர் கண்டு கொண்டதும், தம் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கல்கத்தாவில் இருக்கும் ஆங்கிலேயர், இத்தகைய துவேஷம் காட்டி வருவதைக் குறித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். பிரதான அறைக்கு என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது போய் விட்டதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
வங்காளத்தின் தெய்வம் என்று வழங்கப்பட்டு வந்த சுரேந்திரநாத் பானர்ஜியை நான் பார்க்க விரும்பினேன். அவரைச் சந்தித்தேன். பல நண்பர்கள் அவரைச் சூழ்ந்துக் கொண்டிருந்தனர். அவர் கூறியதாவது:
“உங்கள் வேலையில் மக்கள் சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே அஞ்சுகிறேன். இங்கே எங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள். என்றாலும், உங்களால் முடிந்த வரையில் நீங்கள் முயலவே வேண்டும். மகாராஜாக்களின் ஆதரவை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் இந்தியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தவறிவிடாதீர்கள். ராசா ஸர் பியாரி மோகன் முகர்ஜியையும், மகாராஜா டாகுரையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அவர்கள் இருவரும் தாராள மனம் படைத்தவர்கள்; பொது வேலையில் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.”
அந்தக் கனவான்களையும் பார்த்தேன். ஆனால், ஒன்றும் பயன் இல்லை. அவர்கள் என்னைச் சரியாக ஏற்றுப் பேசக்கூட இல்லை. கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியமே அல்ல என்றார்கள். ஏதாவது செய்ய முடியும் என்றால் அது நடப்பது முக்கியமாக சுரேந்திரநாத் பானர்ஜியையே பொறுத்தது என்றும் கூறினர்.
என் வேலை வர வர அதிகக் கஷ்டமாகிக்கொண்டு வருவதைக் கண்டேன். ‘அமிர்த பஜார்’ பத்திரிகையின் காரியாலயத்திற்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ஆசிரியக் கனவான், நான் ஊர் சுற்றித் திரியும் பேர்வழி என்று எண்ணிக்கொண்டு என்னிடம் ஒன்றும் பேசாமலே என்னைப் போகச் சொல்லிவிட்டார். வங்கவாசி பத்திரிகையோ இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது. அதன் ஆசிரியர் என்னை ஒரு மணி நேரம் காக்க வைத்தார். அவரைக் கண்டு பேசப் பலர் வந்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களெல்லாம் பேசிவிட்டுப்போன பின்புகூட, என்னைக் கண்ணெடுத்துப் பார்க்க அவருக்குத் தயவு பிறக்கவில்லை. நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்த பிறகு அவரைப் பார்த்து, என் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். உடனே அவர், “எங்களுக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? உம்மைப்போல் கண்டு பேச வருகிறவர்களின் தொகைக்கு முடிவே இல்லை. நீர் போய்விடுவதே மேல். நீர் சொல்வதைக் கேட்க எனக்கு இப்பொழுது சௌகரியப்படாது” என்றார். நான் அவமதிக்கப்படுவதாக ஒரு கணம் எண்ணினேன். ஆனால் உடனே ஆசிரியரின் நிலைமையையும் புரிந்துகொண்டேன். ‘வங்கவாசி’யின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆசிரியரைப் பார்க்க ஓயாமல் பலர் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதையும் இப்போது பார்த்தேன். அவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமானவர்கள். அவருக்கு தம் பத்திரிகையில் எழுதுவதற்கு விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை. தென்னாப்பிரிக்கா விஷயமோ அச்சமயம் இங்கே அவ்வளவு நன்றாகத் தெரியாத சங்கதி.
எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ அவனுக்கு அக் குறையே பெரிது என்று தோன்றும். ஆசிரியரின் காரியாலயத்திற்குப் படையெடுத்து வரும் அநேகரில் நானும் ஒருவன். அப்படி வரும் மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் குறை இருக்கத்தான் இருக்கிறது. எல்லோருக்குமே ஆசிரியர் என்ன செய்ய முடியும்? மேலும், ஆசிரியர் நாட்டில் பெரிய சக்தி வாய்ந்தவர் என்று கஷ்டப்படுகிறவன் நினைக்கிறான். ஆனால், தமது சக்தி, தம் காரியாலயத்தின் வாசலுக்கு அப்பால் செல்லாது என்பது ஆசிரியருக்கு மாத்திரமே தெரியும். நான் சோர்வடைந்துவிடவில்லை. மற்றப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். வழக்கம்போல், இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சந்தித்தேன். ‘ஸ்டேட்ஸ்மனும்’ ‘இங்கிலீஷ்மனும்’ அப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்தன. அப்பத்திரிகை நிருபர்களுக்கு நான் நீண்ட பேட்டிகள் அளித்தேன். அவை முழுவதையும் அப் பத்திரிகைகள் பிரசுரித்தன.
‘இங்கிலீஷ்மன்’ பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ சாண்டர்ஸ், என்னைத் தமது சொந்த மனிதனாகவே கொண்டார். தமது பத்திரிகையையும் என் இஷ்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, அவர் எழுதிய தலையங்கங்களின் அச்சு நகல்களை முன்கூட்டியே அவர் எனக்கு அனுப்புவார். அத் தலையங்கங்களில் நான் விரும்பும் திருத்தங்களைச் செய்து கொள்ளவும் அவர் என்னை அனுமதித்தார். எங்களுக்கிடையே நட்பு வளர்ந்துவிட்டது என்று சொல்லுவதும் மிகையாகாது. தம்மால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்வதாக அவர் எனக்கு வாக்களித்தார். வாக்களித்தபடியே நிறைவேற்றியும் வந்தார். அவர் கடுமையான நோய்வாய்ப்படும் வரையில் என்னுடன் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொண்டிருந்தார்.
என் வாழ்க்கை முழுவதுமே இவ்விதமான பல நண்பர்களைப் பெறும் பாக்கியம் எனக்கு இருந்திருக்கிறது. இந்தச் சிநேகங்கள் எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஏற்பட்டவை. மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே கூறும் என் குணமும், உண்மையினிடம் எனக்கு இருந்த பற்றும், ஸ்ரீ சாண்டர்ஸூக்கு என்னிடம் பிரியத்தை உண்டாக்கின. நான் மேற்கொண்ட வேலையைக் குறித்து, வெகு நுட்பமாகக் குறுக்குக் கேள்விகள் எல்லாம் போட்டுத் தெரிந்து கொண்ட பிறகே என் முயற்சிக்கு அனுதாபம் காட்ட அவர் முற்பட்டார். தென்னாப்பிரிக்க வெள்ளையரின் கட்சியையும் பாரபட்சமின்றி அவருக்கு எடுத்துக் காட்டுவதற்குச் சிரமத்தைப் பாராமல் நான் செய்த முயற்சியையும் கண்டார். இதற்காக என்னை அவர் பாராட்டினார்.
எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது.
எதிர்பாராத வகையில் ஸ்ரீ சாண்டர்ஸின் உதவி கிடைத்ததால், முடிவில், ‘கல்கத்தாவிலும் பொதுக்கூட்டத்தை நடத்துவதில் வெற்றிபெற முடியும்’ என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது டர்பனிலிருந்து ‘பார்லிமெண்டு ஜனவரியில் ஆரம்பமாகிறது. விரைவில் திரும்புக’ என்ற தந்தி வந்தது.
ஆகவே, பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு ஒரு கடிதம் அனுப்பினேன். திடீரென்று கல்கத்தாவைவிட்டு நான் ஏன் புறப்பட வேண்டியிருக்கிறது என்று அதில் விளக்கிக் கூறி விட்டுப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். புறப்படும் முன்பு தாதா அப்துல்லா கம்பெனியின் பம்பாய் ஏஜெண்டுக்கு ஒரு தந்தி கொடுத்து, தென்னாப்பிரிக்காவிற்கு முதலில் புறப்படும் கப்பலில் எனக்கு இடத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அறிவித்தேன். தாதா அப்துல்லா அப்பொழுதுதான், ‘கோர்லாண்டு’ என்ற கப்பலை வாங்கியிருந்தார். அக் கப்பலிலேயே நான் போக வேண்டும் என்று வற்புறுத்தியதோடு என்னையும் என் குடும்பத்தையும் கட்டணம் வாங்காமல் ஏற்றிச் செல்வதாகவும் அறிவித்தார். இதை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன். டிசம்பர் ஆரம்பத்தில் இரண்டாம் முறையாக நான் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். இப்பொழுது என் மனைவி, இரு குமாரர்கள், விதந்துவாகிவிட்ட என் சகோதரியின் ஒரே குமாரன் ஆகியவர்களுடன் பயணமானேன். அதே சமயத்தில் ‘நாதேரி’ என்ற மற்றொரு கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. அக் கப்பல் கம்பெனிக்கு தாதா அப்துல்லா கம்பெனியே ஏஜெண்டுகள். இந்த இரு கப்பல்களிலும் சுமார் எண்ணூறு பிரயாணிகள் இருந்திருப்பார்கள். அவர்களில் பாதிப்பேர் டிரான்ஸ்வாலுக்குப் போக வேண்டியவர்கள்.
.
(இரண்டாம் பாகம் நிறைவு)
$$$